வருமானவரி அலர்ஜியா ?
அரசுப் பணியாளரான என் நண்பர், வீட்டுக்கடன் வாங்கி சொந்த வீடு கட்டியுள்ளார். தற்போது, சம்பள கமிஷன் பரிந்துரையால், நல்ல சம்பளம் பெற்று வரும் அவரிடம், "சம்பளம் தான் கூடியுள்ளதே... வீட்டுக்கடனை அடைத்து விடலாமே!' என நான் கேட்க, "வீட்டுக்கடனுக்காக வங்கிக்கு கட்டும் தவணைத் தொகைக்கு வருமான வரிக்கழிவு உள்ளது. அதனால்தான், வீட்டுக்கடனை அடைக்காமல் உள்ளேன்...' என்று, தன் புத்திசாலித்தனத்தைக் காட்டினார் நண்பர்.
இந்த வருடம் 14 ஆயிரம் ரூபாய் வருமான வரி வந்தாகவும், வீட்டுக்கடன் தவணைத் தொகையால் அது ஏழாயிரம் ரூபாயாக குறைந்துள்ளதாகவும் கூறினார் அவர்.
அவரது வீட்டுக்கடன் தவணைக்கான வங்கி ஸ்டேட்மென்ட்டை வாங்கிப் பார்த்தேன். அவர் கட்டியிருந்த 62 ஆயிரம் ரூபாயில், 49 ஆயிரம் ரூபாய்க்கு மேல் வட்டியாக கட்டியிருப்பது தெரிந்தது. அதைச் சுட்டிக்காட்டி, ஏழாயிரம் ரூபாய் அரசாங்கத்துக்கு வருமான வரி கட்டுவதை தவிர்க்க, வங்கிக்கு 49 ஆயிரத்திற்கு மேல் வட்டி கட்டி இருக்கிறார் என்பதை உணர்த்தினேன். நண்பரும் இந்த உண்மையை அறிந்து திகைத்தார்.