எது சரியான முடிவு?
ராணி, வாணி, வேணி மூவரும் ஒன்றாகப் படித்த தோழிகள். ராணி இயல்பிலேயே மிக வேகமாக எதையும் தீர்மானிப்பாள், வேணிக்கு எதிலும் குழப்பம்தான். வாணி எதையும் தீர ஆலோசித்துத் தான் செய்வது வழக்கம். இந்த மூவரும் ஒரு நிறுவனத்தில் பொறுப்பான வேலை ஒன்றுக்கான நேர்முகத்தேர்விற்குச் சென்றார்கள். கடைசிச்சுற்றில் இந்த மூவரில் ஒருவர்தான் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்ற நிலையில் இந்த மூவரிடமும் தனித்தனியாக ஒரே கேள்வி கேட்கப்பட்டது.
"நீங்கள் ஒரு குறிப்பிட்ட தண்டவாளத்தின் அருகில் நின்றுகொண்டு இருக்கிறீர்கள். அதில் இருந்து சிறிது தொலைவில் அந்த இருப்புப்பாதை இரண்டாகப் பிரிகின்றது. அதில் ஒன்று பயன்பாட்டில் இருப்பது, ஒன்று பயன்படுத்தப்படாமல் கைவிடப்பட்டது. நீங்கள் நின்றிருக்கும் இடத்தின் அருகில்தான் புகைவண்டியின் தடத்தை (தண்டவாளத்தை) மாற்றப்படுத்தப்படும் கருவி உள்ளது. பயன்பாட்டில் இருக்கும் தண்டவாளத்தில் ஏழெட்டு குழந்தைகள் விளையாடிக்கொண்டிருக்கின்றன. பயன்படுத்தப்படாத தண்டவாளத்தில் ஒரு குழந்தை மாத்திரம் தனியாக விளையாடிக்கொண்டிருக்கிறது. அப்பொழுது ஒரு புகைவண்டி வேகமாக வருகிறது என்று கொள்வோம். நீங்கள் என்ன செய்வீர்கள்? யாரைக்காப்பாற்றுவீர்கள்?" என்று கேட்டார் தேர்வாளர்.
இதே கேள்வி உங்களிடம் கேட்கப்படுகிறது என்று கொள்வோம். இதற்கு உங்கள் பதில் என்னவாக இருக்கும்? அதை யோசித்துவிட்டு, பின் படிப்பதைத் தொடருங்கள்.
ராணி "புகைவண்டியின் போக்கை மாற்றி ஏழெட்டு குழந்தைகளைக்காப்பாற்றுவேன்", என்று சட்டென்று பதில் சொன்னாள். வேணியோ யோசித்துக்கொண்டே இருந்தாள். 'நான் மாற்றிவிடுவேன்' 'இல்லை, மாற்றினால் ஒரு அப்பாவிக்குழந்தை செத்துவிடும்.' 'இல்லை மாற்றிவிடத்தான் வேண்டும் இல்லையென்றால் பல குழந்தைகள் செத்துவிடும்' என்று மாறி மாறி யோசித்ததால் அவள் பதில் சொல்லமுடியாமல் திணறினாள்.
வாணி சில விநாடிகள் சிந்தித்துவிட்டு "நான் எதுவுமே செய்யமாட்டேன், வண்டி அதன்போக்கில் போகட்டும் என்று விட்டுவிடுவேன்" என்று பதில் சொன்னாள். இதில் எந்த பதில் சரியானது? யாருக்கு வேலை கிடைத்திருக்கும் என நினைக்கிறீர்கள்?
இப்படிப்பட்ட ஒரு சூழலில் செயலில் இறங்காமல் குழம்பி நிற்பதால் என்ன பயன்? வேணியால் நிறுவனத்தில் ஏற்படும் எந்த சிக்கலுக்கும் விடை காண முடியாது என்பதால் வேணி தேர்ந்தெடுக்கப்படவில்லை.
ஒரு குழந்தையைப் பலி கொடுப்பதன்மூலம் மற்ற பல குழந்தைகளைக் காப்பாற்றமுடியும் என்பதால், பலரும் ராணி கூறிய முடிவைத்தான் எடுத்திருப்பார்கள். பொதுவாகப்பார்க்கையில் தர்க்க ரீதியாகவும் உணர்வுபூர்வமாகவும் அதுதான் நல்ல முடிவு என அனைவருக்கும் தோன்றலாம்.ஆனால் அது சரியானதுதானா?
புகைவண்டி வராத தண்டவாளத்தில் விளையாடும் குழந்தை, ஒரு தவறும் செய்யவில்லை. கைவிடப்பட்ட தண்டவாளம் என்பதால், பாதுகாப்பானது என்று கருதியே அக்குழந்தை அங்கு விளையாடுகிறது. ஆனால் மற்ற குழந்தைகளோ அறியாமை காரணமாகவோ, அசட்டுத் தைரியத்தின் காரணமாகவோ பயன்பாட்டில் இருக்கும் தண்டவாளத்தில் விளையாடுகின்றனர். தவறு செய்த மற்றவர்களுக்காக, சரியான இடத்தில் விளையாடும் குழந்தையைப் பலிகொடுப்பது நியாயமா?
இந்த விதமான பிரச்னைகளைத்தான் நாம் நாள்தோறும் எதிர்நோக்கி வருகின்றோம். பெரும்பாலானவர்கள் செய்யும் தவறுகளால், அல்லது பெரும்பாலான அறியாமை நிறைந்தவர்களைக் காக்கவேண்டி, சரியான முடிவை எடுத்தவர்கள் பலி கொடுக்கப்படுவது அடிக்கடி நடைபெறுகிறது.
இதில் வாணி எடுத்த முடிவுதான் சரியான முடிவு. ஏனெனில், பயன்படுத்தப்படும் தண்டவாளத்தில் விளையாடும் குழந்தைகள், அத்தடத்தில் புகைவண்டி வரக்கூடும் என்று அறிந்து விழிப்புடன் இருப்பார்கள். புகைவண்டியின் சத்தம் கேட்டதும் அக்குழந்தைகள் தண்டவாளத்தில் இருந்து விலகி ஓடிவிடலாம். ஆனால் பயன்படுத்தாத தண்டவாளத்தில் விளையாடும் குழந்தை அங்கு புகைவண்டி வரும் என்றே எதிர்பார்த்திருக்காதே? திடீரென்று அத்தடத்தில் புகை வண்டி வருமானால், அக்குழந்தை சுதாரித்துக்கொள்ளக்கூட நேரமிருக்காது என்பதால் அக்குழந்தை இறந்துவிடுவதற்கே அதிக வாய்ப்பு உள்ளது.
அது மட்டுமல்ல, கைவிடப்பட்ட தண்டவாளத்தில் புகைவண்டியைத் திருப்புவது சரியான முடிவு என எப்படிச் சொல்லமுடியும்? எதற்காக அந்தத் தடம் கைவிடப்பட்டது என்பதை அறியாமல் புகைவண்டியை அங்கு மாற்றி அனுப்பி, வண்டியே விபத்துக்குள்ளாகிவிட்டால்? தவறு செய்த சில குழந்தைகளைக் காப்பாற்ற, ஒரு குழந்தையை மட்டுமல்ல, ஏராளமான பயணிகளை அபாயத்துக்குள்ளாக்கலாமா?
இதையெல்லாம் சில விநாடிகளிலேயே சிந்தித்து, சரியான முடிவை எடுத்த வாணிக்கே அந்நிறுவனம் வேலை கொடுத்தது.
எந்தக்கடினமான சூழலிலும், குழம்பி நிற்காமல் அதே சமயம் உணர்ச்சிகளுக்கு மட்டும் இடம் கொடுத்து அவசரப்பட்டு முடிவெடுக்காமல், ஒரு பிரச்னையைப் பல கோணங்களிலும் யோசித்து முடிவெடுப்பது அவசியம் என்று காட்டுவதற்காகக் கேட்கப்படும் ஒரு புதிர் இது.
ஒரு பிரச்னையை ஒரு கோணத்தில் மட்டும் அணுகுவது எப்பொழுதும் தவறானது. அதேபோல், வாழ்க்கை என்பது கணக்குப்பாடம் அல்ல, ஒரு கேள்விக்கு ஒரு விடைதான் என்று கூறுவதற்கு. ஒவ்வொரு சிக்கலுக்கும் பலவேறு கோணங்களும் அதை விடுவிக்கப் பலவிதமான வழிகளும் இருக்கலாம். ஒரே ஒரு விடைதான் என்று நினைக்காமல், திறந்த மனத்துடன் அச்சிக்கலை அணுகுவது சரியான முடிவுகளை எடுக்க உதவி செய்யும். பலவிதமான வழிகளையும் அவற்றின் சாதக பாதகங்களையும் அலசி ஆராய்ந்து, பின்னர் அவற்றுள் எது மிக அதிகப்பயனை அளிக்க முடியும், அல்லது மிகக் குறைந்த சேதத்தை விளைவிக்கும் என்பதைக் கண்டறிந்து அந்த முடிவை எடுக்கலாம்.
எதையும் அலசி ஆராயாமல் விரைந்து எடுக்கும் முடிவுகள், பல நேரங்களில் சரியாக இருப்பதில்லை. அதற்காக சிந்தனை செய்துகொண்டே இருந்தால் ஏற்படும் காலதாமதமும் நட்டத்தை உண்டாக்கும். வேகம், விவேகம் இரண்டும் சரியான விகிதத்தில் கலந்திருப்பதே சரியான முடிவைத்தரும். மூளையை மட்டும் பயன்படுத்தி தர்க்க ரீதியாக எடுக்கப்படும் முடிவுகளோ, இதயத்தை மட்டும் பயன்படுத்தி அதாவது உணர்ச்சிகளால் உந்தப்பட்டு எடுக்கப்படும் முடிவுகளோ ஒருதலைப்பட்சமாக இருக்க நேரிடலாம். உணர்ச்சி, அறிவாற்றல் இரண்டும் கலந்து முடிவுகள் எடுக்கப்படுவதுதான் சாலச்சிறந்தது.