இனியவை நாற்பது
 
 ஆழ்மனத் துள்ளேயே ஆழமாய் எண்ணமதை
 பாழின்றி வைத்துப் பழகு.         .
  
 அடுத்தவரெண்ணமழகெனப் பட்டு
 கடுத்தலின்றி பேசுதல் நன்று.
  
 உதவிட்ட நல்லவ ருள்ள மகிழ
 உதவிகள் செய்து விடல்.
  
 எறும்பினைப் போலவே என்றுமுன் வாழ்வில்
 சுறுசுறுப்பை காணல் சிறப்பு.
  
 உற்சாக மென்னு முயிரணுக்க ளுள்ளத்தில்
 நிற்காம லோடட்டும் நாள்.
  
 மகிழ்ச்சியைக் காட்டி மகிழ்ச்சியை யூட்டி
 மகிழ்ச்சியைக் கண்ணாலேக்  காண்.
  
 நல்ல எதிர்பார்ப்பு   நம்மில் வளர்ப்பதுவே
 வல்லவனாய் மாற்றும் வழி.
  
 நம்பிக்கை ஒன்றே நமக்குள்ள மூன்றாம்கை;
 நம்பி யிறங்கு களம்.
  
 வேட்கை யுணர்வுகள் வேகமாய்ப் பீறிடும்
 யாக்கைதான் வேண்டுமே ஈண்டு.
  
 வாய்மட்டுமன்று வசீகரக் கண்களும்
 நோய் விட்டகலச் சிரிப்பு.
  
 உள்ளத்தினுள்ளே உருவான புன்னகை
 கள்ளமின்றி காட்டுமிதழ்.
  
 உன்னையே உள்நோக்கி உன்னையே நீகண்டால்
 உன்னையே மாற்றும் மனம்.
  
 உன்வாழ்வு உன்றன் உளப்பூர்வ எண்ணமெனில்
 உன்வாழ்வே நீயே உணர்.
  
 அடாதிழப்பு வந்தாலும் அங்கேயே நிற்காமல்
 விடாதுழைப்பு செய்து விடல்.
  
 எவரின் உதவியும் எப்போதும் வேண்டும்    
 எவருடனும் நட்புடனே பேசு.
  
 மற்றவரின் ஆசை கவனம் மகிழ்ச்சி
 பற்றியேப் பற்றுடன் கேள்
  
 குற்றங்களை ஏற்கும் குணம்தான் பிறரிடம்
 பற்று வளர்த்திடும் பண்பு
 
 சரளமாய்ப் பேசிடும் சங்கீதம் போல
 கரவோசை காணும் இசை.
 
 மனச்சுமை போக்க மனம்விட்டு பேச
 தினம்சுரக்கும் புத்துணர்வு பார்.
  
 உரையா டலில்கண்ணை உற்றுநீ பார்த்தால்
 திரையில்லா அன்பே தெரிவு
 . 
 எண்ணித் துணிந்தால் எவரும் வியந்திடும்
 வண்ணம் செயலும் நிகழ்வு.
  
 சிரித்த முகமே சிறந்த முகமாம்
 விரிந்த மலரின் மணம்.
  
 ஆபத்தை நோக்கி ஆர்வமாய்ப் போற்று
 கோபத்தை விலக்கி விடல்.
  
 தீர்வுகள் காணத் தெரியும் புதியவைகள்
 ஆர்வமுடன் செய்யப் பழகு.
 
 மனமும் செயலும் மொழியும் கலந்த
 தினப்பயிற்சி என்றும் சிறப்பு.
  
  
 "உன்னால் முடியும்" உளமதில் சொல்லிவை
  பின்னால் தெரியும் விளைவு.
  
 உன்னை விடவும் உலகில் நலிந்தவரை
 தன்னுயிராய்க் காத்தல் நலம்.
  
 எல்லா உலகும் இயக்கும் இறையிடம்
 எல்லாமும் விட்டு விடு.
 
 வெற்றி கனியினை வெல்லும் வரையிலே
  பற்றிய பாதையில் செல்.
  
 எல்லா செயல்களும் ஏற்கப் படவேண்டி
 நல்லெண்ண உள்ளமே கொள்.
  
 இறந்தகாலம் விட்டு இனிவரும் காலம்
  மறந்து நினைக்கவே இன்று.
 
 இன்பமும் துன்பமும் இங்கொன் றெனயெண்ணி
  அன்பினைப் பற்றியே வாழ்.
 
 கட்டுப்பாடு கண்ணியம் கட்டுடல் காட்டுமே
 விட்டு விடாது ஒழுகு.
  
 தேடலொன்றே வாழ்வினைத் தேடிடும் காரணம்
 ஓடவோடத் தேடி உழை.
  
 வாழ்க்கைப் புயலை வரவேற்று கொண்டால்
 வாழ்க்கைப் பழகிடும் பார்.
  
 சிடுசிடுப்பு கோபம் சிதைத்திடும் உன்னை
 அடுத்தடுத் தென்றும் அழிவு
  
  ஆசை வளர்த்திடு ஆங்கே முயற்சியின்
  ஓசை விளையும் உளம்.
  
 நன்றி மறவாமை நன்றெனக் கொண்டாலே
 என்றும் வருமாம் உதவி.
  
 பாரமாய் வாழ்வை பயத்துடன் பார்த்தால்
 தூரமாய் நிற்கு முலகு.
  
 எண்ண மெதுவோ இயக்கமு மதுவேயாம்
 திண்ணம் உளவியல் சொல்.  
 

 
