என் கல்லூரி நண்பர்கள் இருவர், படித்து முடித்ததும் பிசினஸ் செய்ய ஆரம்பித்தார்கள். இருவருமே படுபுத்திசாலிகள். நல்ல குடும்பப் பின்னணி உண்டு. ஏறக்குறைய ஒரே பிசினஸில்தான் அவர்கள் இருவருமே இறங்கினார்கள்.
படிக்கும்போதுதான், அதிக மார்க் எடுப்பது யார் என்கிற போட்டி இந்த இரண்டுபேருக்கும் நடுவே நடக்கும் என்றால், படித்து முடித்தபிறகு பிசினஸில்கூட யார் ஜெயிப்பது என்கிற போட்டி வந்துவிட்டது. இரண்டுபேரும் முட்டிமோதிக்கொள்ளட்டும் என நானும் என் தொழிலைப் பார்க்கப் போய்விட்டேன்.
அவ்வப்போது இருவரையும் சந்தித்து சில வார்த்தைகள் பேசுவது வழக்கம். ஆனால், அண்மையில் இந்த இருவரையும் தனித்தனியாகச் சந்தித்தபோதுதான் தெரிந்தது, பிசினஸில் ஒருவன் பெரிய வெற்றிகண்டிருந்தான். இன்னொருவன் ரொம்பச் சுமாரான வெற்றிகண்டிருந்தான்.
ஏறக்குறைய சமதிறமை உடைய இந்த ரெண்டுபேரும் எப்படி இருவிதமான நிலையை அடைந்தார்கள் என்று யோசித்தபோதுதான், ஸ்வாட் (SWOT) அனாலிசிஸின் வெற்றி பற்றி நான் முழுமையாக உணர்ந்தேன்.
ஸ்வாட் அனாலிசிஸ் என்றால் என்னவோ ஏதோ என்று நினைக்காதீர்கள். சிம்பிளாகச் சொல்லவேண்டும் எனில், நம்மை நாமே சுயபரிசோதனை செய்துகொள்வதுதான் என்று அதைச் சொல்லலாம். நம் பலங்கள், பலவீனங்கள், நமக்குக் கிடைக்கும் வாய்ப்புகள், அதை அடைய முடியாமல் இருக்கும் தடைகளை அலசி ஆராய்வதுதான் ஸ்வாட் அனாலிசிஸ்.
நமக்கு இருக்கும் பலங்கள் என்னென்ன?
நான் எதில் சிறந்தவன்?
மற்றவர்கள் என்னிடமிருந்து எதை எதிர்பார்க்கிறார்கள்?
எதைச் செய்யும்போது என் திறமை மற்றவர்கள் பாராட்டுகிற அளவுக்குப் பளிச்சிடுகிறது?
எந்தெந்தத் துறைகளில் என் நிபுணத்துவம் அதிகமாக இருக்கிறது?
படிப்பு, வேலையைத் தவிர என்னுடைய இதர திறமைகள் என்ன?
இந்தக் கேள்விகளுக்கான பதில், உங்கள் பலத்தைப் பற்றி உங்களுக்கே எடுத்துச் சொல்பவை.
சரி, உங்கள் பலம் என்ன என்று உங்களுக்குப் புரிந்துவிட்டது. ஆனால், உங்களிடம் சில பலவீனங்களும் இருக்குமே! என்னிடம் எந்தப் பலவீனமும் இல்லை என்று யாரும் சொல்ல முடியாது. யாராவது அப்படிச் சொன்னால், அதுவே ஒரு பலவீனமாக மாறும்.
எந்தெந்த விஷயங்களில் எனக்குத் திறமை போதவில்லை?
இன்னும் எந்தெந்த விஷயங்களில் என் திறமையை வளர்த்துக்கொள்ள வேண்டும்?
என் தனிப்பட்ட குணங்கள் (பொறாமை, சோம்பேறித்தனம், பெண்கள், மறதி, ஈகோ, பொஸசிவ்நஸ் போன்றவை) என்னை எப்படி பாதிக்கின்றன?
சரி, உங்கள் பலத்துடன் உங்கள் பலவீனங்களையும் தெரிந்து கொண்டுவிட்டீர்கள். இனி உங்கள் முன்புள்ள வாய்ப்புகள் என்னென்ன என்பதைப் பார்ப்பது அவசியமில்லையா?
என் பலத்தைக்கொண்டு என் பலவீனத்தை எவ்வாறு சரிசெய்யலாம்?
எது என்னை உத்வேகப்படுத்துகிறது?
சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு என்னை எப்படி தகுதிப்படுத்திக்கொள்ளலாம்?
இந்தக் கேள்விகளுக்கெல்லாம் நீங்கள் பதில் கண்டுவிட்டீர்கள் என்றால், உங்கள் முன் உள்ள வாய்ப்புகளை நீங்கள் சந்திக்கத் தயாராகிவிட்டீர்கள் என்று அர்த்தம்.
வாய்ப்பு என்று வரும்போது அதை நிறைவேற்ற முடியாமல், தடைகள் வருவதும் இயல்புதானே!
ஒரு வேலையைச் செய்துமுடிக்க எது எனக்குத் தடையாக உள்ளது?
அகத்தடை, புறத்தடை - இவற்றில் எது எனது பெரிய எதிரியாக இருக்கிறது?
இப்படி ஒவ்வொரு விஷயத்தையும் வரிசைப்படுத்தி ஆராய்ந்து, நம்மை நாமே சரியாக எடைபோட்டுக்கொள்வதுதான் ஸ்வாட் அனாலிசிஸ். நாம் பிறந்தது முதல், நம் வளர்ச்சிக்கு வழிகாட்டும் பெற்றோர்களும், ஆசிரியர்களும், பிற வழிகாட்டிகளும் நமக்கு எது சரி, எது நல்லது, எது கெட்டது என ஒரு குறிப்பிட்ட காலம்வரை சொல்லித் தருவார்கள். ஆனால், பருவம் வந்து, கல்லூரியில் கால்பதித்தபின், அதையும் தாண்டி வேலைக்குச் செல்லும்போது நம்மை நாமே அலசி ஆராய்வது அவசியம். நம்முடைய குறுகிய கால லட்சியங்களையும், எதிர்கால லட்சியங்களையும் அடைய, நாம் எவ்வாறு பயணிக்கிறோம் என்பதை அறிய நம்மை நாமே அடையாளம் கண்டுகொள்வது முக்கியம்.
பொதுவாக, பிறர் நம்முடைய நிறைகளைப் போற்றிப் பாராட்டும்போது சந்தோஷமடைகிறோம். ஆனால், நம் குறைகளைச் சுட்டிக்காட்டும்போது எரிச்சலடைகிறோம். 'இவர் யார் என்னைப் பற்றிச் சொல்ல? என் நிலையில் இருந்து பார்த்தால் தெரியும்' என்று நமக்கு நாமே இட்டுக்கட்டிப் பேசுகிறோம்.
உங்கள் வாழ்வியல் கோட்பாடுகளே உங்களது பாதையைத் தீர்மானிக்கின்றன என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்! நம்பிக்கை, விரக்தி - இந்த இரண்டில் எதற்கு நாம் முக்கியத்துவம் கொடுக்கிறோமோ, அதுவே நம்மை முழுமையாக ஆட்கொண்டு வழி நடத்துகிறது. நம்முடைய சிந்தனைகளும் அதை நோக்கியே பயணிக்கின்றன.
மனிதனுடைய முக்கியச் சக்தியே, கெட்டவைகளைக்கூட நல்லதாக மாற்றும் திறன்தான். செய்கின்ற பயணம் எது என்பதை நாம்தான் தீர்மானிக்க வேண்டும். எதிர்மறையான விஷயங்கள் வாழ்வில் ஒரு பகுதிதான் என்கிற தெளிவான சிந்தனைகொண்டு நாம் பயணித்தால் நல்லதை நோக்கிதான் நம் வாழ்க்கைபோகும்.
இந்தப் பயணத்தில், ஒவ்வொருநாளும் நமக்கு ஒரு பரிசோதனைதான். அதில் சிலர் ஜெயிக்கிறார்கள். சிலர் தோற்கிறார்கள். வெற்றிக்கு ரகசியமே, அதனை அடைய நாம் மேற்கொள்ளும் வழிமுறைகள் என்பதைப் புரிந்துகொண்டவர்கள், வித்தியாசமாக யோசித்து வெற்றி காண்கிறார்கள். வெற்றி அடைந்தவர்களின் ரகசியமே ஒரு செயலை வித்தியாசமாக அணுகுவதுதான்.
நமக்கு நாமே ஒரு வட்டம் போட்டுக்கொண்டு, அதைத் தாண்டி வெளியே வராமல் இதுதான் என் தேவை, இது போதும் எனக்கு என்று வாழ்பவர்கள் கோடியில் ஒரு துளியாக வாழ்ந்து அடையாளம் இல்லாமல் போகிறார்கள். நான் வித்தியாசமானவன்; எனக்கென்று ஒருபாதையைக் கண்டுபிடித்து, அதில் மற்றவர்களைப் பயணம் செய்யவைப்பேன் என்று நினைப்பவர்கள் கோடியில் ஒருவராக இருந்தாலும் தனிப்பட்டு நிற்கிறார்கள். இப்படித் தனிப்பட்டு நிற்பதற்கு நான் மேலே சொன்ன சுயபரிசோதனை முக்கியம்.
இந்தப் பரிசோதனை தனி மனிதனுக்கு மட்டுமின்றி, அலுவலகங்களுக்கும், குழுவாக வேலை செய்பவர்களுக்கும், குடும்பத்துக்கும்கூடப் பொருந்தும். நேர்மையான சுயபரிசோதனை வெற்றியைத்தரும். எது என் பலம், எது என் பலவீனம், எந்தக் கல்லூரியில் என் திறமைக்கேற்ற வாய்ப்பு இருக்கிறது? இந்த கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்தால் என் எதிர்காலம் எப்படி இருக்கும்? இவற்றை அடைய எனக்கு இருக்கும் தடைகள் என்ன? என்பதில் நேர்மையான சுயபரிசோதனை முக்கியம்.
இந்தச் சுயபரிசோதனையில் நாம் செய்யவேண்டியவை :
1. எந்தச் செயலை செய்வதாக இருந்தாலும் முதலில் அதை அனலிடிக்கலாகச் சிந்தித்து அதன்பிறகு செயல்படுங்கள்.
2. செலவு செய்கிற ஒவ்வொரு நிமிடத்தையும் பதிவு செய்யுங்கள்.
3. தகுந்த ஒருவரை உங்கள் வழிகாட்டியாகத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.
4. முடிவெடுத்தவுடன் அது சரியா, தவறா என்று யோசிக்காதீர்கள்.
5. இந்தப் பயணத்தில் நீங்கள் செய்கிற தப்புகளையும், தவறுகளையும் வரிசைப்படுத்துங்கள்.
6. எதிர்பாராததை எதிர்பாருங்கள்.
7. உங்களுடைய தவறுகளைத் திருத்திக்கொள்ள முயற்சி செய்யுங்கள்.
சுயபரிசோதனை என்பது சத்திய சோதனையாக இருந்தால், நீங்கள் நிச்சயம் சாதனை வீரராக மாறுவீர்கள் என்பதில் சந்தேகமே வேண்டாம்.