Tuesday, July 31, 2012

குழந்தைக்குக் கற்கை குறைபாடு


ற்றுக்கொள்வதில் எல்லாக் குழந்தைகளுமே ஒரே மாதிரியாக இருப்பது கிடையாது. தங்கள் வயதை உடைய பிற குழந்தைகள் சர்வசாதாரணமாகப் புரிந்துகொண்டு திருப்பிச் சொல்வதை அதே வயதுடைய சில குழந்தைகளால் சொல்ல முடியாது. சிலர் ஓவியம் வரைவதில் கை தேர்ந்தவர்களாக இருப்பார்கள். ஆனால், அவர்களின் கையெழுத்து மோசமாக இருக்கும். 'தாரே ஜமீன் பர்' என்ற இந்திப் படத்தில் இஷான் என்ற சிறுவனுக்கு இந்தப் பிரச்னை இருப்பதாகச் சித்தரித்திருப்பார்கள். இப்படிப்பட்ட கற்கை குறைபாடு உள்ள குழந்தைகளின் பெற்றோர் மனச் சோர்வு அடையத் தேவையே இல்லை. ஏனெனில், இவர்கள் எப்போதும் இப்படியே இருந்துவிடப் போவதில்லை. உலகின் ஆகச் சிறந்த படைப்புக்களைத் தந்த பலர் இந்தக் கற்கை குறைபாட்டை இளமையிலேயே பெற்று இருந்தவர்கள்தான். 

தலைசிறந்த திகில் நாவல் ஆசிரியை அகதா கிறிஸ்டி, விஞ்ஞானிகள் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், அலெக்ஸாண்டர் கிரஹாம்பெல், தாமஸ் ஆல்வா எடிசன், பன்திறன் ஆளுமைகள் கொண்ட லியர்னாடோ டாவின்ஸி, வால்ட் டிஸ்னி போன்ற பெரும் புள்ளிகள் பலரும் கற்கை குறைபாடு கொண்டவர்களே. ஆனாலும், சாதாரண மனிதர்களைவிடப் பன்மடங்கு படைப்பாற்றலை அவர்களால் வெளிப்படுத்த முடிந்தது. இதனால்தான் 'கற்கை குறைபாடு உடைய குழந்தைகளின் பெற்றோர் கவலைப்படத் தேவை இல்லை' என்கிறார்கள் குழந்தை மனநல மருத்துவர்கள்.

சரி. ஒரு குழந்தைக்குக் கற்கை குறைபாடு இருக்கிறது என்பதை எப்படி அடையாளம் காண்பது? குறைபாட்டின் வகைகள் ஏதாவது உண்டா? என்ன சிகிச்சை? அது எப்படி அளிக்கப்படுகிறது?' இந்தக் கேள்விகளுடன் எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையின் மன நல மருத்துவர் பி.பி.கண்ணனிடம் பேசினோம்.

'ஆஸ்வால்ட் பெர்ஹான் என்பவரால் 1881-ம் ஆண்டு கற்கை குறைபாடு தொடர்பான ஆராய்ச்சி தொடங்கியது. இது நோய் அல்ல; ஒரு குறைபாடுதான். நரம்புகள் சம்பந்தப்பட்ட குறைபாடு.  குழந்தைகளின் மூளையில் காட்சிகளையும் ஒலிகளையும் புரிந்துகொள்ளும் வடிவில் பதியவைப்பதில் ஏற்படும் சிக்கல் என்று சொல்லலாம். கற்கை குறைபாட்டை மூளை வளர்ச்சிக் குறைபாட்டுடன் குழப்பிக்கொள்ளக்கூடாது.

பேசுவதற்குக் கூடுதல் காலம் எடுத்துக்கொள்ளுதல், வலதுபுறமிருந்து இடது பக்கமாக எழுதுதல், எளிதில் பிற ஒலிகளால் கவனச் சிதறலுக்கு ஆளாகுதல், வார்த்தைகளை உச்சரிப்பதிலும்  அவற்றுக்கான எழுத்துகளை நினைவில் வைத்திருப்பதிலும் சிரமம், எழுதும்போது வார்த்தைகளில் எழுத்துகளை விட்டுவிடுவது அல்லது சேர்த்து எழுதுவது போன்றவை இருந்தால் அந்தக் குழந்தைக்குக் கற்கை குறைபாடு இருக்கிறது என்று தெரிந்துகொள்ளலாம். படிக்கும்போது நடுநடுவே சில வார்த்தைகளையோ, வரிகளையோ விட்டுவிட்டுப் படிப்பார்கள். பென்சிலை எழுத்தாணி பிடிப்பதுபோல் பிடிப்பார்கள். கையெழுத்து மிக மோசமாக இருக்கும்.

இந்தக் குறைபாட்டில் பல பிரிவுகள் உள்ளன.

வாசிப்பதில் குறைபாடு (Reading Disorder) :

நாம் ஒரு கேள்வி கேட்டால் பதில் சொல்வார்கள்; ஆனால், அதை எழுதிப் படிக்கச் சொன்னால் திணறுவார்கள். வார்த்தைகளை உச்சரிப்பதிலும் எழுத்துகளை நினைவில் வைத்துக்கொள்வதிலும் சிரமப்படுவார்கள். படிக்கும்போது இடையில் சில வார்த்தைகளையோ வரிகளையோ விட்டு விட்டுப் படிப்பார்கள்.

எழுத்து வடிவத்தை வெளிப்படுத்துவதில் குறைபாடு (Disorder of Written Expression):

பென்சிலை எழுத்தாணி பிடிப்பதுபோல் பிடிப்பார்கள். கையெழுத்து மிக மோசமாக இருக்கும். டாப் (TOP)என்று எழுதுவதற்குப் பதிலாக பாட் (POT)  என்று எழுதுவார்கள். 10 என்பதை 01 என்பதுடன் குழப்பிக்கொள்வார்கள். மார்ஜினுக்கு உள்ளே எழுதாமல் வெளியில் இருந்தே எழுதுவார்கள்.

கணக்குகளைப் புரிந்துகொள்வதில் குறைபாடு (Mathemetical Disorder):

இந்தக் குறைபாடு உள்ளவர்கள் கணக்கு போடுவதில், குறிப்பாக அல்ஜீப்ரா சமன்பாடுகளைத் தீர்ப்பதில் மிகவும் சிரமப்படுவார்கள். '325' என்று எழுதச் சொன்னால் 30025 என்று எழுதுவார்கள்; கடிகாரத்தில் பெரிய முள் 4-ல் இருந்தால் 20-நிமிடம் என்று சொல்லத் திணறுவார்கள்.

நுணுக்க வேலை கற்கை குறைபாடு(Disorder of Motor Function):

விரல் நுனியில் இருக்கும் நரம்புகள் தூண்டப்படுவது மாதிரி உள்ள வேலைகள் செய்வதில் இவர்களுக்கு பிரச்னை இருக்கும். டைப் ரைட்டிங், ஸ்கிப்பிங் விளையாடுதல், பந்து  விளையாட்டு, கூடை பின்னுதல், பாசி கோத்தல் மாதிரியான செயல்களில் ஏற்படும் பிரச்னை இது.  

இது தவிர காதால் கேட்டதைக் கவனித்து மனதில் இருத்துவதிலும் கையும் கண்ணும் ஒருங்கிணைந்து செயல்படுவதிலும் குறைபாடு இருக்கும். உதாரணமாக ஷூ லேஸைக் கட்டுவதற்குக்கூட மிகவும் சிரமப்படுவார்கள்.

இப்படிப்பட்ட குழந்தைகளை மந்த புத்தி உடையவர்கள் என்றும் சுறுசுறுப்பு இல்லாதவர்கள் என்றும் ஆரம்பத்தில் ஆசிரியர்களும் பெற்றோரும் தவறாக நினைத்துவிடுவார்கள். ஆனால், இந்தக் கற்கை குறைபாடு உள்ள பலர் அதிகமான ஐ.க்யூ ((I.Q.) உள்ளவர்கள்'' என்றவர், இதற்கான சிகிச்சைபற்றிச் சொல்லும்போது, ''இந்தக் குழந்தைகளுக்கு தகுந்த பயிற்சிகளின் உதவியோடு,  மாற்றுவழிக் கல்வி மூலம் தனிப்பட்ட முறையில் வடிவமைக்கப்பட்ட கருவிகள் மற்றும் பயிற்சி முறைகளைப் பின்பற்றி பயிற்சி கொடுக்க வேண்டும். மன இறுக்கத்தைக் குறைத்துக் கற்றலை எளிதாக்கும் பல உத்திகளைக் கையாள வேண்டும்' என்றார்.

கற்கை குறைபாட்டினைக் களையக் குறைதீர்க் கல்வி (Remedial Education) முறையைப் பயன்படுத்தும் சிறப்புக் குழந்தைகளுக்கான கல்வியாளர் வனிதா ஆனந்த் மற்றும் லட்சுமி விஜயகுமாரிடம் பேசினோம். ''ஒரு வார்த்தையைச் சொல்வதில், எழுதுவதில் பிரச்னை இருப்பதால் இரண்டாம் வகுப்புக்கு மேல்தான் இந்தக் குறைபாட்டினை உறுதியாகக் கண்டறிய முடியும். இதைக் குறைதீர்க் கல்வி மூலமாக கண்டிப்பாக நிவர்த்தி செய்ய முடியும் என்பதால், பெற்றோர்கள் குழந்தைகளை நினைத்து வருத்தப்பட வேண்டிய தேவை இல்லை. அடுத்த குழந்தைகளை உதாரணம்காட்டி தங்களது குழந்தைகளைக் கண்டிக்க வேண்டாம். இந்தப் பிரச்னையைப் பொருத்தவரை தனியாக இல்லாமல் ஒரு குழுவே செயல்பட வேண்டும். குழந்தைகள் நல மருத்துவரும் மன நல மருத்துவரும் ஆக்குப்பேஷனல் தெரப்பி அளிப்பவரும் பேச்சுப் பயிற்சியாளரும் சிறப்புக் குழந்தைகளுக்கான கல்வியாளரும் இந்த குழுவில் இருப்பார்கள். கூடவே பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் ஒத்துழைப்பும் தேவை என்பதால் அவர்களும் இந்த குழுவில் இடம் பெறுவார்கள். கண்ணால் பார்த்துப் புரிந்துகொள்ளுதல், ஒரு படத்தைத் துண்டு துண்டாக்கி அதைச் சரியாகச் சேர்க்கச் சொல்லுதல் போன்ற  நுணுக்கமான முறைகளிலும் சிகிச்சை அளிக்கப்படும். இதனால் மூளையில் கற்றல் தொடர்பான பகுதிகளுக்கு அதிக இடம் ஒதுக்கப்பட்டு இந்தப் பிரச்னை சரி செய்யப்படும்'' என்கிறார் நம்பிக்கையாக!