அநியாய வட்டி அழிவைத் தரும்!
ஓர் ஊரில், ஒரு பேராசைக் கிழவி இருந்தாள். அவள் எப்போதுமே அநியாய வட்டிக்குத்தான் கடன் கொடுப்பாள். பக்கத்து ஊர்க்காரர் இருவருக்கு பண நெருக்கடி வரவே, கிழவியைத் தேடிவந்தார்கள். ''நூறு ரூபாய்க்கு, மாசம் 20 ரூபா வட்டி, முதல் மாத வட்டியை எடுத்துகிட்டுதான் பணம் தருவேன்'' என்று கறாராக சொன்னாள் கிழவி.
''இவ்ளோ வட்டியா... இது அநியாயம்... எனக்கு கடனே வேண்டாமென்று!'' ஒருவன் விலகி நிற்க, அடுத்தவனோ, எதையும் யோசிக்காமல் கடனை வாங்கிக் கொண்டான்.
வெளியில் வந்ததும், ''ஏண்டா இப்படி அநியாய வட்டிக்கு கடன் வாங்கினே? இப்போ பாரு... உனக்கு இருபது ரூபா நஷ்டம்!'' என்று ஒருவன் சொல்ல...
''அட போப்பா! எனக்கு இருபது ரூபாதான் நஷ்டம்... அந்த கிழவிக்கு எண்பது ரூபா நஷ்டம். நான் அசலை திருப்பிக் கொடுத்தாத்தானே!'' என்றான் மற்றவன்.
பிசினாரித்தனம் கூடாது!
ஒரு கஞ்சன் வீட்டுக்கு, இன்னொரு கஞ்சன் விருந்துக்குப் போனான். விருந்தில் ரசம் ஊற்ற, அதை சாப்பிட்டுவிட்டு ''செம சூப்பர்!'' என்றான். வீட்டுக்கார கஞ்சன் சொன்னான், ''எங்க பலசரக்குக் கடையில மிளகை அள்ளி அள்ளி வியாபாரம் செஞ்ச பிறகு, கையை கழுவுன தண்ணியில செய்த ரசம்தான் இது... அதான் இவ்வளவு ருசியா இருக்கு!'' என்று. இதைக் கேட்டவுடன், விருந்துக்கு வந்த கஞ்சன் டென்ஷனாகி, ''அடப் பாவிங்களா! இப்படி மிளகுத் தண்ணிய யாராவது முழுவதும் வீண் செய்வாங்களா? ஒரேயடியா ஒரே நாளில் இப்படி கையை கழுவுனதுக்கு பதிலாக, ஒரு நாளைக்கு ஒரு விரல் வீதமாக கழுவி, அஞ்சு நாளைக்கு ரசம் வெச்சுருக்கலாமே'' என்று சொல்லிவிட்டு போய்விட்டான்.
சிக்கனம், கஞ்சத்தனம், பிசினாரித்தனம் ஆகிய மூன்றுமே வேறு வேறு!
சிக்கனம் சீர்மை தரும்.. கஞ்சத்தனம் சீரழிவைத் தரும்.. பிசினாரித்தனம் பிசாசையே கூட்டி வருமாம்!
அதிகப் புகழ்ச்சி!
அந்த மன்னனுக்கு படிப்பறிவு இல்லையென்றாலும், தன்னை எப்போதும் பெரிதாகவே அவன் நினைத்துக் கொண்டான். அவனைப் புகழ்ந்து பாடல்களை எழுதிவரும் புலவர்களுக்கு, அந்தப் பாடல்கள் அடங்கிய ஏடுகளின் எடைக்கு எடை பரிசுகளை வாரி வழங்கினான். இதனால், கண்டதையும் எழுதி வந்து அவனிடம் கொடுத்துவிட்டு, பரிசுகளை வாங்கிச் செல்வது தொடர்ந்தது.
இதைப் பார்த்த ஒரு பெரியவருக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. அதனால், கண்டபடி நாலு வரி புகழ்ந்து எழுதி மனப்பாடம் செய்துகொண்டு மன்னன் முன் சென்று பாடினார். ''எழுதிய ஏடு எங்கே? எடைக்கு எடை பரிசு தருகிறேன்!'' என்று குஷியோடு சொன்னான் மன்னன்.
''மன்னிக்க வேண்டும் அரசே... ஏடு, வெளியே இருக்கிறது. தூக்கிவர இயலவில்லை. உதவியாளர்களை அனுப்புங்கள்'' என்றார் பெரியவர்.
குழம்பிப்போன மன்னன், தானே வெளியே சென்று பார்க்க... அந்த நாலு வரி பாடல், ஒரு பெரிய கருங்கல்லில் செதுக்கப்பட்டிருந்தது.
பிறகென்ன? அந்தக் கருங்கல்லின் எடைக்கு எடை பரிசைக் கொடுத்து மன்னன் அழுததுதான் மிச்சம்!
டெக்னாலஜி!
இங்கிலீஷ் டீச்சரை சுற்றிக் குழந்தைகள் அமர்ந்திருக்க, டீச்சர் அவர்களிடம் கேள்விகளை கேட்டார்...
''பிரதீபா... டைகர் எப்படி கத்தும்?''
''ர்ர்ர்ர்ர்...'' - புலி போல் உறுமிக் காண்பித்தாள் பிரதீபா.
''சபாஷ் அம்முகுட்டி! விஷ்ணு, நீ சொல்லு... எலிஃபென்ட் எப்படிக் கத்தும்?''
''கேய்ய்ய்ய்ய்..''
- பிளிறிக் காட்டினான்.
''துளசி, டாக் எப்படிக் கத்தும்?''
''வவ்.. வவ்..'' என்று நாய் போல் குரைத்துக் காட்டினான் துளசி.
'வெரிகுட்! ஷீலா நீ சொல்லு.. கேட் எப்படிக் கத்தும்?'
''மியாவ்'' என்று கத்தினாள் ஷீலா.
''சூப்பர்! வசந்தி, நீ சொல்லு.. மௌஸ் (எலி) எப்படிக் கத்தும்?''
வசந்தி யோசித்துவிட்டு... ''க்ளிக்.. க்ளிக்...''
மாடு, ஆடு, வேலு!
''வேலு! உனக்கு நான் ரெண்டு மாடும், இன்னொரு ரெண்டு மாடும், அதன் பிறகு இன்னும் ரெண்டு மாடும் தர்றேன். இப்ப உன் வீட்டில் மொத்தம் எத்தனை மாடு இருக்கும்?''
''எட்டு, டீச்சர்!''
''மண்டு! கணக்கை மறுபடியும் சொல்றேன். முதல்ல ரெண்டு மாடு தர்றேன். அப்புறம் ரெண்டு மாடு தர்றேன். மறுபடியும் ரெண்டு மாடு தர்றேன். ஆகமொத்தம் எத்தனை மாடுங்க?''
''எட்டு, டீச்சர்''
''போடா முட்டாள்! சரி, இப்ப கொஞ்சம் மாத்தி சொல்றேன். இப்பவாவது கண்டுபிடி பாக்கலாம். முதல்ல ரெண்டு ஆடு தர்றேன். அப்புறம் ரெண்டு ஆடு தர்றேன். மறுபடியும் ரெண்டு ஆடு தர்றேன். இப்ப உன் வீட்டில் மொத்தம் எத்தனை ஆடுங்க இருக்கும்?''
''ஆறு டீச்சர்!''
''அட, இப்ப மட்டும் எப்படிடா சரியா சொன்னே?''
''எங்க வீட்ல ஏற்கெனவே ரெண்டு மாடு இருக்கு டீச்சர்! ஆனா, ஆடு இல்லியே!''
ஏமாற்றுப் பணம்!
ஒரு கிராமத்துக்கு வந்து சேர்ந்த ஒரு சாமியார், தரையில் துண்டை விரித்து, சில சீட்டுகளைப் பரப்பினார். கூட்டம் கூடிவர, ''பக்தர்களே... உங்களுக்கு மாபெரும் நற்செய்தி! இதோ என்னிடம் பாவமன்னிப்பு சீட்டுகள் விற்பனைக்கு உள்ளன. ஒரு சீட்டு நூறு ரூபாய்! நீங்கள் இதுவரை எவ்வளவு பாவம் செய்திருந்தாலும், இதைக் கொண்டு போனால்.. நிச்சயம் சொர்க்கத்தில் இடம் உண்டு. இதுதான் அதற்கான நுழைவுச் சீட்டு!' என்று கூவினார். எல்லோரும் போட்டிப் போட்டுக் கொண்டு சீட்டை வாங்க, பணம் குவிய, சாமியாருக்கு ஒரே குஷி.
அடுத்தபடியாக, ''என்னிடத்தில் இன்னொரு சீட்டும் உள்ளது. நீங்கள் இனி செய்யப் போகும் பாவத்தையும் மன்னிக்கக் கூடிய அந்த சீட்டின் விலை இருநூறு ரூபாய்'' என்று சொல்லி அதையும் விற்று பணத்தை அள்ளினார் சாமியார்.
சாமியார் புறப்பட எத்தனித்த சமயத்தில் வந்து சேர்ந்த ஒருவன், இரண்டு சீட்டுகளையும் வாங்கிய கையோடு, கத்தியைக் காட்டி மிரட்டி, மொத்த பணத்தையும் சுருட்டிக் கொண்டு ஓடத் தொடங்கினான். அப்போது, ''உனக்கு நரகம்தான்'' என்று சாமியார் சாபம்விட, ''நான்தான் இருநூறு ரூபாய் சீட்டையும் வாங்கிட்டேனே... உன் சாபம் பலிக்காது!'' என்றபடியே ஓட்டத்தைத் தொடர்ந்தான்!
குலப்பெருமை
ஓர் ஊரில், ஒரு புளுகுமூட்டை இருந்தான். அவனுடைய தொழிலே எதற்கெடுத்தாலும் புளுகுவதுதான். இதைப் பெருமையாக வேற நினைத்து சந்தோஷப்பட்டுக் கொண்டிருந்தான். ஆனால், இதற்கு நேர் எதிரான குணங்களோடு... ரொம்ப சாதுவாக, பயந்த சுபாவத்துடன் வளர்ந்தான் அவனுடைய 12 வயது மகன். இது, அப்பன்காரனை ரொம்பவே வெசனப்பட வைத்தது. 'ஐயோ, புளுகத் தெரியாம இப்படித் தறுதலையா திரியுறானே! நம்ம குடும்பப் பெருமையைக் கெடுத்துடுவான் போலிருக்கே!' என்று சொல்லி, மகனை அடிக்கவும் செய்தான்.
'அப்பா அடித்து விட்டாரே...' என்கிற கவலையிலும்... யோசனையிலும் மகன் மூழ்கிக்கிடக்க, அவனைப் பார்க்க அப்பன்காரனுக்கு பாவமாகிவிட்டது. பையனை குஷிப்படுத்துவதற்காக, தன் தோள் மீது அவனை உட்கார வைத்துக் கொண்டு, அடுத்த ஊர் திருவிழாவுக்கு அழைத்துச் சென்றான்.
வழியில் ஆறு குறுக்கிட, தண்ணீரில் இறங்கி அதைக் கடக்க ஆரம்பித்தான். அப்போது, தண்ணீரிலிருந்து 'டப்' என்றொரு சத்தம்.
''என்னடா சத்தம்?'
''ஒண்ணுமில்லேப்பா! தண்ணியில 'டப்'னு கைய விட்டேன். மீன் மாட்டிக்கிச்சு. அதை அப்படியே பொரிச்சுத் தின்னுட்டேன்!''
மகன் இப்படி சொன்னதைக் கேட்டதும்... ''ஆகா... நம்ம குலப்பெருமை அழியாதுடா மகனே!'' என்று சந்தோஷத்தில் ஆட்டம் போட்டான் அப்பன்.