''போதையில் வாகனம் ஓட்டுவது என்பதே ஒரு தற்கொலை முயற்சிதான்!'' என்று எச்சரிக்கிறார் அப்பல்லோ மருத்துவமனையின் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ஆனந்த் ராமமூர்த்தி.
''தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு டாஸ்மாக் கடை வாசலிலும் நூற்றுக்கணக்கான பைக்குகள் வரிசை கட்டி நிற்கும். போதையை உள்ளுக்குள் இறக்கிவிட்டு பைக்கில் பறக்கும் பல 'குடி'மகன்கள் உருப்படியாக வீடு போய் சேருவார்கள் என்பதற்கு எந்த உத்திரவாதமும் இல்லை. தமிழகத்தில் குடித்துவிட்டு ஓட்டும் வாகன விபத்துகள்தான் மிகவும் அதிகம். குடித்துவிட்டு வாகனம் ஓட்டும்போது, ரத்தத்தில் ஆல்கஹால் கலந்து பார்வைத் திறனைக் குறைத்துவிடும். சிக்னலின் நிறத்தைப் புரிந்துகொள்ளும் திறனும் மங்கிவிடும். இதனால், எதிரே வரும் வாகனத்தின் வேகம், நமக்கு முன்னால் செல்லும் வாகனத்தின் வேகம், ஓவர்டேக் செய்யப்போதுமான இடம் இருக்கிறதா என்று கணக்கிடும் திறன் என எல்லாமே குறைந்துவிடும். அதனால், வாகனத்தை நம் முழுக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியாமல் செய்துவிடும். போதையில் வாகனம் ஓட்டுவது தற்கொலைக்குச் சமமானது.
மாநகரங்களில், டெல்லிக்கு அடுத்தபடியாக சென்னையில்தான் சாலை விபத்துகளால் அதிக உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. சாலை விபத்துகளில் சிக்கிய 25-30 வயது மதிக்கத்தக்க இளைஞர்களின் சடலம் சின்னச் சிராய்ப்புகள்கூட இல்லாமல் கிடப்பதைப் பார்க்கும் போது, இந்த உடலுக்கு உயிரில்லை என்று நம்புவதே கஷ்டமாக இருக்கும். இன்னொருபுறம் வெறும் தலையில் மட்டும் அடிபட்டு அவர்கள் இறந்து கிடப்பதைப் பார்க்க பரிதாபமாக இருக்கும்'' என்றார்.
தென்சென்னை போக்குவரத்து போலீஸ்காரர் ஒருவர், போதையால் ஏற்படும் விபத்துகளைப் பற்றி விரிவாகப் பேசினார்.
''குடித்துவிட்டு வாகனம் ஓட்டுகிறார்களா என்பதைக் கண்டறிய 'ப்ரீத்தலைஸர்' என்ற ஒரு கருவி இருக்கிறது. இந்தக் கருவியின் முகப்பில் வாய் வைத்து ஊதும்போது சிவப்பு விளக்கு எரிந்தால், அவர் ரத்தத்தில் 30 மில்லி கிராமுக்கும் மேல் ஆல்கஹால் கலந்திருக்கிறது என்று அர்த்தம். சிவப்பு விளக்கு எரிந்தவரிடம் குடித்துவிட்டு வாகனம் ஓட்டியதற்காக அதிகபட்சமாக இரண்டாயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும். பணம் இல்லையென்றால் 6 மாதங்கள் சிறைத் தண்டனை வழங்கலாம். ஆனால், பெரும்பாலான நேரங்களில் குடித்துவிட்டு வாகனம் ஓட்டி விபத்தில் சிக்கியவர்கள் மீது 'ட்ரங்க் அண்ட் டிரைவ்' பிரிவில் வழக்குப் பதிவு செய்யப் படுவதில்லை.
அவர்களுக்கு இன்ஷூரன்ஸ் பணம் கிடைக்காது என்பதால், விபத்து போதையால் ஏற்பட்டது என்று வழக்குப் பதிவு செய்யப்படுவதில்லை. 21 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குத் தான் மதுபானம் வழங்கப்பட வேண்டும் என்பது அரசாணை. ஆனால், புள்ளி விவரப்படி 18 வயது முதல் 20 வயதிலான இளைஞர்களே ட்ரங்க் அண்ட் டிரைவிங்கில் அதிகமாக ஈடுபடுகின்றனர். தென்சென்னையில் குறிப்பாக, பழைய மகாபலிபுரம் சாலை, ஜிஎஸ்டி ரோடு மற்றும் கிழக்குக் கடற்கரைச் சாலைகளில்தான் அதிக விபத்துகள் நடக்கின்றன. குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்களில் பெண்களும் இருக்கிறார்கள். இவர்களில் பெரும்பாலானோர் பெரிய பெரிய கம்பெனிகளில் வேலை செய்பவர்கள். அபராதம் என்று நாங்கள் சொல்லுவதற்கு முன்பே 500 ரூபாய் நோட்டுகளை நீட்டி விடுவார்கள். பணம் அவர்களுக்கு ஒரு பொருட்டே அல்ல!
குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் விபத்துகளுக்கு இன்ஷூரன்ஸ் பணம் கிடைக்காது. மூன்றாம் நபருக்கான நஷ்ட ஈட்டையும் சம்பந்தப்பட்டவர்தான் கொடுக்க வேண்டும். 6 மாதத்துக்குள் இரண்டு முறை குடித்துவிட்டு வாகனம் ஓட்டியதற்காக பிடிபட்டால், அவர்களின் லைசன்ஸ் நிரந்தரமாகவே ரத்து செய்யப்படலாம். ஆனால், தமிழகத்தில் டாஸ்மாக் மூலம் ஆண்டுக்கு 12 ஆயிரம் கோடி ரூபாய் அரசுக்கு வருமானம் கிடைக்கிறது. குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களைக் கைது செய்யவும், வாகனத்தைப் பறிக்கவும் போலீஸுக்கு அதிகாரம் உண்டு. ஆனால், அப்படிச் செய்யாமல் 'கண்டுகொள்ளாமல்' விடுவதே இங்கு வாடிக்கையாகிவிட்டது!'' என்று தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவது என்பது, தனக்கும் அடுத்தவர்களுக்கும் ஆபத்தை விளைவிக்கக்கூடியது என்பது குடிமகன்களுக்குப் புரிந்தால் மட்டுமே விபத்துகளைக் குறைக்க முடியும்!