''நினைக்கும்போதே நாவில் நீர் ஊற வைக்கும் வகையில் பனீர் ஹார்ட், பனீர் கபாப், சந்தேஷ் போன்ற அயிட்டங்களை செய்து பரிமாறினால், குடும்பத்தினர் உங்களை கொண்டாடுவது உறுதி''
ரசகுல்லா
தேவையானவை: பால் - ஒரு லிட்டர், சர்க்கரை - 2 டீஸ்பூன், ரவை - ஒரு டீஸ்பூன், சர்க்கரை (பாகு தயாரிக்க) - 2 கப், தண்ணீர் - ஒரு லிட்டர், சர்க்கரை (பனீருடன் சேர்க்க) - 2 டீஸ்பூன், பாலை திரிக்க எலுமிச்சம் பழம் - ஒன்று (அல்லது) சிட்ரிக் ஆசிட் - ஒரு சிட்டிகை (அல்லது) தயிர் - கால் கப், ரோஸ் வாட்டர் - ஒரு டீஸ்பூன்.
செய்முறை: பாலைக் காய்ச்சி, கொதி வரும்போது எலுமிச்சை சாறு அல்லது சிட்ரிக் ஆசிட் அல்லது தயிர் சேர்த்து திரிய விடவும் (ஏதேனும் ஒன்று மட்டும் விடவும்). 5 நிமிடம் கழித்து, சுத்தமான வெள்ளைத் துணியில் வடிகட்டினால், பனீர் தயார். வடிகட்டிய தண்ணீரை கொட்ட வேண்டாம். இதை சப்பாத்தி மாவு பிசைய, குருமா செய்ய உபயோகப்படுத்த லாம். இதை ஃப்ரிட்ஜில் வைக்கவும்.
தயாரித்த பனீரை மசிக்கவும். அதனுடன் ஒரு டீஸ்பூன் ரவை, 2 ஸ்பூன் சர்க்கரை சேர்த்து மெதுவாக பிசையவும் (அழுத்தக் கூடாது). 2 கப் சர்க்கரையுடன் தண்ணீர் சேர்த்து, பாகு காய்ச்சவும். பனீர் கலவையை சிறு கோலி உருண்டைகளாக உருட்டி, பாகில் போட்டு 20 நிமிடம் கொதிக்கவிடவும். நடுவே தண்ணீர் சேர்க்கவும். பாகு, திக்காக கூடாது. நீர்க்க இருக்க வேண்டும். உருண்டை பெரிதாக வரும்போது, அடுப்பை அணைத்துவிட்டு, ரோஸ் வாட்டர் சேர்த்தால்... ரசகுல்லா ரெடி!
பனீர் ஃப்ரூட் சாலட்
தேவையானவை: பனீர் - 250 கிராம், கறுப்பு திராட்சை, பச்சை திராட்சை - தலா 15, மாம்பழம் - ஒன்று, பாதாம், பிஸ்தா, முந்திரி - தலா ஒரு டீஸ்பூன், வறுத்த எள் - 2 டீஸ்பூன், தேன் - 4 டேபிள்ஸ்பூன், உப்பு, மிளகுத்தூள் - தலா ஒரு டீஸ்பூன், எலுமிச்சைச் சாறு - 2 டேபிள்ஸ்பூன்.
செய்முறை: பனீரை சிறிய துண்டுகளாக நறுக்கி... அதில் உப்பு, எலுமிச்சைச் சாறு, மிளகுத்தூள் கலந்து, இந்தக் கலவையை 15 நிமிடம் ஊற வைக்கவும். பழங்களைக் கழுவி துண்டுகளாக நறுக்கி வைக்கவும். ஒரு பாத்திரத்தில் பழத் துண்டுகள், ஊற வைத்த பனீர் துண்டுகள், பாதாம், பிஸ்தா, முந்திரி அனைத்தும் சேர்த்துக் கலக்கவும். இதன் மீது, தேன் ஊற்றி, வறுத்த எள்ளை தூவி பரிமாறவும். இதில் அன்னாசி, பப்பாளி, ஆப்பிள் பழத் துண்டுகளும் சேர்க்கலாம்.
ஸ்டீம்டு பனீர்
தேவையானவை: துருவிய பனீர் - ஒரு கப், கேரட் - ஒன்று (துருவிக் கொள்ளவும்), பொடியாக நறுக்கிய வெங்காயம் - ஒன்று, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - கால் கப், பச்சை மிளகாய் விழுது - 2 டீஸ்பூன், பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை, கடலை மாவு - கால் கப், தேங்காய்ப்பூ - 2 டேபிள்ஸ்பூன், கடுகு - ஒரு டீஸ்பூன், எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: துருவிய பனீர், துருவிய கேரட், வெங்காயம், பச்சை மிளகாய் விழுது, கொத்தமல்லி, உப்பு, பெருங்காயத்தூள், கடலை மாவு ஆகியவற்றை ஒன்று சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும் (தேவைப்பட்டால் 4, 5 சொட்டு தண்ணீர் சேர்க்கலாம்). 15 நிமிடம் அப்படியே ஊற வைக்கவும். இட்லித் தட்டில் எண்ணெய் தடவி, இந்த கலவையை வைத்து ஆவியில் 15 நிமிடம் வேகவிடவும். வெந்ததும் எடுத்து விருப்பப்பட்ட வடிவில் வெட்டிக் கொள்ளவும். பரிமாறும் தட்டில் வைத்து, எண்ணெயில் கடுகு தாளித்து அதன் மேல் ஊற்றவும். தேங்காய்ப்பூ தூவி அலங்கரித்து பரிமாறவும்.
ஹவாயன் சாலட்
தேவையானவை: துருவிய பனீர் - கால் கப், ஆரஞ்சு சுளைகள் - 12, வெள்ளரிக்காய், ஆப்பிள் - தலா ஒன்று, அன்னாசி பழத் துண்டுகள் - 6, முட்டைகோஸ் இலை - 4 (முட்டைகோஸை இலைகளாக பிரித்தெடுக்கவும்), வினிகர் - 2 டீஸ்பூன், எண்ணெய், சர்க்கரை, உப்பு, மிளகுத்தூள் - தலா ஒரு டீஸ்பூன்.
செய்முறை: முட்டைகோஸ் இலைகளை சுடுநீரில் 2 நிமிடம் போட்டு எடுத்து வைக்கவும். ஆரஞ்சு சுளைகளை இரண்டாக நறுக்கவும். ஆப்பிளை துண்டுகளாக்கவும். வெள்ளரிக்காயை சிறிய துண்டுகளாக நறுக்கவும். அவற்றுடன் அன்னாசி பழத் துண்டு களையும் சேர்க்கவும். வினிகர், எண்ணெய், உப்பு, மிளகுத்தூள், சர்க்கரை ஆகியவற்றை சேர்த்துக் கலக்கவும். ஒரு பாத்திரத்தில் பழக்கலவை, துருவிய பனீர் போட்டு, வினிகர் கலவையை ஊற்றி நன்கு கிளறவும். தட்டில் முட்டைகோஸ் இலைகளை அடுக்கி, மேலே கலவையை பரப்பி வைத்துப் பரிமாறவும்.
பனீர் கோஃப்தா கிரேவி
தேவையானவை: - கோஃப்தா செய்வதற்கு: பனீர் (துருவியது) - ஒரு கப், ஸ்வீட் இல்லாத கோவா - கால் கப் (அல்லது) வேக வைத்த உருளைக்கிழங்கு - ஒன்று, பொடித்த முந்திரி - 2 டீஸ்பூன், சோள மாவு - 2 டேபிள்ஸ்பூன், மிளகுத்தூள் - 2 டீஸ்பூன், எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு, உப்பு - தேவையான அளவு.
கிரேவி செய்ய: சீரகம், வெண்ணெய் - தலா ஒரு டீஸ்பூன், தக்காளி (விழுதாக அரைத்தது) - 2, வெங்காயம் (விழுதாக அரைத்தது) - ஒன்று, இஞ்சி - பூண்டு விழுது - 2 டீஸ்பூன், கிராம்பு, ஏலக்காய் - தலா 2, பட்டை - சிறிய துண்டு, மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், மிளகாய்த்தூள், தனியாத்தூள் - ஒரு டேபிள்ஸ்பூன், கொத்தமல்லி - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: துருவிய பனீர், கோவா (அ) வேக வைத்த உருளைக்கிழங்கு, பொடித்த முந்திரி, சோள மாவு, மிளகுத்தூள், உப்பு சேர்த்துப் பிசைந்து சிறு உருண்டைகள் செய்து, சூடான எண்ணெயில் பொரித்தெடுத்தால், கோஃப்தா ரெடி.
கடாயில் வெண்ணெயை சூடாக்கி... சீரகம், பட்டை, கிராம்பு, ஏலக்காய் தாளித்து, அரைத்த வெங்காய விழுது சேர்த்து வதக்கவும். பிறகு, இஞ்சி - பூண்டு விழுது, தக்காளி விழுது சேர்த்து வதக்கவும். இதில் மிளகாய்த்தூள், தனியாத்தூள், உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து வதக்கி, தண்ணீர் சேர்த்துக் கொதிக்க விடவும். பச்சை வாசனை போனதும், கொத்தமல்லி தூவி இறக்கவும். பரிமாறும் முன் கோஃப்தாக்களை போட்டு பரிமாறவும்.
சப்பாத்தி, பூரி, நாண் ஆகியவற்றுக்கு ஏற்ற சைட் டிஷ் இது.
பனீர் புலாவ்
தேவையானவை: பனீர் - 250 கிராம், உதிரியாக வடித்த சாதம் - 2 கப், தக்காளி, வெங்காயம் - தலா ஒன்று (நறுக்கவும்), இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், பட்டை - சிறிய துண்டு, கிராம்பு, ஏலக்காய் தலா - 2, பிரியாணி இலை - ஒன்று, பச்சை மிளகாய் - 4, நெய் - ஒரு டீஸ்பூன், புதினா, கொத்தமல்லி, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கடாயில் எண்ணெயை சூடாக்கி... பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை தாளிக்கவும். இதனுடன் நறுக்கிய தக்காளி, வெங்காயம், இஞ்சி - பூண்டு விழுது சேர்க்கவும். பச்சை மிளகாயை கீறி சேர்க்கவும். சிறிதளவு புதினா, கொத்தமல்லி, உப்பு சேர்த்துக் கலக்கவும். சிறிதளவு தண்ணீர் சேர்க்கவும். பனீர் துண்டுகளை சதுரமாக வெட்டிச் சேர்க்கவும். கலவை சேர்ந்து வரும்போது சாதத்தை சேர்த்து, மிதமான தீயில் கிளறவும். மீதியுள்ள புதினா, கொத்தமல்லி மற்றும் நெய் சேர்த்துக் கிளறி இறக்கவும்.
விருப்பப்பட்டால், வேக வைத்த பச்சைப் பட்டாணி சேர்க்கலாம்.
பனீர் கச்சோரி
தேவையானவை: துருவிய பனீர், மைதா மாவு - தலா ஒரு கப், சேமியா - கால் கப், ஓமம் - அரை டீஸ்பூன், பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், வறுத்த எள், பொட்டுக்கடலை மாவு - தலா 2 டேபிள்ஸ்பூன், பச்சை மிளகாய் விழுது - 2 டீஸ்பூன், துருவிய இஞ்சி, நறுக்கிய கொத்தமல்லி - தலா ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: மைதா மாவு, உப்பு, சேமியாவுடன் ஒரு டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து சப்பாத்தி மாவு போல் பிசைந்து கொள்ளவும். கடாயில் சிறிதளவு எண்ணெயை சூடாக்கி, ஓமம் தாளித்து கொள்ளவும். துருவிய பனீர், வறுத்த எள், பொட்டுக்கடலை மாவு, பச்சை மிளகாய் விழுது, இஞ்சி, கொத்தமல்லி, உப்பு இவற்றுடன் தாளித்த ஓமம், பெருங்காயத்தூள் சேர்த்துப் பிசையவும். மைதா மாவு கலவையை சிறிய கிண்ணம் போல் செய்து, அதனுள் பனீர் கலவையை வைத்து மூடி வட்ட வடிவமாக தட்டவும். கடாயில் எண்ணெயை சூடாக்கி, வட்ட வடிவமாக தட்டி வைத்தவற்றை இரண்டு இரண்டாக போட்டு பொரித்தெடுத்தால்... சுவையான கச்சோரி ரெடி.
பனீர் ரோல்ஸ்
தேவையானவை: வேக வைத்த உருளைக்கிழங்கு - 3, துருவிய பனீர் - ஒரு கப், பிரெட் ஸ்லைஸ் - 4, நறுக்கிய கொத்தமல்லி - கால் கப், பச்சை மிளகாய் விழுது - 2 டீஸ்பூன், அம்சூர் பவுடர், இஞ்சித் துருவல், மிளகாய்த்தூள் - தலா ஒரு டீஸ்பூன், கேரட் - ஒன்று (துருவிக் கொள்ளவும்), எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: பிரெட் ஸ்லைஸ்களை சிறு சிறு துண்டுகளாக்கவும். வேக வைத்து மசித்த உருளைக்கிழங்குடன் பிரெட் துண்டுகள், பச்சை மிளகாய் விழுது, கொத்தமல்லி, உப்பு, மிளகாய்த்தூள், இஞ்சித் துருவல், அம்சூர் பவுடர், துருவிய பனீர் ஆகியவற்றை சேர்க்கவும். இதிலிருந்து சிறிதளவு எடுத்து வட்டமாக தட்டவும். நடுவில் கேரட் துருவலை வைத்து மூடி, விரல் நீளத்தில் உருட்டிக் கொள்ளவும். இதேபோல் எல்லாவற்றையும் உருட்டிக் கொள்ளவும். கடாயில் எண்ணெயை சூடாக்கி, ஒவ்வொன்றாக பொரித்தெடுக்கவும். குறுக்காக வெட்டி சாஸ் அல்லது சட்னியுடன் பரிமாறவும்.
பனீர் பராத்தா
தேவையானவை: பனீர் (துருவியது) - ஒரு கப், அம்சூர் பவுடர் - ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் - 4 (நறுக்கவும்), இஞ்சித் துருவல் - ஒரு டீஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லி - 4 டேபிள்ஸ்பூன், கரம் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன், மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன், கோதுமை மாவு - 2 கப், ஓமம் - ஒரு டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: கோதுமை மாவுடன் சிறிதளவு உப்பு, ஓமம், ஒரு டீஸ்பூன் எண்ணெய் சேர்த்துப் பிசிறி, தேவையான தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு போல் பிசைந்து கொள்ளவும். துருவிய பனீர், இஞ்சித் துருவல், அம்சூர் பவுடர், உப்பு, நறுக்கிய பச்சை மிளகாய், மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், கொத்தமல்லி சேர்த்து நன்கு கலக்கவும். மாவை சிறு உருண்டைகளாக உருட்டி, சப்பாத்தியாக தேய்க்கவும். அதில் லேசாக எண்ணெய் தடவி, பனீர் கலவையை நடுவில் வைத்து மூடி, மீண்டும் தேய்த்து, சூடான தவாவில் போட்டு, இருபுறமும் எண்ணெய் விட்டு சுட்டு எடுக்கவும்.
பனீர் கோஃப்தா கடி
தேவையானவை: - கோஃப்தா செய்வதற்கு: பனீர் (துருவியது) - ஒரு கப், கடலை மாவு - கால் கப், ஓமம் - கால் டீஸ்பூன், இஞ்சித் துருவல் - ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் - 3 (பொடியாக நறுக்கவும்), கொத்தமல்லி, புதினா - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.
கடி செய்வதற்கு: மோர் - ஒரு கப், கடலை மாவு - 4 டேபிள்ஸ்பூன், பெருங்காயம், மஞ்சள் தூள் - தலா கால் டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
தாளிக்க: வெந்தயம், கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம் - தலா ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, மிளகாய் வற்றல் - 3, எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்.
செய்முறை: மோருடன் உப்பு, கடலை மாவு, பெருங்காயம், மஞ்சள்தூள், சேர்த்து கட்டியில்லாமல் கரைத்து, கடாயில் ஊற்றி மிதமான தீயில் கொதிக்க வைத்தால் 'கடி' தயார். கோஃப்தா செய்ய கொடுத்துள்ளவற்றை ஒன்றாக சேர்த்து, பிசைந்து சிறு உருண்டைகள் செய்து, மெதுவாக கொதிக்கும் கடியில் போடவும். 5 நிமிடம் வேகமாக கொதிக்கவிட்டு, பின் மிதமான தீயில் 10 நிமிடம் கொதிக்கவிடவும் (தேவைப்பட்டால் நீர் சேர்க்கவும்). தாளிக்க கொடுத்துள்ளவற்றை கடாயில் தாளித்து இதனுடன் சேர்த்து, இறக்கிப் பரிமாறவும்.
குறிப்பு: கோஃப்தா உடைந்துவிடும் என நினைத்தால், ஆவியில் 8 நிமிடம் வேகவைத்து பின் சேர்க்கலாம்.
பனீர் செட்டிநாடு
தேவையானவை: பனீர் - 250 கிராம், தக்காளி (அரைக்கவும்), வெங்காயம் (அரைக்கவும்) - தலா ஒன்று, உளுத்தம்பருப்பு, வெந்தயம் - தலா ஒரு டீஸ்பூன், கிராம்பு - 2, பட்டை - சிறிய துண்டு, பிரியாணி இலை - ஒன்று, கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு, எண்ணெய் - 4 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
அரைக்க: மிளகு - 10, சீரகம் - 1 டீஸ்பூன், முந்திரி - 10, கசகசா - ஒரு டீஸ்பூன், இஞ்சி - சிறிய துண்டு, பூண்டு - 6 பல், வெந்தயம் - ஒரு டீஸ்பூன், மிளகாய் வற்றல் - 4, மஞ்சள் தூள் - ஒரு டீஸ்பூன்.
செய்முறை: பனீரை, ஒரு இன்ச் நீள துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். அரைக்க கொடுத்துள்ளவற்றை அரைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி... உளுத்தம்பருப்பு, வெந்தயம், கிராம்பு, பட்டை, பிரியாணி இலை, கறிவேப் பிலை தாளிக்கவும். இதனுடன் அரைத்த வெங்காயம், தக்காளி சேர்த்து சுருள வதக்க வும். பின் அரைத்து வைத்துள்ள மசாலா வையும் சேர்த்து வதக்கி, தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிட்டு, உப்பு சேர்க்கவும். இதில் நறுக்கிய பனீர் துண்டுகளை சேர்த்து மிதமான தீயில் கொதிக்கவிடவும். சுருளக் கிளறி, கொத்தமல்லி தூவி இறக்கிப் பரிமாறவும்.
இதை 'செமி கிரேவி'யாகவும் செய்து பரிமாறலாம்.
பனீர் கபாப்
தேவையானவை: வாழைக்காய் - ஒன்று, துருவிய பனீர் - ஒரு கப், பொட்டுக்கடலை மாவு - கால் கப், பச்சை மிளகாய் - 4, கொத்தமல்லி - 4 டேபிள்ஸ்பூன் (நறுக்கியது), இஞ்சித் துருவல் - ஒரு டீஸ்பூன், எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: வாழைக்காயை வேக வைத்து மசித்துக் கொள்ளவும். இதனுடன் துருவிய பனீர், நறுக்கிய பச்சை மிளகாய், கொத்தமல்லி, உப்பு, இஞ்சித் துருவல், பொட்டுக்கடலை மாவு சேர்த்துப் பிசையவும் (தேவைப்பட்டால் சில சொட்டுகள் தண்ணீர் சேர்க்கலாம்). பிசைந்த கலவையை விரல் நீள வடிவில் அல்லது விருப்பப்பட்ட வடிவில் செய்து கொள்ளவும். கடாயில் எண்ணெயை சூடாக்கி, செய்து வைத்ததை பொரித்தெடுத்து, சாஸ் உடன் பரிமாறவும்.
பனீர் கிரேவி (ஆந்திரா ஸ்டைல்)
தேவையானவை: பனீர் - 250 கிராம், வெங்காயம் - 2, மிளகாய் வற்றல், பச்சை மிளகாய் - தலா 2, இஞ்சி, பூண்டு விழுது - ஒரு டேபிள்ஸ்பூன், புளிக் கரைசல் - 3 டேபிள்ஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒரு டேபிள்ஸ்பூன், மஞ்சள்தூள் - ஒரு டீஸ்பூன், கடுகு, வெந்தயம் - தலா கால் டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, நெய் - ஒரு டேபிள்ஸ்பூன், எள் - ஒரு டீஸ்பூன், எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
அரைக்க: வேர்க்கடலை, தேங்காய்த் துருவல் - தலா 4 டேபிள்ஸ்பூன், தயிர் - 2 டேபிள்ஸ்பூன், தனியா, வெந்தயம் - தலா ஒரு டீஸ்பூன், பட்டை - சிறிய துண்டு, கிராம்பு, ஏலக்காய் - தலா 3.
செய்முறை: அரைக்க கொடுத்துள்ளவற்¬றை அரைத்து வைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெயை சூடாக்கி கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை தாளித்து... நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், மிளகாய் வற்றல் சேர்த்து வதக்கவும். இஞ்சி - பூண்டு விழுது, அரைத்த மசாலா, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து மேலும் வதக்கவும். சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிடவும். புளிக் கரைசல் சேர்க்கவும். பனீரை ஒரு இஞ்ச் நீளத் துண்டுகளாக நறுக்கி சேர்க்கவும். மிதமான தீயில் சமைக்கவும். பச்சை வாசனை போனதும், நெய்யில் எள் தாளித்து சேர்த்து, இறக்கிப் பரிமாறவும்.
பனீர் பட்டர் மசாலா
தேவையானவை: பனீர் - 250 கிராம், வெங்காயம் - 2 (நறுக்கவும்), தக்காளி - 2 (அரைக்கவும்), மிளகாய்த்தூள், சீரகத்தூள் - தலா ஒரு டீஸ்பூன், காய்ந்த வெந்தயக் கீரை - ஒரு டீஸ்பூன், கரம் மசாலாத்தூள் - கால் டீஸ்பூன், பால் - கால் கப், ப்ரெஷ் க்ரீம், வெண்ணெய் - தலா 2 டேபிள்ஸ்பூன், எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
அரைத்துக் கொள்ள: வெங்காயம் - ஒன்று, இஞ்சி - சிறிய துண்டு, பூண்டு - 6 பல், உடைந்த முந்திரி - 2 டேபிள்ஸ்பூன்.
செய்முறை: அரைக்கக் கொடுத்துள்ளவற்றை அரைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெயை சூடாக்கி, அரைத்த மசாலா, மிளகாய்த்தூள், அரைத்த தக்காளி விழுது சேர்த்து வதக்கவும். இதனுடன் சீரகத்தூள், கரம் மசாலா சேர்த்து வதக்கி, சிறிதளவு தண்ணீர் சேர்த்து மேலும் வதக்கி தனியே வைக்கவும், மற்றொரு வாணலியில் வெண்ணெயை சூடாக்கி, நறுக்கிய வெங்காயம், காய்ந்த வெந்தயக்கீரை சேர்த்து வதக்கி, ஏற்கனெவே வதக்கி வைத்துள்ள தக்காளி கலவையில் சேர்க்கவும். இதனுடன் நீளத் துண்டுகளாக நறுக்கிய பனீர், பால், உப்பு சேர்த்து கொதிக்கவிட்டு, பிரெஷ் க்ரீம் சேர்த்து இறக்கவும். இதனை சூடான சப்பாத்தி, பரோட்டாவுடன் பரிமாறவும்.
கடாய் பனீர்
தேவையானவை: பனீர் - 250 கிராம், இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டேபிள்ஸ்பூன், மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன், வெங்காயம், தக்காளி - தலா 2, பச்சை மிளகாய் - 3, தனியாத்தூள் - 2 டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், காய்ந்த வெந்தயக் கீரை - ஒரு டீஸ்பூன், பட்டை - சிறிய துண்டு, கிராம்பு, ஏலக்காய் - தலா 2, சீரகம் - ஒரு டீஸ்பூன், கொத்தமல்லி, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கடாயில் எண்ணெயை சூடாக்கி பட்டை, கிராம்பு, ஏலக்காய், சீரகம் தாளிக்கவும். பொடியாக நறுக்கிய வெங்காயம், கீறிய பச்சை மிளகாய், நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும். இத்துடன் இஞ்சி - பூண்டு விழுது, சிறிது கொத்தமல்லி, மிளகாய்த்தூள், தனியாத்தூள், மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும். உப்பு, தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும். எண்ணெய் பிரியும்போது, நீளமாக நறுக்கிய பனீர் துண்டுகள் சேர்த்து 2 நிமிடம் கிளறவும். காய்ந்த வெந்தயக் கீரையை கையில் பொடித்து சேர்க்கவும். 2 நிமிடம் கழித்து கொத்தமல்லி தூவி இறக்கவும். சப்பாத்தி, புலாவ், ரொட்டிக்கு ஏற்ற சைட் டிஷ் இது.
பனீர் டிக்கா
தேவையானவை: - தந்தூரி மசாலாவுக்கு: தயிர் - கால் கப், மிளகாய்த்தூள், இஞ்சி - பூண்டு விழுது, கடலை மாவு - தலா ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், சாட் மசாலா - அரை டீஸ்பூன், கரம் மசாலாத்தூள் - கால் டீஸ்பூன், காய்ந்த வெந்தய இலை - கால் டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
டிக்காவுக்கு: பனீர் - 250 கிராம் (பெரிய சதுர துண்டுகளாக நறுக்கவும்), வெங்காயம், குடமிளகாய், தக்காளி - தலா ஒன்று (சதுரமாக நறுக்கவும்), எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்.
செய்முறை: தந்தூரி மசாலாவுக்கு கொடுத்துள்ளவற்றை நன்கு கலந்து தயார் செய்து வைக்கவும். இந்த மசாலாவை பனீர், வெங்காயம், தக்காளி, குடமிளகாய் துண்டுகளில் தனித்தனியே தடவி 20 நிமிடம் ஊற விடவும். இதை நீள கம்பியில் ஒன்றன்பின் ஒன்றாக குத்தி, 'க்ரில்' பண்ணவும். 'மைக்ரோவேவ் அவன்' இல்லாதவர்கள் சூடான தவாவில் எண்ணெய் விட்டு... பனீர், காய்கறி துண்டுகளை இரு புறமும் சிவக்க விட்டு எடுத்தால் பனீர் டிக்கா ரெடி.
சில்லி பனீர்
தேவையானவை: பனீர் - 250 கிராம், குடமிளகாய் - ஒன்று (நறுக்கவும்), துருவிய இஞ்சி, பொடியாக நறுக்கிய பூண்டு - தலா ஒரு டீஸ்பூன், வெங்காயத்தாள் - 4, நறுக்கிய பச்சை மிளகாய் - 3, சோயா சாஸ், சர்க்கரை - தலா ஒரு டீஸ்பூன், சோள மாவு - ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
கரைத்துக் கொள்ள: மைதா, சோள மாவு - தலா கால் கப், சோயா சாஸ் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கரைத்துக் கொள்ள கொடுத் துள்ளவற்றை பஜ்ஜி மாவு பதத்துக்கு கரைத்துக் கொள்ளவும். நறுக்கிய பனீர் துண்டுகளை இதில் முக்கி, சூடான எண்ணெ யில் பொரித்து தனியே வைக்கவும். வேறு கடாயில் எண்ணெயை சூடாக்கி... இஞ்சி, பூண்டு, வெங்காயத்தாள் வெள்ளைப் பகுதி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி... 2 நிமிடம் கழித்து நறுக்கிய குடமிளகாய், சோயா சாஸ், உப்பு, சர்க்கரை சேர்த்து, சோள மாவைத் தண்ணீரில் கரைத்துச் சேர்த்துக் கிளறவும். பொரித்த பனீர் துண்டுகளை சேர்த்துப் புரட்டி, நறுக்கிய வெங்காயத்தாள் இலைப் பகுதியை இதன் மேல் தூவி இறக்கி பரிமாறவும்.
பாலக் பனீர்
தேவையானவை: பாலக் கீரை - ஒரு கட்டு, பனீர் - 100 கிராம், வெங்காயம் - ஒன்று (நறுக்கவும்), இஞ்சி - பூண்டு விழுது - 2 டீஸ்பூன், பச்சை மிளகாய் - 3, கிராம்பு - 2, சீரகம், மிளகுத்தூள் - தலா ஒரு டீஸ்பூன், பூண்டுப் பல் - 2, பால் - கால் கப், க்ரீம் (விருப்பப்பட்டால்) - 2 டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: சுத்தம் செய்த பாலக் கீரை, பூண்டுப் பல், பச்சை மிளகாய், அரை டீஸ்பூன் சீரகம், தேவையான தண்ணீர் சேர்த்து 10 நிமிடம் வேகவிடவும். நீரை வடித்து எடுத்து வைக்கவும். கீரையை மட்டும் தனியே எடுத்து பால் சேர்த்து விழுதாக அரைக்கவும். பனீரை துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி... அரை டீஸ்பூன் சீரகம், கிராம்பு தாளித்து, இஞ்சி - பூண்டு விழுது சேர்க்கவும். இதனுடன் நறுக்கிய வெங்காயம், அரைத்த கீரை விழுது, உப்பு, கீரை வேக வைத்த தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிடவும். கொதி வந்ததும் பனீர் துண்டுகள், மிளகுத்தூள் சேர்த்து 2 நிமிடம் மிதமான தீயில் மேலும் கொதிக்கவிடவும். விருப்பப்பட்டால் க்ரீம் சேர்த்து இறக்கிப் பரிமாறவும். சப்பாத்தி, பரோட்டாவுக்கு ஏற்ற சைட்டிஷ்.
ஆலு - மட்டர் பனீர் போஸ்தோ
தேவையானவை: பனீர் - 250 கிராம், உருளைக்கிழங்கு - 2, பச்சைப் பட்டாணி - 100 கிராம், தக்காளி - ஒன்று (அரைக்கவும்), கசகசா - 2 டீஸ்பூன், தனியா - 2 டேபிள்ஸ்பூன், சீரகம் - ஒரு டேபிள்ஸ்பூன், மிளகாய் வற்றல் - 6, மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், இஞ்சி விழுது - ஒரு டேபிள்ஸ்பூன், கொத்தமல்லி - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கசகசா, தனியா, சீரகம், மிளகாய் வற்றலை வெறும் கடாயில் வறுத்து அரைத்துக் கொள்ளவும். பனீரை சதுர துண்டு களாக வெட்டிக் கொள்ளவும். உருளைக்கிழங்கு, பச்சைப் பட்டாணியை வேக வைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெயை சூடாக்கி... இஞ்சி விழுது, அரைத்த தக்காளி விழுது சேர்த்து வதக்கவும். இதனுடன் வேக வைத்த உருளைக்கிழங்கு, பட்டாணி, மஞ்சள்தூள், அரைத்து வைத்திருக்கும் விழுது சேர்த்து வதக்கி, கொதிக்கவிடவும். தேவையான தண்ணீர், உப்பு சேர்த்து, பனீர் துண்டுகளைப் போட்டு கிளறிவிடவும். மிதமான தீயில் 10 நிமிடம் வைத்திருந்து, பின் இறக்கி, கொத்தமல்லி தூவி பரிமாறவும்.
பிண்டி பனீர்
தேவையானவை: வெண்டைக்காய் - 250 கிராம், பனீர் துண்டுகள் - 200 கிராம், ஓமம் - ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் விழுது - ஒரு டேபிள்ஸ்பூன், பூண்டு - 2 பல் (நறுக்கவும்), மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், மிளகாய்த்தூள், சீரகம் - தலா ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: சுத்தம் செய்த வெண்டைக்காயை நறுக்கிக் கொள்ளவும். பனீரை சிறு சிறு துண்டுகளாக வெட்டவும். கடாயில் எண்ணெய் விட்டு வெண்டைக்காயை வதக்கிக் கொள்ளவும். மற்றொரு கடாயில் எண்ணெய் விட்டு ஓமம், சீரகம் தாளித்து... நறுக்கிய பூண்டு பல், பச்சை மிளகாய் விழுது சேர்த்து வதக்கவும். இத்துடன் வதக்கிய வெண்டைக்காய், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், பனீர் துண்டுகளை சேர்த்துக் கிளறி, உப்பு சேர்க்கவும். 2 நிமிடம் குறைந்த தீயில் சமைத்தால்... பிண்டி பனீர் தயார்.
பனீர் ஹார்ட்
தேவையானவை: துருவிய பனீர் - ஒரு கப், சேமியா - கால் கப், மிளகுத்தூள், துருவிய இஞ்சி - தலா ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் - 4, நறுக்கிய கொத்தமல்லி - 2 டேபிள்ஸ்பூன், வேர்க்கடலைப் பொடி - கால் கப், வேக வைத்து, மசித்த உருளைக்கிழங்கு, துருவிய மாங்காய் - தலா ஒன்று, எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: சேமியாவை வறுத்துக் கொள்ளவும். துருவிய பனீர், துருவிய மாங்காய், இஞ்சி, கொத்தமல்லி, வேக வைத்து மசித்த உருளைக்கிழங்கு, உப்பு, மிளகுத்தூள், பச்சை மிளகாய், வறுத்த சேமியா ஆகியவற்றை சேர்த்து நன்கு பிசையவும். இதனுடன் வேர்க்கடலைப் பொடியை சேர்க்கவும். இதய வடிவில் தட்டிக் கொள்ளவும். இதனை சூடான எண்ணெயில் பொரித்தெடுத்து சாஸ் அல்லது கொத்தமல்லி, புதினா சட்னியுடன் பரிமாறவும். குட்டீஸ்களை கவர்ந்திழுக்கும் ஸ்நாக் இது.
பனீர் - சீஸ் காயின்ஸ்
தேவையானவை: பிரெட் ஸ்லைஸ் - 12, பனீர் - ஒன்றரை கப் (துருவியது), வேக வைத்த உருளைக்கிழங்கு, நெய் - ஒரு டேபிள்ஸ்பூன், மிளகுத்தூள் - 2 டீஸ்பூன், துருவிய சீஸ் - கால் கப், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: பிரெட் ஸ்லைஸ்களை வட்ட வடிவமாக வெட்டி எடுத்து வைக்கவும். வேக வைத்த உருளைக்கிழங்கை மசித்துக் கொள்ளவும். அதனுடன் துருவிய பனீர், உப்பு, மிளகுத்தூள் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும். வட்ட வடிவ பிரெட் ஸ்லைஸ் மேல் இந்தக் கலவையை பரத்தி வைக்கவும். மேலே மற்றொரு வட்ட வடிவ பிரெட் துண்டை வைத்து அழுத்தி மூடவும். அதன் மேல் துருவிய சீஸ் தூவவும். தவாவை சூடாக்கி, நெய் ஊற்றி, இதை டோஸ்ட் செய்யவும். 'மைக்ரோவேவ் அவன்' உள்ளவர்கள் அதில் 'பேக்' செய்து எடுக்கலாம்.
பனீர் ராப்
தேவையானவை: கோதுமை மாவு - ஒரு கப், மைதா - அரை கப், எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
பூரணம் செய்ய: காலிஃப்ளவர் (துருவியது) - கால் கப், பனீர் (துருவியது) - ஒரு கப், கீறிய பச்சை மிளகாய் - 3, நறுக்கிய கொத்த மல்லி - 2 டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கோதுமை மாவு, மைதா, உப்பு, எண்ணெயை சேர்த்துப் பிசிறி, தேவையான தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு போல் பிசைந்து, சப்பாத்திகள் செய்து கொள்ளவும். கடாயில் எண்ணெயை சூடாக்கி... பச்சை மிளகாய், காலிஃப்ளவர் சேர்த்து வதக்கவும். காய் வெந்தவுடன் பனீர், உப்பு, கொத்தமல்லி சேர்த்துக் கிளறி இறக்கினால், பூரணம் ரெடி. இதை சப்பாத்தியின் உள்ளே வைத்து ரோல் செய்தால்... பனீர் ராப் தயார்.
பனீர் - வெஜ் குருமா
தேவையானவை: பனீர் - ஒரு கப் (சதுரமாக வெட்டியது), காலிஃப்ளவர் - கால் கப், பீன்ஸ் - 10, கேரட் - 3, பச்சைப் பட்டாணி - கால் கப், பேபி கார்ன் - 2 (நறுக்கவும்), வெங்காயம் - ஒன்று (அரைக்கவும்), இஞ்சி - பூண்டு விழுது, பச்சை மிளகாய் விழுது - தலா ஒரு டேபிள்ஸ்பூன், பால் - அரை கப், சீரகம் - ஒரு டீஸ்பூன், பட்டை - சிறிய துண்டு, கிராம்பு, ஏலக்காய் - தலா 2, கரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன், கொத்தமல்லி - சிறிதளவு, எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கடாயில் எண்ணெயை சூடாக்கி சீரகம், பட்டை, ஏலக்காய், கிராம்பு தாளித்து... இஞ்சி - பூண்டு விழுது, பச்சை மிளகாய் விழுது, அரைத்த வெங்காய விழுது சேர்த்து வதக்கவும். இதனுடன் காய்கறிகள் கலவை, தேவையான தண்ணீர் சேர்த்து வேகவிடவும். காய்கறி வெந்தவுடன் பால், பனீர், கரம் மசாலாத்தூள், உப்பு சேர்த்து கொதிக்கவிடவும். 3 நிமிடம் கழித்து இறக்கி, கொத்தமல்லி தூவி பரிமாறவும்.
பனீர் பொடிமாஸ்
தேவையானவை: பனீர் - 200 கிராம், வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்), பச்சை மிளகாய் - 3, பூண்டு - 2 பல், மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு, இஞ்சித் துருவல் - ஒரு டீஸ்பூன், சீரகம் - ஒரு டீஸ்பூன், கடுகு, உளுத்தம்பருப்பு - தலா அரை டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: பனீரை உதிர்த்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெயை சூடாக்கி... கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, சீரகம் தாளிக்கவும். பொடியாக நறுக்கிய வெங்காயம், கீறிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். வதங்கியதும் நசுக்கிய பூண்டு, இஞ்சித் துருவல் உப்பு சேர்க்கவும். பிறகு, உதிர்த்து வைத்துள்ள பனீர், மிளகுத்தூள் சேர்த்துக் கிளறி, கொத்தமல்லி தூவி இறக்கவும்.
பனீர் - பீட்ருட் ஸ்வீட் ரைஸ்
தேவையானவை: சாதம், துருவிய பனீர் - தலா ஒரு கப், சர்க்கரை - கால் கப், பீட்ரூட் - ஒன்று (துருவிக் கொள்ளவும்), நெய் - 4 டேபிள்ஸ்பூன், ஏலக்காய் - 4, கிராம்பு - 2, பட்டை - சிறிய துண்டு, முந்திரி, பாதாம், திராட்சை - தேவையான அளவு.
செய்முறை: வாணலியில் நெய்யை சூடாக்கி, முந்திரி, பாதாம், திராட்சையை வறுத்து தனியே எடுத்து வைக்கவும். பட்டை, ஏலக்காய், கிராம்பு தாளித்து, துருவிய பீட்ரூட், சர்க்கரை சேர்த்துக் கிளறவும். இறுகி வரும்போது சாதம், பனீர் சேர்த்துக் கிளறி... வறுத்த முந்திரி, திராட்சை, பாதாம் சேர்த்து அலங்கரித்துப் பரிமாறவும். விருப்பப்பட்டால் ஏலக்காய்த்தூள் சேர்க்கலாம்.
பனீர் கீர்
தேவையானவை: பனீர் - 150 கிராம், பால் - ஒரு லிட்டர், சர்க்கரை - 150 கிராம், முந்திரி, பாதாம் - தலா 6, பிஸ்தா - 2 டீஸ்பூன், பேரீச்சம்பழம் - 6, ஏலக்காய்த்தூள் - 2 டீஸ்பூன்.
செய்முறை: பாதாம், முந்திரி, பிஸ்தா, பேரீச்சம்பழம் ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பனீரை சிறு சிறு துண்டுகளாகவோ அல்லது துருவியோ வைக்கவும். பாலைக் காய்ச்சி, பாதியாக குறுக்கவும். சர்க்கரை, பேரீச்சம்பழம் சேர்க்கவும். கொதி வந்தபின் பனீர் துண்டுகள் அல்லது துருவல், பாதாம், பிஸ்தா, முந்திரி, ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கிளறி இறக்கினால்... பனீர் கீர் ரெடி!
இதை சூடாகவோ அல்லது குளிரவைத்தோ பரிமாறலாம்.
பனீர் - குடமிளகாய் ஃப்ரை
தேவையானவை: பனீர் - 200 கிராம், குடமிளகாய் - 2, தக்காளி - ஒன்று, தனியாத்தூள் - ஒரு டீஸ்பூன், மிளகாய்த் தூள் - அரை டீஸ்பூன், இஞ்சித் துருவல் - ஒரு டீஸ்பூன், பூண்டு - 2 பல் (நசுக்கவும்), காய்ந்த வெந்தயக் கீரை - ஒரு டீஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லி - ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: குடமிளகாய், தக்காளி, பனீரை நீளத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். கடாயில் எண்ணெயை சூடாக்கி... பூண்டு, இஞ்சித் துருவல் சேர்க்கவும். இதனுடன் நறுக்கிய குடமிளகாய், தக்காளி, மிளகாய்த்தூள், தனியாத்தூள் சேர்த்துக் கிளறி... உப்பு சேர்த்து, தண்ணீர் தெளித்து வேகவிடவும். வெந்ததும், பனீர் துண்டுகள், காய்ந்த வெந்தயக் கீரை சேர்த்துக் கிளறவும். கொத்தமல்லி தூவி பரிமாறவும்.
சந்தேஷ்
தேவையானவை: பனீர் - 250 கிராம், பொடித்த சர்க்கரை - 150 கிராம், ஏலக்காய்த்தூள் - 2 டீஸ்பூன், அரிசி மாவு - 2 டீஸ்பூன், ரோஸ் எஸன்ஸ் - சில சொட்டுகள், பொடித்த முந்திரி, பாதாம், பிஸ்தா - சிறிதளவு.
செய்முறை: பனீரை துருவி, பிசைந்து கொள்ளவும். கடாயில் பனீர், பொடித்த சர்க்கரை சேர்த்து, மிதமான தீயில் கிளறவும். இறுகியவுடன் இறக்கி, ரோஸ் எஸன்ஸ், ஏலக்காய்த்தூள் சேர்க்கவும். இத்துடன் பொடித்த முந்திரி, பாதாம் சேர்த்து, அரிசி மாவு தூவி, விருப்பமான வடிவில் தட்டி, பிஸ்தா தூவி அலங்கரித்து பரிமாறவும்.
ரசமலாய்
தேவையானவை: பனீர் - ஒரு கப், ரவை, சர்க்கரை - அரை கப், ஏலக்காய்த்தூள் - ஒரு டீஸ்பூன், சர்க்கரை (பனீருடன் சேர்க்க) - 2 டீஸ்பூன், பால் - ஒரு லிட்டர், குங்குமப்பூ - சிறிதளவு, பிஸ்தா - 2 டேபிள்ஸ்பூன்.
செய்முறை: பனீரை உதிர்த்து, அதனுடன் ரவை, சர்க்கரை (2 டீஸ்பூன்) ஏலக்காய்த்தூள் சேர்த்து மெதுவாக பிசைந்து கொள்ளவும். அதை சிறு உருண்டைகளாக எடுத்து வட்டமாக தட்டிக் கொள்ளவும். பாலை கால் கப் சர்க்கரை சேர்த்து சுண்டக் காய்ச்சவும். அதனுடன் பிஸ்தா, குங்குமப்பூ சேர்த்துக் கலக்கி குளிர வைக்கவும். மீதியிருக்கும் கால் கப் சர்க்கரை, தண்ணீர் சேர்த்து பாகு காய்ச்சவும். அதில் வட்ட வடிவ பனீரை போட்டு மிதமான தீயில் 15 நிமிடம் கொதிக்கவிட்டு இறக்கவும். பிறகு குளிர வைக்கவும். பரிமாறும்போது, ஒரு தட்டில் வட்ட வடிவ பனீர் துண்டுகளைப் போட்டு, அதன் மேல் சுண்டக் காய்ச்சிய பால் ஊற்றி, மேலே சிறிதளவு பிஸ்தா தூவி அலங்கரித்துப் பரிமாறவும்.