Sunday, July 29, 2012

வாழ்க்கையில் ஒப்பீடு வேண்டாமே


வாழ்க்கையில் ஒப்பீடு வேண்டாமே


இளைஞன் ஒருவன், மெக்கானிக் கடை ஒன்றில் நீண்ட நாட்களாகப் பணியாற்றி வந்தான். அன்று, ஒரு காரின் இன்ஜினைப் பழுதுபார்த்துக்கொண்டிருந்தான். அப்போது, அந்த ஊரின் பிரபலமான இதய சிகிச்சை நிபுணர் ஒருவர், தனது காரை செப்பனிடுவதற்காக அங்கு வந்தார்.

அவரை அருகில் அழைத்த இளைஞன், ''பார்த்தீர்களா... இந்த இன்ஜின்தான் காரின் இதயம். இந்த உதிரி பாகங்கள் அனைத்தும் வால்வுகள். நானும் உங்களைப்போல ஒவ்வொரு நாளும் இந்த வால்வுகளை இணைத்து ரிப்பேர் செய்கிறேன். உங்களுக்கும் எனக்கும் பெரிய வித்தியாசமில்லை. ஆனால், எனக்குச் சம்பளம் வெறும் இருநூறு ரூபாய்; உங்களுக்கோ பல ஆயிரங்கள்'' என்றவன், நீண்டதொரு பெருமூச்சு விட்டுப் பொருமினான்.
 அந்த மருத்துவர் ஒரு விநாடிகூடத் தயங்காமல், ''உண்மைதான். நீயும் அறுவை சிகிச்சைதான் செய்யறே! ஆனா... கார் ஓடிக்கிட்டிருக்கும்போது செஞ்சு பாரு!'' என்று கூறிவிட்டுச் சென்றார்.

வாழ்வில், உண்பதும் உறங்குவதும்போல ஒப்பிடுவதும் வெகு இயல்பாக ஒவ்வொரு நாளும் நிகழ்ந்துகொண்டிருக்கிறது.

வாழ்வில் எல்லாம் இருந்தும், மகிழ்ச்சியின்றிப் பலர் தவிப்பதற்குக் காரணம், பொறாமை எனப்படும் வயிற்றெரிச்சல்தான். வள்ளுவரின் மொழியில் சொல்லவேண்டுமானால், அழுக்காறு!
பொறாமை அகற்றி மனத்தை தூய்மையாக வைத்திருந்தால், அதுவே தெய்வம் வாழும் ஆலயமாகும்!