வீட்டின் நான்கு சுவற்றுக்குள் அம்மாவின் காலடியில் ஓடியாடி விளையாடிய உங்கள் பிஞ்சுக் குழந்தைகள், இந்த ஆண்டு பள்ளிக்குள் கால் பதிக்கப்போகிறார்களா?
மே மாதம் வரை வேளைக்கு சாப்பிட்டு, இஷ்டத்திற்குத் தூங்கி அட்டகாசம் செய்த குழந்தைகளை முதன் முதலில் பள்ளிக்கு அனுப்புவது என்பது, பெற்றோர்களுக்கு பெரும் கஷ்டம்தான்.
பயமும் அழுகையும் கலந்து சிணுங்கலுடன் செல்லும் மழலைகளைப் பார்த்தால், மனம் கனக்கும்.
''ஸ்கூல் சிறைவாசமல்ல... சிறகடித்துப் பறக்கும் சொர்க்கம் என்பதை பெற்றோர்கள்தான் குழந்தைகளுக்குப் புரிய வைக்கவேண்டும்'' என்கிற செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மன நலப் பேராசிரியர் டாக்டர் ராமானுஜம், குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்ப, பெற்றோர்களின் கைப்பிடித்து வழிகாட்டுகிறார்.
முதன்முதலில் பள்ளிக்கு செல்லும் ஒரு குழந்தைக்கு, தங்கள் அம்மாவைப் பிரிந்திருப்பதில்தான் பிரச்னையே வரும். குழந்தை பிறந்து ஆறு மாதங்கள் வரை பசித்தால் அழுவதைத் தவிர வேறுஎதுவுமே தெரியாது. ஆறு மாதங்களுக்குப் பிறகு, அதன் உலகத்தில் நுழையும் முதல் உயிர் அம்மாதான். இதனால் ஒரு குழந்தைக்கு மற்ற எல்லாரையும்விட அம்மாவிடம் கூடுதலான ஒட்டுதல் இருக்கும். நாய், பூனை என ஒரு புது விஷயத்தைப் பார்த்தாலும், அம்மாவைக் கெட்டியாகப் பற்றிக்கொள்ளும். இப்படி பயப்படும் தன்மைக்கு Stranger Anxiety என்று பெயர். அதேபோல, அம்மாவைப் பிரிந்திருந்தால் அழும் தன்மைக்கு Separation Anxiety என்று பெயர். இந்த இரண்டு விஷயங்களையும் நுட்பமாகக் கையாண்டாலே, குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பத் தயார்ப்படுத்தலாம்.
எதற்கெடுத்தாலும் குழந்தை தன் அம்மாவை எதிர்பார்த்தே இருக்கும்படியும் வளர்க்கக் கூடாது. மெள்ள மெள்ளத் தனிமையான சூழலைப் பழக்கப்படுத்த வேண்டும். அதே சமயம் குழந்தையை அலட்சியமாக விட்டுவிடக் கூடாது. ஓர் இடத்தில் உங்கள் குழந்தை விளையாடிக்கொண்டிருந்தால், அதன் இஷ்டப்படி விளையாடவிட்டுவிட்டு, அந்த இடத்தில் இருந்து கண்காணித்தபடி இருக்கவேண்டும். எதுவும் பிரச்னை என்றால் மட்டுமே, அருகில் செல்ல வேண்டும். இதனால், குழந்தை ஸ்கூலுக்கு செல்லும்போது, மனதில் தன்னம்பிக்கையும், பிரச்னை ஏதாவது வந்தால் நம் அம்மா நிச்சயம் வருவார் என்ற எண்ணமும் ஏற்படும். தைரியமாக ஸ்கூலுக்கும் கிளம்பும்.
ஸ்கூலில் சேர்க்கும் முன்பே, 'ஒழுங்கா சாப்பிட மாட்டேங்கிறல்ல? இரு.. உன்னை ஸ்கூல்ல சேர்த்துவிடறேன். 'ஸ்கூல் மிஸ் குச்சி வெச்சிருப்பாங்க... தப்பு பண்ணினா அடிப்பாங்க' என்பது போன்று பயம் காட்டாதீர்கள். இவை எல்லாம் சேர்ந்து குழந்தைக்கு ஸ்கூல் மீதான தேவையற்ற வெறுப்பையும் பயத்தையும் உண்டாக்கும்.
குழந்தைகளுக்குப் பிடிக்காத விஷயங்களில் முக்கியமானது, பொய் சொல்வது. 'பார்க்குக்குப் போலாமா?', 'பிரியா ஆன்ட்டி வீட்டுக்குப் போவோமா?' என்று பொய் சொல்லி ஸ்கூலுக்கு அழைத்துப் போகாதீர்கள். அந்த ஏமாற்றம், ஸ்கூல் மீதான வெறுப்பாக அந்த பிஞ்சு மனதில் ஆழப் பதியும். இதைத் தவிர்க்க, 'ஸ்கூலுக்குப் போலாமா குட்டி? ஸ்கூல் ரொம்ப ஜாலியா இருக்கும்; அங்கே மிஸ் கதை, ரைம்ஸ்லாம் சொல்வாங்க; உனக்கு அங்கே நிறைய ஃப்ரெண்ட்ஸ் கிடைப்பாங்க' என்பது மாதிரி பாஸிட்டிவ் விஷயங்களை சொல்லித்தான் ஸ்கூலுக்கு அழைத்துப்போக வேண்டும். இப்படிச் செய்தால் தினமும் குழந்தைகள் உங்களுக்கு முன்பே ஸ்கூல் போகத் தயாராகிவிடுவார்கள்.
பெரியவர்களிடம் மரியாதையாகவும் இனிமையாகவும் பேசக் கற்றுக்கொடுங்கள். இந்தப் பழக்கத்தை குழந்தை கடைப்பிடிக்கும்போது, ஸ்கூலில் இருக்கும் அத்தனை ஆசிரியர்களுக்கும் உங்கள் குழந்தையைப் பிடித்துப்போகும். இதனால், உங்கள் குழந்தைக்கு கிடைக்கும் பாதுகாப்பும் அன்பும் நிச்சயம் ஒரு படி அதிகரிக்கும். குழந்தையும் பள்ளிக்குப் போக விரும்பும்.
கூலில் இருக்கும் நேரத்தை படிப்படியாகத்தான் அதிகரிக்க வேண்டும். முதல் நாளே, முழு நேரமும் குழந்தையை ஸ்கூலிலேயே விட்டுவிடக் கூடாது. முதல் நாள் ஸ்கூலில் அம்மாவும் குழந்தைகூடவே இருக்கவேண்டும். மறுநாள் ஒரு மணி நேரம் மட்டும் தனியே இருக்கவைத்து அழைத்து வந்துவிட வேண்டும். அதற்கும் மறுநாள் அந்த நேரத்தை சிறிது அதிகரிக்கவும். இப்படி குழந்தை ஸ்கூலில் இருக்கும் நேரத்தை படிப்படியாக அதிகரிக்கும்போது, அந்த குழந்தைக்கு பள்ளிச் சூழல் எளிதில் பரிச்சயமாகிவிடும்.
முதன்முறையாக ஸ்கூலுக்குப் போய்விட்டு வந்த குழந்தையிடம், ஸ்கூலில் நடந்த விஷயங் களைக் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள். சந்தோஷ
விஷயங்களைச் சொல்லும்போது, திரும்பத் திரும்ப அதைப் பேசி உற்சாகப்படுத்துங்கள். இதனால், ஸ்கூல் என்றாலே ஜாலிதான் என்று உணரத் தொடங்கும்.
இனி, உங்கள் குழந்தை உற்சாகமாக பள்ளிக்கு செல்வது உறுதி!