Monday, July 30, 2012

திருமணங்கள் இங்கே நிச்சயிக்கப்படுகின்றன !

திருமணம் நிச்சயமாகிவிட்டால்... நகை எடுக்கவும், துணிமணி எடுக்கவும் ஊரில் நாட்டில் ஆயிரமாயிரம் கடைகள் இருக்கின்றன. ஆனால், திருமணம் தாமதமானால் அதை நடத்தி வைக்க எந்தக் கடை இருக்கிறது?

'எல்லாம் இருந்தும், நம் வீட்டு செல்லத்துக்கு திருமணம் மட்டும் நடத்த முடியவில்லையே' என்ற மனக்கவலையோடு வலம் வரும் பெற்றோர் என்னதான் செய்வார்கள்?

இதெல்லாம் நாகப்பட்டினம் மாவட்டம், திருமணஞ்சேரி திருத்தலத்தைப் பற்றி தெரியாத வர்களின் கவலை! அங்கிருக்கும் கோகிலாம்பாள் சமேத உத்வாகநாதசுவாமி, என்னதான் தீராத தோஷம் இருந்தாலும் தீர்த்துவைத்து விடுகிறார், திருமணம் எவ்வளவு நாட்களாக தாமதமாகிஇருந்தாலும் உடனே நடத்தி வைக்கிறார். நாடு முழுவதிலுமிருந்தும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு வந்து வழிபட்டு பலன் அடைந்து கொண்டே இருக்கிறார்கள்.

மயிலாடுதுறையில் இருந்து கும்பகோணம் செல்லும் சாலையில் இருக்கும் குத்தாலம் நகரிலிருந்து வடக்கே ஐந்து கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிறது திருமணஞ்சேரி. ஊரின் மையமாக கோயில் கொண்டிருக்கிறார்கள் கோகிலாம்பாள் - உத்வாகநாத சுவாமி தம்பதி.

தன்னை பூலோக முறைப்படி திருமணம் செய்து கொள்ளும்படி சுவாமியிடம் வற்புறுத்திய கோகிலாம்பாள், அதற்கு சுவாமி காலதாமதம் செய்ததால் அவரிடம் அலட்சியப் போக்கை கடைப்பிடிக்க ஆரம்பித்தாள். அதனால் அவளைப் பசுவாக பூமியில் பிறக்க வைத்தார் ஈசன். தேரழுந் தூரில் பசுவாகப் பிறந்து கோமல், அசிக்காடு போன்ற ஊர்களில் வளர்ந்து ஈசனைப் பற்றிய இடையறாத நினைவால் திருவாடுதுறையில் கோமுக்தி அடைந்தாள் அம்பாள்.

ஆனாலும், 'பூலோக முறைப்படி திருமணம் நடத்த வேண்டும்' என்கிற அம்பாளின் ஆசையை நிறைவேற்ற, அவளை குத்தாலத்தில் நடைபெற்ற பரத்வாஜ முனிவரின் வேள்வி குண்டத்தில் மகளாக தோன்ற வைத்து, வளர்ந்து ஆளானதும் பூலோக முறைப்படி திருமணமும் செய்துகொண்டார் ஈசன். அப்படி திருமணம் நடந்தேறிய இடம்தான் இந்த திருமணஞ்சேரி. அம்பாளின் திருமண ஏக்கத்தை தீர்த்து வைத்தது போலவே இன்றும் தன்னை நாடி வருகிறவர்களின் திருமண ஏக்கத்தை தீர்த்து வைக்கிறார் உத்வாகநாதசுவாமி.

திருமணஞ்சேரி ஈசனிடம் சரணடைவது என்று முடிவெடுத்துவிட்டால்... நேரடியாக கோயிலுக்கு செல்லுங்கள். அங்கே இருக்கும் கடையிலேயே அர்ச்சனை தட்டு, மாலை எல்லாம் கிடைக்கிறது. அவற்றை வாங்கிச் சென்றால்... எல்லோரையும் ஒரே இடத்தில் அமரவைத்து அர்ச்சனை நடக்கிறது. கோகிலாம்பாளும் உத்வாகநாதரும் திருமணக்கோலத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருக்கிறார்கள். வாங்கி வந்த மாலைகளை அவர்களுக்கு சார்த்தி, அதனை எடுத்து பக்தர்களுக்குப் போடுகிறார் ஆலய குருக்களான உமாபதி சிவாச்சாரியார். அதுதான் திருமணத்தை சீக்கிரம் கொண்டு வருகிறது.

வரன் நல்லமுறையில் அமைந்து திருமணம் முடிந்த பின், ஒருமுறை கோயிலுக்கு வந்துவிட்டுச் செல்ல வேண்டும் என்பது மரபு. அப்படி லண்டனிலிருந்து வந்திருந்தார்கள் மாலதி - நித்தையன் தம்பதி.

''முத்துப்பேட்டை பக்கத்துல இருக்கிற ஜாம்பவானோடைதான் எங்க ஊர். திருமணம் ஆகாம இருந்தப்ப இங்க வந்து வேண்டிக்கிட்டுப் போனேன். நாலே மாசத்துல மாப்பிள்ளை கிடைச்சார். லண்டன் மாப்பிள்ளைங்கிறதால, கல்யாணம் முடிச்ச உடனே லண்டன் கிளம்பியாச்சு. இப்பதான் நேரம் கிடைச்சு, நேர்த்திக்கடன் முடிச்சுட்டு போறோம்!'' என்று உற்சாகம் பொங்கப் பேசுகிறார் மாலதி.

ஈரோட்டில் இருந்து வந்திருந்த சகுந்தலா - மதியழகன் தம்பதி... இங்கே இதற்கு முன்னர் தனித்தனியே வந்திருந்து வேண்டுதல் செய்தவர்கள். தன் சந்நிதிக்கு வந்தவர்களை அவர்கள் அறியாமல் ஒன்று சேர்த்து அழகு பார்த்திருக்கிறார் உத்வாகநாதர். திருமணத்துக்குப் பிறகு, இருவருமே இந்தக் கோயிலில் வேண்டுதல் செய்ததன் மூலமாகவே இணைந்திருக்கிறோம் என்பதை அறிந்து, ஆச்சர்யப்பட்டுக் கொண்டே இருக்கிறார்கள் தினம் தினம்!

''இப்படி எண்ணற்றவர்கள் தங்கள் திருமணக் கனவை இங்கு வந்து வழிபடுவதன் மூலம் நிறைவேற்றிக் கொள்கின்றனர். இங்கு வந்து வேண்டி திருமணம் நடக்கும் தம்பதிகளுக்கு கட்டாயம் மழலைச் செல்வமும் கிடைக்கிறது. அதற்கு உதாரணம், பராந்தகசோழன் காலத்தில் இருந்தே கிடைக்கிறது. அக்காலத்தில் இரண்டு பெண்கள் இங்கு வந்து குழந்தைப் பேறு வேண்டினர். ஒருவருக்கு ஆண் குழந்தையும், இன்னொருவருக்கு பெண் குழந்தையும் பிறக்க வேண்டும், அப்படிப் பிறக்கும் இருவருக்கும் திருமணம் செய்து வைப்பது என்பது அவர்களின் வேண்டுதல். ஆனால், அவர்களில் ஒருத்திக்கு அழகான பெண் குழந்தையும், இன்னொருத்திக்கு ஆமையும் பிறந்தது. ஆமையை எப்படி திருமணம் செய்வது? இருவரும் வந்து இங்கு வழிபட்டு வேண்ட, ஆமை அழகான இளைஞனாகியது. இருவருக்கும் இங்கு திருமணமும் நடந்தேறியது. இப்படியாக இத்தலத்து இறைவன் எல்லோருடைய ஏக்கத்தையும் தீர்த்து வைப்பது தொன்றுதொட்டு தொடர்கிறது'' என்று புராண பெருமை பேசுகிறார் உமாபதி சிவாச்சாரியார்

திருமணம் கைகூட, திருமணஞ்சேரி சென்று வாருங்கள்!


புரோக்கர்கள் தேவையில்லை!

பயணச் செலவு, தங்குமிடம் தவிர்த்து, கோயில் வழிபாட்டுக்காக வெறும் நூறு ரூபாய்க்குள்தான் செலவாகும். கையில் எதையும் எடுத்துச் செல்ல வேண்டியதில்லை. உடலை வருத்திக்கொள்ளும் பிரார்த்தனைகளும் இல்லை. அர்ச்சனை தட்டு, மாலை இதெல்லாம் கோயிலுக்குள் இருக்கும் கடையிலேயே கிடைக்கிறது! அவற்றோடு சந்நிதிக்கு வந்து, ஆத்மார்த்தமாக வேண்டி, அங்கு கொடுக்கப்படும் மாலையை அணிந்தால்... திருமணம் நிச்சயம். எந்தவித பரிகாரங்களும் செய்யத் தேவையில்லை என்பதை முக்கியமாக மனதில் ஏற்றிக்கொள்ளுங்கள். கோயிலுக்கு நுழையும் முன்பாக வழிமறித்து, 'அதைச் செய்ய வேண்டும், இதைச் செய்ய வேண்டும்' என்று புரோக்கர்கள் யாராவது சொன்னால் உதாசீனப்படுத்துங்கள்.

தொலை தூரத்தில் இருந்து வருபவர்கள் மயிலாடுதுறையில் தங்கிக்கொள்வது நல்லது. அங்கிருந்து நேரடி பேருந்துகள் இருக்கின்றன. அல்லது குத்தாலம் வரை பேருந்தில் சென்று, அங்கிருந்து மினிபஸ், ஆட்டோ, நகரப்பேருந்து ஆகியவற்றில் செல்லலாம். மயிலாடுதுறைக்கு... சென்னை, திருச்சி, மதுரை, கோவை, ராமேஸ்வரம், திருநெல்வேலி உள்ளிட்ட பல ஊர்களில் இருந்து புகைவண்டி வசதியும் இருக்கிறது!

(Source: Aval Vikatan, 14-8-12)