பெட்டி நிறையத் தங்கம்
ஒரு பக்தர், கடவுளை நினைத்துத் தவம் இருந்தார். பல நாள் கழித்துக் கடவுள் அவர்முன்னே தோன்றினார். 'பக்தா,உன் தவத்தை மெச்சினோம், என்ன வரம் வேண்டும், கேள்!'
பக்தருக்கு உடம்பெல்லாம் பரவசம். கடவுளுக்கு ஒரு சாஷ்டாங்க நமஸ்காரம் செய்துவிட்டு, 'நிறைய செல்வம் வேண்டும்!' என்றார்.
அப்படியே ஆகட்டும்!' என்று ஆசிர்வாதம் செய்தார் கடவுள். மறுவிநாடி, அவரைக் காணவில்லை. ஆனால், செல்வமும் கிடைக்கவில்லை! பக்தர் குழம்பிப்போனார். ஒருவேளை, நாளைக்குக் கிடைக்குமோ என்று யோசித்தபடி வீட்டுக்கு வெளியே வந்து திண்ணையில் உட்கார்ந்தார். எதேச்சையாகத் தெருவைப் பார்த்தால் அங்கே ஒரு பெட்டி கிடந்தது. அக்கம்பக்கத்தில் யாரையும் காணோம்! ஆச்சர்யத்தோடு அந்தப் பெட்டியை நெருங்கினார் பக்தர். திறந்துபார்த்தார், உள்ளே முழுவதும் தங்கம், வெள்ளி, வைர நகைகள்!
அவர் படாரென்று பெட்டியை மூடினார். அதை வீட்டுக்குள் கொண்டுவந்தார். 'ஒருவேளை, இதுதான் கடவுள் சொன்ன செல்வமாக இருக்குமோ?' ம்ஹூம், இது அநேகமாக யாரோ திருடிய சொத்து. நான் இதை விற்றுப் பணமாக்க முயற்சி செய்தால் போலிஸ் என்னைப் பிடித்து உள்ளே போட்டுவிடும்!' என்றும் அவருடைய உள்மனது சொன்னது. இந்த விஷயத்தில் தெளிவான ஒரு முடிவெடுக்கமுடியாமல் திணறினார்.
அடுத்த ஒன்றிரண்டு நாள்கள் அவர் கவலையோடு சுற்றிக்கொண்டிருந்தார். கடைசியில் பிரச்னையே வேண்டாம் என்று அந்தப் பெட்டியைக் காவல்துறையிடம் ஒப்படைத்துவிட்டார். அன்று மாலை, அவர் தியானத்தில் அமர்ந்தபோது, கடவுள் அவர்முன்னே தோன்றினார். 'பெட்டி நிறைய செல்வம் அனுப்பினேனே, பெற்றுக்கொண்டாயா?' என்று கேட்டார்.
அச்சச்சோ! அது நீ அனுப்பினதா? சொல்லவே இல்ல!' என்றார் பக்தர். 'அதைப் போலிஸ்ல கொடுத்துட்டேனே!'
நீதான் அந்தப் பெட்டி கைக்கு வந்தபிறகு தியானமும் செய்யவில்லை, தவமும் செய்யவில்லை, ஒரு நிமிஷம் கண் மூடி நிற்கக்கூட இல்லை!' என்று சிரித்தார் கடவுள். 'செல்வம் கிடைப்பதற்கு முன்னால் மாதக்கணக்கில் தவம் செய்து என்ன புண்ணியம்? அது கிடைத்தபிறகு ஏற்பட்ட குழப்பத்தை உன்னால் தீர்க்கமுடியவில்லையே!'
மன்னிக்கவேண்டும் கடவுளே, இப்போது நான் என்ன செய்வது?' புலம்பிய பக்தருக்குப் பதில் சொல்லக் கடவுள் அங்கே இல்லை!
தியானத்தை ஒரு வாழ்க்கை முறையாகக் கருதுவதுதான் ஜென்.
அப்படியில்லாமல் கடவுளிடமிருந்தோ, மற்றவர்களிடமிருந்தோ சலுகைகளைப் பெற்றுக்கொள்வதற்கான சாதனமாக அதை உபயோகித்தால் இதுபோன்ற விபரீதங்களைத் தவிர்க்கமுடியாது!