Friday, August 12, 2011

ஆதலினால் காதல் செய்வீர்..

ஆதலினால் காதல் செய்வீர்..

 

அன்று காலை எட்டரை மணி இருக்கும். மருத்துவர் அறைக்குள் நுழைந்தார்..அந்த 80 வயது மதிக்கத் தக்க முதியவர்.. கடந்த வாரம் கழிவறையில் வழுக்கி விழுந்ததில் முழங்கையில் கீறல். இரண்டு தையல்கள்..கட்டவிழ்த்த மருத்துவருக்கு ஒரே ஆச்சரியம். ரணம் சுத்தமாக ஆறிப் போய் நன்கு காய்ந்து இருந்தது.

 

இனிப்பு நோயும், கொழுப்பு நோயும் அவரைச் சீண்டவில்லை என்பதை அவரது காய்ந்த கை பறை சாற்றியது. இல்வாழ்க்கையில் எத்துணை மகிழ்ச்சியாய் மனிதன் வாழ்ந்திருக்க வேண்டும்.. மன அழுத்தம் எதுவுமின்றி..கவலைகள் ஏதுமின்றி..எதிர்பார்ப்புகள் கிஞ்சித்தும் இல்லாமல்...

தையலை மெதுவாகப் பிரித்தெடுத்தார்..

 

டாக்டர் ..நான் அவசரமாக 9 மணிக்குக் கிளம்ப வேண்டும்..

 

வேறு டாக்டரிடம் எதுவும் அப் பாயிண்ட் மென்ட் வாங்கி வைத்திருக்கிறீர்களா ??

 

இல்லை..இல்லை.. என் மனைவியுடன் காலைச் சிற்றுண்டி அருந்த வேண்டும்..

 

அப்படியா.. எப்படி இருக்கிறார் உங்கள் துணைவியார்??

 

பெரிதாகச் சொல்ல ஒன்றுமில்லை டாக்டர்..ஏதோ இருக்கிறாள்..கடந்த ஐந்து ஆண்டு காலமாக சுய நினைவின்றி..Alzheimer நோயினால் மூளையின் நினைவு செல்கள் செயலற்ற நிலையில்..முன்னால் இருப்பவர் யார் என்ற பிரக்ஞை கூட இல்லாமல்...

 

அப்படியானால்.நீங்கள் சற்று நேரம் கழித்துச் செல்லலாமே.. ஏன் அவசரப் படுகிறீர்கள்..? சற்று தாமதமாய்ப் போனால் கோபப் படவா போகிறார்..?

அவர்களுக்குத் தான் உங்களைச் சுத்தமாகத் தெரியாதே..

 

நீங்கள் சொல்வது உண்மை தான் டாக்டர்.. என் மனைவிக்கு என்னைச் சுத்தமாகத் தெரியாது தான்..

 

ஆனால் என் மனைவியை எனக்கு மொத்தமாகத் தெரியுமே டாக்டர்..

 

டாக்டருக்கு 1000 வோல்ட் மின்சாரம் பாய்ந்தது போல இருந்தது..

 

இவரல்லோவோ மனிதர்...

 

இதுவல்லவோ இல்லற வாழ்க்கை..

 

ஆண்டவனே..எனக்கும் இந்தத் தெய்வீகக் காதலைக் கொடு..

 

பெரியவரின் கண்களில் நீர்த் திவலைகள் எட்டிப் பார்த்ததை டாக்டர் கணிக்கத் தவறவில்லை...

 

 

இளமையில் கொள்ளும் காதல் காமம் கலந்த காதல்..

முதுமையில் செய்யும் காதல் முற்றும் துறந்த காதல்...

 

உடற் கிளர்ச்சியின் அஸ்தமனம்...

உளக் கவர்ச்சியின் உதயம்..

 

எதிர்பார்ப்புகள் குறையும் போது உண்மைக் காதல் ஊற்றெடுக்கும் ..

அன்பு வெள்ளம் பெருக்கெடுக்கும்..ஆன்மாக்கள் சங்கமிக்கும்..

 

லௌஹீகம் போகம்

தெய்வீகம் யோகம்..

 

ஆதலினால் கேளீர்..

அனைவரும் காதல் செய்வீர்..