நம்முடைய நாட்டுப்புறக் கதைகளிலும், வாழ்க்கையின் சிக்கலுக்கு எப்படித் திறமையாக விடைகாண முடியும் என்று சொல்லித்தரப் பட்டிருக்கிறது. ஸ்ரீதேவி என்பது லட்சுமியையும், மூதேவி என்பது துர்தேவதையையும் குறிக்கும். ஸ்ரீதேவி வந்தால் வளம்; மூதேவி வந்தால் அழிவு. ஒருவனிடம் ஸ்ரீதேவி, மூதேவி இருவரும் வந்து, 'எங்களில் யார் அதிக அழகு?' என்று கேட்டார்கள்.
ஒருவரை அழகு என்று சொன்னால், அடுத்தவர் கோபம் கொண்டு தன்னைத் தண்டித்துவிடுவாரே என்று, பதில் சொல்லத் தயங்கினான் அவன். லட்சுமி அவனைவிட்டு அகன்றுவிட்டாலோ, மூதேவி அவனைச் சபித்துவிட்டாலோ அவனால் மீள முடியாதே! இருவரையும் திருப்தி செய்யும்படியாக ஒரு பதிலைச் சொல்ல வேண்டும். அதே நேரம், உண்மையையும் சொல்ல வேண்டும். சற்றே யோசித்தவன், இருவரையும் நடைபயிலச் சொன்னான். பின்பு ஸ்ரீதேவியிடம், 'நீங்கள் வரும்போது அழகு' என்றும், மூதேவியிடம் 'நீங்கள் போகும்போது அழகு' என்றும் சாமர்த்தியமாகச் சொல்லித் தப்பித்தான் என்று நாட்டுப்புறக் கதை ஒன்று உண்டு. சமயோசிதமாகப் பதில் சொல்வதில் அவன் சிறிது பிறழ்ந்திருந்தாலும், அவன் கதை கந்தலாகி இருக்கும்.
கஞ்சர்களைப் பற்றி ஊரகப் பகுதிகளில் ஒரு கதை உண்டு.
யாருக்கும் எதுவும் தராத மகா கஞ்சன் ஒருவன் இருந்தான். ஒருநாள் அவனை வெள்ளம் அடித்துக்கொண்டு போனது. அந்தப் பக்கமாகச் சென்றுகொண்டிருந்த வெளியூர்க்காரன் ஒருவன் அந்தக் கஞ்சனைக் காப்பாற்றும் உத்தேசத்தில், 'கையைக் கொடு, கையைக் கொடு' என்று கரையில் இருந்து கத்தினான். ஆனால், கஞ்சனோ அதை அலட்சியப்படுத்தி, நீரின் போக்கில் சென்றுகொண்டிருந்தான்.
ஊர்க்காரர்கள் அந்தப் புதியவனிடம், 'அவன்தான் மகா கஞ்சனாயிற்றே! கையைக் கொடு என்று கேட்டால், அவன் எப்படித் தருவான்? என் கையை எடுத்துக் கொள் என்று சொல்; உடனே உன் கையைப் பிடித்துக்கொள்வான்!'' என்று சொல்லிச் சிரித்தனர். அதைப் போலவே அந்த வெளியூர்க்காரன், 'என் கையை எடுத்துக் கொள்' என்று சொன்னதும், அவன் கைகளைப் பிடித்துக்கொண்டு கரையேறினானாம் கஞ்சன்.
ராமாயணத்தில் யக்ஷினி வாயில் அனுமன் புகுந்து வெளிவந்த கதையைப் பற்றி ஏற்கெனவே பார்த்தோம். அதையொட்டிய சிந்தனை ஒன்று, ஜப்பான் நாட்டு நாட்டுப்புறக் கதையில் உண்டு.
புத்த மடாலயத்தில் இருந்த சிறுவன் ஒருவன் தலைமைத் துறவியிடம் சென்று, ''நான் போய் மலைக் கிழங்குகளைப் பறித்துக்கொண்டு வரட்டுமா?' என்று கேட்டான்.
'போகாதே! நீ சென்றால், மலையில் இருக்கும் சூனியக்கிழவிகள் உன்னைப் பிடித்துக் கொள்வார்கள்' என்றார் துறவி.
சிறுவனோ போகவேண்டும் என்பதில் குறியாக இருந்தான்.
'சரி, போய் வா! இந்த மூன்று துண்டுக் காகிதங்களை உன்னோடு எடுத்துச் செல். அவை அதிர்ஷ்டத்தைத் தரும் காகிதங்கள். உனக்கு ஏதேனும் பிரச்னை வந்தால், அவற்றை உதவும்படி கேள்!' என்று, மூன்று காகிதத் துண்டுகளைக் கொடுத்து அவனை அனுப்பிவைத்தார் தலைமைத் துறவி. சிறுவன் உற்சாக மிகுதியில் மலைகளில் சுற்றினான். வெகு தூரம் போனான். நிறைய மலைக் கிழங்குகளைப் பறித்துக் கூடையில் போட்டுக் கொண்டான்.அப்போது ஒரு குரல் கேட்டது... 'சிறுவனே, நீ மடாலயத்திலிருந்து வந்திருக்கிறாயா?'
சிறுவன் திரும்பிப் பார்த்தபோது, அங்கே ஒரு கிழவி நின்றிருந்தாள்.
'என்னிடம் இதைவிடச் செழிப்பான கிழங்குகள் இருக்கின்றன. அவற்றை உனக்குத் தருகிறேன். வா, என்னோடு!' என்று நைச்சியமாகப் பேசி, அந்தச் சிறுவனைத் தன் வீட்டுக்கு அழைத்துச் சென்றாள். அவள் தந்த கிழங்குகள் மிகவும் ருசியாக இருந்தன.
'சரி, நள்ளிரவு ஆகிவிட்டது. இங்கேயே படுத்துத் தூங்கு. காலையில் நீ மடாலயம் செல்லலாம்' என்றாள் கிழவி. அதன்படியே, அந்தச் சிறுவன் தூங்கிப் போனான்.
காலையில் எழுந்து பார்த்தபோதுதான், அந்தக் கிழவியின் உண்மையான கோர முகத்தைக் கண்டான் அந்தச் சிறுவன். அவள் அந்த மலையில் இருக்கும் சூனியக்காரி என்பது அவனுக்குப் புரிந்தது. அவளிடமிருந்து எப்படியாவது தப்பிக்கவேண்டுமென்று நினைத்தான்.
குளிக்க வேண்டும் என்று சொன்னான். 'மிகவும் குளிராக இருக்கிறது. தண்ணீரில் உறைந்து போய்விடுவாய். குளிக்க வேண்டாம்!' என்றாள் அவள். சிறுவனோ குளிக்க வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான். வேறு வழியின்றி, அவனது இடுப்பில் நீளமான ஒரு கயிற்றைக் கட்டி, அவனைக் குளிக்க அனுப்பினாள் கிழவி. அவளிடமிருந்து கண்மறைவாகச் சென்றதும் அந்தச் சிறுவன் இடுப்புக் கயிற்றை அவிழ்த்து ஒரு தூணில் கட்டிவிட்டு, அதில் துறவி கொடுத்திருந்த அதிர்ஷ்டக் காகிதங்களில் ஒன்றை எடுத்துச் சொருகினான். 'சூனியக்காரி கூப்பிடும்போது, எனக்குப் பதிலாக நீ குரல் கொடு!' என்று சொல்லிவிட்டு, அங்கிருந்து தப்பித்து வேகமாக ஓடினான்.
சூனியக்காரி பானையில் இருக்கும் நீர் நன்றாகக் கொதித்ததும், சமைப்பதற்கு உதவி செய்ய வரச் சொல்லி அவனை அழைத்தாள். அந்தக் காகிதமோ சிறுவன் குரலில், 'குளித்துக்கொண்டு இருக்கிறேன். கொஞ்சம் பொறு, வருகிறேன்!' என்று பதில் அளித்தது. இப்படியே இரண்டு மூன்று முறை நடந்தது.
பொறுத்துப் பொறுத்துப் பார்த்துப் பொறுமை இழந்த அவள், நேரே குளிக்கும் இடத்துக்குச் சென்றாள். சிறுவன் தப்பிச் சென்றதை அறிந்து, ஆத்திரமானாள். 'என்னை ஏமாற்றி ஓடிவிட்ட அவனை விரைந்து சென்று பிடிப்பேன்' என்று சொல்லித் தேடி, ஓடினாள். அவனைக் கண்டு துரத்த ஆரம்பித்தாள். அந்தச் சிறுவன் தன்னிடமிருந்த இன்னொரு காகிதத்தை வீசியெறிந்து, 'நீ பெரிய மணல் குன்றாக மாறு!' என்றான். உடனே கிழவியின் எதிரில் உயரமான மணற்குன்று தோன்றியது. கிழவி அதில் சிரமப்பட்டு ஏறி, இறங்கி வருவதற்குள், அந்தச் சிறுவன் மடாலயத்தை நெருங்கிவிட்டான். அவளும் நெருங்கிவிட, மூன்றாவது காகிதத்தை எறிந்து, 'நீ ஆறாக மாறு' என்றான் சிறுவன். கிழவி அந்த ஆற்றைக் கடந்து வருவதற்குள், அவன் மடாலயத்தை அடைந்துவிட்டான்.
''காப்பாற்றுங்கள், குருவே! சூனியக்காரி என்னைத் துரத்தி வருகிறாள்' என்று துறவியிடம் தஞ்சம் புகுந்தான் அந்தச் சிறுவன். அவனை அங்கிருந்த ஓர் அலமாரிக்குள் ஒளிந்துகொள்ளச் சொன்னார் துறவி.
'எங்கே அவன், நான் உடனே அவனைத் தின்னவேண்டும்' என்று கத்திக்கொண்டே வந்தாள் சூனியக்காரி.
'மலைக்கிழங்கு பறித்து வருவதாகச் சொல்லி நேற்றே சென்றவன், இன்னமும் திரும்பி வரவில்லையே!' என்று சொல்லிக் கொண்டே, அரிசி உருண்டைகளை வறுக்கத் தொடங்கினார் துறவி. கிழவிக்கு அந்த மணம் பிடித்திருந்தது.
'எனக்கு அரிசி கேக்குகளைக் கொடுங்கள்' என்று நாக்கை சப்புக் கொட்டியபடி கேட்டாள் அவள்.
'நீ எவ்வளவு கேட்டாலும் தருகிறேன். அதற்கு முன்னால், உன்னுடைய மாயாஜால சக்தியை நான் பரிசோதிக்க வேண்டுமே!' என்றார் துறவி.
'என்ன செய்ய வேண்டும், சொல்! செய்து காண்பிக்கிறேன்.'
'உன்னால் எவ்வளவு உயரமாக ஆக முடியும் என்று காண்பி!' என்றார் துறவி. அவள் வானத்தைத் தொடும் அளவுக்கு விசுவரூபமெடுத்து நின்றாள்.
'ஆகா, அற்புதம்! சரி, எவ்வளவு சிறியதாக ஆகமுடியுமோ, ஆகிக் காட்டு, பார்க்கலாம்!'
அவள் சிறிய மொச்சைக் கொட்டை போன்று வடிவெடுத்தாள். உடனே, அந்தத் துறவி அவளைப் பிடித்து, இரண்டு அரிசி கேக்குகளுக்கு இடையே வைத்துப் பற்களால் கடித்து, அவளைச் சாகடித்தார். மாற்றிச் சிந்தித்ததாலேயே, மாயாஜாலங்கள் தெரிந்துவைத்திருந்த அவளை எளிதில் வெற்றிகொண்டார் அந்தத் துறவி. இந்த ஜப்பானிய நாட்டுப்புறக் கதை சிந்தனைக்குரியது.
நாட்டுப்புறக் கதைகளில் எப்போதும் நியாயவான்களே வெற்றிபெறுவதாகச் சித்திரிக்கப்பட்டிருக்கும். அந்தக் கதைகளில் முற்றிலும் வித்தியாசமான முடிவு, நச்சென்று வெளிப்படும். மாபெரும் இலக்கியங்களில்கூடக் காணக் கிடைக்காத சில நுட்பங்கள் நாட்டுப்புறக் கதைகளில் காணப்படுவதுண்டு. நாம் இன்று கொண்டாடும் இதிகாசங்கள்கூட ஒருகாலத்தில் நாட்டுப்புறக் கதைகளாகவே உலவிவந்தன. பின்னரே அவை எழுதப்பட்டு, இதிகாசமாக ஆக்கம் பெற்றன. மேற்கத்திய நாட்டுப்புறக் கதைகளில், ஒவ்வொரு விலங்கும் ஏன் அப்படித் தோற்றம் அளிக்கின்றன என்பது பற்றி புனைவியல் உண்டு.
காட்டுப் பூனைகளுக்கு உடலின் அடிப்பாகத்தில் ஏன் வெள்ளை நிறப் புள்ளிகளாக உள்ளன என்பதற்கு ஒரு கதை உண்டு.
ஒரு காட்டுப் பூனை, காட்டு முயலைத் துரத்திக்கொண்டு சென்றது. பிடிபடுகிற நேரத்தில், மரத்திலிருந்த பொந்துக்குள் ஓடி ஒளிந்துகொண்டது முயல். காட்டுப் பூனை அதன் முன்னேயே அமர்ந்து, முயல் வெளியே வரும்வரை காத்திருப்பது என்று முடிவு செய்தது. எப்படியும் முயலுக்குப் பசியெடுக்கும், அது வெளியே வந்துதான் தீரவேண்டும், அப்போது பிடித்துக்கொள்ளலாம் என்று தீர்மானமாக இருந்தது பூனை. ஆனால், வெளியே போனால் பூனை தன்னைக் கொன்றுவிடும் என்பது முயலுக்குத் தெரிந்தே இருந்தது.
ஆனாலும், எவ்வளவு நேரம்தான் பொந்துக்குள்ளேயே இருப்பது? எனவே, அது ஒரு யோசனை செய்தது. 'ஏ பூனையே! நான் வெளியே வருகிறேன். உனக்கு உணவாகவும் சம்மதிக்கிறேன். ஆனால், ஒரு நிபந்தனை! இந்த மரத்துக்கு முன்னால் நெருப்பு மூட்டு. நான் அந்த நெருப்பில் குதித்து வறுபடுகிறேன். அதன்பின் என்னை நீ உணவாகப் புசி! என்னைப் பச்சையாக உண்பதை நான் விரும்பவில்லை' என்றது முயல்.
காட்டுப் பூனையும் 'இதுவும் நல்ல யோசனையாக இருக்கே' என்று எண்ணி, தீ மூட்டியது. நெருப்பு நன்றாகக் கனன்று எரியத் தொடங்கியதும், முயல் திடீரென பொந்திலிருந்து பாய்ந்து, அந்த நெருப்புத் துண்டுகள் பூனைமீது தெறிக்குமாறு சிதற அடித்துவிட்டு, குதித்துத் தப்பி ஓடிவிட்டது. அதனால், பூனையின் நெஞ்சுப் பகுதியிலிருந்த முடிகள் கருகி, திட்டுத் திட்டாக வெள்ளையாகிவிட்டது. காட்டுப் பூனைகள் வெள்ளைப் புள்ளிகளுடன் இருப்பதற்கான காரணக் கதை இதுதான்.
பலவீனமானவர்கள் தப்பிப்பது குறித்தே நாட்டுப்புறக் கதைகள் பேசுகின்றன. பலமுள்ளவர்கள் ஜெயிப்பதில் எந்த அதிசயமும் இல்லை. அப்பாவிகள் வெற்றி பெறுவதற்கு புத்திசாலித்தனமும், தந்திரமும் தேவைப்படுகின்றன. வழக்கமான போக்கில் யோசித்தால் அதற்கு விடை கிடைக்காது. முற்றிலும் வேறுபட்ட கோணத்தோடு அணுகினால், எவ்வளவு சக்தி வாய்ந்தவர்களையும் வெற்றி பெற்றுவிட முடியும் என்பதை விளக்குவதுதான், முயல் கிணற்றில் தெரியும் சிங்கத்தின் பிம்பத்தை வைத்து அதை ஏமாற்றிக் கொன்ற கதை.
சக்தி மட்டும் போதாது; சாதுர்யமும் வேண்டும். அப்போதுதான் நாம் ஆபத்துக்களை எதிர்கொண்டு வெற்றிபெற முடியும். மாற்றி யோசித்தால் மட்டுமே இது சாத்தியம்!
- வெ.இறையன்பு,