''நீ எதை நினைக்கிறாயோ, அதுவாகவே ஆகிறாய்!
நீ உன்னைப் பலவீனன் என்று நினைத்தால்,
பலவீனனாகவே ஆகிவிடுகிறாய்;
வலிமையுடையவன் என்று நினைத்தால்
வலிமை படைத்தவனாகவே ஆகிவிடுவாய்!''
- கீதை விளக்கத்தில் விவேகானந்தர்
மனித வாழ்க்கையின் ஆதார சுருதியாக விளங்குவது நம்பிக்கை. இவ்வுலகில், யாரேனும் எவரிடமேனும் நம்பிக்கை வைத்துத்தான் வாழ்கின்றனர். முக்கியமாக, நாம் நம்மை நம்பவேண்டும். அதைத்தான் தன்னம்பிக்கை என்கிறோம். புராண- இதிகாசங்களில், வரங்களைக் கேட்டுக் கடவுளை நோக்கித் தவமிருந்தவர்கள் அனைவரும் - அசுரர்கள் உள்பட - தங்கள் தவத்துக்குப் பலன் கிடைக்கும் என நம்பினார்கள்; வரமும் பெற்றார்கள்.
நளாயினியின் கணவர் மௌத்கல்யருக்கு, மரண தண்டனை விதிக்கப்பட்டது. மறுநாள், சூர்யோதயத்தில் தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும். 'சூரியன் உதித்தால்தானே தண்டனை நிறை வேறும்? சூரியனையே உதிக்காமல் செய்து விட்டால் என்ன' என்று யோசித்தாள் நளாயினி. நம்பிக்கையுடன் முயன்றாள்; சூரியன் உதிக்கவில்லை என்கிறது புராணம்.
தன்னம்பிக்கை மட்டும் உறுதியாக இருந்துவிட்டால் போதும், எந்தத் தடைக் கல்லையும் தகர்த்துவிடலாம். தேரோட்டி மகன் என ஏளனம் செய்து, போர் வித்தைகள் கற்றுக் கொடுக்க மறுக்கப்பட்டபோது, முனைப்புடனும் நம்பிக்கையுடனும் கற்றுக்கொண்டான் கர்ணன்! இன்றளவும் உயர்ந்த கதாபாத்திரமாகப் போற்றப்படுகிறான். 'வேடிக்கை மனிதரைப் போலே, நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ?' என்கிற வரிகளில் தெறிக்கிறது, மகாகவி பாரதியின் தன்னம்பிக்கை!
தூய்மையான ஆடைகளை அணிவது, வேகமாக நடப்பது, தன்னம்பிக்கையூட்டுகிற பேச்சுக்களைக் கேட்பது, தன்னம்பிக்கை தரும் எழுத்துக்களைப் படிப்பது, நமது திறமைகளையும் அதனால் கிடைத்த வெற்றிகளையும் அடிக்கடி நினைவுகூறுவது, முன்வரிசையில் அமருவது, அச்சமின்றிக் குழு உரையாடல்களில் கலந்துகொள்வது, உடலைக் கட்டுக் கோப்பாக வைத்துக்கொள்வது, பிறரிடம் பரிவுடன் நடந்துகொள்வது ஆகியவை தன்னம்பிக்கையை அதிகரிக்கச் செய்யும் என்கின்றனர் அறிஞர்கள்.
உடல்நலக்குறைவுடன் இருப்பவர் களுக்கு சிகிச்சை, மருந்து- மாத்திரைகள் போன்றவை பலன் தருவது ஒரு பக்கம்... தான் உடல்நலம் தேறிவிடுவோம் என்கிற ஆழமான நம்பிக்கையே அவர்களைப் பூரண குணமாக்கிவிடும் என்பது அறிவியல் கண்டறிந்த உண்மை!
எந்தவொரு துறையை எடுத்துக் கொண்டாலும், அதில் வெற்றி பெற்றவர்களாகத் திகழ்பவர்களின் பின்னணியைப் பார்த்தால், அந்த வெற்றிக்கு அடிநாதமாக விளங்குவது தன்னம்பிக்கையாகத்தான் இருக்கும். அரிய கண்டுபிடிப்புகள், வெற்றிகள், உலக சாதனைகள், பெரும்பதவிகள் எல்லாம் தன்னம்பிக்கை கொண்டவர்களுக்கே சாத்தியமாகியிருக்கின்றன.
வறுமை எனும் தடைக்கல்லைக் கடந்து, நம்பிக்கையுடன் படித்து, கல்வியிலும் வாழ்விலும் சாதித்துக் காட்டியிருக்கின்றனர், பலர்! மாற்றுத் திறனாளியாக இருந்தபோதும், சற்றும் தளர்ந்துவிடாமல் முனைப்புடன் காரியமாற்றிச் சாதனை படைத்தவர்கள் ஏராளம். விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தைச் சேர்ந்த சுஜிதா, பிறவியிலேயே பார்வையற்றவர்; இவர் செய்த சாதனை, ஐ.ஏ.எஸ். தேர்வில் பெற்ற வெற்றி! காரணம்... நம்பிக்கை! குஜராத் மாநிலம், ராஜ்கோட்டைச் சேர்ந்த 21 வயது கிரிஷ் சர்மா, டில்லியில் நடைபெற்ற பிரமோத் மகாஜன் நினைவு பேட்மின்டன் போட்டியில் கலந்துகொண்டு பலரின் பாராட்டையும் பெற்றார். அவருக்கு ஒரு கால் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சுவாமி விவேகானந்தர் வாழ்வில் கண்ட ஒரு சம்பவம் தன்னம்பிக்கையைப் பறைசாற்றுகிறது. சுவாமி விவேகானந்தர் பாரீஸில் இருந்தபோது, குதிரை வண்டி ஒன்றில் பயணித்துக்கொண்டிருந்தார். அப்போது வண்டியோட்டி, ஓரிடத்தில் வண்டியை நிறுத்திவிட்டு, இறங்கிச் சென்று, சாலையோரம் நின்றிருந்த இரண்டு குழந்தைகளிடம் மிகவும் வாஞ்சையாகப் பேசினார்; தலை வருடி, முத்தமிட்டார்.
அந்தக் குழந்தைகள் பார்ப்பதற்குப் பணக்கார வீட்டுப் பிள்ளைகளைப் போல இருந்தனர். அவர்கள் யாரென்று விசாரித்தபோது கிடைத்த தகவல்கள், விவேகானந்தரை ஆச்சரியத்தில் ஆழ்த்தின. குதிரை வண்டிக்காரர்மீது மிகவும் மதிப்புக் கொள்ளச் செய்தன.
அந்த வண்டியோட்டி சொன்னது இதுதான்... 'ஐயா! இந்த ஊரில் இருக்கும் பெரிய வங்கி ஒன்றுக்குச் சொந்தக்காரன் நான். இப்போது சில சிக்கல்களால் வங்கி செயல்படவில்லை. பெருமளவு தொகை வசூலாகாமல் இருக்கிறது. நிலைமை சரியாகும் வரை நான் சும்மா இருக்க விரும்பவில்லை. கொஞ்சம் பணத்தைப் புரட்டி, இந்தக் குதிரை வண்டியை வாங்கி, ஓட்டிச் சம்பாதித்துக் கொண்டிருக்கிறேன். நிலைமை நிச்சயம் சீரடையும்; நான் மறுபடியும் எனது பழைய நிலைக்குத் திரும்புவேன் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது. என் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது!''