ஒரு அரசர் தன்நாட்டுக்கு ஒரு முதலமைச்சரைத் தேர்ந்தெடுக்க நினைத்தார். அதற்கு அவர் தன் அமைச்சரவையில் சம தகுதி பெற்ற நால்வரில் ஒருவரை முதலமைச்சராக தேர்ந்தெடுக்க ஒரு பரீட்சை வைத்தார். அதற்காக அரசர் ஒரு நாள் அந்த நால்வரையும் அழைத்து "என்னிடம் ஒரு பூட்டு இருக்கிறது. அது கணித முறைப்படி வடிவமைக்கப்பட்டது. அதனை திறக்க நால்வருக்கும் ஒரு வாய்ப்பு தான் வழங்கப்படும். அதனை யார் விரைவில் திறக்கின்றனரோ அவரே நாட்டின் முதலமைச்சர்" என்று கூறினார்.
முதலமைச்சராக வேண்டும் என்ற ஆசையில், டென்சனோடு கணித முறைப்படி வடிவமைக்கப்பட்ட அந்த பூட்டை திறக்க அன்று இரவு முழுவதும் பல ஓலைச்சுவடிகளை புரட்டிப் பார்த்தனர். ஆனால் எதுவுமே கிடைக்கவில்லை. ஆனால் அவர்களுள் ஒருவர் மட்டும், எந்த டென்சனும் இல்லாமல், ஒருசில ஓலைகளை மட்டும் புரட்டி பார்த்துவிட்டு தூங்கப் போய்விட்டார்.
மறுநாள் அரசவையில், கணித முறைப்படி வடிவமைக்கப்பட்ட அந்த பூட்டை சேவகர்கள் தூக்கி வந்து, அரசரின் முன்னிலையில் வைத்தனர். அதனை பார்த்த அனைவருக்கும் ஒரே படப்படப்பாக இருந்தது.
அரசவைக்கு வரும் போது கொண்டு வந்திருந்த ஓலைச்சுவடிகளை அவர்கள் முன்னும் பின்னும் புரட்டிப் பார்த்தனர். ஆனால் அவர்களுக்கு அதற்கான வழி மட்டும் புலப்படவில்லை. ஆகவே அவர்கள் தங்கள் தோல்வியை ஒப்புக்கொண்டனர்.
ஆனால் அவர்களுள் ஒருவர் மட்டும் அந்த பூட்டின் பக்கம் வந்து பார்த்தார். என்ன அபூர்வம்! பூட் பூட்டப்படவில்லை. அதனால் அவர் அதனை எளிதாக திறந்தார். அரசரும் அவரை முதலமைச்சராக தேர்ந்தெடுத்தார்.
இக்கதையிலிருந்து என்ன தெரிகிறதென்றால், ஒரு பிரச்சனையை தீர்க்கும் முன், அந்த பிரச்சனையை பற்றி நன்கு தெரிந்து கொள்ள வேண்டும். அவ்வாறு இல்லாமல், டென்சன் ஆனால், எதையும் தீர்க்க முடியாது என்னும் கருத்து நன்கு புரிகிறது.