''வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும்'னு வள்ளுவர் சொல்லியிருக்கிறதுதான்... தடுப்பூசியோட தத்துவமும்!''
- குறள் சொல்லி சிரித்த குரலோடு வரவேற்றார் திருச்சியைச் சேர்ந்த குழந்தைகள் நல சிறப்பு மருத்துவரான சுரேஷ் செல்லையா.
''தடுப்பூசி என்பது இன்ஷூரன்ஸ் மாதிரி. முன்னெச்சரிக்கையாக உரிய காலத்துல குழந்தைக்கு போடப்படும் தடுப்பூசி, பிற்பாடு அந்த குழந்தையோட உயிர்காக்கும் அரணாக அமைவதோடு, பெரும் செலவையும் மன உளைச்சலையும் தவிர்க்க உதவும். ஏனென்றால், இளம்பிள்ளைவாதம், தட்டம்மை, சின்னம்மை, புட்டாளம்மை, மஞ்சள்காமாலை (ஹெபடைடிஸ் பி) போன்ற ஆபத்தான நோய்கள் வந்துவிட்டால், அதையெல்லாம் குணப்படுத்துவதற்கான மருந்துகள் இல்லை. இன்னும், தொண்டை அடைப்பான், கக்குவான், ரணஜன்னி போன்றவை பாதித்தால்... குழந்தையின் உயிருக்கே ஆபத்தாகிவிடும். அதனால், தடுப்பூசி விஷயத்தில் சமரசமே கூடாது.
அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார மையங்கள் மற்றும் சிறப்பு மருத்துவ முகாம்களில் இலவசமாகவே இதில் பெரும்பாலான ஊசிகள் போடப்படுகின்றன. எனவே, செலவு என்று காரணம் சொல்வதற்கு இடமே இல்லை. ஆக, ஒரு பெற்றோராக நம்முடைய பொறுப்பு... உரிய காலக்கிரமத்தில் அவற்றைஎல்லாம் குழந்தைக்கு போடுவதுதான்'' என்ற டாக்டர்,
''தடுப்பூசி தருணத்தில் குழந்தை எதிர்கொள்ளும் சங்கடம் இயல்பானதே. தடுப்பூசி போட்டதுமே குழந்தைக்கு காய்ச்சல் மாதிரியான சிறு உபத்திரவங்கள் தலைகாட்டலாம். காய்ச்சல் அதிகமாக இருந்தால், டாக்டர் தரும் மாத்திரைகளைப் பயன்படுத்தினால் போதும். வேறெந்த வகையிலும் தடுப்பூசிகள் விஷயத்தில் தயங்க வேண்டியதில்லை'' என்று தைரியமும் தந்தார்.
டாக்டர் அளித்த குறிப்புகளைக் கொண்டு குழந்தைகளுக்கான தடுப்பூசி பட்டியலை இங்கு உருவாக்கியிருக்கிறோம். இலவச தடுப்பூசிகள் தவிர்த்து... பிற ஊசிகளுக்கான விலை விவரங்கள், சில மருந்தாளுநர்கள் உதவியுடன் சேகரிக்கப்பட்டுள்ளது. இந்த மதிப்பு நீங்கள் நாடும் மருத்துவமனை, நகரம், சிற்றூர் என சில அம்சங்களைப் பொறுத்து கூடவோ அல்லது குறையவோ செய்யலாம்.
வளர்ப்பு பிராணிகளிடம் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் நோக்கத்தில், அதற்கான தடுப்பூசியும் இப்பட்டியலில் உண்டு. ஹெபடைடிஸ் ரகங்கள் மற்றும் ஜப்பான் மூளைக்காய்ச்சல் போன்றவை பிராந்திய பாதிப்பைப் பொறுத்து அரசால் அமைக்கப்படும் மருத்துவ முகாம்களிலோ... லயன்ஸ், ரோட்டரி கிளப் போன்ற பொதுச்சேவை அமைப்புகள் நடத்தும் மருத்துவ முகாம்களிலோ இலவசமாக அல்லது மிகக்குறைந்த செலவில் போடப்படுகின்றன. அவற்றையும் பயன்படுத்திக்கொள்ளலாம். இங்கே தரப்பட்டிருக்கும் பட்டியலை ஒரு நினைவூட்டல் மற்றும் பார்வைக்காக வைத்துக் கொண்டு குழந்தை மருத்துவர் அல்லது குடும்ப மருத்துவர் ஆலோசனை மற்றும் கண்காணிப்பின் அடிப்படையில் மருத்துவ நடவடிக்கைகளை மேற்கொள்வது முக்கியம் என்பதை மறந்துவிடாதீர்கள்!