எனக்குப் புகை பிடிக்கும் பழக்கம் உள்ளது. நான் எவ்வளவோ முயற்சி செய்தும், என்னால் அதைக் கட்டுப்படுத்தவே முடியவில்லை. புகை பிடிப்பதை தடுப்பதற்கும், புகை பிடிப்பதால் வரும் தீமைகளை இயற்கை முறையில் அகற்றுவதற்கும் வழி இருக்கிறதா?
ஒரு மனிதனுக்கு நோய்கள் உருவாவதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. ஒன்று தவறான உணவு வகைகளைச் சாப்பிடுவதால் வாத, பித்த, கபம் சமநிலை தன்னிலை இழந்து நோய்கள் உண்டாகும். இதை மித்யாஹாரம் என்பார்கள்.
புத்தியின் ஸ்திரத்தன்மை இல்லாததால் மனம் பேதலித்துத் தவறான செயல்களில் ஈடுபட்டு நோய்கள் உண்டாகும். இதை விஹாரஜம் அல்லது பிரக்ஞாபராத ஜன்யம் என்பார்கள்.
16-ம் நூற்றாண்டுக்குப் பிறகே புகையிலை பற்றிய குறிப்புகள் ஆயுர்வேத நூல்களில் காணக் கிடைக்கின்றன. தாம்பூலம் தரித்தல் நற்குணங்கள் நிரம்பியதாகவும், பல நோய்களுக்கு மருந்தாகவும், கப - வாத நோய்களுக்கு மருந்தாகவும், இறை உபசாரமாகவும் நூல்களில் கூறப்பட்டுள்ளது. நாகரிகத்தின் பரிமாற்றமாகத் தாம்பூலம் கருதப்பட்டு வந்துள்ளது.
புகைபிடித்தலால் வரும் புகை, அக்னி பூதத்தின் சம்பந்தம் உடையது. இது கசப்பு, கார்ப்பு, துவர்ப்பு சுவை உடையது. வறட்சியானது, நெருப்பு குணம் உடையது. ஓஜஸ் எனும் ஆக்கச் சக்தியை அழிப்பது.
பொதுவாக ஒருவருக்குப் புகையிலை, புகைபிடித்தல் இளம் வயதில் தொடங்குகிறது. பெரும்பாலும் சினிமா பார்த்தல், தந்தை புகைபிடிப்பதைப் பார்த்தல் இதற்குக் காரணமாகின்றன.
இதனால் படிப்பிலும் ஒருமுகத்தன்மை குறைகிறது. புகையிலையைப் பற்றி எடுத்துச் சொல்ல வேண்டிய அவசியம் மருத்துவருக்கும், பெற்றோருக்கும் இருக்கிறது.
புகையிலையைப் பயன்படுத்துவர்கள் அதை நிறுத்த ஆயுர்வேத மருத்துவமனையில் தங்கி ஸ்நேஹபானம் (எண்ணெய் சிகிச்சை), சோதனம் (அகச்சுத்தி செய்தல்), ரஸாயனம் போன்ற சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டும்.
அதன்பின் ஆடாதோடை, கீழாநெல்லி, வில்வ இலை, ஆகாயத் தாமரை, வெண்பூசணி சாறு, நீலினி, கரந்தை, கரிசலாங்கண்ணி போன்ற மருந்துகளின் சேர்க்கையைக் கொடுக்க வேண்டும். அஷ்டாதச கூஷ்மாண்ட (கல்யாண பூசணி), நெய் போன்றவை மிகவும் பலனளிக்கின்றன. இதற்கு மன வைராக்கியமும் அவசியம்.
நான் எனது மருத்துவமனையில் பார்த்துவரும் பக்கவாத நோய்களில், பலர் புகைபிடிக்கும் பழக்கம் உடையவர்கள் அல்லது கட்டுப்படுத்தாத சர்க்கரை நோய் உடையவர்கள்.
புகை பிடிப்பதால் ரத்த நாளங்கள் அடைபட்டு, மாரடைப்பு வரும் சாத்தியம் அதிகரிக்கிறது. ஒருவர் புகை பிடிக்கும்போது அவருக்கு அருகில் இருப்பவரையும் அது பாதிக்கிறது. புகையிலுள்ள கார்பன் மோனாக்சைடு எனும் நச்சு ரத்த நாளக்கட்டிகள் (thrombus) உருவாகக் காரணமாகிறது.
புகை பிடிப்பவர்களுக்குக் காலில் உள்ள சுத்த ரத்த நாளங்களில் (artery) அடைப்பு ஏற்பட்டு நடக்க இயலாமல் போகிறது. இதனை TAO (Thrombo angiitis obliterans) என்று அழைப்பார்கள்.
இதற்குச் சஹசராதி (கருங்குறிஞ்சி வேர்) கஷாயம், திப்பிலி சூரணம், ஷட்தரணம், கோமூத்ர ஹரீதகி (கடுக்காய்) போன்றவை பயன்படுகின்றன. மருத்துவ ஆலோசனை பெற்று இவற்றைச் சாப்பிட வேண்டும். தினமும் வெள்ளரிப் பிஞ்சு சாப்பிடுவது நல்லது.
நாம் என்னதான் மருந்துகளைக் கொடுத்தாலும் மன வைராக்கியமே, இதற்குப் பூரணத் தீர்வு என்று நான் நினைக்கிறேன். ஒரு சில மருந்துகளைக் கொடுத்தால் புகை பிடிக்கும்போது, வாந்தி எடுக்கும் உணர்வை ஏற்படுத்தலாம்.
ஆனால், சிறிது காலம் சென்றதும் அவர்கள் மீண்டும் புகைக்கத் தொடங்கிவிடுவார்கள். ஆதலால் தியானமும், மன ஒருமைப்பாடும் இதற்குத் தேவை.