நண்பன் நாராயணன் வற்புறுத்திக் கேட்டதற்கு இணங்க, அவனுடன் 'பெத்த கோவிந்தராயலு' என்பவரின் பங்களாவுக்குச் சென்றேன். ஒரு காலத்தில் நாராயணனுக்கு முதலாளி யாக இருந்தவர், அவர். சென்னையின் பிரபலமான அவரது நகைக் கடையில் நாராயணன் வேலை பார்த்தது உண்டு.
அவர், சிறந்த ஆத்திகர். கோயில் விழாக்களுக்கும், புது கோயில்கள் கட்டவும் அள்ளி அள்ளித் தருவார். நண்பனது குடியிருப்புப் பகுதியில், அவனது முயற்சி யால், சிறிய பிள்ளையார் கோயில் ஒன்று உருவாகிக் கொண்டிருந்தது. அதற்குக் குறைந்தபட்சம் இரண்டு லட்ச ரூபாயாவது வேண்டியிருந்தது. தன் பழைய முதலாளியிடம் நன்கொடை பெறலாம் என்றுதான் அங்கே சென்றான் நாராயணன்.
பராமரிப்பு இல்லாத பழைய மைசூர் பேலஸ் மாதிரி இருந்தது அந்தப் பங்களா. ஜமீன்தார் போல கம்பீரத் தோற்றம் கொண்டிருந்த அவரிடம் குசல விசாரிப்புகள் முடிந்ததும், கோயில் கட்டும் விஷயத்தைச் சொன்னான் நாராயணன். ரசீது புத்தகத்தைப் பிரித்து, அவர் முன் பரப்பினான். குறைந்தது பத்தாயி¢ரம் ரூபாயாவது எதிர்பார்த்தான். ஆனால், அவர் ஒரு பைசா கூடத் தரவில்லை. மாறாக, ''என்னப்பா, இன்றைக்கு நீ பேப்பரே பார்க்கவில்லையா?'' என்று விரக்திச் சிரிப்புடன் கேட்டவாறு, அன்று வந்த தினசரியை எங்கள் முன் போட்டார். அதில் கொட்டை எழுத்தில் இருந்த செய்தி, எங்களைத் திகைக்க வைத்தது. 'நடிகைக்கு இரண்டு கோடி நஷ்ட ஈடு! கோர்ட் தீர்ப்பு! பெத்த கோவிந்த ராயலுவுக்கு அதிர்ச்சி!'
''படிங்க, படிங்க! பேப்பரில்தான் வந்துவிட்டதே என் பேரு. நல்லா ரிப்பேராகிவிட்டது. எல்லாம் தேவுடு செயல்'' என்று தொப்பை குலுங்க, போலித்தனமாகச் சிரித்தார். சூழ்நிலை சரியில்லாததால், 'அப்புறம் வருகிறோம்' என்று நாராயணன் இறுகிய முகத்துடன் விடைபெற்றுக் கிளம்ப... வெளியே வந்தோம்.
''பெத்த கோவிந்தராயலு கோயில்களுக்குச் செய்திருக்கிற கைங்கர் யங்களுக்கு அளவே கிடையாது. எத்தனையோ கோயில்களுக்கு காஷ்மீரிலிருந்து அசல் குங்குமப் பூ வரவழைத்து அபிஷேகம் செய்திருக்கார்; தேன் அபிஷேகம் குடம் குடமாக அவர் செய்ததை கண்ணால் பார்த்திருக்கிறேன். அவருக்கா இந்தச் சோதனை?'' என்று ஆதங்கப்பட்ட நாராயணன் தொடர்ந்து சொன்னான்...
''ஏதோ சொந்தமாகப் படம் எடுக்க ஆரம்பிச்சு, அந்த நடிகையோடு தொடர்பு. கல்யாணமும் செஞ்சுக்கிட்டார். முதல் மனைவியும் இருக்கிறார். நாலஞ்சு வருஷம் கழிச்சு, நடிகை விவாகரத்துக் கோரி வழக்கு போட்டிருக்கிறாள். இரண்டு கோடி நஷ்ட ஈடு தர தீர்ப்பாகியிருக்கிறது. விழுந்து விழுந்து எல்லா சாமிகளுக்கும் தேனாகக் கொட்டினார்; குங்குமப் பூவாக வாங்கி அர்ச்சனை செய்தார். இப்போது அந்த பங்களாவை பராமரிக்கக்கூட வசதி இல்லாதவர்போல் இருக்கிறார். கடவுள் செயல், கடவுள் செயல் என்கிறார்கள். எனக்குப் புரியலை'' என்று அங்கலாய்த்தான். எனக்கு, எப்போதோ படித்த திருமந்திரப் பாடல் ஒன்று ஞாபகத்துக்கு வந்தது.
நெறியைப் படைத்தான் நெருஞ்சில் படைத்தான்
நெறியின் வழுவின் நெருஞ்சில் முள் பாயும்
நெறியில் வழுவாது இயங்க வல்லார்க்கு
நெறியின் நெருஞ்சில் முள் பாய் கிலாவே
'ஒழுங்கான பாதையையும் இறைவன்தான் படைக்கிறான்; நெருஞ்சி முள்ளையும் அவனேதான் படைக்கிறான். ஒழுங்கான நெறியில் (பாதையில்) செல்பவரை நெருஞ்சில் குத்தாது!'
நாம்தான் கடவுள் நமக்குக் கொடுத்திருக்கும் புத்தியை உபயோகித்து நல்ல பாதையில் செல்லவேண்டும். கடவுள் பேரில் தப்பில்லை!