Friday, August 5, 2011

தாழ்வு மனப்பான்மை

'கஷ்டத்தை நீ நன்கு கவனித்துப் பார்! அதில் துணிச்சல் தென்படும். அதைப் புரிந்துகொண்டால், துணிச்சல் என்பது நீ அணியும் ஆடையாக உன்னை அலங்கரிக்கும்!'
- சுவாமி விவேகானந்தர்


ற்றவர்களைவிட நாம் ஏதேனும் ஒருவகையில் தாழ்வாக இருக்கிறோம் என நினைப்பதே தாழ்வு மனப்பான்மை. இந்த எண்ணம் கற்பனையாகவும் இருக்கலாம்; உண்மையாகவும் இருக்கலாம். பிறருடன் நம்மை ஒப்பிட்டுக்கொண்டு, அவர்களைப்போல் நம்மால் செயல்பட முடியாது; வெற்றி பெற முடியாது எனும் உணர்வு, தாழ்வு மனப்பான்மையால்தான் எழுகிறது.  

பிஞ்சு உள்ளத்தில், தாழ்வு மனப்பான்மை வளருவதற்கு, பெற்றோரின் பங்கு முக்கிய இடம் வகிக்கிறது. பிள்ளைகளின் செயல்களை எப்போதும் எதிர்மறையாக விமரிசித்துக் கொண்டே இருப்பது, தவறுகளையும் குறைபாடுகளையும் சுட்டிக்காட்டும்போது பிற பிள்ளைகளுடன் ஒப்பிட்டு பேசுவது ஆகியவை பிள்ளைகளின் தாழ்வு மனப்பான்மையை அதிகரிக்கச் செய்கின்றன என்கிறார்கள் உளவியலாளர்கள்.  

''பக்கத்து வீட்டு ரமேஷ் எவ்வளவு அழகா ரைம்ஸ் சொல்றான் பாரு! உன் வயசு தானே அவனுக்கும்?'' என்று ஒப்புமைப்படுத்தி, தங்கள் பிள்ளையின் மனசைக் காயப் படுத்துவதைப் பெற்றோர் தவிர்த்தே ஆகவேண்டும். தோலின் நிறம், உயரம், பருமன், பேசுவது அல்லது கேட்பதிலான குறைபாடுகள், வறுமை, வேலைவாய்ப்பின்மை, தோல்விகள், புறக்கணித்தல் போன்றவை ஒருவரின் தாழ்வு மனப்பான்மைக்குக் காரணங்களாகின்றன.

தாழ்வு மனப்பான்மையில் உழல்பவர்களிடம் பொறாமையும் இருக்கும். தங்களால் முடியாத ஒன்றைப் பிறர் சாதுர்யமாகவும் திறம்படவும் செய்யும்போது, அவர்களைக் கேலி செய்வது, கிண்டலடிப்பது ஆகியவையெல்லாம் தாழ்வு மனப்பான்மையின் எதிரொலிதான்! அடிக்கடி மனச்சோர்வுக்கு ஆளாகும் இவர்கள், தற்கொலைக்கும்கூட முயலுவார்கள் என்கின்றனர் மனவியல் அறிஞர்கள். ஒவ்வொருவருக்கும் தாழ்வு மனப்பான்மை ஏதேனும் ஒருகட்டத்தில் இருந்தே தீரும். வள்ளல் குணமும் கம்பீரமும் கொண்ட கர்ணனுக்குக்கூட, தான் தேரோட்டி மகன் எனும் தாழ்வு மனப்பான்மை இருந்தது.

கறுப்பு நிறமும் உயரக் குறைபாடும்கூட, தாழ்வு மனப்பான்மைக்குக் காரணமாகிறது. நிறம் மற்றும் உயரத்துக்கும் சாதனைகளுக்கும் சம்பந்தமே இல்லை என்பதை நாம் உணரவேண்டும். மாவீரன் நெப்போலியன் குள்ளமான உருவம் கொண்டவர்தான்; அகத்திய மாமுனிவரை குறுமுனி என்று போற்றுவர். அவ்வளவு ஏன்... திருமாலின் அவதாரங்களில் குள்ள உருவம் கொண்ட வாமன அவதாரமும் ஒன்றுதானே?!

சுவாமி விவேகானந்தர்,  இளைஞர்களுக்குக் கூறுவது இதுதான்... 'நீ பலவீனமானவன் என்பதை எப்போதும் நம்பாதே!' தாழ்வு மனப்பான்மைக்கு ஆட்படாமல் தப்பிப்பவர்களே மகிழ்ச்சியான வாழ்வை அடைகின்றனர். உங்களிடம் உள்ள குறை என நீங்கள் கருதுவது, நீங்கள் நினைக்கிற அளவுக்கு ஒன்றும் மோசமானது அல்ல என்பதை முதலில் மனதில் இருத்துங்கள். எதற்கெடுத்தாலும் பிறருடன் ஒப்பிட்டுப் பார்ப்பதை அறவே நிறுத்துங்கள். ஒவ்வொருவருக்கும் ஒரு சில குறைகள் இருந்தே தீரும். ஆகவே, உங்களுடைய குறையை விடுத்து, இதரத் திறமைகளை வெளிப்படுத்துங்கள்!

தோல்வி ஏற்பட்டால், வெற்றியே கிடைக்காது என்பது அர்த்தமல்ல. டங்ஸ்டன் இழை ஒளிரும் தன்மை கொண்டது எனக் கண்டறிவதற்கு முன்பு, தாமஸ் ஆல்வா எடிசன் சந்தித்திராத தோல்விகளா? இதில் தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டு, முயற்சியில் இருந்து பின்வாங்கியிருந்தால், அவரும் சாதித்திருக்க மாட்டார்; அதையடுத்த கண்டுபிடிப்புகளும் நிகழ்ந்திருக்காது!

தாழ்வு மனப்பான்மையானது, நம்மை எந்த முயற்சியும் செய்யவிடாமல் முடங்கிப் போகச் செய்யவல்லது. இதனால் முயற்சிகள் மட்டுமின்றி, வெற்றியே தடைப்படுகிறது. 'ஐயோ..! நம்மால முடியாதுப்பா. அந்த அளவுக்குச் சாமர்த்தியம் நமக்குக் கிடையாது' என மனதுள் அசரீரி ஒலிக்கிறதா? 'மிஸ்டர் எதிரி' தாழ்வு மனப்பான்மையின் அவலக்குரல்தான் அது.

பெரும் போர் வீரன் ஒருவன், எதிரி களைத் துரத்துவதற்காகக் குகை ஒன்றில் பதுங்கியிருந்தான். இனி நம்மால் வெல்ல முடியுமா என்று அவன் மனத்துள் சின்ன தாகக் கவலை. அப்போது, அங்கே சிலந்தி ஒன்று வலை பின்னுவதைப் பார்த்தான். பற்பல முயற்சிகளுக்கும் தோல்விகளுக்கும் பின்னர், இறுதியில் அது தனது வலையை வெற்றிகரமாகப் பின்னியிருந்தது. இதைக் கண்டவன், குகையில் இருந்து மட்டுமல்ல; தாழ்வு மனப்பான்மையில் இருந்தும் வெளியே வந்தான்; படை திரட்டி வென்றான் என்றொரு கதை உண்டு!

குஜராத் மக்கள், வியாபாரத்தில் நஷ்டம் வந்தால், சோர்வுற மாட்டார்கள்; சட்டென்று வேறு தொழிலில் இறங்கிவிடுவர். இந்தியா வின் எந்தப் பகுதியிலும் அவர்கள் வியாபாரத்தில் கோலோச்சுவதைப் பார்க்கலாம். பிற மாநில மொழிகளைப் பேசத் தெரியவில்லை என்கிற பிரச்னையே அவர்களுக்கு இருக்காது. குறுகிய காலத்தில் அந்த மொழியைப் பழகி, வியாபாரத்தில் சக்கைப்போடு போடுவார்கள்.

இவ்வளவு உயரமாக இருக்கிறோமே என்றுகூட சிலர் தாழ்வு மனப்பான்மையில் சிக்கித் தவிக்கின்றனர். தனது கால்கள் ரொம்ப நீளமாக இருக்கிறதோ என்று மனதில் குறையுடன் ஒருவர் ஆபிரகாம் லிங்கனிடம் வந்து, ''மனிதனுக்குக் கால்கள் எவ்வளவு நீளம் இருக்கவேண்டும்?'' என்று கேட்டாராம். அதற்கு லிங்கன் சிரித்துக் கொண்டே, ''இடுப்பில் இருந்து தரை வரை இருக்கவேண்டும். அவ்வளவுதான்!'' என்றாராம்.