அடுத்த நாள், நிறுவனத்தின் வைஸ் பிரசிடென்ட்டை ஏப்பம்விட்டார் புலியார். நிறுவனத்தில் குண்டூசி விழுந்த சலனம்கூட இல்லை. இதனால் குளிர்விட்டுப்போன புலி, நாம் வசிக்க ஏற்ற இடம் இதுதான் என்று தீர்மானித்து செட்டில் ஆனது. அடுத்த நாள் பசிக்கவே இல்லாவிட்டாலும், சும்மா இருக்கட்டுமே என்று ஒரு நபரை அடித்து மூர்ச்சையாக்கி, தனக்குப் பக்கத்தில் இருத்திக்கொண்டது. காபி கோப்பைகளைக் கழுவ வந்த அந்த நபர்தான் அலுவலகத்தின் பியூன். காபி வாங்கச் சென்ற பியூனைக் காணவில்லை என்று மொத்த அலுவலக மும் திமிலோகப்பட்டு, தேடுதல் வேட்டையைத் துவங்கியது. அடுத்த பத்தாவது நிமிடத்தில், ரெஸ்ட் ரூமில் மூர்ச்சையாகிக்கிடந்த பியூனையும், தொடர்ந்து புலியையும் கண்டுபிடித்துவிட்டார்கள். புலியை அடித்துத் துவைத்து, கூண்டுக்குள் அடைத்து ஜூவுக்கு அனுப்பிவைத்தார்கள்!
நீதி உங்களுக்கான நட்பு அல்லது மரியாதையை நிர்ணயிப்பது உங்கள் பதவியோ, செல்வமோ கிடையாது. நீங்கள் மற்றவர்களுக்கு எவ்வளவு உதவியாக இருக்கிறீர்கள் என்பதைப் பொறுத்தது அது!
இப்படி, குட்டிக் குட்டிக் கதைகள், அதற்கான நீதிகள்தான் 'Tiger in the Toilet' புத்தகம் முழுக்க. அனுதின அவசர ஓட்டத்தில் காபி பிரேக், கமர்ஷியல் பிரேக் இடைவேளைகளில்கூடப் படித்து ரசிக்கக்கூடிய புத்தகம்.
கதை இந்தியா மீது படையெடுக்க அலெக்சாண்டர் ஆயத்தமானபோது, அவரது மனைவி தனது ஆசை என்று இப்படிக் கூறினார்; 'இந்தியாவில் 'ரிஷி'கள் எனப்படும் முனிவர்கள் தவ வலிமையால் அதீத புத்திசாலித்தனத்துடன் இருப்பார்கள். அப்படி ஒரு 'ரிஷி'யை எனக்கு இந்தியாவில் இருந்து வரும்போது எனக்காகக் கொண்டுவாருங்கள்!' படையெடுப்பு முடிந்ததும், பிரபலமான ஒரு ரிஷியைக் கண்டுபிடித்துத் தன்னோடு வருமாறு பணித்தார் அலெக்சாண்டர். ரிஷி நிர்தாட்சண்யமாக மறுத்துவிட்டார். அதுவரை, அலெக்சாண்டரின் வார்த்தைக்கு யாரும் மறு வார்த்தை பேசியது இல்லை. உச்சகட்ட கோபத்தில் உறையில் இருந்து தன் வாளை உருவினார் அலெக்சாண்டர். அதைப் பார்த்ததும் ரிஷி முகத்தில் பிரகாசமான புன்னகை. அதுவரை அலெக்சாண்டரின் வாளைப் பார்த் தும் யாரும் சிரித்ததும் இல்லை. கோபத்தையும் தாண்டி ஆச்சர்யத்தில் வளைந்தன அலெக்சாண்டரின் புருவங்கள். 'நீ ஏன் சிரிக்கிறாய்? நான் இப்போது உன்னைக் கொல்லப்போகிறேன் தெரியுமா...' என்றார் அலெக்சாண்டர்.
''நீ உனது வாளைப் பயன்படுத் தும் முன் இரண்டு விஷயங்களைப் புரிந்துகொள். அந்த வாளால் நீ என்னைக் கொல்ல முடியாது என்பது முதல் சங்கதி. இரண்டாவது, நீ எனது அடிமைக்கு அடிமையாக இருக்கிறாய்!''
புரியாமல் விளக்கம் கேட்டார் அலெக்சாண்டர். ''அந்த வாளால் என் உடலைத்தான் உன்னால் வெட்டி வீச முடியும். ஆனால், 'நான்' என்பது இந்த உடல் கிடையாது!''
ஏதோ புரிந்தும் புரியாமல் தலைஅசைத்த அலெக்சாண்டர், ''ஆனால், நான் இந்த உலகத்தின் பேரரசன். என்னை எப்படி உனது அடிமை யின் அடிமை என்றாய்?'' என்று கேட்டார்.
''ஆசை, கோபம் என்ற இரண்டு குணங்களையும் நான் கட்டுப்படுத்தி எனக்கு அடிமையாக வைத்திருக்கிறேன். நான் எப்போதும் அவற்றின் கட்டுப்பாட்டுக்குள் செல்ல மாட்டேன். மாறாக, அவைதான் எப்போதும் என் கட்டுப்பாட்டில் இருக்கும். ஆனால், உன்னைப் பொறுத்தவரை, என்னிடம் அடிமையாக இருக்கும் ஆசை, கோபம் என்ற அடிமைகளிடம் நீ அடிமையாக இருக்கிறாய். அப்படியானால் நான் சொன்னது உண்மைதானே!'' என்பது ரிஷியின் பதில்.
நீதி எப்போதும் அடிமைக்கு அடிமை ஆகாதீர்கள்!
கதை கடும் கோபத்தில் அந்த முதலாளி தனது ஊழியரிடம் கத்தினார். 'நான்தான் இங்கு முதலாளி. நீ ஒன்றுமே இல்லை. வெறும் பூஜ்யம். புரிகிறதா! இப்போது சொல், நீ யார்?'
ஊழியர் அமைதியாகப் பதில் அளித்தார்... 'பூஜ்யம்!'
'அப்படியானால் நான் யார்?' முதலாளியின் அடுத்த கேள்வி.
'பூஜ்யத்தின் முதலாளி'!
நீதி உங்களுக்குக் கீழ் இருப் பவர்களை மதிப்பானவர்களாக நியமித்து, மதிப்பானவர்கள் மதிப் பவராக உங்களை நீங்கள் தகுதிப் படுத்திக்கொள்ளுங்கள்!
கதை தனது 99-வது பிறந்த நாளைக் கொண்டாடிக்கொண்டு இருந்த ஒரு முதியவரைப் பேட்டி கண்டார் அந்த நிருபர். பேட்டி முடிந்து விடை பெறுகையில், 'நல்லது ஐயா... உங்களைச் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி. அடுத்த வருடம் நீங்கள் நூறாவது பிறந்தநாளைக் கொண்டாடும்போதும், நான் உங்களைச் சந்திப்பேன் என்று நம்புகிறேன்!'' என்றார் நிருபர்.
சின்னப் புன்னகையுடன் பதில் அளித்தார் அந்தப் பெரியவர்... ''இளைஞனே... நீ என்னைவிட ஆரோக்கியமாகத்தான் இருக்கிறாய். அடுத்த வருடம் நிச்சயம் நீஎன்னைச் சந்திப்பாய் என்று நான் நம்புகிறேன்!''
நீதி எப்போதும் தன்னம்பிக்கையுடன் இருங்கள்!
இறுதியில் ஒரு சுவாரஸ்யமான கேள்வி...
கேள்வி ஒரு மரத்தின் கிளையில் மூன்று தவளைகள் அமர்ந்திருக்கின்றன. அதில் ஒன்று கீழே சலசலத்து ஓடும் ஆற்றில் குதிக்க முடிவெடுக்கிறது. இப்போது மரக் கிளையில் எத்தனை தவளைகள் இருக்கும்?
பதில் மூன்று!
எப்படி? அந்த தவளை குதிக்கலாம் என்றுதான் முடிவு எடுத்தது. ஆனால், குதிக்கவில்லை!
இதில் நீதி என்பதையெல்லாம் விடுத்து, இப்படி யோசித்துப்பாருங்கள். நம்மில் எத்தனை பேர் அந்த தவளை கணக்காக முடிவெடுத்து ஆனால், செயல்படுத்தாமல் இருக்கிறோம்?
நாம் தயங்கினாலும் தவிர்த்தாலும், தினசரி வாழ்வில் நாம் எத்தனையோ முடிவுகள் எடுக்க வேண்டி இருக்கிறது, சில சுலபமா னவை... பல கடினமானவை!
ஆனால், முடிவெடுக்கவே தயங்கிப் பயந்து ஒதுங்கும் பழக்கம் நம்மில் பலரிடையே இருக்கிறது. தவறான முடிவெடுப்பதால் சில பிழைகள் ஏற்படும்தான். ஆனால், முடிவே எடுக்காமல் இருப்பதால், அதைக் காட்டிலும் அபாயகரமான தவறுகள் நிகழும். நாம் நமது முடிவுகளின் விளைவுகளுடன் வாழப் பழக வேண்டும்