'அசத்தலான உயரம், ஆரோக்கியமான உடற்கட்டுனு என் பையன் எப்படி வாட்டசாட்டமா இருக்கான் பாரு' என்று உச்சி முகர்ந்து மெச்சும் அளவுக்கு பிள்ளைகள் வளர்வதைப் பார்த்துப் பூரிக்கிறோம்.
பெற்றோர்களின் இந்த எதிர்பார்ப்பை வைத்தே, ''உங்க குழந்தை உயரமா வளரனுமா? எங்க கம்பெனி ஊட்டச்சத்து பானத்தைக் கொடுங்க'' என்ற வகை விளம்பரங்கள் வருகின்றன. ''எந்த ஒரு ஊட்டச்சத்து பானத்தாலும் உயரத்தைக் கூட்ட முடியாது என்பதுதான் உண்மை.''
''உயரத்தை நிர்ணயிக்கும் ஹார்மோன் குறைவாக சுரக்கும்போது குழந்தைகளின் உயரம் குறைகிறது. இதை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை எடுத்துக்கொள்வதன் மூலம் மட்டுமே ஓரளவுக்கு சராசரி உயரத்தை அடைய முடியும்.
பல முக்கிய ஹார்மோன்களை உற்பத்தி செய்யும், முக்கிய சுரப்பிகளைக் கட்டுப்படுத்தும் மாஸ்டர் சுரப்பி பிட்யூட்டரி. தைராய்டு, பாலின வளர்ச்சி போன்றவை பிட்யூட்டரி பை(கை)யில்தான் உள்ளன. மூளைக்கு கீழே பீன்ஸ் விதை அளவுக்கு பிட்யூட்டரி சுரப்பி இருக்கும். தைராய்டு, அட்ரினல், பெண்களுக்கு சினைப்பை, பால் சுரப்பு, ஆண்களுக்கு உயிரணு உற்பத்தியைத் தூண்டுவது உள்பட எட்டு வகையான ஹார்மோன் பிட்யூட்டரியில் இருந்துதான் சுரக்கின்றன. பிட்யூட்டரியை முன் பாகம், பின் பாகம் என இரண்டாகப் பிரிக்கலாம். முன் பாகத்தில் இருந்து ஆறு ஹார்மோன்களும், பின் பக்கத்தில் இருந்து இரண்டு ஹார்மோன்களும் சுரக்கின்றன. ஹார்மோன்கள் அதிகமாக சுரக்கும்போது பிட்யூட்டரி சுரப்பியில் அதைக் கட்டுப்படுத்த மாத்திரைகள், அறுவை சிகிச்சைகள் உள்ளன. ஆனால், குறைவாக சுரக்கும்போது, ஹார்மோன் ஊசி எடுத்துக்கொள்வது மட்டுமே தீர்வாக உள்ளது.
குரோத் ஹார்மோன்
பிட்யூட்டரியில் இருந்து சுரக்கும் முக்கிய ஹார்மோன் குரோத் ஹார்மோன் எனப்படும் வளர்ச்சியை நிர்ணயிக்கும் ஹார்மோன். ஒருவர் உயரமாக இருக்கவும், உயரம் குறைவானவராக இருக்கவும் முக்கியக் காரணம் இந்த ஹார்மோன்தான். இது பிறவிக்குறைபாடாகவோ, அல்லது பல்வேறு காரணங்களால் இடையிலோ ஏற்படலாம். இந்த ஹார்மோன் குறைபாடானது உயரத்தை மட்டும் பாதிக்காமல், சருமத்தில் மாற்றம், உடல் பருமன் போன்றவற்றையும் ஏற்படுத்தும். மேலும், எதிர்காலத்தில் சர்க்கரை நோய், இதய நோய்கள் வருவதற்கான வாய்ப்பையும் அதிகரிக்கிறது. ஒருவர் அந்தந்த வயதுக்குரிய உயரத்தை அடையவில்லை எனில், உடனடியாக மருத்துவரை அணுகி, ரத்தப் பரிசோதனை செய்து வளர்ச்சி ஹார்மோன் குறைபாட்டைக் கண்டறிய வேண்டும். இவர்கள், தொடர்ந்து வளர்ச்சி ஹார்மோனை எடுத்துக்கொள்வதன் மூலம் ஓரளவுக்கு சராசரி உயரத்தை அடைய முடியும். வளர்ச்சி முடியும் காலத்தில் இத்தகைய சிகிச்சைகள் பலன் அளிக்காது. வளர்ச்சி ஹார்மோன் அதிகமாக சுரக்கும்போது மிகப் பெரிய உதடு, மூக்கு என உடல் அமைப்பே மிகப் பிரமாண்டமாக மாறிவிடும். குரலும் கடினப்பட்டுவிடும். மிக உயரமாக இருப்பார்கள். வளர்ச்சி ஹார்மோனை டைனமிக் ரத்த பரிசோதனை மூலம் கண்டறியலாம். இதை மருந்து மாத்திரைகள் மூலம் கட்டுப்படுத்த முடியும்.
பிட்யூட்டரி சுரப்பியில் கட்டி, மூளைக் கட்டி, புற்றுநோய்க்கு எடுக்கும் கதிர்வீச்சு சிகிச்சை போன்ற காரணங்களால் பிட்யூட்டரி சுரப்பி பாதிக்கப்படும்.
ப்ரோலாக்டின் ஹார்மோன்
இந்த ஹார்மோன் பேறுகாலத்துக்குப் பிறகு பால் சுரப்பைத் தூண்டுகின்றன. இந்த ஹார்மோன் அதிகம் சுரப்பதால் பெண்களுக்கு குழந்தைப் பேரின்மை, மாதவிலக்கு வராமை, அதிக அளவில் பால் சுரப்பு போன்றவை ஏற்படுகின்றன. எளிய ரத்தப் பரிசோதனையின் மூலம் ப்ரோலாக்டின் அளவைக் கண்டறிந்து, மருந்து மாத்திரைகள் மூலம் 98 சதவிகிதம் வரை கட்டுப்படுத்தலாம்.
டிஎஸ்எச்
தைராய்டு ஹார்மோன் சுரப்பைத் தூண்டும் ஹார்மோனுக்கு தைராய்டு ஸ்டிமுலேட்டிங் ஹார்மோன் என்று பெயர். இந்த சுரப்பில் குறைபாடு ஏற்படும்போது தைராய்டு ஹார்மோன் சுரப்பு கூடுதலாகவோ, குறைவாகவோ சுரக்கின்றது. இதை ரத்தப் பரிசோதனை மூலம் கண்டறிந்து, மாத்திரை மூலம் சரிப்படுத்தலாம்.
ஃபாலிக்கிள் ஸ்டிமுலேட் ஹார்மோன்
இரு பாலினத்துக்கும் பொதுவான ஹார்மோன் இது. ஆண்களுக்கு இது விதைப்பையில் விந்தணு உருவாக்கத்துக்கும், பெண்களுக்கு சினைப்பையில் முட்டை உருவாக்கத்துக்கும் உதவி புரிகிறது. இந்த ஹார்மோன் குறைவாக சுரக்கும்போது வழக்கமான பாலின வளர்ச்சி இருக்காது. பூப்பெய்தல் மிகவும் தாமதம் ஆகும். உயரம் அதிகரிக்கும். குழந்தையின்மைப் பிரச்னை வரும். இதை ஊசி மருந்துகள் செலுத்துவதன் மூலம் சராசரி அளவுக்குக் கொண்டுவரலாம்.