அம்பத்தூரில் என் உறவினர் ஒருவர், சத்சங்கம் நடத்தி வந்தார். அதில் கலந்துகொள்ளும் பலரும், ஆன்மிகம் தொடர்பான சந்தேகங்களை எழுப்புவார் கள். ஒருமுறை, 'எது கடவுள் செய்கை? எது நம் செய்கை?' என்று கேட்டார் வேதாசலம் என்கிற அன்பர்.
இதற்கு, 'எல்லாமே ஆண்டவன் செயல்' என்று சிலர் பதில் சொல்ல, வேதாசலம் உடனே, 'அப்படி நம்பித்தான் மூணு நாலு வருஷமா கஷ்டப்பட்டுக்கிட்டிருக்கேன்' என்றாராம்.
'எல்லாம் கடவுள் செயல்' என்று நம்பினால், என்ன கஷ்டம்?!
வேதாசலம் வேலை பார்க்கும் தனியார் அலுவலகத்தில், ஒவ்வொரு செக்ஷன் ஆபீசரின் வீட்டுக்கும் ஆபீஸ் செலவில் டெலிபோன் வைத்துத் தந்திருந்தனர் (செல்போன் வராத காலம் அது!). வேதாசலம் செக்ஷன் ஆபீசர் இல்லை. ஆனால், அவரிடம்தான் அந்தரங்கமான, முக்கியமான வேலைகளையெல்லாம் தருவார் எம்.டி. ஆகவே, 'தன் வீட்டுக்கும் டெலிபோன் இணைப்பு தரவேண்டும் எனக் கேட்கலாமா? அல்லது, கடவுள் எப்போது நினைக்கிறாரோ, அப்போது டெலிபோன் கிடைக்கட்டும் என்று பேசாமல் இருந்துவிடலாமா?' எனக் குழப்பம் வேதாசலத்துக்கு! கிட்டத்தட்ட மூன்று வருடங்களாக இருதலைக் கொள்ளி எறும்பெனத் தவித்து மருகினார். வாய்விட்டுக் கேட்டால், கடவுள் மீது நம்பிக்கை இல்லை என்றாகிவிடும். அதே நேரம், நடப்பது நடக்கட்டும் என்று பேசாமல் இருந்ததால், இன்றுவரை டெலிபோன் வந்தபாடில்லை.
இந்த நிலையில், புதுச்சேரியில் உள்ள எழுத்தாள நண்பரைச் சந்திக்கச் சென்றார், வேதாசலம். அங்கே சுவாமி ஆத்மசுகானந்தா எனும் சாதுவைத் தரிசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. தன்னுடைய சந்தேகத்தையும் ஆதங்கத்தையும் நண்பர் மூலம், அந்தச் சாதுவிடம் தெரிவித்தார். அதைக் கேட்டுச் சிரித்த சாது, 'எதுவுமே நம் செயல் அல்ல; எல்லாமே ஆண்டவன் செயல்தான். செய்பவன் அவன்; கருவிதான் நீங்கள்!' என்றார்.
''அப்படியெனில் எம்.டி.யிடம் டெலிபோன் வேண்டும் என்று நான் வாய்விட்டுக் கேட்கட்டுமா, வேண்டாமா?'' என்று மீண்டும் கேட்டார் இவர். உடனே சாது, ''நீங்கள் தயங்குவதும் அவன் செயல்; தயங்காமல் கேட்டால், அதுவும் அவன் செயல்; அதன் விளைவுகளும் அவனுடைய செயல்; எல்லாமே கடவுள் செயல்!'' என்றார் சிரித்தபடி.
பிறகென்ன? கடவுளின் மீது பாரத்தைப் போட்டுவிட்டு, டெலிபோன் இணைப்பு கேட்டு எம்.டி-க்குக் கடிதம் எழுதிவிட்டார் வேதாசலம். அடுத்த நாலாம் நாள், இவர் ஆபீசுக்குப் போனபோது, மேஜை மீது ஒரு கடிதம்... 'உங்கள் கோரிக்கை ஏற்கப்பட்டது. உங்கள் டெலிபோன் செலவுகளை ஆபீஸே ஏற்கும். இப்படிக்கு நிர்வாகி' என்று கடிதம் இருந்தது.
நைவ கிஞ்சித் கரோமீதி யுக்தோ மன்யேத தத்வவித்
பச்யன் ச்ருண்வன் ஸ்ப்ருசன் ஜிக்ரன்அச்னன் கச்சன் ஸ்வபன் ச்வஸன்
'கண்டாலும், கேட்டாலும், தொட்டாலும், முகர்ந்தாலும், உண்டாலும், சென்றாலும், தூங்கினாலும், மூச்சு விட்டாலும் ஒன்றையும் தான் செய்ய வில்லை; தன்னைக் கருவியாகக் கொண்டு இறைவனே இயக்குகிறான் என யோகியானவர் நினைக்க வேண்டும்' என்கிறது கீதை.
யோகிகளுக்கு மட்டுமில்லை; இது சாதாரணர்களுக்கும் பொருந்தும்!