''இப்போவெல்லாம், 'அமெரிக்க மாப்பிள்ளைங்க, இன்ஜினீயரிங் படிச்ச பொண்ணுதான் கேட்கிறாங்க' என்ற காரணத்துக்காகவே, பெண்களை எல்லாம் பொறியியல் படிக்க வைக்கிறாங்க பெற்றோர்கள் பலர். ஆனா, படிச்ச பொண்ணை, பெரும்பாலான அமெரிக்க மாப்பிள்ளைங்க தேடிக் கல்யாணம் பண்றதுக்குக் காரணமே அங்க மனைவியை வேலைக்கு அனுப்பினா காசு கொட்டும், வீட்டு வேலைகளைப் பார்க்கவும் அடிமை கிடைச்ச மாதிரி இருக்கும்ங்கிற நினைப்புலதான். ஆக, ரெட்டை வேலைச்சுமையால வாடி, வதங்கதான் பல பொண்ணுங்களும் அமெரிக்க மாப்பிள்ளைக்கு கல்யாணமாகி இங்க வர்றாங்க.
என் கணவரோட சித்தப்பா பொண்ணையும், அமெரிக்கா மாப்பிள்ளை மோகத்துலதான் கல்யாணம் பண்ணிக் கொடுத்து இங்க அனுப்பி வெச்சாங்க. அவ எவ்வளவோ கெஞ்சியும், 'குழந்தை பிறந்தா வேலைக்குப் போக முடியாது'னு, குழந்தைப் பிறப்பை தள்ளிப் போடச் சொல்லிட்டான் கணவன். 'இப்படி மாசம் லட்சக்கணக்குல சம்பாதிக்கிற பொண்ணு வேணுங்கிறதாலதான், வரதட்சணை எல்லாம் வேண்டாம்னு அவர் என்னைக் கட்டிக்கிட்டாருனு இப்பதான் புரியுது'னு வெறுமையா புலம்புறா அந்தப் பொண்ணு.
சரி, அப்படி சம்பாதிச்சு போடுற மனைவிக்கு அதுக்கு ஈடான அன்பும், சுதந்திரமும் கொடுக்கிறாங்களானா, அதுவும் கிடையாது. எங்க அவ தன் கை மீறிப் போயிடுவாளோனு, அந்த நாட்டோட லைஃப் ஸ்டைல் எதையுமே அவளைக் கத்துக்க விடாம, தன்னைச் சார்ந்திருக்கும் அடிமையாவேதான் வெச்சிருக்க நினைக்கிறாங்க. டிரைவிங் கத்துக்க அனுமதிக்கிறதில்ல, அவங்க கையில கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு கொடுக்கிறதில்ல, நாலு பேரோட பழகும் சந்தர்ப்பங்களைத் தர்றது இல்ல. சம்பாதிச்சிக் கொடுக்கும் அடிமையாத்தான் மனைவி அவங்களுக்கு இருக்கணும்'' என்று விரக்தியோடு சொன்னவர், அடுத்து சொன்னது, பேரதிர்ச்சி ரகம்!
''என் அக்கா தோழியின் கணவர், கிட்டத்தட்ட எட்டு வருஷம் அவளை இப்படி டார்ச்சர் பண்ணிட்டு, ரெண்டு பெண் குழந்தைகளையும் பெத்த நிலையில, மனைவிக்குத் தெரியாம தனக்கு மட்டும் கிரீன் கார்டு வாங்கிட்டார். 'வா... இந்தியா போயிட்டு வரலாம்'னு ஒரு டிரிப் மாதிரி கூட்டிட்டுப் போய், மனைவியையும் பெண்களையும் அங்கயே விட்டுட்டு, அமெரிக்கா வுக்கு திரும்பி வந்துட்டார்.
இந்தியாவுல இருக்கிற கணவனைப் பத்தி, இந்தியாவுல புகார் செஞ்சாலே, வாய்தா மேல வாய்தா போகும். இதுல அமெரிக்காவுல இருக்கிற கணவன் மேல புகார் செஞ்சா, அவனை இந்தியாவுக்கு வர வைக்கிறது ரொம்ப கஷ்டம். அப்படியே கேஸ் போட்டாலும், அது சம்பந்தப்பட்ட பொண்ணுக்கு ஒரு கட்டத்துக்கு மேல தாங்க முடியாத மனச்சோர்வையும், பணக் கஷ்டத்தையும் தரும். அதுக்குப் பயந்தே ஏமாற்றுக் கணவன், சைக்கோ கணவன், டார்ச்சர் கணவன் மேலயெல்லாம் பல பெண்கள் கேஸ் போடுறதில்ல.
இந்திய நிறுவனத்துக்காக, அமெரிக்காவில் இருந்தபடி வேலை பார்க்கிற ஆண் (ஆன் சைட்) மேல, இந்தியாவில் இருக்கும் அவனோட நிறுவனத்தில் புகார் செய்தா, அவனை வேலையை விட்டு நீக்கறதுக்கு கொஞ்சமாச்சும் வாய்ப்பிருக்கு. ஆனா, இங்கிருந்தபடி இந்திய கம்பெனிக்காக 'ஆன் சைட்'ல வேலைக்குப் போயிட்டு, அப்படியே அமெரிக்க கம்பெனியில வேறு வேலைக்கு மாறிட்டா, அமெரிக்க சட்டத்துக்குள்ள அவன் வந்துடுவான். அப்புறம் சட்டம் ரொம்ப சிக்கலாயிடும்.
அதேசமயம், இங்க விவாகரத்து சுலபமா கிடைக்கும். ஆனா, அந்த இந்திய தம்பதியின் குழந்தை அமெரிக்காவுல பிறந்திருந்தா, சட்டப்படி அது அமெரிக்காவோட சொத்து. இந்தியாவுக்கு தன்னோட அம்மாவால நிரந்தரமா அழைச்சுட்டு போக முடியாது. அப்பா, அமெரிக்க அரசாங்கத்துகிட்ட புகார் (ஆம்பர் அலர்ட்) கொடுத்தா, அமெரிக்க போலீஸ் நேரா இந்தியாவுக்கே வந்து குழந்தையைத் தூக்கிட்டு போயிடுவாங்க. ஆக, தன் மனைவியை குழந்தையை வெச்சு பழிவாங்க கணவன் நினைச்சுட்டா, அது அவனுக்கு சாதகமாத்தான் இருக்கும்.
ஒருவேளை குழந்தையோட அமெரிக்காவிலேயே இருந்தாலும், 'விசிட்டேஷன் மெயின்டெனன்ஸ் ரைட்ஸ்' அப்படிங்கற சட்டப்படி அப்பாங்கற உரிமையோட அந்தக் குழந்தையைப் பார்க்க வரும் கணவன், அதுகிட்ட அதன் அம்மாவைப் பற்றி தப்பா சொல்லிக் கொடுத்து, மனசைக் கரைச்சு, அம்மாவுக்கு எதிரா திருப்பின சம்பவங்கள் நிறையவே எனக்குத் தெரியும்.
மொத்தத்துல, தன் மனைவி கஷ்டப்படணும்னு அமெரிக்க மாப்பிள்ளை நினைச்சுட்டா, அது சுலபம். அவன்கிட்ட இருந்து தப்பிக்கணும்னு நம்ம இந்தியப் பொண்ணு நினைச்சா, அது ரொம்ப கஷ்டம்.
இப்படிப்பட்ட சிக்கல்களுக்கெல்லாம் பயந்துதான், 'இவன் கூடவே குப்பை கொட்டிடலாம்'னு சகிச்சுட்டு பல பெண்கள் அவதிப்படறாங்க. இந்த எண்ணம் இப்ப இருக்கிற யங்க்ஸ்டர்ஸ்கிட்ட நிறையவே இருக்கு. ஒருவேளை, பொண்ணுக்கு அமெரிக்காவுல டிவோர்ஸ் கிடைச்சுட்டாகூட, அந்தப் பொண்ணை இந்தியாவுக்கு வரவிடாம பார்த்துக்கிறதுலதான் மும்முரமா இருக்காங்க பெத்தவங்க. காரணம்... ஊர் பேச்சு கொல்லுமேங்கற பயம்தான். அதனாலேயே 'என் பொண்ணு ரொம்ப பிஸியா இருக்கா'னு மெயின்டெயின் பண்ணுவாங்க. அப்படியே தனியா இந்தியா வந்தாலும், 'அவ ஹஸ்பண்ட் ரொம்ப பிஸி'னு சமாளிப்பாங்க.
இதையெல்லாம் சொன்னதுமே, அமெரிக்காவுல இருக்கற இந்திய மாப்பிள்ளைகள் எல்லாருமே இப்படித்தான்னு பெற்றோர்கள் பயப்படத் தேவையில்லை. ஆனா, அமெரிக்க மாப்பிள்ளை, வெளிநாட்டு வேலையில இருக்கிற மாப்பிள்ளைனு சந்தோஷமா பொண்ணைக் கொடுக்கிறதுக்கு முன்ன... அந்த சந்தோஷத்துக்கு கியாரன்டி இருக்கானு ஒரு தடவைக்கு நாலு தடவை யோசிக்க மறக்காதீங்க''
- கனத்த மனதுடன் பேசி முடித்தார் அந்த வாசகி.
சொந்தமில்லை... பந்தமில்லை!
தன் பேச்சினூடே அந்த வாசகி சொன்ன ஒரு விஷயம், கல்லையும் கரைப்பதாக இருந்தது. அது -
''இந்தியாவைச் சேர்ந்த 55 வயசான பெரும் பணக்காரப் பெண்மணியை எனக்கு நல்லா தெரியும். முப்பது வருஷத்துக்கு முன்ன கணவரோட டார்ச்சர் காரணமா பிரிஞ்சு வாழ ஆரம்பிச்சாங்க. சின்னச் சின்ன வேலைகளுக்குப் போய், நைட் ஷிப்ட் பார்த்துனு குழந்தையை ஆளாக்கினாங்க. ஆனா, சட்டரீதியான உரிமையைப் பயன்படுத்திக்கிட்டு, குழந்தையைப் பார்க்க வர்றப்ப எல்லாம் மனசை கரைச்சு அவங்ககிட்ட இருந்து குழந்தையைப் பிரிச்சுட்டார் கணவர். இன்னிக்கு பேரு, பணம் எல்லாம் இருந்தும்கூட, மகன் இல்லாம தனியா தவிச்சுட்டிருக்காங்க அந்தப் பெண்மணி.
கல்யாணமாகி, நிறைஞ்ச முகத்தோடதான் அமெரிக்கா போறாங்க. ஆனா, கணவன் - மனைவிக்கு இடையில பிரச்னை வந்துட்டா, வயசான காலத்துல ஊர் திரும்பறப்ப... சொந்தம்னு யாருமே இல்லாம, குழந்தையும்கூட இல்லாம தனிச்சு வர்ற நிலைமையிலதான் பல பெண்கள் வாழ்ந்துட்டிருக்காங்க''.