வாழ்க்கையின் மிக ஆனந்தமயமான தருணங்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். அதில் முக்கியமானது... நிச்சய தார்த்தத்துக்கும் திருமணத்துக்கும் இடைப்பட்ட காலம் மற்றும் திருமணமான முதல் ஆறேழு மாத காலங்கள்! பூரிப்பு, உற்சாகம், மயக்கம், கவர்ச்சி என இனம்புரியாத கிறக்கங்களுடன் அத்தனை மிருதுவாக வாழ்க்கை மாறி நிற்கும் பருவமிது.
'திருமண பந்தத்தினுள் நுழையும் ஆணும் பெண்ணும் இந்த காலகட்டத்தில்தான் பரஸ்பரம் மிக பக்குவமாகவும், மிகுந்த எச்சரிக்கை உணர்வுடனும் நடந்துகொள்ள வேண்டும்' என்கிறது மருத்துவ உலகம். ஆனால், நண்பர்களின் வாழ்த்தொலிகள், மேளதாள சப்தங்களுக்கு இடையில் மருத்துவர்களின் இந்த எச்சரிக்கை மணி அமிழ்ந்து போவதுதான் வருத்தமே!
'இரவினில் திருமணம், விடிந்தால் விவாகரத்து' என்று போய்க் கொண்டிருக்கும் மேற்கத்திய நாடுகளில்கூட 'ப்ரீ மெரைட்டல் கவுன்சலிங்' என்றொரு கான்செப்ட் இருக்கிறது, ஸ்பெஷலிஸ்ட்டு களும் இருக்கிறார்கள். அதாவது, திருமணம் செய்து கொள்ளப் போகும் தம்பதி, திருமணத்துக்கு முன் இந்த ஆலோசகர்களை சந்தித்து, 'நாங்கள் பொருத்தமான ஜோடிதானா... தங்களிரு வருக்குள் மனரீதியாக மறைந்திருக்கும் பிரச்னைகள் என்னென்ன... அவற்றை தீர்ப்பது எப்படி?' என்று தெரிந்துகொண்டு, அவற்றை மாற்றவும், சந்தோஷமாக வாழவும் முயற்சிக்கிறார்கள். ஆனால், வாழ்க்கையின் 60% நாட்களை துணையுடன் கழிப்பதற்காக தாரைவார்க்கப்பட்ட இந்திய கலாசாரத்தில், அதிலும் திருமணம் போற்றும் தமிழுலகில் இந்த ஆலோசனை விஷயங்களெல்லாம் அறியப்படாமல் இருப்பது பெரிய அறியாமையே.
கோயம்புத்தூரைச் சேர்ந்த மனநல ஆலோசகர் லட்சுமணனை சந்தித்தபோது, இந்த கவுன்சலிங்கின் அவசியத்தை ஆழமாக விளக்கினார்... இப்படி -
''அம்மி மிதிச்சு அருந்ததி பார்க்கறதுக்கு முன்ன, எங்களை மாதிரி ஆலோசகர்களைப் பார்க்கறது நூற்றியோரு சதவிகிதம் அவசியம். பல திருமண வாழ்க்கை, தளிர் நிலையிலேயே கருகிப் போறதுக்கு காரணமே பரஸ்பரம் புரிதல் இல்லாமைதான். அதனால தான் அழுத்தி சொல்றேன், காதல் திருமணமோ... பெரியோர்கள் நிச்சயித்த திருமணமோ... எதுவானாலும் கவுன்சலிங் அவசியம். திருமணத்துக்கு முந்தைய ஆலோசனைகள் (ப்ரீ மெரைட்டல் கவுன்சலிங்), திருமணத்துக்கு பிந்தைய ஆலோசனைகள் (போஸ்ட் மெரைட்டல் கவுன்சலிங்) இரண்டையும் தயங்காமல், தவறாமல் பெற வேண்டியது அவசியம்!'' என்று ஆரம்பித்த லட்சுமணன், அதற்கான அவசியத்தைப் பேசினார்...
''திருமணமாகி ஒரு மாதத்திலிருந்து ஒரு வருஷத்துக்குள்ளே வரக்கூடிய பல தம்பதிகள் பரஸ்பரம் சொல்லக்கூடிய குற்றச்சாட்டு, 'என்கேஜ்மென்ட் டுக்கும் மேரேஜுக்கும் இடை யில இருந்த ஆளா இப்போ இல்லை. கல்யாணத்துக்கு அப் புறம் அடியோட மாறிட்டாங்க' அப்படிங்கிறதுதான். நிச்சய தார்த்தத்துக்கும் திருமணத்துக் கும் இடைப்பட்ட காலத்துல பெண்ணும், பையனும் பேசி ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுக் கிறது ஆரோக்கியமான விஷ யம்தான். ஆனா, அப்போ ரெண்டுபேரும் தங்களோட நெகட்டிவ் குணங்களையும், தங்களோட குறைபாடுகளையும் வெளிப்படையா பேசுறதில்லை. முழுக்க பாஸிட்டிவான கோணத் துல காட்டுறதுலயே குறியா இருப்பாங்க. தன்னை ஒரு ஹீரோ, ஹீரோயின் ரேஞ்சுக்கும், தியாகியாகவும், பரந்த மனப் பான்மையும் உதவும் குணமும் உடைய ஆளாகவும் காட்டிப் பாங்க. கிளர்ச்சியிலயும் கிறக்கத் துலயும் இருக்கிற துணையும், அதை நம்புவாங்க.
திருமணத்துக்குப் பின் பல முறை தாம்பத்ய உறவுகள் நடந்த பிறகும், இயல்பான வாழ்க்கை சூழலாலேயும் மெள்ள மெள்ள அவங்கவங் களோட உண்மையான குணத் தையும், குறைபாடுகளையும் வெளிப்படுத்த ஆரம்பிப்பாங்க. கணவனோட முன்கோபம் புது மனைவியை நிலைகுலைய வைக்கும், அடிக்கடி சந்தேகப் படுற மனைவியின் குணம் புது கணவனை கதிகலங்க வைக்கும். இப்படி ஆரம்பிக்கிற விரிசல்... திருமண வாழ்க்கையில மிகப் பெரிய பள்ளத்தாக்கையே உருவாக்கிடும். அப்போ தடு மாறிடாம வாழ்க்கையை தக்கவெச்சுக்க, திருமணத்துக்கு முந்தைய கவுன்சலிங் அவசியம்'' என்றவர், அதன் தன்மை என்னவென்று விளக்கினார்.
''எங்ககிட்ட வர்ற ஜோடிகள்கிட்ட, இந்த திருமணத்துல முழு சம்மதமாங்கறதுல ஆரம் பிச்சு, அவங்களோட இயல்பான குணநலன்கள், விருப்பு - வெறுப்புகள், அதிகம் கோபப்படுற விஷயம், யாரையெல்லாம் பிடிக்காது, ஏன் பிடிக்காது, குடும்ப உறவுகளுடனான பிணைப்பு, பணம் மற்றும் சொத்து சேர்ப்பு பற்றிய கண்ணோட்டம், குழந்தை பற்றிய எதிர்பார்ப்புகள் வரை அத்தனையையும் தெரிஞ்சுக்கறதோட, ரெண்டு பேரையும் பரஸ்பரம் பகிரவும் வெச்சுடு வோம். அவங்களுக்காக பிரத்யேகமாக தயா ரிக்கப்பட்டிருக்கிற கேள்விகளுக்கு விடைகளை வாங்கி, அதற்கு ஏற்ப ரெண்டு பேருக்கும் தனித்தனியாவும், சேர்த்தும் கவுன்சலிங் கொடுப்போம். திருமண வாழ்க்கை வெற்றிகரமா அமைய அவங்க மாத்திக்க வேண்டிய விஷயங் களை, சரிபண்ண வேண்டிய தவறுகளை, வளர்த்துக்க வேண்டிய பண்புகளை பக்குவமா எடுத்துச் சொல்வோம். இறுதியா, மண வாழ்க்கை பற்றிய, தன் துணை பற்றிய புரிதலோட அவங்களை அனுப்பி வெப்போம். 'ஒருவேளை இந்த பக்குவமும், புரிதலும் தெரியாமலேயே நாங்க கல்யாணம் பண்ணியிருந்தா என்ன வாகியிருக்கும்..?'னு திகைச்சு, எங்களுக்கு நன்றி சொல்லிட்டுப் போற ஜோடிகள் நிறைய!'' என்றவர், கவுன்சலிங்கின் முக்கிய அம்சம் தாம்பத்யம் என்பதையும் அழுந்தச் சொன்னார்.
''ப்ரீ மெரைட்டல் கவுன்சலிங்கில் செக்ஸ் பற்றிய அலசல் மிக மிக முக்கியமானது. ஏன்னா, திருமண வாழ்க்கையில் தாம்பத்யத்தில் ஏற்படும் தகராறு மிகப்பெரிய விளைவுகளை ஏற்படுத்தும். அதனால ரெண்டு பேரிடமும் முக்கியமா செக்ஸ் பற்றிய அவங்களோட கருத்தை, எதிர்பார்ப்பை, அறிவையும் அலசுவோம். ரொம்ப மாடர்னாக வாழ்க்கை முறை மாறிவிட்ட இந்த சூழல்லேயும் கட்டுப் பெட்டியா வளர்க்கப்படுற பொண்ணுங்களும் இருக்காங்க, பசங்களும் இருக்காங்க. செக்ஸ் பற்றிய அடிப்படை புரிதலே இல்லாம திருமண பந்தத்துக்குள்ளே போகிற இந்த மாதிரியான நபர்கள், தன்னையும் வருத்திக்கறதோட, துணை யையும் வதைப்பாங்க.
செக்ஸ் விஷயத்துல ஆண்களுக்கும், பெண் களுக்கும் பெரிய வேறுபாடுகள் இருக்குது. ஆணுக்கு சட்டென்று செக்ஸ் நாட்டம் வரும். ஆனா, பெண்கள் நிதானமா முன்னேறுவாங்க... அதேமாதிரி நீடித்தும் இருக்கும் அவங்க உணர்ச்சி. இந்த அடிப்படை அறிவையெல்லாம் திருமண பந்தத்துக்குள்ள நுழையுற ஆணும், பெண்ணும் புரிஞ்சுக்கணும். மணமகனுக்கு சட்டுனு விந்து வெளிப்படுற பிரச்னை இருந்தா, பெண்ணை வெகுவா பாதிச்சு... படிப்படியா குடும்ப வாழ்க்கையில் சிக்கல்களை உருவாக்க லாம். சில பெண்கள் தாம்பத்யத்தில் ஈடுபடுறதை மிகப்பெரிய வலியான விஷயம்னு நினைச்சு அலறுவாங்க. கணவனை பக்கத்துல வரவிடவே மாட்டாங்க. இது, உண்மையில ஒருவிதமான மனபயமே. இதுக்கெல்லாம் கவுன்சலிங்கும், பிரச்னைகளை பொறுத்து மருத்துவ தீர்வு களையும் கொடுப்போம்'' என்ற டாக்டர், டேபி ளில் இருந்த ஆர்கானிக் டீயை பருகியபடியே...
''திருமண பந்தத்தின் எந்த நிலையில் இருந் தாலும் சரி... சம்பந்தப்பட்ட தம்பதியால தங்களுக்குள்ள பேசி பிரச்னையை தீர்க்க முடியலைங்கிற கட்டத்துல, தாமதிக்காம ஒரு குடும்பநல ஆலோசகரை அணுகுங்க. உங்க வாழ்க்கையை அழகாக்கி, பத்திரமா உங்க கையில் கொடுப்போம்!'' என்றார் புன்னகை யுடன்!
ஆதலால் ஆலோசனை பெறுவீர்!
நிச்சயதார்த்த எச்சரிக்கை!
மனநல ஆலோசகர் லட்சுமணனிடம் பேசிக் கொண்டிருந்தபோது, அவர் அடிக் கோடிட்டு சொன்ன ஒரு விஷயம் -
''சென்னை, கோவை மாதிரியான சிட்டிகள்ல நிச்சயதார்த்தம் முடிஞ்ச துமே... என்கேஜ்மென்ட் பார்ட்டி, ப்ரீ மேரேஜ் பிக்னிக் அது, இதுனு போற பழக்கம் இப்ப சகஜமாயிடுச்சு. 'கட்டிக்கப் போறவங்கதானே...'னு அவங்களை பழகவிடுறது, தவறு. 'திருமணம்' அப் படிங்கிற விஷயத்துல இருக்கிற எதிர் பார்ப்பு, கவர்ச்சி, ரகசியம் எல்லாம் இந்த நாட்கள்லயே அவங்களுக்குள்ள தீர்ந்துடுச்சுனா, திருமணத்துக்குப் பின் அவங்களுக்கு இடையில் எந்த சுவாரசி யமும் இருக்காது. கூடவே, இந்த நாட் கள்ல அவங்களுக்குள்ள ஏதாவது பிரச்னைகள் ஏற்பட்டா, தன் துணை மேலே திருமணத்துக்கு முன்னயே மோசமான எண்ணங்கள் வரவும் வாய்ப் பிருக்கு'' என்று உஷார்படுத்தினார்.