|
''ஏட்டுக் கல்வி, அனுபவக் கல்வி இரண்டுமே முக்கியம்தான். ஆனால், மதிப்பெண்கள்தான் எப்போதும் முதல் இடம் பிடிக்கின்றன. மதிப்புகள் இரண்டாம்பட்சம் ஆகின்றன!''- அனுபவப் பார்வையுடன் தொடங்குகிறார் 'கவின்கேர்' ரங்கநாதன். சந்தையில் 'கவின்கேர்' என்ற பிராண்டுக்கு மதிப்பு கூட்டிய அனுபவசாலி!
''அனுபவக் கல்வியை எப்போதும் நீங்கள் குறைத்து மதிப்பிட முடியாது. அதற்கான முக்கியத்துவம் குறித்து நாம்தான் அறியாமல் இருக்கிறோம். ஏட்டுக் கல்வி அடிப்படைகளைக் கற்றுத் தரும். அது அவசியம்தான். ஆனால், அடிக்கு அடி முன்னேறிக்கொண்டே இருக்க, அனுபவக் கல்விதான் தேவை. பலர், நேர்மையாக இருக்க வேண்டும், கடினமாக உழைக்க வேண்டும் அப்போதுதான் ஜெயிக்க முடியும் என்று சொல்வார்கள். ஆனால், நீங்கள் எதை நேர்மை என்று நினைக்கிறீர்களோ அது மற்றவர்களுக்கு நேர்மையற்றதாக தோன்றலாம். ஆக, மற்றவர் பார்வையில் இருந்தும் எது நேர்மை என்று கொள்ளப்படுகிறதோ அதை நம் வாழ்க்கையில், வியாபாரத்தில், பணி இடங்களில் நடைமுறைப்படுத்த வேண்டும். இது அனுபவம் மூலமாகத்தான் தெரியும். எந்தப் புத்தகங்களும் கற்றுத் தராது.
சில சோதனையான காலகட்டங்களில் துணிச்சலாக முடிவெடுக்க வேண்டும். ஒரு சமயம், சிறு தொழில் நிறுவனங்களுக்கு கலால் வரி, சுங்க வரி கட்டுவதில் இருந்து அரசு விலக்கு அளித்திருந்தது. ஆனால், திடீரென ஒருநாள் சிறு தொழில், பெரிய தொழில் என்றெல்லாம் பார்க்காமல், அனைத்து நிறுவனங்களும் வரி செலுத்த வேண்டும் என்று சொல்லிவிட்டது. அப்போது எங்களுக்குப் போட்டியாக 49 நிறுவனங்கள் ஷாம்பு தயாரிப்பதில் போட்டியிட்டன. அன்றைய காலகட்டத்தில், பல நிறுவனங்கள் ஆட்குறைப்பு போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டன. ஆனால், நான் மேலும் புதிய, திறமையான நபர்களைக் கொண்டுவந்தேன். அவர்களை ஊக்கப்படுத்தினேன். அவர்கள் கொடுத்த உழைப்பு நிறுவன வளர்ச்சிக்கு உரமேற்றியது. இது நடந்து 15 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. மீதம் இருந்த 49 நிறுவனங்களும் இருந்த அடையாளம் தெரியவில்லை இன்று. இதற்குக் காரணம், பணப் பற்றாக்குறை அல்ல; ஐடியா பற்றாக்குறை. இந்த ஐடியா பற்றாக்குறை அனுபவத்தில் இருந்து கற்றுக் கொள்ளாததால்தான் ஏற்படுகிறது.
இன்றைய இளைஞர்கள், பெரியவர்கள் தங்களின் அனுபவத்தில் இருந்து சொல்லும் வார்த்தைகளைக் காது கொடுத்துக் கேட்பது இல்லை என்று ஒட்டுமொத்தமாகக் குறை சொல்லக் கூடாது. அதேபோல் அனுபவசாலிகளும் அறிவுரை சொல்லாமல், சில முன் எச்சரிக்கைகளைச் சொல்லலாம். இன்றைய கல்வி முறை, கணிசமாக மாற வேண்டும். பள்ளிகளை விடுங்கள். கல்லூரிகளில் மாணவர்களுக்கு அளிக்கப்படும் 'புராஜெக்ட்'களே அனுபவத்தின் மூலம் கற்றுக்கொள்வதற்குத்தான். ஆனால், அந்த வாய்ப்புகளை மாணவர்கள் சரியாகப் பயன்படுத்திக்கொள்வது இல்லை. அது சரியானால், மாற்றங்கள் நிகழும்'' என் கிறார் ரங்கநாதன்.
அனுபவமே ஒரு மனிதனுக்கு நல்ல பாடத்தைக் கற்றுத்தரும். இன்று நான்கைந்து வருடங்கள் கல்லூரியில் கஷ்டப்பட்டு ஒரு படிப்பை படிக்கிறோம். ஆனால், நம்மில் பலரின் தந்தையும், உறவினர்களும் தங்களின் வேலை தொடர்பான எந்தப் படிப்பும் படிக்காமலேயே அனுபவத்தால் தத்தமது வேலையை அடுத்த கட்டத்துக்கு அழைத்துச் சென்று மற்றவர்களுக்குப் பாடமாக்கினார்கள். அப்படியானால் அடிப்படைக் கல்வி கற்றே களத்துக்கு வரும் நாம் அனுபவக் கல்வியின் துணை கொண்டு எந்த சிகரத்தையும் எட்டிப் பிடிக்கலாம்தானே..!
தனது தந்தையின் பில்டிங் கான்ட்ராக்டர் வேலையில் கிடைத்த அனுபவத்தைக்கொண்டும், பி.இ. சிவில் இன்ஜினீயரிங் படிப்பின் அறிவு கொண்டும் தன்னைச் செதுக்கிய அனுபவம் குறித்து பகிர்ந்துகொள்கிறார் திருச்சி மாணவரான சுதாகர்.
''சின்ன வயசுல அப்பா வேலை பார்க்கும் இடங்களுக்கு நானும் போய்ப் பார்க்குறப்போ, எனக்கும் அதே மாதிரி வேலை பார்க்கணும்னு ஆசையா இருக்கும். அதனாலதான் சிவில் இன்ஜினீயரிங் படிப்பில் சேர்ந்தேன். விடுமுறை தினங்களில் அப்பா கூட வேலைக்குப் போவேன். அங்கு நான் நேரிடையா பார்க்குற, கத்துக்குற பல விஷயங்கள் எனக்கு செய்முறை வகுப்புகளாக இருக்கும். அதே பாடங்களை கல்லூரி வகுப்புகளில் எதிர்கொள்ளும்போது, ஏற்கெனவே செய்து முடித்த செய்முறையினை ரிவைஸ் பண்ற மாதிரியே இருக்கும். இன்று எனக்கு கல்லூரிகளில் டைமன்ஷன்களாக எடுக்கப்படும் வகுப்புகள் என் தந்தைக்கு மிகவும் பழகிப்போன கை அளவுகள். நான் படிக்கும் சிவில் இன்ஜினீயரிங்கில் வீட்டுக்குப் பில்லர் போடுவதுபற்றிய ஒரு பகுதி உள்ளது. அந்த வேலையைச் செய்ய என்னைப் போன்ற படித்த இன்ஜினீயர்கள் காலம்போஸ்டும், அதற்கான ஷூவும் கேட்பார்கள். ஆனால், என் தந்தை வேலை செய்யும் இடங்களில் உள்ளவர்கள் அதைச் சாதாரணமாகத் தங்கள் அனுபவத்தில் வெறும் கண்களால் ஒரு பார்வையிலேயே சொல்வார்கள். எனக்கு பயங்கர ஆச்சர்யமாக இருக்கும்.
இன்றும் பல இன்ஜினீயர்கள் எங்கள் வீட்டுக்கு வந்து என் தந்தை கையால் வரைந்த பிளானை வாங்கிச் சென்று கம்ப்யூட்டரில் வரைந்து வீடு கட்டுகிறார்கள். நான் படிக்கும் பாடங்களுக்கு என் தந்தையின் அனுபவம்தான் செய்முறை வகுப்புகள். மேலும், எந்த ஒரு விஷயத்தையும் எழுதிவைத்து படிப்பது வேலைக்கு உதவாது. அவற்றைச் செயல்படுத்திப் பார்க்கும்போதுதான் அதுபற்றிய புரிதல் ஏற்படும். 'படித்தலைவிட கேட்டல் நன்று, கேட்டலைவிடப் பார்த்தல் நன்று' என்பார்களே அது போன்றுதான் இதுவும். எனது வருங்காலக் கனவு, என் தந்தையின் அனுபவத்தோடு எனது படிப்பையும் சேர்த்துத் தொழில் தொடங்குவதுதான்!'' என்கிறார் சுதாகர்.
''எனக்கு இன்ஸ்பிரேஷனே எங்க தாத்தாதான்!'' என மெய் சிலிர்க்கிறார் 'சுப்ரமணியம் அண்ட் கோ' நிறுவனக் குழுமத்தின் நிர்வாகி சுப்ரமணியன். மதுரையில் சின்ன பெட்டிக் கடை வியாபாரமாக துவங்கிய சீவல் வியாபாரத்தை இன்று ஒரு 'பிராண்ட் குழுமமாக' வளர்த்தெடுத்தவர்.
''என் தாத்தா சுப்ரமணிய செட்டியார் 1961-ல் 'லெட்சுமி சீவல்' என்று ஒரு சிறிய சீவல் நிறுவனத்தை துவக்கினார். கடும் போட்டி நிலவிய அந்தக் காலத்திலேயே நிறுவனத்தை தன் நிர்வாகத் திறமையால் பிரபலமான நிறுவனம் ஆக்கினார். நான் படித்துக்கொண்டு இருந்தபோதே என் தாத்தா, அப்பா ஆகியோரின் நிர்வாகத் திறனைக் கவனித்தே வளர்ந்தேன். படிப்பு விஷயத்தில் எங்க வீட்டில் எனக்கு முழு சுதந்திரம் கொடுத்தாலும், என் ரத்தத்திலேயே பிசினஸ் இருந்ததாலயோ என்னவோ எனக்கும் பிசினஸ்தான் எதிர்காலம் என்று முடிவு செய்து, வணிக மேலாண்மைப் படிப்பைத் தேர்ந்தெடுத்தேன். இங்கிலாந்தில் எம்.பி.ஏ., படித்தேன்.
அதிகம் படிக்காத எனது தாத்தாவுடனும் அப்பாவுடனும் பணிபுரிந்தபோது கிடைத்த அனுபவங்கள் நான் இங்கிலாந்தில் படித்த எம்.பி.ஏ-வுக்கே அப்பாற்பட்ட தொழில் நுணுக்கங்கள் ஆகும். சீவல் கம்பெனியாக ஆரம்பிக்கப்பட்ட எங்கள் நிறுவனம், தற்போது பேப்பர் இண்டஸ்ட்ரீஸ், பிளாஸ்டிக்ஸ், டீ எஸ்டேட்ஸ், கல்வி நிறுவனங்கள், மெஷினரி, ஆட்டோமொபைல், பண்ணை எனப் பல்வேறு துறைகளில் பிரகாசிக்கக் காரணம், எங்கள் தாத்தாவும் அப்பாவும் நிர்வாகத்தில் எனக்கு அளித்த அனுபவப் பாடங்கள்தான்! தாத்தா அடிக்கடி சொல்வார், 'ஒரு வியாபாரத்தை ஆரம்பித்து வெற்றி பெறுவது மட்டுமே நமது குறிக்கோள் அல்ல; அந்த வெற்றியைத் தக்கவைத்துக்கொள்ளவும் தெரிய வேண்டும்!'. இந்த வார்த்தைகளை நான் இன்று வரையிலும் வேத வாக்காகக் கடைபிடித்து வருகிறேன். மேலும், தாத்தா கற்றுக் கொடுத்தது 'தெளிவான திட்டமிடலும், தரமான பொருட்களைத் தயாரித்து அதனைத் திறம்படச் சிறப்பாக வாடிக்கையாளரிடம் கொண்டுசேர்ப்பது எப்படி' என்பதையும்தான்!
அடுத்து, அப்பா எனக்குச் சொல்லித் தந்த பாடம் 'ஒரு துறையில் வெற்றி பெற்று, அது தரும் லாபத்தை எவ்வாறு மற்ற துறைகளில் புத்திசாலித்தனமான முதலீடாக மாற்றுவது' என்பது. இந்தப் பாடமே, நான் எல்லாத் துறைகளிலும் கவனம் செலுத்தக் காரணமானது. லெட்சுமி சீவல் என்று சீவல் கம்பெனியாக ஆரம்பிக்கப்பட்ட ஒரு சிறு நிறுவனம், தற்போது பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் பல நிறுவனங்களை ஒன்று சேர்த்து, ஒரு நிறுவனக் குழுமமாக வளர்ந்ததற்கு அடிப்படையே என் அப்பாவின் இந்தக் கொள்கைதான். மேலும், அப்பாவின் அருகில் இருந்து கவனித்தபோதுதான் பல்வேறு துறைகளில் கால் பதிக்கும்போது, சந்திக்கும் நடைமுறைச் சிக்கல்களை எவ்வாறு சமாளித்து வெற்றி பெறுவது என்பதும் புரிந்தது!'' என்று முடித்தார்.
''திறமையும் உழைப்பும் இருந்தாலேபோதும், நம்மால் எதையும் சாதித்துக்காட்ட முடியும்'' என்கிறார் ராஜேந்திர பாபு. வெல்டராகத் தன் அப்பாவின் வொர்க் ஷாப்பில் அனு பவப் பாடம் கற்று, பொறியியலா ளராக உயர்ந்திருப்பவர். ''மதுரையில் மிகவும் கஷ்டபட்ட குடும்பத்தில் பிறந்தவன். இன்று வளர்ந்திருக்கும் இந்த நிறுவனம், ஆரம்ப காலத்தில் ஒரு வொர்க்ஷாப்பாக இருந்தது. அங்கு என் அப்பா வெல்டராக இருந்தார். நான் வீட்டுக்குக் கடைசிப் பிள்ளை. என்னதான் வீட்டில் குடும்ப நிலை கஷ்டமாக இருந்தாலும், எங்களை எப்படியாவது படிக்கவைக்க வேண்டும் என்பதுதான் அப்பாவின் குறிக்கோள். காலையில் பள்ளியில் படித்துவிட்டு, மாலையில் நேராக என் அப்பா வேலை பார்க்கும் இடத்துக்குத் தான் போவேன்.
அங்கே, என் அப்பா வேலை செய்யும் கஷ்டத்தைப் பார்க்கும்போது, 'என்றாவது ஒருநாள், ஒரு நிறுவனத்தை உருவாக்கி, அதில் என் அப்பாவை உட்காரவைத்து அழகு பார்க்க வேண்டும்' என்கிற ஆசைதான் எனக்கு வரும். அந்த ஆசையே நாளடைவில் எனக்குள் ஒரு வெறியை உண்டாக்கியது. 2 முடித்ததும் பாலிடெக்னிக்கலில் மெக்கானிக்கல் எடுத்துப் படித்தேன்.
படித்து முடித்த பின், பல நாட்கள் வேலைக்கு முயன்றுகொண்டு இருந்தேன். எதுவும் அமையவில்லை. சரி, இன்னொரு வேலைக்காகக் காத்திருப்பதைவிட, நாமே ஏதாவது தொழில் செய்தால் என்ன? என்று முடிவு செய்தபோது, என் அப்பா செய்த அதே வெல்டிங் வேலையை ஏன் செய்யக் கூடாது எனத் தோன்றியது. பிறகு, என் பெற்றோரின் உதவியோடு, தனியாக ஒரு வெல்டிங் வொர்க்ஷாப் உருவாக்கி வேலை செய்ய ஆரம்பித்தேன். அந்த நேரத்தில்தான் ஆவின் பால் டிப்போவுக்குத் தேவையான பொருட்களை எல்லாம் வெல்டிங் செய்து கொடுக்கக்கூடிய ஒப்பந்தமும் கிடைத்தது.
கிட்டத்தட்ட ஐந்து வருடங்க ளுக்கும் மேலாக ஆவின் டிப்போவுக்குத் தேவையான பொருட்களைச் செய்து கொடுத்தேன்.
என்னுடைய தொழில்முறையைப் பார்த்து, டெய்ரி மில்க் போன்ற நிறுவனங்களும் அவர்களுக்குத் தேவையான பொருட்களைச் செய்து கொடுக்கச் சொல்லி ஒப்பந்தம் போட்டன. இப்படிப் பல வருடங்களாக பல நிறுவனங்களுக்குப் பொருட்களைச் செய்து தரும்போது, அதில் ஒரு சில பொருட்கள் தேங்கிவிடும். அந்தப் பொருட்களைப் பார்த்த என் அம்மா, 'மீதமான இந்தப் பொருட்களைவைத்து ஏன், நீயும் ஒரு பால் பண்ணை ஆரம்பிக்கக் கூடாது?' எனக் கேட் டார். எனக்கும் அவர் கேட்டது சரி எனத் தோன்றவே, அதற்கான பொருட்களைச் சிறுகச் சிறுகச் சேமித்து, இறுதியாக 1996-ம் வருடம் எஸ்.என்.பி. டெய்ரி மில்க் என்ற நிறுவனத்தை உருவாக்கினேன். நான் ஆரம்பித்த இந்த நிறுவனம்தான், தென் மாவட்டத்திலேயே முதன்முதலாகத் தொடங்கப்பட்ட தனியார் பால் விற்பனை நிலையம். இன்று வரை வெற்றிகரமாக நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது.
எங்கு வேலை பார்த்தாலும் அதை வேலையாகக் கருதாமல், அதை ஒரு அனுபவமாக தெரிந்துகொள்ளக்கூடிய ஓரு வாய்ப்பாக நினைத்து, அதில் ஈடுபாடு காட்ட வேண்டும். இந்த அனுபவப் பாடம்தான் மனிதர்கள் உயர்வதற்கான தாரக மந்திரம்'' என்கிறார் ராஜேந்திர பாபு.
நெருப்பு சுடும் என்பதும், நீர் குளிரும் என்பதும் நம் அனுபவங்கள் மூலமாகக் கற்றுக்கொண்டவைதானே. பக்கம் பக்கமாகப் படித்த பாடங்கள் மறந்துபோகலாம். ஆனால், பசுமரத்தாணிபோல மனதில் படிந்த அனுபவங்கள் மறக்காது.
மாற்றம் குறித்துச் சிந்திப்பது நல்லது. நீங்கள் சிந்திக்க ஆரம்பித்துவிட்டீர்களா?