Saturday, August 27, 2011

மாரடைப்புக்கு மகத்தான யோசனைகள்!




மாரடைப்புக்கு மகத்தான யோசனைகள்!

மாரடைப்புக்கு சிகிச்சை பெற்றால்,  மீளமுடியாத கடனில் தவிக்க வேண்டியதுதான். அந்த அளவுக்கு, இன்று மாரடைப்பு சிகிச்சைக்கான செலவுத் தொகை நடுத்தரவர்க்கத்தினரின்  நெஞ்சை அழுத்துகிறது.  மாரடைப்பினால் மருத்துவமனையில் அட்மிட் ஆகி, சிகிச்சை பில்லை பார்த்து மறுபடியும் அட்மிட் ஆகும் அளவுக்கு சேமிப்பும், கையிருப்பும் கரைந்து கடனில் மூழ்க வைத்துவிடுகிறது. இப்படி நோய்களிலேயே அதிக அளவு செலவு வைப்பது மாரடைப்புக்கான சிகிச்சைதான். இந்த நிலையை தவிர்க்க ஒரே வழி மாரடைப்பு வராமல் தடுப்பதுதான்!

'மன மகிழ்ச்சி, சத்தான உணவு, சீரான உடற்பயிற்சி இவைதான் இதயத்தை காக்கும் மூன்று மந்திரங்கள்' என்கிறார் சென்னையின் முன்னணி இதய நிபுணர் டாக்டர்  வி.சொக்கலிங்கம்.  


'முன்பெல்லாம் 40 வயதானவர்கள்தான் ரத்தம் பரிசோதனை செய்து கொள்ள வேண்டிய அவசியம் இருந்தது.  ஆனால், இப்போதோ 30 வயதை தாண்டுவதற்குள், கொலஸ்ட்ரால், சர்க்கரை, ரத்த அழுத்தத்திற்காக பரிசோதிக்க வேண்டிய நிலை. இளம் வயதிலேயே ஹார்ட் அட்டாக் வருவதற்கு, முக்கிய காரணமே, மாறிவரும் நம் வாழ்க்கை சூழல்தான்.

வாய்க்கு ருசி என்று, உடலுக்கு ஒத்துக் கொள்ளாத உணவை  வெளுத்துக் கட்டுகிறோம். உடல் உழைப்பு என்பதே இல்லாமல் போகும்போது, சாப்பிட்ட உணவு எப்படி ஜீரணமாகும்?  வீட்டு வாசலைத் தாண்டியவுடன், பக்கத்து தெருவுக்குகூட ஆட்டோவில் பறக்கிறோம். இவையெல்லாம் முதலில் தவிர்க்கப்பட வேண்டும்.  

அலுவலகத்தில் மற்றவர்களின் ஏளன பேச்சுக்கு ஆளாகும்போது, அடுத்தவர்களைவிட சிறப்பாகச் செயல்பட வேண்டும் என்கிற உத்வேகம் அதிகரிக்கும்போது, மன அழுத்தம் ஏற்படுகிறது. அதுவே நாளடைவில் மாரடைப்புக்கு காரணமாகி விடும். பெரும்பாலான நோய்களின் நிவாரிணியே மௌனம், தியானம், நிதானம்தான்! எப்போதும் நிதானத்தைக் கடைப்பிடிப்பது அவசியம்.

மேலும் அதிக ரத்த அழுத்தம்,  ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகம் இருப்பது, உடல் பருமன், குறிப்பாக ஆப்பிள் வடிவ தொப்பை, ஒரே இடத்தில் நீண்ட நேரம் அமர்ந்து பணிபுரிவது போன்ற பிரச்னை உள்ளவர்களுக்கு மாரடைப்பு வர அதிக வாய்ப்பு இருக்கிறது'' என்றவர், வராமல் தடுக்கும் வழிகளையும் விளக்கினார்.

''உணவுப் பழக்கங்களை மாற்றி, உணவை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தால் மாரடைப்பு வராமல் தடுக்கப்படுவதுடன், மாரடைப்பு வந்தவர்களுக்கு மீண்டும் ஏற்படாமல் தடுத்து நிறுத்தவும் முடியும். எப்போதும் மகிழ்ச்சியுடனும், சுற்றி இருப்பவர்களை மகிழ்ச்சியுடனும் வைத்துகொள்ள பழகுங்கள். புத்துணர்வு பெற சிறிது ஓய்வு எடுங்கள். அவ்வப்போது சில நிமிடம் காலார நடை போடுங்கள். கோபத்தைத் தூக்கியெறியுங்கள். வயிறு முட்ட சாப்பிடுவதை தவிர்த்துவிடுங்கள். தூங்குவதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்பே இரவு சாப்பாட்டை முடித்துக் கொள்ளுங்கள். இப்படி முறையான உடற்பயிற்சி, உணவுக் கட்டுப்பாடு, உயரத்திற்கேற்ற உடல் எடை என்று ஆரோக்கியத்தைக் கடைப்பிடித்தால் மாரடைப்பு என்ற பேச்சுக்கே இடமிருக்காது!''

இதமான உணவு!

தவிர்க்க வேண்டியவை:  

நெய், தேங்காய் எண்ணெய், உருளைக் கிழங்கு, ஐஸ் கிரீம், சாக்லேட், ஊறுகாய், முட்டை மஞ்சள் கரு, ஆடு மற்றும் மாட்டின் ஈரல், மூளை.

மிதமான அளவு:  

முட்டையின் வெள்ளைக் கரு, கோழி இறைச்சி (வாரம் இரு முறை), மீன், மட்டன் அல்லது சிக்கன் சூப் (வாரம் மூன்று முறை)

வெளுத்து கட்ட:

பூண்டு, வெங்காயம், கீரை வகைகள், வெள்ளரிக்காய், வாழைத்தண்டு, கத்தரிக்காய், வெண்டைக்காய், முருங்கைக்காய், புடலங்காய், முள்ளங்கி, அனைத்து பழ வகைகள்.

நீரிழிவு பாதிப்பா... நோ...

மாம்பழம், பலாப்பழம் போன்ற அதிக இனிப்பு உள்ள பழங்கள்.

 இந்த உணவு முறையை பின்பற்றினாலே போதும். ஓரே ஆண்டுக்குள் இதயத்தில் ரத்தக் குழாய் அடைப்பு குறைந்து மாரடைப்பு தடுக்கப்பட்டுவிடும்.

Tuesday, August 23, 2011

கருமித்தனம்


'பணத்தை விரயம் செய்தால், பண வரவு நின்றுவிடும். அதுவே, பணத்தை நல்ல விஷயங்களுக்குத் தாராளமாகச் செய்தால், அபரிமிதமாக வரும்!'

- மகாஸ்ரீ அரவிந்த அன்னை

தேவையற்ற செலவைச் செய்யாமல் இருந் தால், அது சிக்கனம். செலவு செய்ய வேண்டிய தருணத்தில், செலவழிக்காமல் இருப்பது கருமித்தனம். சிக்கனம்- பாஸிட்டிவ் குணம்; கருமித்தனம்- நெகட்டிவ் குணம். கருமித்தனத்தை யும் கஞ்சத்தனத்தையும் 'லோபம்' என்பார்கள். இன்றைய இளைஞர்களின் பாஷையில் கருமிகளின் பெயர், 'கஞ்சூஸ்'.

காமம், கோபம், மோகம், ஆணவம், பொறாமை, கருமித்தனம் ஆகியன மனிதனின் துர்க்குணங்கள். 'தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு வேளாண்மை செய்தற் பொருட்டு' என்கிறார் திருவள்ளுவர். அதாவது, நாம் உழைத்துச் சம்பாதிக்கும் பொருளெல்லாம், பிறருக்குப் பயன்படுவதற்காகவே என்கிறார் வள்ளுவர். ஆனால், தங்களது நியாயமான தேவைகளைக் கூடப் பூர்த்தி செய்துகொள்ள விரும்பாமல், பணத்தைப் பொத்திப் பொத்திப் பாதுகாப்பதையே குறிக்கோளாகக் கொண்டு வாழ்கின்றனர், கருமிகள்!  

'பாடுபட்டுத் தேடிப் பணத்தைப் புதைத்து வைத்துக்
கேடுகெட்ட மானிடரே கேளுங்கள்; கூடுவிட்டு இங்கு
ஆவிதான் போயினபின்பு யாரே அனுபவிப்பார்
பாவிகாள் அந்தப் பணம்'

என்கிறார் தமிழ் மூதாட்டி ஒளவையார். 'எச்சில் கையால் காக்கையை ஓட்டாதவன்' என்றொரு சொலவடை நம் பக்கத்தில் உண்டு. அதாவது, சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது காகத்தை விரட்டினால், கையில் உள்ள சோற்றுப் பருக்கைகள் வீணாகிவிடுமே என்று யோசிக்கிற அளவுக்கு அத்தனைக் கருமித்தனமாக இருப்பவர்களை அப்படிக் குறிப்பிடுவார்கள்.  

உடைகளைத் தைக்கக் கொடுக்கும் போது, 'வளருகிற பையன்தானே' என்பதற்காகத் 'தொளதொள'வென சட்டை, பேன்ட் தைத்துக் கொடுக்கும்படி டெய்லர்களை வற்புறுத்துவதுகூட ஒரு வகையில் கருமித்தனம்தான். தங்களுக்குத் தேவையான மருத்துவச் சிகிச்சைக்குக் கூடச் செலவு செய்யாமல் பணத்தை மிச்சம் பிடிப்பார்கள் சிலர். ஆரம்பத் திலேயே கவனித்திருந்தால் சொற்பச் செலவுடன் குணமாகியிருக்க வேண்டிய நோய், கருமித்தனத்தால் பெரும் செலவில் கொண்டு தள்ளுவதும் நடக்கிறது.

முதல் நாள் சமைத்த உணவு லேசாகக் கெட்டுப் போயிருந்தாலும், அதனைக் குப்பையில் கொட்ட மனமின்றி, வயிற்றுக் குள் தள்ளி, உடல்நலம் கெட்டு மருத்துவச் செலவு செய்வோரும் உள்ளனர். இதனை, 'றிமீஸீஸீஹ் ஷ்வீsமீ ஜீஷீuஸீபீ யீஷீஷீறீவீsலீ' என்பார்கள்.

வாகனங்களில் பிரேக் கட்டைகள் தேயத் துவங்கும்போதே செலவைப் பார்க்காமல் மாற்றிவிட வேண்டும். இல்லையெனில், விபத்துக் களைச் சந்திக்கும் நிலை ஏற்படும். கல்விக்காகச் செய்கிற செலவை முதலீடு என்பதாக ஒரு சிலர் நினைப்பதில்லை.

வட்ட வடிவமாக விரிக்கக்கூடிய விசிறி களைப் பார்த்திருப்பீர்கள். அப்படியரு விசிறியை ஒருவர் பல வருடங்களாக வைத்திருந்தார். அதிகம் பழசாகாமல் இருந்த அந்த விசிறியைப் பார்த்து அதிசயித்துப் போன அவரின் நண்பர் ஒருவர், 'எப்படி இந்த விசிறி இன்னும் புதிதாகவே இருக்கிறது?' என்று கேட்க, அவர் சொன்னார்... ''விசிறியை முழுசாப் பிரிக்க மாட்டேன். பாதியளவு பிரிச்சு விசிறிக் கொள்வேன்!''

இவர் இப்படியெனில், இன்னொருவர் வேறு விதம். அவருடைய விசிறி, பல வருடங்களாகப் புதிதாகவே இருந்தது. அவரிடம் இது குறித்துக் கேட்டதற்கு, ''நான் விசிறியை முழுசா விரிச்சு வைச்சுப்பேன். ஆனா, அதை அசைச்சுக் காற்று வாங்க மாட்டேன்; என் தலையை யும் முதுகையும் இந்தப் பக்கமும் அந்தப் பக்கமுமா அசைச்சுப்பேன்'' என்றாராம். தமிழ்த் திரைப்படம் ஒன்றில் பழம்பெரும் நகைச்சுவை நடிகர் சுருளிராஜன், இப்படியான கருமித்தனங்களைப் பலமாக நையாண்டி செய்திருப்பார். சிரிக்க மட்டுமல்ல; சிந்திப்பதற்கும் உகந்த காட்சிகள் அவை.

பிறருக்குப் பயன்படுத்தாமல் பதுக்கி வைத்திருக்கும் கருமியின் செல்வம், ஊரின் மையப் பகுதியில் இருக்கிற விஷக் கனிக்கு இணையானது என்கிறார் வள்ளுவர்.

'நச்சப் படாதவன் செல்வம் நடுவூருள்
நச்சு மரம்பழுத் தற்று.'

அந்த ஊரிலேயே பலருக்கும் தெரிந்த மிகப் பெரிய கருமி அவர். பணத்தைப் பொத்திப் பொத்தி வைத்திருப்பார். ஒருமுறை, அவரைக் கடும் நோய் தாக்கியது. சோதித்துப் பார்த்த மருத்துவர், அவருடைய ஆயுளுக்குக் கெடு விதித்தார். இன்றோ, நாளையோ என மரணப் படுக்கையில் கிடந்தார் அந்தக் கருமி. அவருடைய சிந்தனை யெல்லாம், பெட்டியில் உள்ள பணத்தின் மீதே இருந்தது. மனைவியை அழைத்து, ''இதுவரை சேர்த்து வைத்திருக்கும் பணத்தை விட்டு இறந்து போக மனம் வரவில்லை. எனவே, நான் இறந்ததும் எவருக்கும் தெரியாமல் என்னுடைய சவப்பெட்டியில் எல்லாப் பணத்தையும் வைத்துப் புதைத்து விடு!'' என்று சத்தியம் வாங்கிக்கொண்டு இறந்து போனார்.

கருமியின் மனைவி கெட்டிக்காரி. அவள் என்ன செய்தாள் தெரியுமா? பெட்டியில் இருந்த பணத்தையெல்லாம், தன்னுடைய வங்கிக் கணக்கில் போட்டுக் கொண்டாள். அந்தத் தொகைக்கு கணவரின் பெயருக்கு ஒரு 'செக்' எழுதி, அவரது சவப்பெட்டியில் வைத்துப் புதைத்துவிட்டாள்.

ஆக.. பண விஷயத்தில் ஊதாரியாக இருக்காதீர்கள்; அதே நேரம், கருமியாக- கஞ்சனாக இருப்பதும் சரியல்ல! அப்படி கருமியாகத்தான் இருப்பேன் என்றால், பேச்சில் கஞ்சத்தனத்தைக் காட்டுங்கள். குறைவான பேச்சு, நிறைவான நிம்மதியைக் கொடுக்கும்.

ஆரோக்கிய உடம்பே ஆண்டவனின் சந்நிதி!

''ஆரோக்கியமும் ஆன்மிகமும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்திருக்கிறது. இறைவழிபாட்டில் நம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ளும்போது நம்மை அறியாமலேயே துர்க்குணங்கள் வெளியேறிவிடுகின்றன. தூய்மையான உள்ளம் கடவுள் வாழும் இல்லம் அல்லவா?

விரதம், தியானம், யாத்திரை, உணவுக் கட்டுப்பாடு என்கிற ஆன்மிக வாழ்க்கைமுறையே உடல் ஆரோக்கியத்துக்கான வழி! எனவே, வாழ்வின் ஆதாரமாக விளங்கும் உடலை பேணிக் காப்பதே, ஆன்மிகச் சேவைதான்!'' - எளிமையாகப் பேச ஆரம்பிக்கிறார் 'முதியோர் சிறப்பு மருத்துவர்'          வி.நடராஜன்.

''விரத நாட்களில், அசைவ உணவு வகைகளை அறவே தவிர்த்து விடுகிறோம். இறைவனின் திருநாமத்தை மட்டுமே உச்சரிப்பதால், மனம் அமைதியாகி நல்ல விஷயங்களில் மட்டுமே கவனம் செல்கிறது.

பக்கத்துத் தெருவில் இருக்கும் பலசரக்கு கடைக்குக்கூட பைக்கிலேயே சென்று வருகிற அளவுக்கு ஊரும் உலகமும் நவீன மயமாகிவிட்டது. உட்கார்ந்த இடத்திலேயே இருந்தபடி, உடம்பையும் பிணியையும் வளர்த்து அவதிப்படுபவரை அமைதிப் படுத்தி ஆரோக்கிய நிலைக்கு அழைத்துச் செல்வதுதான் பக்தி. அந்த வகையில், பழநி மலையானைத் தரிசிக்க பரங்கிமலை பக்தனை பாதயாத்திரை செல்ல வைக்கிறது, அது!  

வழிபாட்டு முறைகளில் மவுன விரதமும் ஒன்று. 'மோனம் என்பது ஞான வரம்பு' என்கிறார் ஒளவையார். புராண- இதிகாசங்கள் அனைத்திலும் வாழ்வியல் தத்துவம் ஒளிந்திருக்கும். சிவாலயங்களில், கல்லால மரத்தின் கீழ் தட்சிணா மூர்த்தி தெற்கு நோக்கி வீற்றிருப்பார். இவர் பேசு வதே இல்லை. எல்லாமே மவுன மொழியான சைகை மொழிதான். எனவேதான் 'ஊமைத்துரை, மவுனசாமி' என்றெல்லாம் இவருக்குப் பெயர் உண்டு! உயிர்ச் சக்தியான பிராண வாயுவைச் சமன்படுத்தும் மூச்சுப் பயிற்சியானது ஆரோக்கியத்துக்கும் ஆயுள் நீட்டிப்புக்குமான பயிற்சி முறை! தேவையற்ற பேச்சால், கரையும் பிராண சக்தியை உள்ளிருத்திப் பயன் தருவதே மவுன விரதம்!

'வேலை, வேலை' என்று காலில் சக்கரம் கட்டிக்கொண்டிருக்கிற வாழ்க்கை... வார விடுமுறையில், நன்றாக ஓய்வெடுத்து வீட்டைச் சுத்தம் செய்து சந்தோஷம் அடைவீர்கள் இல்லையா? நாம் கடைப்பிடிக்கும் 'விரதம்' இந்த வேலையைத்தான் நம்முள்ளே செய்கிறது.


ஒருநாளில், மூன்று வேளை உணவு தேவை. அதனை அரைத்துச் செரித்து, தேவையான சக்தியைக் கொடுக்கிறது ஜீரண உறுப்புக்கள். ஆறு நாட்கள் ஓடியோடி உழைக்கும் நமக்கு ஞாயிறு ஓய்வு என்றால், நம் உடம்பில் தினமும் எந்திரமாக உழைக்கும் ஜீரண உறுப்புகளுக்கும் ஓய்வு தேவை தானே? அதற்காகத்தான் விரத முறைகள் உருவாகின!

விரதம் கடைப்பிடிக்கிற நாட்களில், உடலில் தேவையற்ற கொழுப்புகள் கரைக்கப்பட்டு சக்தியாக மாற்றப்படுகிறது. அதுமட்டுமா? ஜீரண உறுப்புகளுக்குத் தேவையான ஓய்வும், உடலுக்குப் போதுமான புத்துணர்வும் ஒருசேரக் கிடைக்கிறது. இது அறிவியல் பூர்வமான உண்மை!

கொழுப்பு, ஹார்ட் அட்டாக், வாயுக் கோளாறு, நீரிழிவு போன்ற பல பிணிகளுக்கான வாசற்கதவைத் திறந்து வைப்பதே அசைவ உணவுகள்தான். எனவே அசைவம் தவிர்ப்பது நல்லது. சைவ உணவு சாத்வீகமான உணவு. 'சாத்வீகமான உணவே சாந்தமான மனநிலைக்கு உத்தரவாதம்' என்பதை அனுபவித்தால்தான் உணரமுடியும். மனமானது ஒருநிலைப்படும்போது, உயிரைக் கொன்று தின்பது 'பாவம்' என்ற உணர்வைக் கொடுக்கும்; உணவுக் கட்டுப்பாடு என்ற உன்னத உணர்வும் மேலோங்கிவிடும்!  

அடுத்தது, மனக்கட்டுப்பாடு! தியானம், யோகா, பிராணாயாமம் ஆகிய எல்லாமே அலைபாயும் மனதை, ஒருபுள்ளியில் நிறுத்துவதுதான்! எந்தவித மன சஞ்சலமும் இல்லாத அந்த நிலைதான் உடலுக்கும் மனதுக்குமான ஓய்வு!

தியானப் பயிற்சியைத் தொடர்ந்து செய்தால், மன அழுத்தம் மறையும்; மனச்சோர்வு விலகும்; பதட்டம் காணாமல் போகும்;  கோபதாபங்கள் குறையும்; நல்ல  சிந்தனைகள் பெருகும். எவர் மனமும் புண்படாமல் பேசுகிற பக்குவம் வந்துவிடும். காரியத்தில் வீரியம் பொருந்திக் கொள்ளும்'' என விவரிக்கும் நடராஜன் தன்னை வருத்திய சம்பவத்தையும் விளக்கினார்.  

''தன் வயிறு, தன் குடும்பம் என்று சுயநலமாக வாழ்வது என்பது மிகப்பெரிய சோகம்.

ஒருமுறை சென்னையின் பிரதான சாலையில் உள்ள ஒரு பெரிய சத்திரத்தில் பூஜை நடைபெற்றது. அந்த சத்திரத்துக்கு எதிரில் என் நண்பரின் வீடு. அங்கே சென்றிருந்தேன். சத்திரத்தின் வாசலில் சில வயோதிகர்கள் பசியும் பரிதவிப்புமாக நின்றிருந்தனர்.

சத்திரத்தில், பூஜை முடிந்து பந்தி போஜனமும் நிறைவுற்றது. இலைகள், குப்பைத் தொட்டி களுக்குள் விழுந்தன. வயோதிகர்கள் அந்தக் குப்பைத் தொட்டிக்குள் கைவிட்டு,  'சாப்பிட ஏதும் கிடைக்காதா?' என்று ஏங்கியபடி துழாவி னார்கள். அந்தக் காட்சி என் மனதில் ஈட்டியாய் இறங்கியது.

கூட்டு வழிபாடு என்ற பெயரில் பணத்தை ஒரு குழுவாகச் சேகரித்து, அவர்களே விருந்து உபசாரம் செய்து கொள்வதை என்ன சொல்ல..? ஏழையின் சிரிப்பில் அல்லவா இருக்கிறான், இறைவன்!  

அன்னதானம் வழங்கும்போது, ஏழைக்கு வயிறும் தானம் அளித்தவருக்கு மனதும் ஒருசேர நிரம்புகிறது. இதைத்தானே மதங்களும் மார்க்கங் களும் எடுத்துரைக்கின்றன. 'உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே!' என்ற உயரிய தத்துவத்தைப் பின்பற்றுகிறவனே ஆண்டவனின் செல்லப்பிள்ளை!

காலையில் எழுந்ததும் நீராடி விட்டு, ஒரு விளக்கு அல்லது மெழுகுவத்தியை ஏற்றிவைத்து, 15 நிமிடம் தியானத்தில் ஈடுபடுங்கள். பிறகு 20 நிமிடம் பிராணாயாமம் செய்யுங்கள். இதன் மூலம்  முதுமையை நிச்சயமாக வெல்லலாம்!''  எனச் சொல்லும் நடராஜன் வாழ்வியல் நெறியாக இப்படிச் சொல்கிறார்...  

''எப்போதுமே 'எல்லாம் அவன் செயல்!' என்பதை நினைவில் நிறுத்துங்கள். நல்ல காரியங்களைச் செய்யுங்கள்; அப்படியான செயலில் ஈடுபடுபவர்களை மனதாரப் பாராட்டுங்கள். குடும்பத்தாரிடமும் சுற்றத்தாருடனும் அன்பையும் பாசத்தையும் பகிர்ந்து கொள்ளுங்கள். நம்மைப்போலவே எல்லோரும் வாழ பிரார்த்தியுங்கள்!''

Sunday, August 21, 2011

பட்டாம்பூச்சிகளின் கதை!

பிரியமானவர்களே... இந்த வாரம், இரண்டு சகோதரிகளின் கதையை சொல்லப் போறேன்...

இவர்களது அம்மா, பெண் பிள்ளைகளை மட்டும் தலையில் தூக்கி வைத்து ஆடுவார்; ஒரே மகனை சட்டை செய்ய மாட்டார். காரணம், பெண்கள் இருவரும் நல்ல நிறம், அழகு, உயரம், படிப்பு, விளையாட்டு, டான்ஸ் என, சகலகலா வல்லிகள்; ஆனால், ஆண் மகனோ, கறுப்பு, ரொம்பவும் அமைதியாக இருப்பான். இதனால், பெண் குழந்தைகளுக்கு ஓவர் செல்லம் கொடுத்து வளர்த்தார் தாயார். அப்பா பேச்சை கேட்க மாட்டார்கள்; அம்மா சொல்வது தான் வேதவாக்கு.
திருமணத்துக்கு மாப்பிள்ளை பார்த்தனர்... பார்க்கின்றனர்... பார்த்துக் கொண்டே இருக்கின்றனர். எந்த மாப்பிள்ளை என்றாலும், ஒரு நொட்டம் சொல்வர் பெண்கள் இருவரும். "இந்த மாப்பிள்ளை அழகாகத்தான் இருக்கான்; ஆனால், பி.எச்டி., பண்ணலியே...' என்பர்.

"இவனுக்கு படிப்பு, அந்தஸ்து எல்லாம் இருக்கு; ஆனா, அஜீத் மாதிரி இல்ல... ரொம்ப சாதாரணமா இருக்கான்!' என்பர்.

"என்னம்மா சொல்றீங்க... அழகெல்லாம் கொஞ்சம் நாளைக்கு தானேம்மா... ரொம்ப நல்ல குடும்பம்; பையனுக்கு சொத்து நிறைய இருக்கு... எம்.என்.சி., கம்பெனியில் வேலை செய்யறான்ம்மா...' என்பார் அப்பா.

அதற்கு அம்மாகாரி குறுக்கிட்டு, "என்னங்க... என் பொண்ணோட அழகுக்கு, இவன் ஏத்தவன் இல்லை. ரெண்டு பேரும் ஜோடியா வெளில போனா, விஜய் - த்ரிஷா மாதிரி இருக்க வேணாமா?' என்பார்.

"ஏய்... நீ இப்படி பேசியே உன் பொண்ணுங்க வாழ்க்கையில மண்ண போடுற... ஒழுங்கா உன் பொண்ணுங்களை அடக்கி வை... என்னால வெளில தல காட்ட முடியலடீ... ரெண்டு பொண்ண வச்சிகிட்டு எப்ப கல்யாண சாப்பாடு போடுவேன்னு எல்லாரும் பிடுங்கி எடுக்குறானுக. மரியாதையா சொல்றேன்... சீக்கிரமா நல்ல முடிவு எடுங்க!' என்று திட்டுவார் அப்பா.

"அப்பா... உங்க வேலைய பாருங்க. எங்களுக்கு வர்றவங்க சூப்பரா இருக்கணும்... அதே சமயம் நல்ல, "வெயிட்டு' பார்ட்டியா இருக்கணும்!' என்பர்.

"அப்படியா... அப்படின்னா நல்ல, "இரும்பு' வியாபாரியோட மகனா பார்க்குறேன்; அவன் தான், "வெயிட்' பார்ட்டியா இருப்பான்!' என்பார் அப்பா.

"இது நொட்டை... நொள்ளை...' என்று சொல்லி சொல்லியே, 30 - 32 வயது ஆகிவிட்டது. அடுத்து, மிகவும் அடக்கமான, பணக்கார குடும்பத்திலிருந்து உயர்ந்த வேலையில் உள்ள, மாப்பிளளை ஒருவன், இவர்களது அழகில் மயங்கி, திருமணம் செய்ய முன் வந்தான். எல்லா காரியமும் ஓ.கே., ஆகிவிட்டது. கடைசியில், நம்ம ஹீரோயின்கள் என்ன சொன்னார்கள் தெரியுமா?

"அம்மா... அந்தப் பையனோட அம்மா, நடுத்தர வயதுடன் ரொம்பவும் திடமா இருக்காங்க. இவங்க எப்ப போறது? அத்தோடு நாத்தனார் வேறு இருக்கு. எனக்கு பார்க்கிற மாப்பிள்ளை வீட்டில், மாமியார், நாத்தனார் எல்லாம் இருக்கவே கூடாது!' என்றனர்.

மகள்களுக்கு ஒரு அம்மா எப்படி புத்தி சொல்லணும்...

"மகள்களே... இதெல்லாம் ரொம்ப தப்பு... நாளைக்கு நாம் மாமியார் ஆக மாட்டோமா?' என்று சொல்லணுமா இல்லையா?, "ஆமாம்... ஆமாம்... என் மகள்கள் சொல்வது சரிதான். சரி... சரி... வேறு இடம் பார்ப்போம்...' என்றார்.

அப்பாவுக்கு வந்ததே ஆத்திரம்...

"ஏண்டீ... உன் மருமகளை மட்டும் நீ என்ன பாடு படுத்தற... அப்பாவிப் பொண்ணு வந்து உன்கிட்ட மாட்டிகிச்சி... நீ அதை ஒரு வேலைக்காரியை விட கேவலமா, "ட்ரீட்' பண்ற... அப்பப்ப எங்கே உன் மருமகள், மகனை உன்கிட்ட இருந்து பிரிச்சிகிட்டு போயிடுவாளோன்னு பயந்து, உன் மகனுக்கு என்னெல்லாம் தூபம் போடுற... இது உனக்கே அடுக்குமாடி...நீயும், பொண்ணுங்களும் எக்கேடோ கெட்டு ஒழியுங்கள். இந்த யுகத்தில், உன் பொண்ணுங்களுக்கு கல்யாணமே ஆகப் போறது இல்ல... இனி, உங்க விஷயத்துல நான் தலையிடவே மாட்டேன்!' என்று சபித்தார் அப்பா.

இதற்கெல்லாம் காரணம், பெண்கள் இருவரும் நன்றாக சம்பாதிக்கின்றனர். தனியாக ஒரு வீடு எடுத்து, அங்கே எல்லா பொருட்களையும் வாங்கி வைத்து, தனிக்காட்டு ராணிகள் போல், சுதந்திரமாகத் திரிவதுதான். அவர்களை யாரும் கேள்வி கேட்கக் கூடாது... யாராவது கேள்வி கேட்டால், "எங்களது சுதந்திரத்தில் நீங்கள் தலையிடாதீங்க!' எனத் திட்டுவர்.

சமீபத்தில் மிகவும் அழகான ஒரு மாப்பிள்ளை வந்தார். மூத்த மகள், ஜொள்விட்டு, "அம்மா இந்த மாப்பிள்ளைய பேசி முடிச்சிடு!' என்று கிரீன் சிக்னல் காட்டினாள்.

குடும்பத்தினர் மிகவும் ஆச்சரியப்பட்டு, மாப்பிள்ளை வீட்டாருடன் பேசினர்; ஆனால், மாப்பிள்ளையோ, "பொண்ணு பார்ப்பதற்கு வயசானவள் போல் இருக்கிறார்... முகம் எல்லாம் கிழடு தட்டி விட்டது. நிச்சயமாகவே நீங்கள் சொல்ற வயசு பொய்... பெரிய பொம்பளையை என் தலையில் கட்டப் பாக்குறீங்களே...' என போட்டானே ஒரு போடு.

அம்மா, மகள்கள் மூவருக்கும் இப்படி ஒரு சாட்டையடி கிடைக்கும் என்று எதிர்பார்க்கவே இல்லை.

தாங்கள் இன்னும், "அழகி மீனாக்கள்' என நினைத்து, "அந்த மாப்பிள்ளைக்கு பிரஷ் மீசை, இவனுக்கு பர்ஸ் வாய்... இவன் மூஞ்சி இடிச்சி வச்ச ஈயச் சொம்பு போல இருக்கு...' என திட்டியவர்கள், முதல் முறையாக இப்படிப்பட்ட அம்புகள் தாக்கியதும், மிகுந்த அதிர்ச்சி அடைந்தனர். இது, அவர்களது, "ஈகோவை' பயங்கரமாக தாக்கியது.

ஏறு, ஏறு... என்று ஏறினார் அப்பா.

"ஏண்டி... ஜாதகத்தை தூக்கிட்டு தேதியை மாத்தாதீங்க... போலி ஜாதகம் தயாரிக்காதீங்கன்னு... எத்தனை வாட்டி சொன்னேன் கேட்டீங்களா... எத்தனை மாப்பிள்ளைகளை, "இவன் நொட்ட, நொள்ளை, குள்ளம், கவுண்டமணி, செந்தில்...'ன்னு கிண்டல் செய்தீங்க. இப்ப உங்க நிலைமை என்னாச்சு... கிழடு தட்டிப் போன முகத்த வச்சிட்டு நீங்க, அஜீத், விஜய் மாதிரி மாப்ள எதிர்பார்க்கிறீங்களே... உங்களுக்கு ரஜினி, கமல் வயசுலதான் மாப்ள வருவான்னு எனக்கு தெரியும்; ஆனா, இப்ப இருக்கிற நிலமையை பார்த்தா, அதுவும் சந்தேகம் தான். இதுக்கெல்லாம் உங்க அம்மா தான் காரணம். இவளை நாலு போடு போட்டிருந்தா, இந்நேரம் நீங்கள் ரெண்டு பேரும் கையில் ஒரு குழந்தையுடன் இருந்திருப்பீங்க. உங்களை கெடுத்து வளர்த்ததும் இல்லாம, <உங்க வாழ்க்கையையே சீரழிச்சிட்டா...' என, புலம்பி தீர்த்தார்.

இப்போது உண்மையை <உணர்ந்த சகோதரிகள், ஓரளவுக்கு நல்ல வரன் வந்தாலே போதும் என நினைக்கின்றனர். ஆனால், வருவதெல்லாம் மனைவியை இழந்தவர், விவாகரத்து ஆனவர் போன்றோர் தான். அப்படியே முதல் தார மாப்பிள்ளைகள் வந்தாலும், முக்கால்வாசி வழுக்கை, தொப்பை போன்றவற்றுடன் வருவதால், சகோதரிகள் இருவரும் அழுது, கண்ணீர் வடிக்கின்றனர். மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல், தங்கள் தவறை ஒத்துக் கொள்ள முடியாமல் தவிக்கிறார் தாயார்.

இப்படி மிதமிஞ்சிய கற்பனைகளை வளர்த்து, உங்கள் வாழ்க்கையில் கிடைத்த பொன்னான அதிர்ஷ்டங்களை மிஸ் பண்ணிடாதீங்க பட்டாம்பூச்சிகளே...

போண்டி ஆக்கும் போலிகள்!


ரசியல் பண்ண மூன்று நபர்கள் தேவை என்றால், போலிகள் அரங்கேற இரண்டு நபர்களே போதுமானது! இரண்டு நபர்களுக்கு இடையே மூன்றாவதாக ஒருவர் வரும்போதுதான் அரசியல் வருகிறது. ஆனால், இரண்டாவதாக ஒருவர் வந்தாலே போலி அங்கே வந்துவிடும்! அந்த அளவுக்கு அரசியலைவிட பவர்ஃபுல்லானது போலி!

இது எத்தர்களின் காலம்... போலிகளைக் கண்டு மயங்கி பணத்தை பறிகொடுப்பவர்கள் ஏராளம். எல்லா துறையிலும் நீக்கமற வியாபித்து இருக்கும் இந்த போலிகளை ஓரளவாவது அடையாளம் காட்டும் முயற்சியே இக்கட்டுரை.

'முயல் பிடிக்கும் நாயை மூஞ்சியைப் பார்த்தாலே தெரிந்துவிடும்' என்பது போல, நாம் குறிப்பிட்டிருக்கும் சில அடையாளங்கள் தெரிந்தாலே, போலியாக இருக்கலாம் என்ற எச்சரிக்கையோடு அவர்களை அல்லது அவற்றை அணுகுங்கள். பாடுபட்டுச் சேர்த்த பணத்தை பாதுகாத்துக் கொள்ளுங்கள்!


பணம் பத்திரம்!

ஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை போலி நிதி நிறுவனங்களிடம் கொடுத்துவிட்டு, முதலுக்கே மோசம் போய், போலீஸ் ஸ்டேஷன், கோர்ட் என்று அலைகிறவர்கள் இன்றும் பலர். இந்த போலி நிதி நிறுவனங்களை அடையாளம் கண்டுகொள்வது எப்படி..? இதோ சில 'நச்' வழிகள்..!

வங்கிகள் அல்லாத நிதி நிறுவனங்கள் பொது மக்களிடமிருந்து டெபாசிட் திரட்ட ஆர்.பி.ஐ-யிடம் அனுமதி வாங்கியிருக்கிறதா என்று அவசியம் பாருங்கள்.  

பதிவு செய்யப்பட்ட லிமிடெட் நிறுவனம் என்பது போன்ற விளம்பரங்களைக் கண்டு ஏமாறாதீர்கள். ஒரு நிறுவனத்தை கம்பெனியாக பதிவு செய்வதற்கும், நிதி நிறுவனமாகப் பதிவு செய்வதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது.

சீட்டு கம்பெனி எனில், சீட்டு ஃபண்ட் சட்டப்படி அந்தந்த மாநில அரசின் அனுமதியுடன் பதிவு செய்யப்பட்டதா என பாருங்கள்.

சில நிறுவனங்கள் தவணை முறையில் பணம் செலுத்தச் சொல்லி அதற்கு இன்ஷூரன்ஸ் கவரேஜ் மற்றும் நிலம் கொடுப் பதாகவும் கூறுவது உண்டு. இன்ஷூரன்ஸ் கவரேஜ் கொடுக்க வேண்டுமெனில், அந்த நிறுவனம் ஐ.ஆர்.டி.ஏ. அனுமதியுடன் மட்டுமே செய்ய முடியும். நிலம் கொடுக்கிறோம் என சொல்லிவிட்டு கண்ணுக்குத் தெரியாத ஊர்களில் இருக்கும் பாலைவனத்தில் இடம் ஒதுக்கியிருப்பார்கள்.

மார்க்கெட்டில் இருக்கும் வட்டி நிலவரத்தைவிட, மிக அதிகப்படியான வட்டி தருவதாகச் சொன்னால் உறுதியாகச் சொல்லி விடலாம் அந்த நிறுவனம் போலியானது என்று!

குறிப்பாக பெண்களை மையப்படுத்தி, அவர்களைக் கவரும் வகைகளில் திட்டங்கள் இருந்தால் கவனம் தேவை.

சினிமா நடிகர், நடிகைகள் மற்றும் புகழ்பெற்ற நபர்களைக் கொண்டு அலுவலகம் திறப்பது, அவர்கள் கையால் பத்திரங்கள் கொடுப்பது போன்றவைகள் உங்களை திசை திருப்பும் வேலைகளில் ஒன்றாகும்.

அவசரப்படுத்தி முதலீடு செய்ய வைப்பது, ஏற்கெனவே இந்த நிறுவனத்தில் பணம் போட்டு லட்சம், லட்சமாக சம்பாதித்தவர் என யாராவது இரண்டு நபர்களை அறிமுகம் செய்துவைப்பது போன்ற வையும் தில்லாலங்கடிக்கான அறிகுறிகளே!    

- பானுமதி அருணாசலம்.


நல்லவரா, கெட்டவரா?

ரியல் எஸ்டேட்டில் மட்டுமல்ல, பங்குச் சந்தையிலும் போலி புரோக்கர்கள் குவிந்து கிடக்கிறார்கள். அவர்களை எப்படி இனம் கண்டுகொள்வது?

சூப்பர் டிப்ஸ்கள் இதோ...

போலி புரோக்கர்கள் செபி பதிவு எண் இல்லாமல் இருப்பார்கள்.

ரசீதுகள், கான்ட்ராக்ட்டுகள், ஆவணங்கள் என வியாபார ரீதியாகக் கொடுக்க வேண்டிய எதையுமே உங்களுக்குத் தரமாட்டார்கள், அல்லது எல்லாவற்றையும் துண்டுக் காகிதத்தில் மட்டுமே குறித்துத் தருவார்கள்.

டிரேடிங் டெர்மினலை கண்ணில் காட்ட மாட்டார்கள். டிரேடிங் டெர்மினலில் வரும் புரோக்கர் ஐ.டி-யும், அவர்கள் சொல்லும் புரோக்கர் ஐ.டி-யும் வித்தியாசப்படும்.

கே.ஒய்.சி. படிவம் பற்றி கண்டுகொள்ளவே மாட்டார்கள்.

எஃப் அண்ட் ஓ-விற்கு மார்ஜின் கேட்க மாட்டார்கள். பணம் மட்டுமே கேட்பார்கள்.

காசோலை வாங்கும்போது வெவ்வேறு பெயரிலோ தனிமனிதரின் பெயரிலோ வாங்குவார்கள்.

உங்கள் கணக்கிற்கு யாருடைய கணக்கில் இருந்து காசோலை கொடுத்தாலும் வாங்கிக் கொள்வார்கள்.

இத்தனை லாபம் நிச்சயம்; பத்திரத்தில்கூட எழுதித் தருகிறோம் என்கிற போலியான வாக்குறுதிகளை அள்ளி வீசுவார்கள்.

ஆள் பிடித்து தந்தால் கமிஷன் தருவதாகவும் ஆசை காட்டுவார்கள்.

இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா என அனைத்து சந்தைகளிலும் வியாபாரம் செய்கிறேன் என்று பச்சைப் பொய் சொல்வார்கள்.

- செ.கார்த்திகேயன்.


பார்த்து வாங்குங்க!

ரியல் எஸ்டேட் துறையைப் பொறுத்தவரை நிலத்தின் மீதுள்ள உரிமைகள் போலியானதாக இருக்கும், புரோக்கர்களில் சிலர் போலிகளாக இருப்பார்கள், ரியல் எஸ்டேட் நிறுவனங்களில் சில போலியாக இருக்கும்... இப்படி பல போலிகளை எதிர்கொள்ளவேண்டிய துறை இது. அதனால் அதிக கவனம் தேவைப்படும்.

மனை அல்லது வீட்டை வாங்கும்போது மிகக் குறைந்த காலகட்டத்துக்குள்ளாகவே பலமுறை சொத்து கைமாறியிருக் கிறதா என பாருங்கள். அப்படி இருந்தால் உஷாராகி, தாய் பத்திரத்தில் குறிப்பிட்டிருக்கும் உரிமையாளரைச் சந்தித்து உண்மையில் அவர் சொத்து விற்றாரா அல்லது பாகப் பிரிவினை செய்து தந்தாரா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

தாய் பத்திரம் அல்லது கிரயப் பத்திரம் தொலைந்துவிட்டது என்று சொன்னால் கூடுதலாக உஷாராகுங்கள்.

வீட்டை நேரில் பார்க்காமல் வாங்காதீர்கள். அதில் யாராவது குடியி ருந்தால் அவர்களிடம் நீங்கள் வீட்டை வாங்கும் விஷயத்தைச் சொல்லுங்கள். சில இடங்களில் வீட்டின் உரிமையாளரிடம் வாடகைக்கு ஆள் கூட்டி வருவதாகச் சொல்லி வீட்டைக் காட்டி, போலிபத்திரம் மூலம் வீட்டை விற்கும் வேலையும் நடந்து வருகிறது!

புரோக்கர்கள் அவசரப்படுத்தினால் ஒரு முறைக்கு நூறு முறை விசாரியுங்கள்.

சொத்தின் உரிமையாளரை கண்ணில் காட்டாமலே விலை பேசிக் கொண்டிருந்தால் அந்த புரோக்கரிடம் எச்சரிக்கையாக இருங்கள்.  

புரோக்கர் நல்லவர்தானா என்பதை அறிய அப்பகுதி சார் பதிவாளர் அலுவலக பணியாளர்களிடம் பேச்சுக் கொடுத்தாலே தெரிந்துவிடும்.

- சி.சரவணன்


காந்தி கணக்கு!

நல்ல நோட்டுகளே நாணிக் கோணும் அளவுக்கு பக்காவாக தயாராகின்றன போலி ரூபாய் நோட்டுகள். நாட்டையே ஆட்டம் காண வைக்கும் இந்த போலி நோட்டுகளைக் கண்டுபிடிக்க ஒரே வழி நல்ல நோட்டுக்களை பற்றி தெரிந்துகொள்வதுதான்...

வாட்டர் மார்க்: நல்ல நோட்டுகளில் இடது பக்கம் உள்ள வெற்றிடத்தில் நீரெழுத்தில் மகாத்மா காந்தியின் படமும், நோட்டின் மதிப்பு எண்ணும் பல நேர்க்கோடுகளும் இருக்கும்.

பூ அடையாளம்: வாட்டர் மார்க் பகுதியின் வலதுபக்கத்தில் முன்னும் பின்னும் பூ இதழ்கள் போல இருக்கும் இந்த அடையாளத்தை சாய்த்து பார்த்தால் ரூபாய் நோட்டின் மதிப்பு அச்சிடப்பட்டிருக்கும்.

அடையாளக் குறியீடு: ரூபாய் நோட்டுகளின் மதிப்புக் கேற்றவாறு தொட்டு உணரும் வண்ணம் இந்த குறியீடு இருக்கும்.

20 ரூபாய் - செவ்வகம், 50 ரூபாய் - சதுரம், 100 ரூபாய் - முக்கோணம், 500 ரூபாய் - வட்டம், 1000 ரூபாய் - டைமண்ட். 10 ரூபாய் நோட்டுக்கு மட்டும் இந்தக் குறியீடு இருக்காது.

கம்பி இழை: ரூபாயின் நடுவில் விட்டுவிட்டு இருக்கும் கம்பி இழையைத் தூக்கிப் பார்த்தால் அதில் ஆர்.பி.ஐ. என்று ஆங்கிலத்திலும், பாரத் என்று இந்தியிலும் நோட்டின் முன்பக்கத்தில் நேராக பார்த்தால் பச்சை நிறமாகவும், 45 டிகிரி சாய்த்து பார்த்தால் நீல நிறமாகவும் இது இருக்கும்.

மறைந்திருக்கும் மதிப்பு: மகாத்மா காந்தியின் வலது பக்கத்தில் இருக்கும் செவ்வகப் பட்டையினுள் ரூபாயின் மதிப்பு அச்சிட பட்டிருக்கும். இது 45 டிகிரி கோணத்தில் சாய்த்து பார்க்கும் போது தெரியும்.

மாறும் நிறம்: நடுவில் அச்சடிக்கப்பட்டிருக்கும் ரூபாயின் நிறம் சாய்த்து பார்க்கையில் பச்சை நிறத்திலிருந்து நீல நிறமாக மாறும்.

அசல் நோட்டுகளை தொட்டு உணரும்படி மகாத்மா காந்தியின் படம், ரிசர்வ் வங்கியின் பெயர், கவர்னர் கையப்பம் மற்றும் ரிசர்வ் வங்கியின் அடையாள குறியீடு போன்றவை மேலெழுந்து பிரின்ட் ஆகியிருக்கும்.

- நீரை.மகேந்திரன்.


அதுதான்; ஆனா அது இல்லை..!

பிராண்டட் பொருட்கள் என்றால் தரமாக இருக்கும் என்று நம்புகிறோம். இந்த நம்பிக்கையை உருவாக்க முன்னணி நிறுவனங்கள் கோடி கோடியாகச் செலவு செய்கின்றன. ஆனால், நயா பைசா செலவு செய்யாமல் அப்படியே காப்பி அடித்து, கல்லா கட்டும் ஆட்களுக்கும் பஞ்சமில்லை. கொஞ்சம் அசந்தாலும் நம் கண்ணை ஏமாற்றிவிடும் போலி பிராண்டுகளைக் கண்டுபிடிக்க சில வழிகள்...

புகழ் பெற்ற பிராண்டுகளின் பெயரை கண்டுபிடிக்க முடியாதபடி லேசாக மாற்றி இருப்பார்கள். அல்லது பெயருக்கு முன்னாலோ அல்லது பின்னாலோ  கண்ணுக்குத் தெரியாத அளவுக்கு வேறு ஒரு பெயரைச் சேர்த்திருப்பார்கள். எனவே, ஒரிஜினல் பிராண்டின் எழுத்துக் களை நன்றாக மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.    

லோகோவை காப்பி யடித்து சில மாற்றங்களை செய்திருப்பார்கள். இதனால் நமக்கு எது ஒரிஜினல், எது போலி என்கிற குழப்பம் வரும்.

புகழ்பெற்ற பிராண்டு களின் பெயரை சம்பந்தமில்லாத வேறு ஏதாவது பொருட்களுக்கு வைத்து அள்ளி விடுவார்கள். உதாரணமாக சோனி என்ற பெயரில் ஷேவிங் கிரீம் வரும்!

சில பிராண்டட் பொருட்கள் குறிப்பிட்ட  சில இடங்களில் மட்டுமோ அல்லது தனி விற்பனை மையங் களில் மட்டுமோதான் கிடைக்கும். ஆனால், போலி பொருட்கள் எந்த கடையில் வேண்டுமானாலும் கிடைக்கும்.

துணி வகைகளில் ஒரிஜினல் பிராண்டில் காணக்கூடிய நேர்த்தி, வடிவம், மிருதுதன்மை மற்றும் கலர்கள் போலி பிராண்டுகளில் இருக்காது.

சில பிராண்டட் பொருட்கள் குறிப்பிட்ட கலர் அல்லது குறிப்பிட்ட வாசனைகளில் மட்டுமே கிடைக்கும்.

சில பிராண்டட் பொருட்களுக்கு விற்பனைக்கு பிறகான சேவை மற்றும் வாரண்டி, கியாரண்டி போன்ற உத்தரவாதங்கள் இருக்கும். போலிகளுக்கு இந்த உத்தரவாதங்கள் இருக்காது.

- நீரை.மகேந்திரன்