Thursday, June 12, 2014

தயாரித்த விடைகள் வாழ்க்கையில் வெற்றிகளைத் தருவதில்லை;


ன்மிகத்தை போதிப்பவர்கள், தயாரிக்கப்பட்ட விடையைத் தந்து சீடர்கள் தேர்ச்சி பெறுவதை விரும்புவதில்லை. உண்மையைத் தேடுவதுதான் முக்கியமே தவிர, தேர்வுக்குப் படிக்கும் மாணவனைப்போல், விடையைக் கண்டு பிடிப்பது முக்கியம் அல்ல. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரியான தேர்வு நடக்கும் பயிற்சி அது!

யூத மதத்தைச் சார்ந்த ராபி ஷ்வார்ட்ஸின் வீட்டுக் கதவை, 20 வயதுள்ள இளைஞன் ஒருவன் தட்டினான்.  


'என் பெயர் ஸீன் கோல்ட்ஸ்டீன். நான் 'தால்மத்' கற்பதற்காக உங்களிடம் வந்திருக்கிறேன்' என்றான்.  

'உனக்கு அராமிக் தெரியுமா?' என்று கேட்டார் ராபி.

'தெரியாது!'

'ஹீப்ரூ?'

'தெரியாது!'

'நீ தோராவைப் படித்திருக்கிறாயா?'

'இல்லை. ஆனாலும், கவலைப்படாதீர்கள். நான் தத்துவத்தில் பட்டம் பெற்றிருப்பதுடன், சாக்ரடீஸின் தர்க்கத்திலும் டாக்டர் பட்டம் பெற்றிருக்கிறேன். தால்மத் பற்றிப் படித்து, என் படிப்பை நிறைவு செய்யலாம் என்று கருதுகிறேன்' என்றான் அவன்.

அதற்கு ராபி, 'நல்லது. நீ தால்மத்தைப் படிக்கவேண்டுமென்று விரும்புகிறாய். அது மிகவும் ஆழமான புத்தகம். உனது தர்க்க அறிவைப் பரிசோதிக்க விரும்புகிறேன். அதில் நீ வெற்றிபெற்றால், உனக்கு அதைச் சொல்லித் தருகிறேன்' என்றார். 

இளைஞனும் அதற்கு ஒப்புக்கொண்டான். ராபி இரண்டு விரல்களைக் காட்டி, 'இரண்டு பேர் சிம்னியிலிருந்து இறங்கி வருகிறார்கள். ஒருவரது முகம் சுத்தமாக இருக்கிறது. மற்றவருடைய முகம் அழுக்காக இருக்கிறது. இருவரில், யார் முகத்தைக் கழுவுவார்?' என்று கேட்டார்.

'இதென்ன கேள்வி? அழுக்கான முகத்தோடு இருப்பவரே கழுவுவார்!' என்றான் இளைஞன். 

'தவறு! தூய்மையான முகத்தை உடையவரே கழுவுவார்.  யோசித்துப் பார்... அழுக்கான முகத்துடன் இருப்பவர் சுத்தமான முகத்துடன் இருப்பவரைப் பார்த்து, தன் முகமும் அதேபோல் சுத்தமாக இருப்பதாகவே நினைத்துக்கொள்வார். சுத்தமாக இருப்பவரோ அழுக்கானவரின் முகத்தைப் பார்த்து, தன் முகமும் அழுக்காக இருப்பதாக நினைத்துக்கொள்வார். எனவே, சுத்தமான முகம் உடையவரே முகத்தைக் கழுவுவார்' என்றார் ராபி.
'மிகவும் சாமர்த்தியமான பதில்தான். இன்னொரு கேள்வி கேளுங்கள். இம்முறை சரியாக பதில் சொல்கிறேன்!' என்றான் இளைஞன். 

ராபி மீண்டும் இரண்டு விரல்களைக் காட்டி, ''இரண்டு பேர் சிம்னியிலிருந்து இறங்கி வருகிறார் கள். ஒருவரது முகம் சுத்தமாக இருக்கிறது. மற்றவருடையது அழுக்காக இருக்கிறது. யார் முகத்தைக் கழுவுவார்?' என்று கேட்டார். 

'மீண்டும் அதே கேள்வியா? இதற்கான பதில் ஏற்கெனவே தெரிந்ததுதானே? தூய்மையான முகத்துடன் இருப்பவர்தான் கழுவுவார்' என்றான் இளைஞன்.  
'தவறு! இருவருமே தங்கள் முகத்தைக் கழுவுவார்கள். ஒரு சின்ன லாஜிக்கை நினைத்துப் பார். அழுக்கு முகத்துடன் இருப்பவர், சுத்தமான முகத்துடன் இருப்பவரைப் பார்ப்பார். எனவே, தனது முகமும் சுத்தமாக இருப்பதாக நினைப்பார். சுத்தமாக இருப்பவரோ அழுக்கானவரின் முகத்தைப் பார்த்து, தனது முகமும் அழுக்காக இருப்பதாக நினைத்துத் தன் முகத்தைக் கழுவுவார். அதைப் பார்த்து, அழுக்கான முகம் உடையவரும் முகத்தைக் கழுவுவார்.  எனவே, இருவருமே தங்கள் முகத்தைக் கழுவுவார்கள்!'

'நான் இதை யோசித்துப் பார்க்கவில்லை.  எனது தர்க்கத்தில் இப்படியொரு தவறு இருக்கும் என்பது அதிர்ச்சியாக இருக்கிறது.  மறுபடியும் என்னைப் பரிசோதியுங்கள்!'

ராபி மீண்டும் இரண்டு விரல்களைக் காட்டி, 'இரண்டு பேர் சிம்னியில் இருந்து இறங்கி வருகிறார்கள். ஒருவரது முகம் சுத்த மாக இருக்கிறது,

மற்றவருடையது அழுக்காக இருக்கிறது. யார் முகத்தைக் கழுவுவார்?' என்று கேட்டார்.

''இருவருமே முகத்தைக் கழுவுவார்கள்!'

'தவறு. இருவருமே கழுவமாட்டார்கள்.  அழுக்கான முகத்துடன் இருப்பவர், சுத்தமான முகம் உள்ளவரைப் பார்த்து தனது முகமும் தூய்மையாக இருக்கிறது என்று நினைத்துக் கொள்வார். சுத்தமான முகம் இருப்பவரோ மற்றவரைப் பார்த்து, தன் முகம் அழுக்காக இருப்பதாக நினைத்துக்கொள்வார். ஆனால், அழுக்கான முகம் உடையவர் தன் முகத்தைக் கழுவாததைப் பார்த்துத் தானும் கழுவமாட்டார். எனவே, இருவருமே முகத்தைக் கழுவ மாட்டார்கள்!' என்றார் ராபி.

இளைஞனான கோல்ட்ஸ்டீன் பதற்றம் அடைந்தான். 'நான் தால்மத்தைக் கற்க வேண்டும். தயவுசெய்து எனக்கு இன்னொரு தேர்வு வையுங்கள்' என்று கேட்டுக்கொண்டான்.

ராபி சிரித்துக்கொண்டே மீண்டும் இரண்டு விரல்களைக் காட்டி, 'இரண்டு பேர் சிம்னியிலிருந்து இறங்கி வருகிறார்கள்.  ஒருவரது முகம் சுத்தமாக இருக்கிறது, மற்றவருடையது அழுக்காக இருக்கிறது. யார் முகத்தைக் கழுவுவார்?' என்று கேட்டார். 

'இருவருமே கழுவமாட்டார்கள்!'

'தவறு! உங்கள் சாக்ரட்டீஸ் தர்க்கம் தால்மத்தைப் படிக்க போதுமானதாக இல்லை என்பதை உணர முடிகிறதா கோல்ட்ஸ்டீன்? இரண்டு பேர் ஒரே சிம்னியிலிருந்து இறங்கி வரும்போது, ஒருவர் மட்டும் தூய்மையான முகத்துடனும், இன்னொருவர் அழுக்கான முகத்துடனும் எப்படி இருக்க முடியும்? எனவே, கேள்வியே முட்டாள்தனமானது என்று புரியவில்லையா? முட்டாள்தனமான கேள்வி களுக்குப் பதில் சொல்ல முயன்றால், விடைகளும் முட்டாள்தனமாகத்தான் இருக்கும்' என்றார் ராபி.  
விஞ்ஞானத்தில் ஒருவர் ஓர் உண்மையைக் கண்டுபிடித்துவிட்டால், மற்றவர்கள் அதை மீண்டும் கண்டுபிடிக்கத் தேவையில்லை;   பயன்படுத்தினால் போதும். ஆனால், மெய்ஞ்ஞானத்தில் ஒவ்வொரு வருக்கும் தனித்தனிப் பாதைகள் இருக்கின்றன.  ஒருவருடையதை இன்னொருவர் ஒருபோதும் பயன்படுத்த முடியாது. சில நேரங் களில் மற்றவர்களுடைய உபதேசங்கள் பயன்படாது. எந்தச் சூழலில் எந்த உபதேசம் என்பதைப் பொறுத்தே, அது முக்கியத் துவம் பெறுகிறது. 

புத்தரிடம் நிறையப் பேர் வந்து கேள்விகள் கேட்பார்கள்.  அவர் ஒருபோதும் தன்னுடைய போதனையை எழுதச் செய்தது இல்லை. 

ஒருமுறை, காலை நேரத்தில் ஒருவர் அவரிடம் வந்து, 'கடவுள் இருக்கிறார் அல்லவா?' என்று கேட்டார்.

'இல்லை' என்றார் புத்தர்.

மதியம் ஒருவர் வந்து கேட்டார்: ''கடவுள் இல்லைதானே?'

'இருக்கிறார்' என்று பதில் சொன்னார்.

மாலையில் ஒருவர் வந்து, 'கடவுள் இருக்கிறாரா, இல்லையா என்று எனக்குத் தெரியவில்லை!' என்றார். உடனே புத்தர், 'நீ சரியான கேள்வியைக் கேட்கிறாய்' என்றார். 

புத்தருக்கு அருகிலேயே இருந்த அவருடைய ஒன்றுவிட்ட சகோதரர், இந்தப் பதில்களால் குழம்பினார். இரவில் புத்தரிடம் அவர், ''நீங்கள் ஒரே கேள்விக்கு மூன்று விதமான பதில்களைச் சொன்னீர்களே... ஏன்?' என்று கேட்டார்.
'கேள்வி கேட்டவர்களுக்கு ஏற்றவாறு என் பதில் இருந்தது' என்றார் புத்தர்.
'ஆனால், மூன்று கேள்விகளின்போதும் நான் இருந்தேனே, அவற்றைக் கேட்டு எனக்குக் குழப்பம் அல்லவா ஏற்பட்டுவிட்டது' என்றார் அந்தச் சகோதரர்.

'காலையில் வந்தவர், 'கடவுள் இருக்கிறார்' என்று ஏற்கெனவே முடிவு செய்துகொண்டு வந்து, என்னிடம் அந்தக் கேள்வியைக் கேட்டார். எனவே 'இல்லை' என்று பதில் சொன்னேன்.  அதனால் அவர் சுயமாகத் தேடத் தொடங்குவார்.  மதியம் வந்தவர், 'கடவுள் இல்லை' என்று முடிவுசெய்துவிட்டு, என்னிடம் வந்து கேட்டார்.  அவரிடம் 'இருக்கிறார்' என்று சொன்னால்தான் தானாகத் தேடலைத் தொடங்குவார். மூன்றாம் நபரோ, ஏற்கெனவே தேடிக் கொண்டிருக்கிறார். எனவே, அவர் பார்வை சரியானது என்று விளக்கினேன். கேள்விகளுக்கு நான் பதில் அளிப்பதில்லை.  கேள்வி கேட்பவர்களைப் பொறுத்தே பதில் அளிக்கிறேன்'' என்று  விளக்கினார் புத்தர்.

குருகுலம் என்ற கல்விமுறை இருந்தபோது, மாணவர்களின் தன்மைக்கு ஏற்ப கல்வி போதிக்கப் படும். எல்லோருக்கும் ஒரே பாடத் திட்டம் இல்லை. அவரவரது ஆர்வம், திறமை, தகுதி, சாத்தியக்கூறுகள் போன்றவற்றை குரு ஆராய்ந்து, அவற்றுக்கேற்ப கல்வி போதிப்பார். ஒரே மாதிரியான மாணவர்களை உருவாக்குவதில் அன்றைய குருமார்களுக்கு உடன்பாடு இல்லை. 

தேர்வில் சரியாகக் கணக்குப் போடத் தெரிந்தவர்கள் எல்லாம் வாழ்க்கையில் வெல்லுவார்கள் என்று சொல்ல முடியாது. இதற்கு யூத உருவகக்கதை ஒன்று உண்டு.

மோ என்கிற மாணவன் மோசமான படிப்பாளி.  அவனுடைய உறவினர் டேனியோ வகுப்பில் எல்லாவற்றிலும் முதல் மதிப்பெண். படிப்பை முடித்ததும், மோ தொட்டதெல்லாம் பொன்னானது! டேனியோ சுமாரான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்தான்.

ஒருமுறை, மோ வாங்கிய லாட்டரிச் சீட்டுக்கு முதல் பரிசு கிடைத்தது. அதற்கு மேலும் டேனியால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அவன் மோவிடம் சென்று, 'இம்முறை நீ எப்படி வென்றாய்?' என்று கேட்டான்.
'சொல்கிறேன். நான் லாட்டரிச் சீட்டு வாங்கு வதற்கு முதல் நாள் இரவு ஒரு கனவு கண்டேன். அதில் தேவதைகள் கூட்டமாக இனிய பாடல் ஒன்றைப் பாடினர். ஏழு வரிசைகளில் எட்டு தேவதைகள். அதன் பிறகு நான் சற்றும் யோசிக்கவில்லை. அடுத்த நாள் கடைக்குச் சென்றேன். ஏழையும் எட்டையும் பெருக்கி, 63 என்கிற எண்ணில் முடிகிற பரிசுச்சீட்டை வாங்கிவிட்டேன். முதல் பரிசும் பெற்றுவிட்டேன்' என்றான் மோ.

'முட்டாளே! ஏழையும் எட்டையும் பெருக் கினால் 63 எப்படி வரும்? 56 அல்லவா வரும்?' என்றான் டேனி.

'அடடே, அப்படியா! சரி, டேனி. இன்னமும் நான் கணக்கில் வீக்தான். உனக்குத்தான் கணக் கில் எல்லாம் தெரிகிறது' என்று சிரித்தான் மோ.
சரியாகக் கணக்குப் போடுவது வாழ்க்கையில் வெற்றிகளைத் தருவதில்லை; தயாரித்த விடைகள் பயனளிப்பதில்லை.