என்ன புத்தகத்தைக் கொண்டு செல்வார்?
மூன்று மதத் துறவிகளும் கடவுள் மறுப்பாளரும் சந்தித்துக் கொண்ட ஒரு அற்புத நிகழ்வு அது. அவரவர் மதத்தின் மீது அவரவருக்கு எவ்வளவு பற்று இருக்கிறது என்பதைப் பரிசோதிக்க நினைத்த ஒருவர், அந்தத் துறவிகள் ஒவ்வொருவரிடமும் ஒரு கேள்வி கேட்க விரும்பினார். துறவிகளின் அனுமதி கிடைத்ததும் அவர் மூன்று மதத் துறவிகளிடமும் ஒரே கேள்வியைத்தான் கேட்டார். "உங்களை யாருமில்லாத தனித்தீவில் விட்டுவிடுவதாக வைத்துக் கொள்வோம். அப்போது உங்களுடன் ஒரே ஒரு புத்தகத்தை எடுத்துச் செல்லலாம் என்று அனுமதித்தால், நீங்கள் எந்தப் புத்தகத்தை உங்களுடன் எடுத்துச் செல்லுவீர்கள்...?". கேள்வியைக் கேட்டதும் அந்தக் கிறிஸ்துவத் துறவி சொன்னார். "நான் என்னுடன் எப்போதும் பைபிள் இருப்பதையே விரும்புவேன். அதனால், நான் பைபிளைத்தான் எடுத்துச் செல்வேன்..!". முகம்மதியரான அந்தத் துறவி மிகுந்த பெருமையுடன் சொன்னார். "என் உயிரினும் மேலான எங்கள் திருமறையான குர்-ஆன் ஒன்றே, நான் என்னுடன் எடுத்துச் செல்லும் புத்தகமாய் இருக்கும்..!". இந்துத் துறவியோ,"கீதை தவிர உயர்ந்தது எதுவும் உண்டோ. அதுவே நான் எடுத்துச் செல்லும் புத்தகமாய் இருக்கும்..!". கேள்வியைக் கேட்டுப் பதில் பெற்றுக் கொண்டவருக்கு பரம திருப்தி. என்றாலும், கடவுள் உணர்வாளர்கள் அவரவர் மதத்தின் மறைகளை எடுத்துச் செல்ல விரும்புகிறார்கள் என்று தெரிந்து விட்டது... கடவுளை மறுக்கும் அந்த நாத்திகருக்கு மதமோ, மறையோ இல்லையே, அவர் என்ன புத்தகத்தைக் கொண்டு செல்வார் எனத் தெரிந்து கொள்ள விரும்பி.. அவரிடம் திரும்பி அந்தக் கேள்வியைக் கேட்டார் அவர். கடவுளை மறுக்கும் அவர் , சிரித்தபடியே அதற்கு பதில் சொன்னார். "அப்படி ஒரு நிலையில், நான் 'சீக்கிரம் கப்பல் கட்டுவது எப்படி?' என்னும் புத்தகம் கிடைத்தால் அதை எடுத்துச் செல்லவே விரும்புவேன்..!" என்றார். |