பங்குச் சந்தை பிதாமகரான வாரன் பஃபெட்டை கடந்த வாரம் உற்சாகமாக வரவேற்றது பெங்களூரு நகரம். வந்தவுடன் பெங்களூரு தாஜ் வெஸ்ட்எண்ட் ஓட்டலில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்டார். அவருக்கு ஒரு பெண்மணி மாலை அணிவிக்க, அதை நமது ஃபோட்டோகிராபர்கள் முண்டியடித்து படமெடுக்க ''கூல், எவ்வளவு படம் வேண்டுமோ எடுத்துக்குங்க'' என்று சிரித்த முகத்தோடு போஸ் கொடுத்தார்.
இந்தியா பற்றி தனது கருத்தை இந்த நிகழ்ச்சியில் வெளிப்படையாக எடுத்துச் சொன்னார் பஃபெட். ''இந்தியா வளரும் நாடல்ல. பொருளாதாரத்தில் வளர்ந்த நாடு'' என்று சொன்னதை இந்திய பிஸினஸ்மேன்கள் கைதட்டி வரவேற்றனர். இந்தியாவை இன்னும்கூட ஒரு ஏழை நாடாக, பொருளாதாரம், தொழில்நுட்பத்தில் பின்தங்கிய பல நாடுகள் பார்த்து வருகின்றன. இந்த நிலையில் பஃபெட் அடித்த கமென்ட்டினால் வெளிநாட்டு முதலீடு இந்தியாவை நோக்கி நிறையவே வர வாய்ப்பிருப்பதாக புகழ்ந்தனர் இந்தியத் தொழிலதிபர்கள்.
பொதுவாக பெரிய பிஸினஸ் மேன்கள் நம் நாட்டுக்கு வரும்போது நமது அரசியல்வாதிகள் அவர் களைக் கண்டுகொள்வதில்லை. ஆனால், கர்நாடக முதல்வர் எடியூரப்பாவோ பஃபெட்டுக்கு ஒரு விருந்தே கொடுத்தார். எதிர்க்கட்சிகளின் தொடர் ஊழல் குற்றசாட்டுகளால் நிம்மதி இழந்து இருந்த கர்நாடக முதல்வர் எடியூரப்பா, மைசூர் அருகே உள்ள நஞ்சுண்டேஸ்வர் கோயிலுக்கு செல்வதால் வாரன் பப்ஃபெட்டை சந்திக்கும் பிளான் இல்லாமல் இருந்தாராம். ஆனால், என்ன நினைத்தாரோ திடீரென வேண்டுதலை சீக்கிரமாக முடித்துவிட்டு புதன்கிழமை காலை தாஜ் வெஸ்ட்எண்ட் ஓட்டலில் பப்ஃபெட்டைச் சந்தித்து அவருக்கு காலை விருந்தும் அளித்து, தனியாக 45 நிமிஷம் பேசினார். 2010-ல் பெங்களூருவில் நடைபெற்ற சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டு சி.டியை போட்டு காண்பித்து பஃபெட்டை மனம் குளிரச் செய்தார் எடியூரப்பா.
அதன்பிறகு எலெக்ட்ரானிக் சிட்டியிலுள்ள 'டெகுடெக்' கம்பெனியின் ஸ்டீல் பிளான்ட்டை சுற்றிப் பார்க்கச் சென்றார் பஃபெட். இந்த நிறுவனத்தின் முதலீட்டில் 80 சதவிகிதத்தை தனது வசம் வைத்திருக்கிறார் வாரன் பஃபெட். ஒரு நிறுவனத்தில் முதலீடு செய்யும்போது குறைந்தபட்சம் 80 சதவிகிதம் முதலீடு செய்வதுதான் பஃபெட்டின் ஸ்டைல். அதற்கு கீழே என்றால் ஸ்ட்ரிக்ட்டாக 'நோ' சொல்லிவிடுவாராம்.
'டெகுடெக்' நிறுவனத்தைச் சுற்றிப் பார்க்க உள்ளே நுழைந்த வுடன் ஒரு மரத்தை நட்டுவைத்து விட்டு, ''இதுதான் எனக்கு பிடித்த வேலை'' என்று சொல்லி எல்லோரையும் சிரிக்க வைத்தார். பிறகு ஜாகுவார் காரில் ஏறி கம்பெனியைச் சுற்றிப் பார்த்தார். கம்பெனியின் சாதாரண ஊழியர்கள் முதல் சி.இ.ஓ. வரை பஃபெட்டின் சுறுசுறுப்பையும் உற்சாகத்தையும் கண்டு பிரமித்துப் போனார்கள். தொழிற்சாலையைச் சுற்றிப் பார்த்துவிட்டு வெளியே வந்தவரிடம், ''மீண்டும் எப்ப பெங்களூரு வருவீங்க?'' என ரிப்போர்ட்டர்கள் கேட்க, ''நூறாவது வயதில் வருவேன்'' என்று முதலில் சொன்னவர், பிற்பாடு, ''அடுத்த பத்தாவது மாதத்தில் வருவேன்'' என்றார்.
அது முடித்த கையோடு நேராக தாஜ் ஓட்டலில் நடக்கும் சி.இ.ஓ-கள் கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் சி.இ.ஓ. கோபாலகிருஷ்ணன், டொயோட்டா கிர்லோஸ்கர் சி.இ.ஓ. விக்ரம் கிர்லோஸ்கர், 3எம்.இந்தியா சி.இ.ஓ. அஜய் நனாவதி என பலரும் பஃபெட்டிடம் பல கேள்விகளைக் கேட்டனர். ''இந்தியா, சீனா, இங்கிலாந்து மற்றும் ஜெர்மனி போன்ற நாடுகளில் பில்லியன் டாலர்களில்கூட முதலீடு செய்யலாம். ஆனால், லாஜிக்கலாக முதலீடு செய்வதற்கு இந்தியா ஏற்ற இடம்தான்'' என்று அவர் சொன்னதைக் கேட்டு பலரும் வரவேற்றனர். இந்தியா வில் பல்வேறு துறைகளில் தனது நிறுவனம் முதலீடு செய்ய விரும்புவ தாக சொன்ன பஃபெட், ''இந்திய நிறுவனங்கள் உலகின் மிகப் பெரிய நிறுவனத்துடன் சேர்ந்து பிஸினஸ் செய்ய நினைத்தால், தயவுசெய்து எனது பெர்க்ஷயர் நிறுவனத்தை மறக்காதீர்கள்'' என்று நமது தொழிலதிபர்களுக்கு அழைப்பு கொடுக்கவும் அவர் தவறவில்லை.
பஃபெட்டின் பெர்க்ஷயர் நிறுவனம், இந்தியாவின் பஜாஜ் அலியான்ஸ் ஜெனரல் இன்ஷூரன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து ஆன்லைன் மூலம் மோட்டார் இன்ஷூரன்ஸ் பாலிசி களை விற்க ஆரம்பித்துவிட்டது. ஆன்லைன் மூலம் பாலிசி வாங்கியவர்களோடு பஃபெட் பேசும் நிகழ்ச்சி ஒன்று வெள்ளிக் கிழமை மாலை நடந்தது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற் காகவே இந்திய பஃபெட் என்று அழைக்கப்படுகிற ராகேஷ் ஜுன்ஜுன்வாலா ஆன்லைன் மூலம் மோட்டர் இன்ஷூரன்ஸ் பாலிசி வாங்கியிருந்தார்.
''இன்னொரு ஜென்மம் என்று இருந்தால் பணக்காரனாக பிறக்க விரும்பவில்லை. ஆனால், இன்னொரு முறை பிறக்க வேண்டும் என்றால் உலகிலேயே மிகப் பிரமாதமான இடம் இந்தியாதான்'' என்றும் சொல்லி, நம் நாட்டை நிறையவே புகழ்ந்து தள்ளிவிட்டார் பஃபெட்.