Friday, June 20, 2014
கணவனுக்கு பிரசவம்!
ஒரு பெண்ணின் அன்பை, வலியை, தியாகத்தை, சகிப்புத்தன்மையை புரிந்துகொள்ள, பெண்ணாகிப் பார்த்தால்தான் முடியும். வார்த்தைகளில் புரியவைக்க முடியாத வலிமையான வார்ப்பு அது. அதைத் திரைமொழியில் புரியவைக்கும் ஓர் அக்கறையான முயற்சி, 'நானும் ஒரு தாய்’ எனும் குறும்படம்!
காதல் தம்பதி அவர்கள். மனைவி கர்ப்பமாக, ''இப்போ எதுக்கு குழந்தை? கலைச்சிடலாம்'' என்கிறான். அவள் மறுக்க... அந்தப் புள்ளியில் இருந்து அவனுக்குள் வெறுப்பு வளர்கிறது. அதுவே வாடிக்கையாகிப் போகிறது.
உடல் சிரமங்களையும், மனவலிகளையும் வெளிக்காட்டாமல், முதல் குழந்தையாக நினைத்து, மன்னித்து, தொடர்ந்து அன்பை மட்டுமே தருகிறாள் கணவனுக்கு. ஒருநாள் அலுவலகத்தில் இருந்து திரும்பும்போது வீடு பூட்டியிருக்க, 'வரட்டும் இன்னிக்கு... லூசு...’ என்று கோபத்தோடு காத்திருக்கிறான். அவள் வந்ததும், ''நான் வர்ற நேரம்னு தெரியாதா... எங்க போயிட்டு வர்ற?'' என்று வெடிக்கிறான். ''இன்னிக்கு செக்கப்'' என்கிறாள் நடுக்கத்தோடு. திமிரும் அலட்சியமுமாக வீட்டுக்குள் போகிறான்.
மற்றொரு சந்தர்ப்பத்தில், வற்புறுத்தி ஆம்லெட் சாப்பிட வைக்கிறான். தன்னையும் அறியாமல் அவன் மீதே வாந்தியெடுக்கிறாள். உடனே, ''சனியனே...'' என்று அரற்றுகிறான்.
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதத்தில் மனைவியைக் காயப்படுத்தும் அவனுக்கு, அன்று ஒரு கனவு. அதில் அவன் கர்ப்பமாக இருக்கிறான்! கர்ப்பிணியான அவனை, அக்கறையாக, அன்பாக நடத்துகிறாள் மனைவி. அவன் எடுக்கும் வாந்தியை கையில் ஏந்துவதோடு, ''இன்னிக்கு ஹாஃப் டே லீவ் போட்டுட்டு வந்துடேறன். டாக்டர்கிட்ட செக்கப் போகணும்ல'' என்று அன்பாகச் சொல்லி, அலுவலகம் செல்கிறாள். சில நாட்களில் பிரசவ வலி எடுக்க, அதைத் தாங்க முடி யாமல் துடிக்கிறான். தவிப்புடன் டாக்ட ருக்கு போன் செய்து வரவழைக்கிறாள். பிரசவ வலியின் உச்சத்தை அடைந்து கத்திக் கதறும்போது... கனவு கலைய, அலறியபடியே விழிக்கிறான்.
அந்த நிமிடம்... ஒரு பெண்ணின் வலிகளையும், தியாகங்களையும், இத்தனை நாட்களாக தான் காட்டிவந்த ஆண் திமிரையும் உணர்ந்து நொறுங்கிப் போகிறான். சமையலறையிலிருக்கும் மனைவியிடம், ''குழந்தைக்கு நம்ம ரெண்டு பேரோட பேரையும் சேர்த்து, ஒரு பேரு வெச்சுடலாம்!'' என்கிறான். மனைவி முகத்தில் மலர்கிறது புன்னகை!
கோவர்தனம் என்பவர் இயக்கியிருக் கும் இக்குறும்படத்தை, இதுவரை ஒரு லட்சத்து 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பார்த்திருக்கிறார்கள். பல விருதுகளையும் பெற்றுள்ள இப்படம், ஒவ்வொரு ஆணுக் கும், பெண்ணுக்கும் பாடம்!