பஞ்சாங்கத்தின் ஐந்து முக்கிய உறுப்புகள் வாரம், திதி, கரணம், நக்ஷத்திரம், யோகம் ஆகியவை. இவற்றை விரிவாக அறிவது அவசியம். முதலில், வாரம் பற்றி பார்ப்போம்.
வாரம் என்பது ஏழு கிழமைகளாகும். சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி ஆகிய ஏழு கிரகங்களுக்குரிய நாட்களாக அமைந்துள்ள ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி ஆகிய ஏழு நாட்களைக் கொண்டது ஒரு வாரமாகும். நவக்கிரகங்கள் என ஒன்பது கிரகங்களைக் குறிக்கிறோம். அதில் ஏழு கிரகங்கள் ஆட்சி செய்யும் ஏழு நாட்களை மட்டுமே ஒரு வாரம் என்கிறோம். அப்படியானால், மற்ற இரண்டு கிரகங்களுக்கு நாட்களின்மீது ஆதிக்கம் கிடையாதா என்ற கேள்வி எழலாம். இதற்கு விடைதரும் ஒரு புராணக் கதை உண்டு.
சூரியன் முதல் சனி வரையிலான ஏழு கிரகங்களுக்கு வார நாட்களைப் பிரித்துத் தந்தார் பிரம்மா. ராகு கேதுக்களான சாயா கிரகங்களை அதில் சேர்க்கவில்லை. ராகுவும் கேதுவும் தவம் செய்து பிரம்மனை தரிசித்தனர். நவக்கிரகங்களில் இடம்பெற்ற தங்களுக்கு வார நாட்கள் ஏன் ஒதுக்கப்படவில்லை என்று கேட்டனர். வாரம் என்பதை ஒன்பது நாட்கள் என நிர்ணயித்து தங்களுக்கும் இரண்டு நாட்களை ஒதுக்கி, ஆதிக்கம் செலுத்தும் அதிகாரத்தைத் தரும்படிக் கேட்டனர்.
அதற்கு பிரம்மன், 'நீங்கள் இருவரும் இரண்டு கிரகங்கள் அல்ல. ஒரே கிரகம்தான். பாம்பின் தலையையும், வாலையும் உடலின் பகுதியாகக் கொண்ட நீங்கள் ஒரே கிரகம்தான். ஒரு நாளை உங்களுக்காக ஒதுக்கினால் வார நாட்கள் எட்டாகும். இது 52 வாரங்களை கொண்ட ஒரு வருடக் கணக்கில் சிக்கலை உண்டாக்கும். எனவே, உங்கள் விருப்பத்தை வேறு விதமாகப் பூர்த்தி செய்கிறேன்'' என்று கூறி, ஒவ்வொரு நாளிலும் ஒன்றரை மணி நேரத்தை ராகுவுக்கும், ஒன்றரை மணி நேரத்தைக் கேதுவுக்கும் தந்து, அந்தக் காலத்தை ராகு காலம், கேது காலம் என்று பிரித்து அருள்புரிந்தார்.
இப்போது மற்ற ஏழு கிரகங்களும் தங்கள் ஆட்சிக் காலமான 24 மணி நேரத்தில் 3 மணி நேரம் குறைந்துவிட்டதே என்றும், ராகு, கேதுக்களுக்கு ஆட்சி நேரம் அதிகமாகிவிட்டதே என்றும் எண்ணினர். அப்போது பிரம்மா இந்த ராகுகாலம், கேதுகாலம் பற்றிய கணக்கை விவரித்தார். ஒரு நாளின் 24 மணிநேரத்தில் ராகு, கேது காலம் 3 மணி நேரம் போக, அந்தக் கிரகத்தின் மீதி ஆட்சி நேரம் 21 மணிநேரம். ராகு, கேதுக்கள் இருவருக்கும் சேர்த்து ஒரு நாளைக்கு 3 மணி வீதம் 7 நாட்களுக்கு 21 மணி நேரம். எனவே, ஒரு வாரத்தில் ஒன்பது கிரகங்களுக்கும் தலா 21 மணி நேரம் ஆட்சிக் காலம் ஆகிறது என்று விளக்கினார்.
பிரம்மனின் கணித யுக்தியைப் பாராட்டினார்கள் நவக்கிரக தேவர்கள். ஒவ்வொருநாளும் ராகு காலம் எப்போது, கேது காலம் எப்போது என பஞ்சாங்கத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும். கேதுவின் காலத்தைதான் எமகண்டம் என்று குறிப்பிடுகிறார்கள். அதனால், அது எமனுக்குரிய காலம் என்றும், அதில் ஆபத்துகள் நேரும் என்றும் தவறாக எண்ண வேண்டியதில்லை. ராகு காலத்தில் புதிய காரியங்களைத் தொடங்கக்கூடாது என்றும், திருமணம் போன்ற சுபகாரியங்களின் முகூர்த்தத்தை வைக்கக்கூடாது என்றும் சாஸ்திரம் கூறுகிறது. மற்றபடி நமது தினசரிக் கடமைகளைச் செய்யவும், கர்மாக்களைச் செய்யவும் ராகு காலம், எமகண்டம் ஒரு தடையில்லை என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
கிரகங்களின் தலைவன் சூரியன். எனவே, வாரத்தின் கிழமைகளில் முதல் கிழமை ஞாயிறுதான். மேலை நாட்டவர்கள் பல நூற்றாண்டுகள் நம்மை ஆண்ட காலத்தில், அவர்கள் கலாசாரத்துக்கு ஏற்ப ஞாயிற்றுக்கிழமையை விடுமுறையாக்கி, திங்கட்கிழமையை வார முதல்நாள் என்று சிந்திக்கும்படிச் செய்துவிட்டனர். மற்ற நாட்களைவிட ஞாயிற்றுக்கிழமைகளில் வேலை செய்தால், அறிவாற்றலால் ஏற்படும் சக்தி அதிகமாகி, அதனால் நல்ல பலன்கள் ஏற்படும் என்பது நம் முன்னோர்கள் கண்டறிந்த உண்மை.
ஞாயிற்றுக்கிழமைகளில் சோம்பேறித்தனமாக ஓய்வெடுத்துக் கழிக்கும் பழக்கத்தை மாற்றி, ஆக்கப்பூர்வமான அறிவுப் பணிகளைச் செய்துபார்த்தால், அதன் பலன் தெரியும். மத்தியக் கிழக்கு நாடுகளிலும், வேறு சில மேலை நாடுகளிலும் வெள்ளிக்கிழமைதான் விடுமுறை; ஞாயிற்றுக்கிழமை வேலை நாள்!
ஒவ்வொரு கிழமைக்கும் ஒரு நவக்கிரக நாயகன்தான் தேவதை. அந்த நவக்கிரகத்துக்கு ஒரு அதிதேவதை (மூலாதார தேவதை உண்டு). அதனாலேயே அந்தந்த நாட்களில் அந்த கிரகத்துக்குரிய அதிதேவதையை பூஜித்துப் பலன்பெறும் பழக்கம் இந்து தர்மத்தில் உள்ளது.