இளமை முடிந்து முதுமை நெருங்குகையில், பல்வேறு நோய்களும் மருத்துவப் பிரச்னைகளும் அதிகரிக்கும். முதுமைப் பருவத்தில் அடியெடுத்துவைக்கும் அனைவருக்கும் உள்ளுக்குள் ஏதோ ஒருவித பயம் இருக்கும். முதுமை பற்றிய புரிதல் எந்த அளவுக்கு இருக்கிறது என்பதை அறிந்துகொள்ள கேள்விகள் கொடுக்கப்பட்டுள்ளன. விடைகள் கடைசியில்...
1. வயதாகும்போது, ஒவ்வொருவருக்கும் அல்சீமர் என்ற மறதி நோய் வரும்.
சரி / தவறு
2. முதுமைக் காலத்தில் ஏற்படும் மிக முக்கியமான பிரச்னை, மன அழுத்தம்.
சரி / தவறு
3. முதியவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
சரி / தவறு
4. மனக் குழப்பம், முதியவர்களுக்குத் தவிர்க்க முடியாத, சரிப்படுத்தவே முடியாத பிரச்னை.
சரி / தவறு
5. வயது அதிகரிக்கும்போது புத்திக்கூர்மை குறையும்.
சரி / தவறு
6. தம்பதிகளுக்கு இடையிலான தாம்பத்திய உறவு 55-60 வயதில் மறைந்துவிடும்.
சரி / தவறு
7. முதியவர்கள் உடற்பயிற்சியில் ஈடுபடுவதைத் தவிர்த்து, நன்றாக ஓய்வெடுக்க வேண்டும்.
சரி / தவறு
8. வயது ஏறும்போது, ஆரோக்கியமாக இருக்க வைட்டமின் மற்றும் தாது உப்பு மாத்திரைகளை அதிக அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
சரி / தவறு
9. குழந்தைகளுக்கு மட்டும்தான் பல் மற்றும் எலும்பு உறுதியாக இருக்க கால்சியம் தேவைப்படும்.
சரி / தவறு
10. முதுமையில் ஏற்படக்கூடிய விபத்துக்கள் பெரும்பாலும் தவிர்க்கக்கூடியவையே.
சரி / தவறு
1. தவறு. 80 வயதைக் கடந்தவர்களில், வெறும் 20 முதல் 25 சதவிகிதம் பேருக்குத்தான் மறதி நோய் ஏற்படுகிறது.
2. சரி. பணியிலிருந்து ஓய்வுபெறுவது, நண்பர்கள் அல்லது உறவினர்களின் மரணம், தனிமை, மனப்பதற்றம் போன்றவை இந்த வயதில் ஏற்படும். இருப்பினும் மன அழுத்தம் சரிப்படுத்தக்கூடியதுதான்.
3. சரி. 2030-ம் ஆண்டில் நான்கில் ஒரு பங்கு மக்கள்தான், 65 வயதைக் கடந்தவர்களாகவே இருப்பர்.
4. தவறு. மனக் குழப்பம், மறதி போன்றவை அல்சீமரால் ஏற்படலாம். இந்தப் பிரச்னைகள் ஏற்படுவதற்கு ஊட்டச்சத்துக் குறைபாடு, காய்ச்சல், மருந்துகளின் பக்க விளைவு என வேறு காரணங்களும் இருக்கலாம். இவை அனைத்தையுமே உரிய சிகிச்சை மூலம் சரிப்படுத்திவிடலாம்.
5. தவறு. எந்த ஒரு காரணமும் இன்றி அறிவுக்கூர்மை குறையாது. முதுமையிலும் புத்திசாலித்தனத்துடன் இருப்பதுடன், அதை மேலும் வளர்த்துக்கொள்ளவும் முடியும்.
6. தவறு. முதுமையிலும் தாம்பத்திய வாழ்வில் ஈடுபட முடியும்.
7. தவறு. நடை, நீச்சல், சைக்கிள் ஓட்டுதல் போன்ற பயிற்சிகள் செய்யலாம். உடற்பயிற்சியில் ஈடுபடுவதற்கு முன்பு, மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது அவசியம்.
8. தவறு. வைட்டமின் டி போன்ற சில ஊட்டச்சத்துக்கள் சிறிது அதிகமாகத் தேவைப்பட்டாலும், பெரும்பாலும் இளம் வயதினருக்கு ஒரு நாளைக்கு எவ்வளவு வைட்டமின், மினரல் தேவையோ, அதுவே முதியவர்களுக்கும் பொருந்தும்.
9. தவறு. முதியவர்களுக்கு குறைந்த அளவில் கலோரி தேவை என்றாலும், எலும்பு உறுதிக்கு இளையவர்களைக் காட்டிலும் அதிக கால்சியம் தேவை. மெனோபாஸுக்குப் பிறகு பெண்களுக்கு ஆஸ்டியோபோரோசிஸ் அபாயம் உள்ளதால், அதிக அளவில் கால்சியம் நிறைந்த பால் பொருட்கள், பீன்ஸ், ப்ரோகோலி உணவுகள் தேவை.
10. சரி. தவறி விழுந்து காயம் ஏற்படுதல் என்பது முதியவர்களுக்கு ஏற்படும் பொதுவான பிரச்னை. சரியான வெளிச்சம், வழுக்காத தரை போன்றவை, இதுபோன்ற விபத்துக்களைக் குறைக்க உதவும்.
முதுமையில் புரிதல் இருந்தால், பல்வேறு பிரச்னைகளை புறந்தள்ளிவிடலாம். முதுமை... சாபமல்ல... சந்தோஷமே என்பதையும் உணர்த்தும்.