ஒவ்வொருவருக்குள்ளும் பிரம்மம் அடங்கியுள்ளது என்பதை, 'அஹம் பிரம்மாஸ்மி' என்ற அத்வைத தத்துவத்தின் மூலம் உலகுக்கு எடுத்துக்காட்டியவர், ஜகத்குரு ஆதிசங்கரர்.
ஒருமுறை, காசி மாநகரத்து வீதியில் அவர் சென்றுகொண்டிருந்த போது, புலையன் ஒருவன் எதிர்ப்பட்டான். அழுக்கான மேனி, பரட்டைத் தலை, கந்தல் துணிகள் அணிந்தவனாக, நான்கு நாய்கள் பின்தொடர வந்தான் அவன். அவனை தூரத்திலேயே கவனித்துவிட்ட ஆதிசங்கரர், குளித்துமுடித்து திருநீறு பூசி, ஜபம் செய்துவிட்டு வரும் தன்னுடைய புனிதமான மேனி, அவன்மீது தீண்டி மாசு அடைந்துவிடக் கூடாது என்று எண்ணினார். எனவே, பாதையில் இருந்து சற்று விலகி, அந்தப் பாதையில் சிறிது தீர்த்தம் தெளித்துவிட்டு, மேலே நடந்தார். அதைக் கவனித்த புலையன், சட்டென்று அவரை வழிமறிப்பதுபோல் எதிரில் வந்து நின்றான்.
''எதைப் பார்த்து தாங்கள் விலகினீர்கள்? என் உடலைப் பார்த்தா? தோற்றத்தைப் பார்த்தா? அல்லது, ஆன்மாவைப் பார்த்தா?'' என்று கேட்டான்.
'அஹம் பிரம்மாஸ்மி எனக் கூறும் தாங்கள், எல்லா உடல்களிலும் ஆன்மாவாக நிறைந்திருப்பவன் இறைவனே என்ற அத்வைத தத்துவத்தைக் கூறும் நீங்கள், என்னைக் கண்டு ஏன் விலகினீர்கள்?' என்று அவன் கேட்டதுபோல் ஆதிசங்கரருக்குத் தோன்றியது. அந்த நிமிடம், அவன் புலையனாகத் தோன்றாமல், சாட்சாத் பரமேஸ்வரனாகவே அவர் கண்களுக்குத் தோன்றினான்!
உடல்களில், அறிவாற்றல்களில், மனங்களில் பேதங்கள் தோன்றினாலும், ஆன்மா என்பது ஒன்றுதான். அது தெய்வீக சக்தியின் அம்சம். அதில் பாகுபாடுகள் இல்லை. அதை ஆதிசங்கரர் உணர்ந்தார். அதையே பின்னர் உலகம் அனைத்துக்கும் உணர்த்தினார்.
ஒவ்வொருவருக்குள்ளும் அழிவில்லாத தெய்வ சக்தியாகத் திகழ்கிறது ஆன்மா. அதனைக் கொண்டு நாம் செய்யும் சாதனைகளே அமானுஷ்யமான மானுட சக்தி!