அதிக நுண்ணுணர்வு, தவறிழைக்காமல் இருக்கவும், படைப்புத் தன்மையை அதிகப்படுத்தவும் உதவியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. ஆனால் எங்கேயாவது, எவரேனும் முனகும் சத்தம் கேட்டால், சின்ன எதிர்ப்புக் குரல் கிளம்பினால், நத்தையைப்போல் சுருண்டு கொள்வோரும், ஆமையைப்போல் அரண்டு போவோரும் புலம்பலிலேயே பொழுதைக் கழிப்பார்கள். ஆனாலும், விமர்சனங்களை முழுவதுமாக ஒதுக்கிவிடமுடியாது. ஆக்கபூர்வமான, பயன்தரக் கூடிய, நடுநிலையுடன் கூடிய விமர்சனங்களை ஏற்று, நம்மைத் திருத்திக்கொள்வதே பண்புடைமை.
ஒருமுறை, தன் தவற்றை இளம் விஞ்ஞானி ஒருவர் சுட்டிக் காட்டியபோது, சற்றும் கோபப்படாமல், அதைப் பகிரங்கமாக ஒப்புக்கொண்டார், ஆல்பர்ட் ஐன்ஸ்டீன். அவரது விஞ்ஞான வித்தகத்தைவிட, மெய்ஞ்ஞான மேன்மையே எனக்குப் பெரிதாகப்படுகிறது. அறிவுசார்ந்த செய்திகளில் நமது தவற்றை ஏற்பதால், ஒரு நிமிடம் மட்டுமே முட்டாளாகி, வாழ்நாள் முழுவதும் புத்திசாலியாகத் திகழும் வாய்ப்பைப் பெறுவோம்.
இன்றைக்குப் பெரிய பொறுப்பு களில் இருப்பவர்கள் அனைவரையும் திருப்திப்படுத்த முடியாது; திருப்திப் படுத்த நினைக்கவும் கூடாது. பெரிய பதவியில் இருப்பவர்கள், கடும் நடவடிக்கை எடுக்கும்போது, நிச்சயம் சிலர் எதிர்ப்பார்கள். எல்லோரையும் திருப்திப்படுத்த நினைப்பவர்கள், எந்த மாற்றத்தையும் ஏற்படுத்த முடியாது. சின்ன வழிமுறையைக்கொண்டு வந்தால்கூட, அதற்கும் எதிர்ப்பு வரும். இன்னும் கொஞ்சம் அதிகமாகப் பணியாற்ற வேண்டுமெனில், அதை அனைவரும் வரவேற்பார்கள் என்று எதிர்பார்க்கமுடியாது. எதிர்ப்புக் கிளம்பியதும், நுண்ணிய தன்மையாளர்கள் பயந்து அவற்றை விலக்கிக் கொள்வார்கள். இது, மிகப் பெரிய பலவீனம். சமரசம் செய்யாமல், உண்மையை நிலைநாட்ட முற்படும்போது, சற்று தடித்த தோல் தேவைப்படுகிறது. 'உதகமண்டல தட்பவெட்பமே எனக்கு ஏற்றது' என அடம்பிடிப்பவர்கள், எப்படி உயர்ந்த பதவியில் இருக்கமுடியாதோ, அதேபோல் மிகவும் மெல்லிய மனம் கொண்டவர்களும் பெரிய சமூக மாற்றங்களை நிகழ்த்த முடியாது. இதைத்தான் அறிஞர் அண்ணா, 'எதையும் தாங்கும் இதயம்' எனக் குறிப்பிடுகிறார். மேலும் அவர், ஷேக்ஸ்பியரின் வாசகங்களை கிங் லியரி லிருந்து மேற்கோள்காட்டி, 'மறப்போம் மன்னிப்போம்' என அறிவுறுத்துகிறார்.
துரோகங்களைத் தாங்குவதும், விமர்சனங்களை எதிர்கொள்வதும், பழிச்சொல்லைச் சகிப்பதும்... வலுவான இதயம் உள்ளவர் களுக்கே சாத்தியம்! சமூக அமைப்பில் தவறு இழைப்பவர்கள் இன்றைக்கு வலிமையுடன் திகழ்கின்றனர். அவர்களைப் பாதுகாக்க, கட்டமைப்புகளும் கூட்டமைப்புகளும் இருக்கின்றன. அழிவுப்பாதையைத் தேர்ந்தெடுப் பவர்களுக்கு, அதுவே முழுநேரப் பணியாக இருக்கிறது. அவர்கள் நேர்மையானவர்கள்மீது, எளிதாகப் புழுதிவாரித் தூற்றமுடிகிறது; ஊடகங் களில் பொய்ச் செய்திகளை வரவழைக்க முடிகிறது. அவற்றைப் பொருட்படுத்தாமல் இருக்க, வலிமையான இதயம் மட்டுமின்றி, தடித்த தோலும் தேவைப்படுகிறது.அந்தக் காலத்தில், வீடுகளில் அதிகம் கண்டிப்பு காட்டினர். இன்றைக்கு ஒன்றிரண்டு குழந்தைகள் மட்டுமே என்பதால், செல்லம் கொடுத்து, வேண்டியதை மட்டுமின்றி விரும்பியதையும் வாங்கிக் கொடுத்து வளர்ப்பதால், சின்ன ஏமாற்றம் அல்லது எதிர்ப்பு ஆகியவை ஏற்படுத்தும் எதிர்வினைகள் இன்றைய குழந்தைகளிடம் அதிக தாக்கத்தை உண்டாக்குகின்றன. இளைஞர்களிடம் தற்கொலை மனப்பான்மை அதிகரித்து வருகிறது. ஆசிரியர் திட்டினால், தூக்கில் தொங்குகிற மனநிலை சில மாணவர்களிடம் இருப்பது அதிர்ச்சியாக இருக்கிறது. ஆசிரியர் திட்டுவதற்கெல்லாம் செத்துப் போவதென்றால், நாங்கள் பலப் பலமுறை செத்துப் போயிருக்கவேண்டும். பெஞ்ச் மீது ஏறாமல் பள்ளி வாழ்வையும், பேராசிரியர் திட்டாமல் கல்லூரி வாழ்வையும் ஒருவர் கழித்திருந்தால், தீர்ப்பு நாளில் அவருக்கு நரகமே வழங்கப்படும்.
தடித்த தோலுடன் இருப்பது வேறு; உணர்ச்சியற்று இருப்பது வேறு. தன் உணர்ச்சி களைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிற முதிர்ச் சியையே நான் அப்படிக் குறிப்பிடுகிறேன். நுண்ணறிவு மிகுந்திருப்பவர்கள், உணர்ச்சிக் குதிரைகளின் கடிவாளத்தைக் கைகளில் வைத்திருக்கிற புத்திசாலிகளாக இருக்கின்றனர். மகாத்மாகாந்தியின்மீது அவர் வாழும்போதே வைக்கப்படாத கண்டனங்களா? அவரை, 'அரை நிர்வாணப் பக்கிரி' என மிக மோசமாக சர்ச்சில் கேலி பேசவில்லையா? அவரது எளிமையைத் துச்சமாக சிலர் இழித்துரைக்கவில்லையா?
ஒருமுறை, மகாத்மாவைக் கண்டித்து மிக நீளமான கடிதம் ஒன்றை ஒருவர் எழுதியிருந்தார். அதைப் படித்துப் பார்த்த காந்திஜி, அதிலிருந்த குண்டூசியை மாத்திரம் எடுத்துக்கொண்டு, கடிதத்தைக் கிழித்தெறிந்தார். 'இந்தக் கடிதத்தில் குண்டூசி ஒன்றுதான் பயனுள்ளது' எனச் சிரித்தபடியே சொன்னாராம். அப்படிப்பட்ட திடமான உள்ளமே, மிகப் பெரிய எதேச்சதிகாரத்தை எதிர்க்கிற துணிவை நமக்குப் பெற்றுத் தந்தது.
காமராஜரைப் பற்றி சிலர் அவதூறு பரப்பினர்; நேர்மையாக இருப்பதாகச் சொல்லிக்கொண்டு, நிறைய சொத்துச் சேர்ப்பதாக எழுதினார்கள். அவரிடம் இதுகுறித்துக் கேட்டபோது, ''நான் நேர்மையானவன். என்மீது வைக்கப்படுகிற குற்றச்சாட்டுக்கெல்லாம் பதில் சொல்லி, என் நேர்மையை நிருபிக்கவேண்டிய அவசியம் இல்லை, எனக்கு யானைக்கால் நோய் இல்லை என்பதற்காக, எல்லோரிடமும் என் காலைத் தூக்கிக் காட்டவேண்டிய அவசியமில்லை'' என நறுக்குத்தெறித்தாற்போல் பதில் சொன்னார்.
மற்றவர்களின் கடும் விமர்சனங்களால் உண்டான வலியை, நம் பணியால் மகிழ்ச்சியுறுவோரின் புன்னகை போக்கிவிடும். இயேசுவைச் சிலுவை யில் அறைந்த அநியாயமும், லிங்கனைச் சுட்டுக் கொன்ற அவலமும் நிகழ்ந்த கொடுமையான உலகம் இது! ஆனால், சங்ககாலப் பாடல் ஒன்றில் கூறப்படுவதுபோல, 'இவ்வுலகம் இன்னாதது தான். ஆனால், இதிலிருக்கும் இனிமையைக் கண்டு, வாழ்வைக் கழிக்கவேண்டியதுதான்!'
சுயசரிதக் குறிப்புகளைப் பெரும்பாலும் தவிர்த்துவிடுபவன் நான். இருப்பினும், அனுபவத்தால் ஏற்படும் சில நிகழ்வுகளைச் சொல்வது, நம்பகத்தன்மைக்காகத்தான். தவிர, என் வாழ்வில் நான் சந்திக்காத எதையும், செய்யாத எதையும் நான் சொல்வதில்லை என்பதும் ஒரு காரணம்!
காஞ்சிபுரத்தில் ஆட்சியராகப் பணி புரிந்த காலம் அது. இலவச தையல் இயந்திரங்களை வழங்கவேண்டிய திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும்; தேசிய அளவில் தரமான இயந்திரங் களை வாங்கி, வழங்கவேண்டும் எனக் குறிப்பு எழுதியிருந்தார், எனக்கு முன்பிருந்த மாவட்ட ஆட்சியர். அது எனக்கு நியாயமாகப்பட்டது. அதற்கான ஒப்பந்தப் புள்ளிகள் கோரினேன். வழக்கமாக, தரமற்ற இயந்திரங்களைத் தருவித்துப் பணம் பண்ணுகிற நிறுவனங்களுக்குக் கோபம் கொப்பளித்தது. அவர்கள் நோட்டீஸ் ஒன்றைத் தயாரித்தனர். அதில், நான் இயந்திர நிறுவனங்களிடம் கையூட்டுப் பெற்றுக் கொண்டதாக அச்சடித்து எனக்கு அனுப்பினர். வாழ்நாளில், அப்படியரு அவதூறைச் சந்தித்திராத எனக்கு, அது பேரதிர்ச்சியாக இருந்தது. ஆனால், இதன் பின்னணியை உடனே என்னால் யூகிக்க முடிந்தது; சுதாரித்துக் கொண்டேன். அலுவலக ஊழியரிடம் 'இதை, வருகிறவர்கள் அனைவரும் வாசித்துவிட்டு வரவேண்டும். எனவே, நம் முகாம் அலுவலக முகப்பிலும், மாவட்ட ஆட்சியர் அறைக் காத்திருப்பு அறையிலும் ஒட்டி வையுங்கள்' எனக் கட்டளையிட்டேன். அதைப் பகிரங்கப்படுத்திப் பரிகாசம் செய்ததன் மூலம் நிர்மூலமாக்கினேன். அதைப் பார்த்த சிலர் உள்ளே வரும்போது, அழுத விழிகளுடன், ''உங்களைப் போய் இப்படிச் சொல்கிறார்களே! இது அடுக்குமா?'' என்றனர். அதுவே எனக்குக் கிடைத்த வெற்றி யாக இருந்தது. பிறகு அந்த மாவட்டத்தில் இருந்து மாற்றலாகும்போது, எனக்குச் சார்பாக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன; இதழ்கள் என் பணிகளைப் பட்டியலிட்டன; அப்போதும், பெரிதாக உணர்ச்சிவசப்படவில்லை நான்.
எனக்கு நிகழ்ந்தது போன்ற கசப்பான அனுபவங்கள், நேர்மையுடன் திகழும் என் நண்பர்கள் பலருக்கும் நிகழ்ந்தன. இன்றைய சூழலில், நேர்மையும் உண்மையும் அதிகம் பாதிக்கப்படுகிற கையாலாகாத நிலை அதிகம் உள்ளது. அதற்காக, நாம் உலகிலிருந்து ஒதுங்கி, ஓடிவிட முடியாது. சவால்களைச் சந்திப்பதும் வெற்றி கொள்வதும் இன்னும் தீவிரம் அடையும் தருணம் இது. தவறுகளை இழைப்பவர்கள், முன்கூட்டியே தங்களைச் சுற்றிப் பாதுகாப்பு வளையத்தை, தாங்கள் ஈட்டிய பணத்தின் மூலம் ஏற்படுத்திக் கொள்கின்றனர்.
'தடித்த தோல்' என்பது சுரணையற்ற தன்மை அல்ல.அது அதிக உஷ்ணத்தையும் குளிரையும் தாக்குப்பிடிக்கிற வைராக்கியம். எது எது உகந்தது என்பதைப் பகுத்துப்பார்க்கிற உண்மையான நுண்ணறிவு. புயலுக்கும் வெள்ளத்துக்கும் கலங்காத மக்களை, மீனவர் குப்பங்களில் பார்த்திருக்கிறேன். புயல் பாதுகாப்பு மையங் களில் மகிழ்ச்சியாக இருந்த பிறகு, தங்கள் இருப்பிடத்துக்கு வருவர். வாழ்வாதாரத்தை இழந்தாலும்கூட, அவர்களின் உதடுகளில் இருந்து புன்னகையை எவரும் பறிமுதல் செய்யமுடியாது. பல ஏழைகளின் வீடுகள் எரிந்ததும், அவர்களைச் சந்தித்து நிவாரணத் தொகையை வழங்கச் செல்லும் போது, அவர்களது கலங்காத உள்ளத்தைக் கண்டிருக்கிறேன். ஏழை எளிய மக்கள், தங்கள் வாழ்வை இயல்பாக எடுத்துக்கொள் கின்றனர். அதனால்தான் வறுமையிலும் மகிழ்ச்சியாக, இல்லாமையிலும் செம்மை யாக, அவர்களால் வாழ முடிகிறது. ஆனால் நாம், பேனா மூடி தொலைந்தால்கூட, நாள் முழுவதும் குனிந்து குனிந்து தேடிக் கொண்டிருக்கிறோம்.
நம்மையும் மீறிய இழப்புகளை எதிர்கொள்கிற பக்குவம் நமக்குத் தேவை. தேவையற்ற பயம், அவசியமற்ற கவலை, அடுத்தவரின் கருத்துகளுக்கு அதிக மதிப்பு கொடுக்கிற மனப்பான்மை ஆகியவற்றை முழுவதுமாகக் களைய முடியாவிட்டாலும், அவற்றை உதிர்க்கவா வது கற்றுக்கொள்வதே மகிழ்ச்சியை நம்முள் முழுமையாக மலரச் செய்யும். அதற்காக, நம் செயல்பாடுகள் குறித்த சுயபரிசோதனையை நிறுத்திவிடக்கூடாது. அப்படிச் செய்தால், ஆணவக்காரர்களாகிவிடுவோம்.
மகிழ்ச்சியின் மையப் பகுதி, நம் உள்ளத்தில்தான் உள்ளது. அது, 'தொட்டனைத்தூறும் மணற்கேணி' போல இருக்க, நம் மனதின் முதிர்ச்சி முக்கியம். சிலர்... தேவைப்படும்போது, தம்மையே தோண்டி மகிழ்ச்சி ஊற்றைச் சுவைக்கின்றனர். பலர்... அது பாலைவனச் சோலை என நினைத்து, அதைத் தேடி நித்தமும் அலைகின்றனர்!