பல்லியால் பயம்!
சமைத்த உணவுகள் எதையுமே மூடி வைக்கும் பழக்கம் என் மனைவிக்கு இல்லை. இதனால், பல்லி விழுந்திருக்குமோ என்ற பயம் அடிக்கடி எனக்கு ஏற்படுகிறது. உணவில் பல்லி விழுந்தால் என்ன ஆகும்?
டி. ரவிகுமார், மூத்த பேராசிரியர், கோவை அரசுப் பொதுமருத்துவமனை மருத்துவக்கல்லூரி
பல்லி விஷப் பிராணியே இல்லை. சமைத்து வைத்த உணவில் பல்லி விழுந்தால், விழுந்த வேகத்தில், அது சிறுநீர், எச்சம் கழித்துவிடும். அதில் உள்ள கிருமிகளால் வயிற்றுப்போக்கு, வாந்தி ஏற்படக்கூடும். உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது.
கொதிக்கும் உணவில் பல்லி விழும்போது, அது நன்றாக வெந்து, கிருமிகள் எல்லாம் அழிந்து போயிருக்கும். அந்த உணவை தெரியாமல் சாப்பிட்டுவிட்டாலும் ஒன்றும் ஆகாது. பல்லி விழுவதை கண்ணால் பார்த்த அருவருப்பு, பயம் காரணமாகதான் தலை சுற்றல், குமட்டல் ஏற்படுகிறது. வேறு ஒன்றும் ஆகாது. உணவுப் பண்டங்களை திறந்துவைப்பதால் உணவே விஷமாக மாறிவிடும். அதேபோல், பயமே... வியாதிக்கான வித்துதான். மனைவியிடம் அதட்டி புரியவைக்காமல், அக்கறையுடன் எடுத்துச் சொல்லுங்கள்.