|
இந்தக் கேள்வி, செல்வந்தரின் மனதில் ரீங்காரமிட்டுக் கொண்டே இருந்தது. அதன் பிறகு, உதவி கேட்டு யார் வந்தாலும், அவரைத் துருவித் துருவி விசாரித்தார். அவர்களின் பதில் முரண்பாடாக இருந்தால், பணம் தராமல் நிராகரித்தார். இதனால், அவர் செய்யும் உதவிகள் குறையத் துவங்கின. அதே நேரம், அவருக்கு வந்த வர்த்தக ஒப்பந்தங்களும் கரையத் துவங்கின!
இந்த நிலையில் அவருக்குள் ஒரு சிந்தனை...
'என்னைத் துருவித் துருவி ஆராயாமல், வாரி வழங்கியது இறைமை. உண்மையா பொய்யா என்று நான் விசாரிக்கத் துவங்கியதும், இறைமையும் எனது மெய்த்தன்மையைப் பரிசீலிக்கத் துவங்கி விட்டது. எனவே இனி, பழையபடி வழங்குவது' என முடிவு செய்தார். அதன்படியே அவர் செயல்பட, அவரின் வர்த்தகமும் செழிக்கத் துவங்கியது.
உயர்ந்த எண்ணங்களுடனும், அடுத்தவரைப் பற்றிய ஆக்கபூர்வமான சிந்தனைகளுடனும் திகழ்பவர்கள், எப்போதும் மகிழ்ச்சியுடன் இருப்பர்; எதிர்மறையான சிந்தனை ஏற்படும்போது, நம்மையும் அறியாமல் துயரம் நம் தோளில் அமர்ந்துகொள்ளும் என்பதை இந்தக் கதை விளக்குகிறது.
இன்றைக்கு, இளைஞர்களின் ஆற்றல் முழுமையாகப் பயன்படாமல் போவதற்கு, அவர்களது எதிர்மறைச் சிந்தனைகளே காரணம். அனைத் தையும் விமர்சனக் கண்ணோட்டத் துடனும், குதர்க்கத்துடனும் பார்க்கும் மனப்பான்மை, ஆக்க சக்தியை அடியோடு உறிஞ்சிவிடும்.
'சினிக்' என்ற சொல், எதையும் குறை சொல்பவர்களைக் குறிக்கும். 'சினிக்' என்பது, நாயைக் குறிக்கும் கிரேக்கச் சொல்லிலிருந்து உருவான சொல். நாய், எப்போதும் 'குரை'த்துக் கொண்டு இருப்பதைப் போல, மற்றவர்களைக் 'குறை' சொல்வதே சிலரின் குணம் என்பதால், அவர்களை 'சினிக்' என்று அழைப்பது உண்டு. குரைப்பதும், 'குறை' சொல்வதும் ஒரே மனநிலை. எப்போதும் நல்லவற்றைப் புறந்தள்ளி, அல்லவற்றை உயர்த்திப் பிடிக்கும் மனிதர்களைச் சமூகம் என்றுமே நேசித்ததில்லை.
எந்தச் செய்தியையும் முழுமையாகத் தெரிந்துகொள்ளாமல் நுனிப்புல் மேய்பவர்கள், தனக்கு எல்லாமே தெரிந்தது போல் விமர்சனம் செய்வது இன்றைய நிகழ்வு. 'குறை சொன்னால் கூட்டம் கூடும்' என, எல்லா ஊடகங்களையும் அவலம் பரப்பும் சாதனங்களாக ஆக்குவது, சில காலத்துக்கு வேண்டுமானால் தாக்குப்பிடிக்கலாம்; நாளடைவில் அவை, வெறுப்பையும் விரக்தியையுமே விநியோகிக்கும்.
குறை சொல்வது புத்திசாலித்தனம் என்ற ஒரு எண்ணமும் அதிகரித்து வருகிறது. மகாபாரதக் கதையிலேயே, 'எல்லோரும் கெட்டவர்கள்' என்று துரியோதனனும், 'எல்லோரும் நல்லவர்கள்' எனத் தருமரும் உலகைச் சுற்றிப் பார்த்துவிட்டு வந்து உரைத்ததாகப் படித்துள்ளோம். அந்தக் கதை சொல்லும் சூசகத் தகவல்-
'யாரெல்லாம் பிறரை நல்லவர்களாகப் பார்க் கிறார்களோ, அவர்கள் தருமரைப் போல; மற்றவர்களைக் கெட்டவர்களாகவே பார்ப்பது துரியோதனத்தனம்!'
நாளிதழ்களைப் புரட்டும்போது கொலை, குற்றம், திருட்டு, கற்பழிப்பு போன்ற செய்திகளையே முதலில் மும்முரமாகப் படிக்கிறவர்களைக் காண்கிறேன். சாதனையாளர்களைப் பற்றிய குறிப்புகளை நாம் விரும்பி வாசிப்பது இல்லை. தொலைக்காட்சிகளில் நடைபெறும் விவாத அரங்கங்களைப் பார்க்கும்போது வருத்தம் வருகிறது. பிரதமரில் இருந்து உயர் அலுவலர் வரை அனைவரையும் சர்வ சாதாரணமாக எடுத்தெறிந்து விமர்சிக்கும் 'பொடிசுகள்' நமக்கு அதிர்ச்சியளிக்கின்றனர். அவை அனைத்துமே கடன் வாங்கிய கருத்துக்கள். இந்த எதிர்மறைச் சூழல், நமது மகிழ்ச்சியை மறியல் செய்து, வெளியே வராமல் தடுத்துவிடுகிறது.
கண்டனச் சுவரொட்டிகளில் எழுத்துப் பிழை களையும், 'கடவுள் இல்லை' என்பதைப் பிள்ளையார்சுழி போட்டு எழுதுவதையும் கவனித்திருக்கிறேன். ஒரு வாசகத்தைக்கூட ஒழுங்காக எழுதத் தெரியாமல், மிகப் பெரிய திட்டத்தை கண்டனத்துக்கு உள்ளாக்குவது, எவ்வளவு பெரிய கேலிக்கூத்து?! இந்த மனப்பான்மையில் உள்ள மிகப் பெரிய ஆபத்து... நல்லவற்றையும் கண்டனக் கண்ணுடனும் சந்தேகக் கணையுடனும் பார்க்கக் கற்றுத் தந்துவிடும் என்பதே!
கான்கிரீட் சாலை போட்டால், 'சிமென்ட் தொழிற்சாலையிடம் கமிஷன்' என நினைக்கும்; எவராவது படிப்புக்கு உதவி செய்தால், 'கறுப்புப் பணம்' என வெறுப்பை உமிழும். எந்த நற்பணியையும் களங்கப்படுத்தும். அதே நேரம், ஏமாற்றுபவர்களை நோக்கி விழுந்தடித்து ஓடிப் போய், மோசடியில் முகம் கவிழும்.
நாகப்பட்டினத்தில் இளைஞர்கள் சிலர், தன்னார்வத்துடன் சாலைகள் சிலவற்றைச் சீரமைக்க முன்வந்தனர். அன்று மாலையே சோர்வுடன் திரும்பினர். காரணம், அவர்கள் சாலையைச் செப்பனிடும்போது, 'தேர்தல் நேரம்... அதனால்தான்' என்று சம்பந்தமின்றி கமென்ட் அடித்து, அவர்களைப் புண்படுத்தியுள்ளனர் சிலர்.
நல்லது என்ன நடந்தாலும், அதற்கு உள்நோக்கம் கற்பிக்கிற சூழலை, எதிர்மறைச் சிந்தனைகள் உருவாக்குகின்றன. பல குடும்பங்களிலும் இன்றைக்கு எதிர்மறைச் சூழல்கள் இருக்கின்றன. அப்பா- அம்மா செய்த தியாகங்களை, அவர்களது இழப்புகளை, நமக்காகப் பட்ட துயரங்களை, சந்தித்த அவமானங்களை, அடைந்த வேதனைகளை, சிந்திய கண்ணீரை எண்ணிப் பார்த்து நெகிழ்கிற பிள்ளைகள் குறைவு. தங்கள் பெற்றோர் பூர்த்தி செய்யாத தனது எதிர்பார்ப்புகளை பூதாகரமாக்கி, சோகக் கடலில் வீழ்பவர்களே அதிகம். 'என்ன செய்தீர்கள்?' என நாக்கூசாமல் கேட்கிற இளை ஞர்களும் இருக்கின்றனர். இவர்கள், தங்கள் குழந்தைகளை வளர்க்கும்போதுதான் தவறுகளை உணர்வார்கள். ஆனால், அப்போது நன்றி செலுத்தப் பெற்றோர் இருக்கமாட்டார்கள்.
குறை காணும் மனப்பான்மையும், அனுசரிக்க மறுக்கும் பிடிவாதமும், 'நானே சரி' என நினைக்கும் தன்முனைப்பும் இன்றைய திருமண வாழ்வை நீர்த்துப்போகச் செய்கின்றன. விவாகரத்து விகிதம் இன்றைக்குக் கூடியிருக்கிறது. காதல் திருமணங்களிலும் முறிவுகள் நிகழ்வதுதான் பெரும் சோகம்! தேனிலவு முடிவதற்குள் அமாவாசையாகிவிடுகிற மணவாழ்க்கை இருப்பதுதான் கொடுமை!
ஆங்கிலத்தில், 'முப்பது நாட்கள் அல்லது முப்பது ஆண்டுகள்' என்றொரு வாசகம் உண்டு. முதல் 30 நாட்கள், திருமண வாழ்வில் இனியவற்றையே துணையிடம் காணும் தம்பதி, 30 ஆண்டுகள் எந்தப் பிணக்குமின்றி இணைந்திருப்பர் என்பதே அதன் பொருள்!
தம்பதி, பரஸ்பரம் தங்களுக்குள் குறை காணும் மனப்பான்மையை வளர்த்தால், அது குடும்பம் எனும் அமைப்பையே குலையச் செய்துவிடும். குடும்ப அமைப்பு சிதைந்தால், ஒட்டுமொத்த சமூகமே சிதையும் அவலம் ஏற்படும். நம் நாட்டின் பலமான அமைப்பே குடும்பம்தான். அது சரிந்துவிட்டால், நமது அடிப்படை அஸ்திவாரமே ஆட்டம் கண்டுவிடும்!
அடுத்தவர்களை அப்படியே ஏற்றுக் கொள்வோர் மகிழ்ச்சியாக இருக்கின்றனர்; அவர்களுக்குப் பல ரகங்களில் நண்பர்கள் கிடைப்பர். அவர்கள், செருப்புக்கு ஏற்ப காலைச் செதுக்கும் சிரமத்தில் சிக்கிக்கொள்வது இல்லை. தாம் செல்லும் இடத்தையெல்லாம் சாம்ராஜ்ஜியமாக்கிக் கொள்கின்றனர். குறை காண்போர், வீட்டையே சிறைச் சாலையாக்கிக் கொள்கின்றனர்.
குறைகளை பூதக் கண்ணாடி வைத்துப் பார்க்கும்போது, நம் உடலில் அமிலத்தன்மை அதிகரிக்கிறது; கல்லீரல் பொத்தலாகிறது; நுரையீரல் நுரை ததும்புகிறது; குடல் புண்ணாகிறது; அட்ரினலீன் எனும் ஹார்மோன் அதிகம் சுரக்கிறது; 'குப்'பென உடல் வியர்க்கிறது. ஒவ்வொரு உறுப்பும் 'ஓவர்டைம்' செய்வ தால், உடல் தளர்ந்து இளமையிலேயே கிழடுதட்டிப் போகிறது. எப்போதும் சிரித்து மகிழ்ச்சியுடன் நடமாடுபவர்கள், இளமையுடன் இருக்கின்றனர். அவர்கள், எருக்கம்பூவில் உள்ள மருத்துவத்தையும், தர்ப்பைப்புல்லின் மகத்துவத்தையும் ஒருசேர உணருவர்!
ஒரேயரு நாள் பரிசோதனை செய்து பார்ப்போம். இன்று நாம் சந்திக்கும் எல்லோரிட மும், அதிகாலை துவங்கி அன்பு மனநிலையுடன் நடந்துகொள்வோம். அவர்களது நற்குணங்களை மட்டுமே காண்போம். அவர்களது தவறுகளைக் கம்பளத்துக்கு அடியில் தள்ளுவோம். இரவு படுக்கப்போகும்போது, அன்றைய நாளைத் திரும்பிப் பார்த்தால், பல நாட்களின் செயல்களை ஒரே நாளில் முடித்திருப்பதையும், அப்போதும் களைப்புறாமல் நம்மில் உற்சாகம் பொங்குவதையும் அறிய முடியும். அன்று நம்முடன் பணியாற்றுபவர்களும் உற்சாகப் பந்தாக உருண்டோடிப் பணியாற்றுவதையும் உணர முடியும்.
'நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்' எனும் மனநிலையே இன்பம் ஏற்படக் காரணம். மகிழ்ச்சி உதிரிப்பொருளாக இருப்பதில்லை. அதுவே மூலப்பொருளாக இருக்கிறது. நல்லவற்றைப் போற்றும் சமூகத்தில், தீயவைகள் மறையத் துவங்கிவிடும். 'நாமும் நல்லவர்களாக இருக்க வேண்டும்' எனும் சிந்தனை எல்லோருக்கும் ஏற்படும். அந்த நிலையில், சாப்பிடும் உணவு எதுவாக இருந்தாலும், அது பிரசாதம்; குடிக்கும் நீர் தீர்த்தம்; நடக்கும் பாதை கம்பளம்; சந்திக்கிற மனிதர்கள் தென்றல்!
பசியையும் தாகத்தையும்கூட, அனுபவங் களாகவும் படிப்பினையாகவும் ஏற்கும் திட உள்ளம் ஏற்பட்டால், மகிழ்ச்சியும் இன்பமும் நம்மைவிட்டுப் பிரிந்து ஒரு நொடி கூடத் தனிக்குடித்தனம் நடத்தாது!