Tuesday, August 9, 2011

எத்தைத் தின்றால் பித்தம் தெளியும்


'எத்தைத் தின்றால் பித்தம் தெளியும்' என்று ஏங்குபவர்களும் தேடுபவர்களும் எல்லா காலகட்டத்திலும் இருக்கின்றனர். வருடாவருடம் வயது ஏறிக்கொண்டே போவதைப் போல, இப்படித் தேடுவோரின் எண்ணிக்கையானது வருடந்தோறும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

இந்தியாவுக்குள் கம்ப்யூட்டர் வந்த புதிதில், அதைக் கற்றுக்கொண்டவர்கள் மிக மிகக் குறைவுதான். ஆனால், அடுத்த சில வருடங்களிலேயே கம்ப்யூட்டரைக் கற்றுக்கொண்டவர்களும் பயன்படுத்துபவர்களும் அதிகரித்தார்களே? இருபது வருடங்களுக்கு முன்பு வரை, வீட்டுக்கு வீடு சைக்கிள் என்றிருந்த நிலை இருந்தது. பிறகு படிப்படியாகப் பல வீடுகளில் மொப்பெட், பைக் போன்ற இரு சக்கர வாகனங்களைக் காணும் நிலை ஏற்பட்டது. சமீப வருடங்களாக சென்னை, கோவை போன்ற தமிழகத்தின் பெருநகரங்களில், சாலைகளில் எல்லாம் கார்களின் ஆக்கிரமிப்புதான்!

ஆசைகளும் தேவைகளும் பெருகிவிட்டதே இதற்குக் காரணம். இவற்றுக்கு நடுவே, உண்பதிலும் உறங்குவதிலும் குழப்பங்கள் வரத்தானே செய்யும்?! குறிப்பாக, சாப்பாட்டு விஷயங்களும் பெருகிவிட்டன. இட்லி, தோசை, இடியாப்பம், ஆப்பத்தைக் கடந்து ஏகப்பட்ட உணவுகள் எண்ணெய்ப் பதார்த்தங்களாகவும், எளிதில் செரிக்காத உணவுகளாகவும் அறிமுகமாகிவிட்டன.

பணிச் சூழல்கள் ஒருபக்கம், படுத்துத் தூங்குவதில் ஏற்பட்டிருக்கிற மாற்றங்கள் இன்னொரு பக்கம், வாகனப் பெருக்கத்தால் ஏற்படுகிற மாசு மற்றொரு பக்கம், அவற்றின் இரைச்சல்களால் ஏற்படுகிற மன உளைச்சல்கள் இன்னொரு பக்கம் எனத் திணறுகின்றனர், அன்பர்கள் பலரும்! இவர்கள் சத்தான உணவையும் நிம்மதியான தூக்கத்தையும் தேடுகின்றனர். ஒருநாள் உணவைக்கூட ஒழித்துவிடலாம். வெறும் தண்ணீரைக் குடித்துவிட்டு, இரண்டு வாழைப்பழங்களை மட்டும் தின்றுவிட்டு, அன்றைய நாளை நகர்த்திவிடலாம். ஆனால், தூக்கத்துக்கு என்ன செய்வது?

இலவம் பஞ்சு மெத்தையும் ஜிலுஜிலு ஏ.ஸி-யும் இருந்தால் போதுமா? தூக்கம் வரவேண்டாமா? அப்படி நிம்மதியான தூக்கம் வருவதற்கு, ஆரோக்கியமான உடலும் அமைதியான மனமும் அவசியம் இருக்கவேண்டும்தானே?!

அவற்றைத் தரவல்லதுதான் மனவளக்கலைப் பயிற்சி. எத்தைத் தின்றால், பித்தம் தெளியும் எனத் தவிப்பவர்களுக்கான பயிற்சி இது! இந்தப் பயிற்சியை மேற்கொண்டால், உடலும் மனமும் தக்கையாகும்; வறட்டுப் பிடிவாதங்களும் முரட்டுக் குணங்களும் காணாமல் போகும். பிடிவாதம் இல்லையெனில், அங்கே விட்டுக்கொடுத்தல் வந்துவிடும். ஈகோ இல்லாத இடத்தில், அமைதியின் ஆட்சி சிறப்புற நடைபெறும். 'மனமது செம்மையானால்... மந்திரம் சொல்ல வேண்டாம்' என்றாரே திருமூலர். மனத்தை மயிலிறகென வைத்துக் கொண்டால், மகிழ்ச்சிக்குப் பஞ்சமில்லை. மகிழ்ச்சியில் உள்ளம் நிறைந்திருந்தால், அந்த மகிழ்ச்சி வீடெல்லாம் நிறைந்திருக்கும். அதற்கான அனைத்தையும் வழங்கவல்லது, இந்த மனவளக்கலைப் பயிற்சி.

சரி... மனவளக்கலையின், நரம்பு- தசைநார் மூச்சுப் பயிற்சியில் உள்ள ஏழு நிலைகளையும், அதை மேற்கொண்டால் விளையக்கூடிய பலன்கள் சிலவற்றையும் பார்த்தோம்.

இன்னும் சில பலன்களைப் பார்ப்போமா?

ஏழு நிலைப் பயிற்சிகளையும் எடுத்துக்கொண்டு, அவற்றைச் செவ்வனே கடைப்பிடித்து வந்தால், ஆஸ்துமா பிரச்னையில் இருந்து மிக எளிதில் நிவாரணம் பெறலாம். 'அடச்சே..! காலைல என்ன சாப்பிட்டேன்னு மத்தியானமே மறந்துருச்சுப்பா!', 'இன்னிக்கி இன்னன்ன காரியங்களை மறக்காம செய்யணும்னு ஒரு லிஸ்ட் எழுதி வைச்சிருந்தேன். பாழாப்போன என் ஞாபக மறதியால, அந்த லிஸ்ட்டைப் பார்க்கவே மறந்துட்டேன்னா பார்த்துக்கோயேன்!' என்றெல்லாம் அலுத்துக் கொள்பவர்கள், இந்தப் பயிற்சியை மேற்கொண்டீர்களென்றால், மறதியில் இருந்து மறக்காமல் வெளியே வந்துவிடுவீர்கள்.

அன்பர்கள் சிலர், 'சனியின் பிடியில் இருந்துகூட தப்பித்துக் கொள்ளலாம் போலிருக்கிறது; சளியில் இருந்து தப்பவே முடியவில்லை; நிவாரணம் பெறமுடியவில்லை' என அலுத்துக்கொள்வதைக் கேட்டிருக்கிறேன். சதா காலம் ஒழுகின மூக்கும் சிந்தின கையுமாக இருப்பவர்கள், அதில் இருந்து மிக எளிதாக விடுதலை பெறலாம். சளித் தொந்தரவை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. ஏனெனில், நமக்கு உடல் சோர்வையும் மூளைச் சோர்வையும் தரவல்ல கொடூரமான வில்லன், சளி!

சளிப் பிரச்னை இல்லையெனில், தலைச் சுற்றலோ தலை பாரமோ இருக்காது. இவை இரண்டும் இல்லையெனில், சோம்பலுக்கு இடமில்லை. எட்டு மணி நேரத்தைக் கடந்தும்கூட சுறுசுறுப்பாக, ஆழ்ந்த ஈடுபாட்டுடன், மிக வேகமாக வேலையில் ஈடுபடலாம். அரை மணி நேரம் வேலை பார்த்ததுமே வருகிற களைப்பும் சோர்வும் பல காத தூரம் பறந்தோடிவிடும். எப்போதும் துடிப்பு; எந்நேரமும் விழிப்பு; எல்லா தருணங்களிலும் சுறுசுறுப்பு என உங்கள் வேலையில் கவனம் செலுத்த, இந்தப் பயிற்சிகள் பெரிதும் உதவும்.

உடலின் நரம்பு மண்டலம், காற்று மண்டலம், தசை மண்டலம் ஆகியவற்றில் சின்னதாகவோ பெரிதாகவோ என்ன விதமான நோய்கள் வந்திருந்தாலும், அதை மிக எளிதாக விரட்டிவிடலாம். சீக்கிரமே அவற்றில் இருந்து நிவாரணம் அடையலாம்.

மன நோயால் பாதிக்கப்பட்டவர்களைக்கூட இந்தப் பயிற்சிகளை மேற்கொள்ள வைத்தால், மெள்ள மெள்ள அவர்கள் மன நோயில் இருந்து விடுபடுவதை அன்பர்கள் பலர் வியப்பும் பூரிப்புமாக என்னிடம் சொல்லியிருக்கிறார்கள். வலிப்பு முதலான நரம்புக் கோளாறு நோய்களும், ஏழு நிலைப் பயிற்சியால் எட்டாத திசைக்குச் சென்றுவிடும் என்பது உறுதி!

முக்கியமாக, அன்பர்கள் பலரும் தங்களது மகன் அல்லது மகளை அழைத்துக் கொண்டு, அறிவுத் திருக்கோயிலுக்கு வருகின்றனர். அந்த வேளையில், மனவளக்கலைப் பயிற்சிக்கு முன்பு வரை, கிரகிக்கும் திறன் குறைவானவர்களாக அந்தக் குழந்தைகள் இருந்ததாகவும் பயிற்சிக்குப் பிறகு அவர்களது கிரகிக்கும் திறனும் ஞாபக சக்தியும் கூடி, தேர்வில் அதிக மதிப்பெண்கள் வாங்கியிருப்பதாகவும் தெரிவித்து, எனக்கு இனிப்பு வழங்கி மகிழ்ந்துள்ளனர்.

கிரகிக்கிற திறன், ஞாபக சக்தி, புத்திக்கூர்மை, எதையும் புத்திக்குள் பதிவு செய்து கொள்கிற ஆற்றல்... இவை மட்டும் ஒரு மாணவனுக்கு, நாளைய தலைமுறைக்கு, உங்கள் வீட்டின் செல்லக் குழந்தைகளுக்குப் போதுமா?

இந்தப் பயிற்சிகள் இன்னொன்றையும் தருகின்றன. பயிற்சியால் கிடைக்கிற சிந்தனையும் தெளிவும் அவர்களுக்குள் ஒழுக்கத்தை விதைக்கின்றன!

உயிரினும் மேலானது அல்லவா ஒழுக்கம்?!