Saturday, June 15, 2013

தந்திக்கு டாட்டா!

'தந்திக்கு டாட்டா! அடுத்த மாதம் முதல் தந்தி சர்வீஸை ஒழித்துக்கட்டுகிறது தபால் துறை'ங்கிற செய்தியைப் படிச்சுட்டு, நான் பரிதவிச்சுப் போயிட்டேங்க. என் ஞாபகமெல்லாம் முப்பது, நாப்பது வருஷத்துக்குப் பின்னாடி போயி, அப்படியே அசந்து உக்காந்துட்டேங்க.

பகலோ, ராத்திரியோ, தந்தி தர்றவரு நம்ம வீட்டைத் தேடிவந்தா, மொத்த வீடும் அதகளப்படுமே! நம்ம வீடு மட்டுமா, அக்கம்பக்கத்துல இருக்கறவங்க உடனே வந்து என்ன ஏதுன்னு விசாரிக்க ஆரம்பிச்சுடுவாங்களே. நிறைமாசமா இருந்த பொண்ணு குழந்தையைப் பெத்தாலும் சரி, படுக்கையில கிடந்த பாட்டி/தாத்தா பட்டுன்னு போனாலும் சரி, ஜாதிஜனத்துக்கு தகவல் சொல்ல அந்தக் காலத்துல இது ஒண்ணுதானேங்க வழி. வாழ்க்கையில பிறப்பு, இறப்பு, ஆக்சிடென்ட், ஹார்ட் அட்டாக், வாழ்த்து, துக்கம், இன்டர்வியூ, அப்பாயின்மென்ட், மீட்டிங்/இன்டர்வியூ கேன்சலேஷன், பாராட்டுன்னு எதைப் பத்தி வேண்டுமின்னாலும் உடனடியா தகவல் சொல்லணுமின்னாலும் தந்திதானேங்க அந்தக் காலத்து எஸ்.எம்.எஸ்.-ஸா இருந்தது.  


இந்தக் காலத்துல கல்யாணத்துக்கு போகலைன்னா மாப்பிள்ளை மணமேடையில இருந்துகிட்டே அருவா படத்தை அனுப்பி, போன் பண்ணித் திட்டுறாரு. ஆனா, அந்தக் காலத்துல கல்யாணத்துக்குப் போகலைன்னாலும் ஒரு வாழ்த்து தந்தியாவது அனுப்பிச்சிடனும். இல்லாட்டி நம்மைத் தொலைச்சு எடுத்துடுவாங்க! அவ்வளவு மதிப்பு இருந்தது கல்யாண வாழ்த்து தந்திக்கு. கல்யாண வீட்டுல மொய் வாங்க ஓர் ஆளை நியமிச்சு இருக்கிற மாதிரி, தந்தி வாங்க ஓர் ஆளைப் போட்டுடுவாங்கன்னா பாத்துக்குங்களேன்! முதலாளி கொடுக்கச் சொன்ன கல்யாண வாழ்த்து தந்தியைக் கொடுக்காம போனதால வேலை போனவங்கல்லாம் இருக்காங்க!


மதர் சீரியஸ்! ஸ்டார்ட் இம்மீடியட்லீ! கோபிச்சிட்டு இருக்கற சொந்தக்காரங்களை வீட்டுக்கு வரவழைக்கிறதுக்கு இப்படி தந்தி தர்றதுதானே ஹைதர் அலி காலத்து டெக்னிக்கா இருந்துச்சு. அக்கம்பக்கம் யாருக்கும் தந்தி வந்தா, அவங்க வீட்டில இங்கிலீஷ் நல்லாவே படிக்கத் தெரிஞ்சவங்களா இருந்தாலும் எங்க வீட்டுக்கு வந்து ஏகாம்பரம் தந்தியைக் கொஞ்சம் படிச்சுச் சொல்லுன்னு ஏங்கிட்டதானே கேப்பாங்க. ஏன்னா தந்தியைப் படிக்கணுமின்னா கல்நெஞ்சு வேணுமாமுல்ல!

தந்தி கொடுக்க தந்தி ஆபீஸ் போனா, நிறைய காமெடியைப் பார்க்கலாம். எப்ப பார்த்தாலும் நீளமா க்யூ நிக்கும். பிறந்த செய்தியைச் சொல்றவரும், இறந்த செய்தியைச் சொல்றவரும் படபடப்போடவே க்யூல நின்னு சண்டை போடுவாங்க. இந்த களேபரத்தைத் தடுக்குறதுக்காக சந்தோஷமான செய்திக்கு ஒரு நம்பர், வருத்தமான செய்திக்கு ஒரு நம்பர், கல்யாண வாழ்த்துக்கு ஒரு நம்பர்னு ஸ்டாண்டர்டு மெசேஜ்களை உருவாக்குனப்ப, தந்தி டிபார்ட்மென்ட்காரங்க பிசினஸ் மூளையை நெனைச்சு நான் வியந்துருக்கேங்க.  அந்த நம்பரைப் போட்டு கொடுத்தா மினிமம் சார்ஜ்தான். என்ன பெரிய சார்ஜ் ரூபாய் மூணு ரூபா அம்பது காசுதான்.


ஆனா, அவசரத்துல இந்த நம்பரை தப்பா எழுதிக்கொடுக்கற காமெடியெல்லாம் நடக்கும். கல்யாண வாழ்த்துக்குப் பதிலா வேறு நம்பரை மாத்தி எழுதிக் கொடுத்ததால, ஆழ்ந்த அனுதாபங்கள்னு மெசேஜ் போயிடும். தந்தி வாங்கின மாப்பிள்ளை மண்டையை சொறிஞ்சுகிட்டு நிப்பாரு! எலெக்ஷன்ல ஜெயிச்சதுக்கெல்லாம் வாழ்த்துச் சொல்ல ரெடிமேடா நம்பர் இருந்துச்சுன்னா பாத்துக்கோங்களேன்!

பெல்காமுக்குப் போகவேண்டிய டெலிகிராம் பெல்ஜியத்துக்கும், மவுண்ட் அபுக்கு போக வேண்டியது அபுதாபிக்கும், ராஜா ஒருத்தர் ரயில்வே ஸ்டேஷனில் என்னை வரவேற்கவும் என்று தர்பாருக்குக் கொடுத்த டெலிகிராமை ரயில்வே ஸ்டேஷனில் பார்பர் வரவேற்கவுமுன்னு டைப் பண்ணுனதால பார்பர் ஸ்டேஷனில ராஜாவுக்காக காத்திருந்ததும் நாங்க செஞ்ச காமெடின்னு ஒரு பழம்பெரும் டெலிகிராப் ஆபீஸ் அலுவலர் ஒரு இன்டர்வியூவில கொடுத்திருந்ததை சமீபத்தில படிச்சு வயிறு வலிக்கச் சிரிச்சேங்க.

இன்டர்வியூ, அப்பாயின்மென்டுன்னு நல்ல செய்தி சொல்ற தந்தியைக் கொண்டுவந்தவரு தலையை லைட்டா சொறிவாரு. அண்ணே காபி சாப்பிடுங்கண்ணே! தோசை சாப்பிடுங்கண்ணே! இதை வச்சுக்கிடுங்கண்ணேன்னு பாசமா நாமளும் தந்தி வந்த நேரங்காலத்துக்கு ஏத்தாப்புல ஓர் ஊக்கத்தொகையைக் கொடுப்போம். கெட்ட செய்தியைக் கொண்டுவந்தவரு முகத்தை சோகமா இறுக்கமா வச்சு துக்கத்தைக் காட்டுவாரு. என்ன மாதிரியான ஒரு பெர்சனைஸ்டு சர்வீஸ் பாருங்க!


எப்படி இருந்த துறையின்னு நினைச்சாலே மலைப்பா இருக்குது.  அவசரத் தகவல் பரிமாற்றத்துக்கு முன்னோடியா இருந்த தந்தி இன்னைக்கு அடையாளம் இல்லாம சிதைஞ்சு போய் படுத்தபடுக்கையா ஆகி அதோட ஆயுசு முடிஞ்சும் போயிடுச்சு. இன்டர்நெட் என்கிற சமாசாரம் வர்ற வரைக்கும் மவுசு குறையாமத்தாங்க இருந்துது தந்தி ஆபீஸ்! ஆனா, இன்டர்நெட் வந்தபிறகு தந்தியோட மகிமை கொஞ்சம்கொஞ்சமா குறைஞ்சு, செல்போன், எஸ்.எம்.எஸ். வந்தபிறகு தந்தியோட முக்கியத்துவம் சுத்தமா இல்லாமப் போயிடுச்சுங்க.

ஆனா, டெக்னாலஜிதான் இந்த தந்தியை கொலை பண்ணிடுச்சுன்னு சொன்னா, நான் ஏத்துக்கவே மாட்டேங்க. ஒருகட்டம் வரைக்கும் தேவைக்கேத்த மாதிரி தன் பிசினஸை மாத்திக்கிட்டு வந்த தந்தி ஆபீஸ், காலம் போகப்போக, எப்படி தன்னை மாத்தி அமைச்சுக்கிறதுன்னு தெரியாம முழுக ஆரம்பிச்சுடுச்சு. அரசாங்க டிப்பார்ட்மென்ட் இல்லையா! காலத்துக்கேத்த மாதிரி அதன் செயல்பாட்டை சட்டுபுட்டுன்னு மாத்திக்க முடியலே. இந்த டிப்பார்ட்மென்ட்காரங்க ஒரு விஷயம் மட்டும் உருப்படியாச் செஞ்சிருக்காங்க. 1984-க்குப் பிறகு புதுசா ஓர் ஆளையும் எடுக்கலையாம். 2015-டன் பெரும்பான்மையானவங்க ரிட்டையர் ஆயிடுறாங்களாம்.


இப்படி சில தொழில்களும் சர்வீஸ்களும் டெக்னாலஜி வளருகிறதினால வெளியில போறது சகஜம்தான். ஆளுக்கு ரெண்டு செல்போன், வீட்டுக்கு ரெண்டு நெட் கனெக்ஷன்னு இருக்கிற இந்தக் காலத்துல தந்தி தேவையில்லேதான். இருந்தாலும் பழைய பாசத்துல நம்மால அதை லேசா எடுத்துக்க முடியலீங்களே! நம் வாழ்க்கையில மறக்க முடியாத விஷயமா இருந்த தந்தியை நம்மகிட்ட இருந்து மறையுறதுக்குள்ள என் சொந்தபந்தங்களுக்கெல்லாம் 'பெஸ்ட் விஷஸ்'ன்னு ஒரு தந்தி அனுப்பப் போறேங்க. நான் அனுப்புற இந்த தந்தியை தயவு செஞ்சு கிழிச்சு போட்டுறாதீங்க. நம்ம பேராண்டி பிள்ளைகளுக்கெல்லாம் இப்படி ஒரு கம்யூனிகேஷன் சிஸ்டம் இருந்தது தெரியணும் இல்லையா? அவங்களுக்கு காட்டி, பழைய ஞாபங்களை பகிர்ந்துக்கிறதுக்காவது நான் அனுப்புற இந்தக் கடைசி தந்தியைப் பத்திரமா வச்சுக்குங்கன்னு கூடவே ஒரு எஸ்.எம்.எஸ்.ஸும் அனுப்பப் போறேன். சரிதானுங்களா?