புராணத்தில் ஒரு கதை; சூரிய பகவானைப் பற்றியது!
தன்னுடன் இருப்பது மனைவி சரண்யா அல்ல; அவளது நிழல் சாயா என்பதை அறிந்த சூரிய பகவான் திகைத்துப் போனாராம். உடனே மாமனார் வீட்டுக்குச் சென்று விளக்கம் கேட்டபோது, 'கண்ணைப் பறிக்கும் தங்களின் பிரகாசத்தைத் தாங்கிக் கொள்ள முடியாமலேயே, தனக்கு பதிலாக தனது நிழலை (சாயாவை) விட்டுவிட்டு உங்களிடமிருந்து சரண்யா விலகிச் சென்றுவிட்டாள்' என்றாராம் மாமனார்.
தான் பாதிக்கப்பட்டிருந்தாலும், மனைவி சரண்யாவின் கோணத்தில் பார்க்கும்போது, தான் ஒரு வில்லனாகிவிட்டதை உணர்ந்தார் சூரிய பகவான். அதுவும், மிக ரகசியமாக தனது நிழலை அவள் விட்டுச் சென்றிருப்பதைப் பார்க்கும்போது, அவள் எந்த அளவுக்குத் தன்னைக் கண்டு பயந்துபோயிருக்கிறாள் என்பதும் புரிந்தது அவருக்கு.
முன்னதாகவே சூரியதேவன் தன் மனைவியின் கோணத்தில் இருந்து அவளைப் பார்த்திருந்தால், இப்போது இந்த நிலை ஏற்பட்டிருக்காது அல்லவா?!
சூரியன் தன் மனைவியைத் தேடிப் புறப்பட்டார். அவள் பெண் குதிரையின் வடிவெடுத்திருந்தாள். மீண்டும் பழைய உருவத்துக்கு மாறும்படி அவளைக் கேட்பதற்குமுன், தானும் குதிரை வடிவம் கொண்டு அவள் இருக்கும் இடத்துக்குச் சென்றார்.
தன்னை அப்படியே குதிரை வடிவில் ஏற்றுக்கொள்ளும்படியோ, அல்லது தனக்காக அவளைப் பழையபடி உருவம் மாறும்படியோ அவர் அவளைக் கேட்டுக்கொள்ளலாம். ஆனால், அது அவரது வளர்ச்சியை நிச்சயம் பாதிக்கும்.
இருப்பினும், மற்றவரின் கோணத்தில் இருந்து பார்க்கும்போது, தன்னால் எப்படி வேண்டுமானாலும் தேவைக்கேற்ப மாறிக் கொள்ளவும், அடுத்தவரின் எண்ணத்தைப் புரிந்துகொண்டு வளரவும் முடியும் என்பதை சூரிய பகவான் உணர்ந்திருந்தார். ஆகவே, சரண்யா மறுபடியும் தன் மனைவியாக கடவுள் தன்மையுடன் வானத்துக்கு திரும்பும் வரை, தான் கடவுள் நிலையிலிருந்து மிருகமாக மாறி இயற்கையின் பின்னணியில் அவளுடன் மகிழ்ச்சியாக வாழ்க்கை நடத்தத் தீர்மானித்தார்.
சூரியன்- சரண்யா கதை, நம்மைச் சுற்றியிருக்கும் மனிதர்கள் எவ்வாறு சந்தர்ப்பங்களுக்குத் தகுந்தாற்போல் நடந்துகொள்கிறார்கள் என்பதைக் காட்டுகிறது. அவர்கள், நம்மைக் கண்டு அஞ்சினால் ஒரு வகையாகவும், நம்மை முழுமையாக நம்பினால் வேறு வகையாகவும் நடந்துகொள்கிறார்கள். எல்லாமே... பிறர் நம்மை எப்படிப் பார்க்கிறார்கள் என்பதைப் பொறுத்தே இருக்கிறது.
நம்மை நாமே எடைபோட்டுக்கொள்ளும் விதத்தில் இருந்து மாறுபட்டிருக்கலாம். ஆனால், யார் எப்படிப் பார்க்கிறார்கள் என்பதில் மாற்றம் இல்லை!
நம்மைப் பற்றிப் பிறர் இப்படித்தான் நினைக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கலாம்; அல்லது வற்புறுத்தலாம்; அல்லது நாம் நமது போக்கை மாற்றிக்கொள்ளலாம். மற்றவர்கள் நம்மை அவ்வாறு எதிர்பார்க்கும்முன், நாமே அவர்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவராக மாறலாம். இதில், பின்னதில்தான் நமது வளர்ச்சி இருக்கிறது.
புதிய டிபார்ட்மென்ட்டைத் துவக்கி, இரண்டு வருடங்களாக புதிய நடைமுறைகளை அறிமுகப்படுத்தி வந்தான் சுரேஷ். மிகவும்
சிரமப்பட்டு தனது குழுவை ஒருவாறாக ஒருங்கிணைத்தான். முடிவுகள் பிரமாதமாக இருந்தன. எல்லோரும் பாராட்டினர்.
தொடர்ந்து, நீண்டகால மாறுதல்களைக் குறித்து சிந்திக்கும் பொருட்டு தலைமைப் பொறுப்பிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு, அன்றாடப் பணிகளை கவனித்துக் கொள்ள ரமேஷ் என்பவனை நியமித்தான். இரண்டு வருடங்களாக நடைமுறையில் இருப்பவற்றைத் தொடர்ந்து கண்காணித்து, அப்படியே தொடரும்படி செய்வதே ரமேஷின் வேலை. ஆனால், அவனிடம் பணி ஒப்படைக்கப்பட்டதில் இருந்து நிலைமை தாறுமாறானது. எவரும் நடைமுறைகளைப் பின்பற்றவில்லை. ரிப்போர்ட்டுகள் வருவது தாமதமாயிற்று.
ரமேஷின் மீதும் குழுவின் மீதும் அசாத்திய கோபம் வந்தது சுரேஷ§க்கு. பிறகு நிதானமாக யோசித்ததில் அவனுக்குப் புரிந்தது... தனது ஆளுமை காரணமாக புதிய மாற்றத்தைக் கொண்டு வந்திருந்தான் சுரேஷ். எல்லோரும் அவனுடன் ஒத்துழைத்து குழுவாகச் செயல்பட்டதால்தான் அவனால் வெற்றி காண முடிந்தது. ரமேஷிடம் அந்த வகையான ஆளுமை இல்லாததால், எல்லாமே தலைகீழானது. ஆக, ரமேஷையும் குழுவினரையும் என்னதான் குற்றம் சாட்டினாலும், எல்லாவற்றுக்கும் மூலகாரணம் சுரேஷ்தான்.
எனவே, இப்போது அவன் மீண்டும் தனது நடைமுறைக்குத் திரும்ப வேண்டியதாயிற்று. ஆனால், இந்த முறை சூரிய பகவான் மாதிரி தன்னை அவன் மாற்றிக்கொள்ள வேண்டி வந்தது.
பணியைச் செய்யப் பயிற்சி கொடுக்க வேண்டும்; மேலிருந்து ஒருவர் சொல்கிறார் என்பதற்காக மட்டுமே ஒரு பணியைச் செய்யக்கூடாது. அதுதான் அவரது பணி என்பதை அவர்களுக்கு உணர்த்த வேண்டும். வேறு மாதிரி சொல்வதானால், அந்தப் பணிக்கு அவர்களே உரிமையாளர்கள் என்பதைப் புரியவைத்தால் போதும்.
சுரேஷ் என்ன செய்திருக்க வேண்டும்? ஒரேயடியாக ஒதுங்கியிராமல், நிலைமையைப் புரிந்துகொண்டு ரமேஷ§டன் இணைந்து பணியாற்றியிருக்க வேண்டும், சூரிய பகவான் போல! அப்போதுதான் தனது அதிகமான பளுவைப் பகிர்ந்துகொள்ள ஒருவர் நம்முடன் இருக்கிறார்; தான் மட்டும் தனியே விட்டுவிடப் படவில்லை என்பதை ரமேஷ் புரிந்துகொண்டிருப்பான். இந்த ஒரு சிந்தனையால் மட்டுமே சுரேஷ் தனது வளர்ச்சி வாய்ப்பை தன்னிடம் வைத்துக்கொண்டிருக்க முடியும்.