ஒரு குடம் தண்ணி ஊத்தி.... ஒரே பூ பூத்துச்சாம் !
ரவி தேஜா... வீட்டில் ஒரே குழந்தை. அக்கம் பக்கத்தில் அவனுடன் சேர்ந்து விளையாடும் வயதில் குழந்தைகள் யாரும் இல்லாததால், தனியாகத்தான் விளையாடுவான். கிரிக்கெட் பேட்டை வைத்து, பந்தை அடித்து அடித்து விளையாடும் நேரங்களில் அவனுக்கே, அவனை நினைத்து பாவமாக இருக்கும்!
குழந்தையாக இருக்கும்போது வறுமை மட்டும் கொடுமை அல்ல; இப்படி விளையாட சரியான தோழமை இல்லாததும் கொடுமைதான்! என்னிடம் பேசிய பல குழந்தைகள், 'தோழமை இல்லை' என் பதை தங்கள் மழலையில் திக்கித் திணறி சொல்லும் போது, 'என் வேலை எல்லாம் தூக்கிப் போட்டுவிட்டு, இவர்களுடன் கொஞ்ச நேரம் விளையாடினால் என்ன தவறு...?' என்று நினைப்பேன். சில நேரங்களில் சின்னச் சின்னதாக விளையாடியும் இருக்கிறேன்.
ஒரு குடும்பத்தில் நான்கைந்து குழந்தைகள் இருந்து, அவையெல்லாம் வீட்டுக்குள்ளேயே கண்ணாமூச்சி விளையாட்டு விளையாடி, பொழுதைக் கழித்த அற்புதமான அனுபவங்களுக்கு... இரண்டு தலைமுறைக்கு முன்பே 'முற்றும்' போடப்பட்டு விட்டது, பெருகும் மக்கள்தொகை பிரச்னை. இன்றைய தலைமுறையில் வீட்டுக்கு ஒரு குழந்தை! அந்தக் குழந்தை, தன் வீட்டுக்குள் தோழன், தோழிகளோடு ஆனந்தமாக விளையாடும் வகையில் சகோதர, சகோதரி உறவுகள் இல்லை.
இன்றைய வாழ்க்கைச் சூழலில் அக்கம் பக்கத்தில் இருப்பவர்களுடன் நட்புறவு கொண்டாடுவதற்குகூட நேரம் இல்லாததால், பக்கத்து வீட்டில் சாத்திய கதவுகளுக்குள் இருக்கும் மனிதர்களின் முகம் தெரியாமலேயே நாட்களை நகர்த்துகிறோம். இந்தச் சூழ்நிலையில் குழந்தையுடன் சேர்ந்து விளையாட வேண்டியது யார்? சந்தேகமில்லாமல், உங்கள் ஆசைக் குழந்தையைப் பெற்றெடுத்த நீங்களும், உங்கள் கணவரும்... குழந்தைகளின் தாத்தா, பாட்டியும்தான்!
''என்ன டாக்டர் வெளையாடுறீங்களா நீங்க? சமைக்கறதுக்கும் குடும்பத்தைப் பாத்துக்கறதுக்குமே நேரமில்ல. இதுல அவகூட சேர்ந்து விளயாடணுமா?'' என்று உணர்ச்சிவசப் படாதீர்கள். 'நேரமில்லை' என்ற காரணம், உங்கள் குழந்தையை 'ஒபிஸிட்டி'க்குள் தள்ளலாம். ஏனென்றால், சேர்ந்து விளையாடுவதற்கு ஆள் இல்லாத குழந்தைகள் பெரும்பாலான நேரம் டி.வி. பெட்டியின் முன் உட்கார்ந்து கொண்டு, 'பென்-10' சீரியலையும், பவர் ரேஞ்சர்களின் சாகஸத்தையும் சிப்ஸ் சாப்பிட்டுக் கொண்டே ரசிக்கின்றன. விளைவு... ஒபிஸிட்டி பிரச்னையும், பாடங்களில் அக்கறையின்மையும் உருவாகிறது.
குழந்தைக்கு இத்தகைய பிரச்னைகள் வராமல் தடுப்பதற்கான தீர்வுகள்... உங்களிடம்தான் இருக்கின்றன. நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் டி.வி. சீரியல்களுக்கு 'பை... பை...' சொல்லிவிட்டு குழந்தையுடன் ஜாலியாக விளை யாடிப் பாருங்கள். உங்களுக்கு உங்கள் பால்ய காலம் மீண்டு வந்தது போல் இருக்கும்; புத்துணர்ச்சியைக் கொடுக்கும் - உங்களுக்கும், குழந்தைக்கும்! குழந்தையுடன் நீங்கள் அரை மணி நேரம் விளையாடினாலும், அந்த 'குவாலிட்டி டைம்'... இருவருக்கும் இடையில் இறுக்கமான பிணைப்பை உண்டு பண்ணும்.
பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்கும் இடையில் அன்பான பிணைப்பு இல்லாத காரணத்தினால்தானே, சில பிள்ளைகள் தடம் பிறழ்கிறார்கள்..? விளையாடும்போது, 'டே தம்பி... அப்படி போடு, இப்படி போடு, அதை எடுத்து வா, இங்க போயி வை' என்று நீங்கள் பேசும்போது, அது 1 - 5 வயதுக்கு உட்பட்ட குழந்தை களிடத்தில் பேசும் திறனையும், ஒரு விஷயத்தை சரியாகச் சொல்லும் திறனையும் வளர்க்கிறது.
யோசித்துப் பாருங்கள் 20, 25 வருடங்களுக்கு முன்பு ஒவ்வொரு வீட்டுத் திண்ணையிலோ, கூடத்திலோ, வாசலிலோ... தாவணி போட்ட அக்கா, பாவாடை-சட்டை போட்ட தங்கை ஆகியோரோடு அவர்களின் அம்மாவும் உட்கார்ந்து தாயம், பல்லாங்குழி விளையாடுவார்கள். அந்த நேரத்தில்தான் அந்த பாவாடைக் குழந்தை பல வார்த்தைகளைக் கற்றுக் கொள்ளும்.
நம் கொள்ளுப் பாட்டி, பாட்டி, அம்மா இவர்களெல்லாம் விளையாடிய பல இண்டோர், அவுட்டோர் கேம்ஸுக்குள் பல விஷய ஞானங்கள் அடங்கியிருக்கின்றன. 'ஒரு குடம் தண்ணி ஊத்தி... ஒரே பூ பூத்துச்சாம், ரெண்டு குடம் தண்ணி ஊத்தி, ரெண்டே பூ பூத்துச்சாம்...' என்று தொடரும் பாட்டில்... ஒரு குழந்தை பள்ளிக்குப் போவதற்கு முன்பே எண்களைத் தெரிந்து கொள்ளும்.
பல்லாங்குழி விளையாடும்போது, 'இந்தக் குழியில் ஆரம்பித்து, இத்தனை முத்துக்களைப் போட்டால், இத்தனையாவது சுற்றில் இந்தக் குழியில் உள்ள அத்தனை முத்துக்களும் நமக்குத்தான் கிடைக்கும்' என்று மனக்கணக்குப் போட்டு விளையாடுவார்கள். இது ஒரு விஷயத்தின் மீது கவனம் குவிக்கும் திறனை அதிகமாக்கும், ஒரு விஷயத்தை இது இப்படித்தான் போகும் என கணிக்கும் விளையாட்டால் மூளையின் செயல்திறன் மேம்படும். அப்படி குழந்தையாக இருக்கும்போது மூளையை விளையாட்டாக பிரயோகப்படுத்தியவர்கள்தான், இன்று ஊர் மெச்சும் உயரத்தில் ஜொலிக்கிறார்கள்.
பூப்பறிக்க வருகிறோம்; பூப்பறிக்க வருகிறோம், கிட்டிப்புல், தாயக்கட்டை, கல்லா- மண்ணா, சில்லு, கிச்சுக்கிச்சு தாம்பாளம், தட்டாங்கல், பாண்டி, பச்சக்குதிரை, களிமண் பொம்மை செய்தல், ஊஞ்சல் என்ற ஏராளமான விளையாட்டுக்கள் குழந்தைகளை மேதைகளாக்கின. அந்த மேதைகளில் நீங்களும் ஒருவராக இருக்கலாம். அப்படினால்... உங்கள் குழந்தைக்கும் அந்த வாய்ப்பைக் கொடுங்கள்.
காரணம், நான் பார்த்த பெரும்பாலான பெற்றோர்கள்... நம் மண் சார்ந்த விளையாட்டுக்களை அலட்சியமாக நினைக்கிறார்கள். 'இந்த விளையாட்டெல்லாம் ஊர் பசங்கதான் விளையாடும், நீ ஏன் விளையாடுற...' என்று திட்டும் பெற்றோர்களே, 'ஓல்ட் இஸ் கோல்ட்'! அது நம் பாட்டன் பூட்டன் விளையாட்டுக்கும்தான்!
குழந்தை விளையாட வீட்டில் விளையாட்டுப் பொருள் இல்லை என்றால்... வீட்டுக்குள் இருக்கும் பொருளை வைத்து என்ன விளையாடலாம் என்பதைக் கற்றுக் கொடுங்கள். அது பணத்தை மிச்சப்படுத்துவதோடு, குழந்தையின் கற்பனைத் திறனையும் தூண்டும். இனி விளையாட்டை... விளையாட்டாக நினைக்க மாட்டீர்கள்தானே பேரன்ட்ஸ்..?!