மனைவி செய்யும் பாவம்
ஒழுங்கினாலும் கட்டுப்பாட்டினாலும் மனத்தின் அசுத்தங்களை அகற்ற முடியும். அறிவை வளர்த்துக் கொள்வதற்கு முன்னால் ஒழுக்கம் அவசியம். இல்லாவிட்டால் செயல்கள் பிழையாகி கெட்டதை வளர்க்கும்.
குறைச்சலான வசதியைக் கூடப் பெற முடியாதவர்களுக்கு உதவுவது தான் தியாகம், தர்மம், புண்ணியம்.
அன்பு எல்லாரிடமும், பொறுமை தவறு செய்கிறவனிடமும், பொறாமையின்மை நம்மைவிட மேல் ஸ்தானத்தில் இருக்கிறவனிடமும் கொண்டிருக்க வேண்டும்.
பொருளைத் திருடிப் பெறக்கூடாது. இன்னொருவனை வஞ்சித்துப் பெறக்கூடாது. லஞ்சம் வாங்கக்கூடாது. இன்னொருவன் வயிற்றில் அடிக்கக்கூடாது.
குடிமக்கள் செய்யும் பாவம் அரசனையும், மனைவி செய்யும் பாவம் கணவனையும், சிஷ்யனின் பாவம் குருவையும் சேரும்.
யாராக இருந்தாலும் ஆசையைக் குறைத்துக் கொள்ள வேண்டும். ஆசை போகாமல் எந்த ஆத்ம சம்பத்தும் உண்டாகாது.
தனக்கென்று பொருள் சேர்ப்பதிலும், அலங்காரம் செய்து கொள்வதிலும் தற்காலிக இன்பம் கிடைக்கலாம். ஆனால் உள்ளத்துக்கு நிறைவான ஆனந்தம் அன்பு செலுத்துவதிலேயே இருக்கிறது.
இதற்கு மேல் ஒன்று வேண்டும் என்று தோன்றச் செய்யாத நிலைத்த பேரின்பமே 'மோட்சம்'.
தன் மனைவியைத் தன் சம்பாத்தியத்துக்குள்ளேயே கட்டும் செட்டுமாக வைத்துக் காப்பாற்றுவது தான் புருஷனுக்கு கௌரவம்.