Thursday, March 20, 2014

வாட்ஸ்அப் வளர்ந்த கதை!

பல வருடங்கள் சந்தையில் தாக்குப்பிடித்து நின்றால்தான் சந்தையில் ஏறுமுகம் காண முடியும் என்பதில்லை. சரியான திட்டமிடல் இருந்ததால் குறுகிய வருடங்களிலேயே வெற்றி பெற்ற நிறுவனங்களும் இருக்கவே செய்கின்றன. அந்தவகை யில் கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு சந்தைக்கு வந்து, பல முன்னணி நிறுவனங்களோடு போட்டிபோட்டுக்கொண்டிருக்கும் 'வாட்ஸ்அப்' நிறுவனத்தின் வெற்றிக் கதையைத்தான் இந்த வாரம் நாம் பார்க்கப்போகிறோம்.  

யாகூ நிறுவனத்தில் பத்து வருடங்கள் பணியாற்றிக்கொண்டிருந்த பிரையன் ஆக்டன் மற்றும் ஜான் கோம் இருவரும் 2007-ம் ஆண்டில் யாகூ நிறுவனத்திலிருந்து விலகி அடுத்த வேலைக்குக் காத்திருந்தனர். அந்தச் சமயத்தில் ஜான் கோம் அடிக்கடி பிரைனை சந்தித்தார். போன் மூலம் அவரைத் தொடர்புகொள்வதைவிட, எளிய வழியில் மெசேஜ் அனுப்ப வழி தேடுகிறார். இப்படிவந்த ஒரு யோசனைதான் வாட்ஸ்அப். இத்தனைக்கும் ஜான் கோமுக்கு டெக்னிக்கலாக எந்த விஷயமும் தெரியாது. இந்த யோசனையை பிரையனும் அவரும் டெவலப் செய்து அதையே ஒரு ஆப்ஸாக வெளியிட யோசிக்கின்றனர். வெறும் 32 இன்ஜினீயர்களை வைத்துக்கொண்டு, கடந்த ஐந்து ஆண்டுகளில் 450 மில்லியன் பயனீட்டாளர்களை வாட்ஸ்அப் சென்று சேர்ந்துள்ளது சாதாரணக் காரியமல்ல...

undefined

இத்தனைக்கும் வாட்ஸ்அப் இலவசமாகக் கிடைக்கும் அப்ளிகேஷனும் அல்ல. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் வாட்ஸ்அப் அப்ளிகேஷன் பதிவிறக்கம் செய்யக் கட்டணம் செலுத்த வேண்டும். ஆனால், இப்படியான கட்டண சேவையிலும் வாடிக்கையாளர்களைச் சென்று சேர்ந்ததற்கான யுக்தியைத்தான் நாம் வாட்ஸ்அப்பிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும்.  

சமீபத்தில்கூட இந்த நிறுவனத்தைச் சுமார் 1.20 லட்சம் கோடி ரூபாய்க்கு ஃபேஸ்புக் நிறுவனம் வாங்கியதைக்கண்டு எல்லாரும் ஆச்சர்யப்பட்டனர். வாட்ஸ்அப் நிறுவனத்துக்கு இந்த விலை திடீரெனக் கிடைத்துவிடவில்லை. இன்றைய தொழில்நுட்ப உலகில் எந்த ஒரு ஆப்ஸும் பயனீட்டாளர்களின் தேவையைச் சரியாகப் பூர்த்திச் செய்தால் இதுபோன்ற வெற்றி சாத்தியம் என்பதை உலகுக்கு உணர்த்துகிறது வாட்ஸ்அப் நிறுவனத்தின் வெற்றி.  

இந்த வெற்றிக்காக வாட்ஸ்அப் கையாண்ட உத்திகளில் முதன்மை யானது, பயனீட்டாளர்களின் தகவல்கள், உரையாடல்கள் பாதுகாப்பாக இருக்கும். இதர இணையதளங்களில் நம்மைக் குறித்த தகவல்களோ அல்லது உரையாடல்களோ குறிப்பிட்ட இணையதள நிறுவனத்தின் மைய சர்வரில் பாதுகாக்கப்படும். சில நேரங்களில் இந்தத் தகவல்களை வேறு எதற்காகவும் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் பயன்படுத்தலாம். குறிப்பாக, பயனீட்டாளர் விவரங்களை விளம்பர நிறுவனங்களுக்கு விற்பது, அரசாங்க தேவைகளுக்குக் கொடுப்பது போன்ற சாத்தியங்கள் உள்ளது. ஆனால், வாட்ஸ்அப் அப்ளிகேஷனில் இந்த வசதிகள் கிடையாது. குறிப்பிட்ட அளவுக்குப் பிறகு நமது விவரங்கள் எதுவும் மைய சர்வரில் சேகரிக்கப்படுவதில்லை. பயனீட்டாளர்களுக்கு உரையாடல் களின் மீது நம்பகத்தன்மையை அதிகரிப்பதால் வாட்ஸ்அப்-ஐ நோக்கி வருகிறார்கள்.

வாட்ஸ்அப் அப்ளிகேஷன் பயனீட்டாளர்களைச் சென்று சேர்ந்ததற்கு இன்னொரு முக்கியக் காரணம்,  பயனீட்டாளர்களுக்குத் தேவையில்லாத தொந்தரவுகளை இதுவரை அது தந்ததே இல்லை. பொதுவாக, இதுபோன்ற சேவையை வழங்கும் இணையதளங்களில் என்ன நடக்கும் என்றால், சேவை வழங்குவது மட்டுமில்லாமல், பயனீட்டாளர்களுக்குக் கூடுதல் சேவை வழங்குகிறோம் என்று விளம்பரங்கள், பிசினஸ் புரமோஷன்களில் வாடிக்கையாளர்களின் கவனத்தைத் திசை திருப்ப யோசிப்பார்கள். ஆனால், இதுபோன்ற எந்த வேலைகளையும் பயனீட்டாளர்களுக்கு வாட்ஸ்அப் தருவதில்லை. அவர்கள் பக்கங்களில் தேவையில்லாத விளம்பரங்களோ அல்லது இணையதளங்களைப்போல விளையாட்டு சங்கதிகளோ, தேவையற்ற அலங்கார சங்கதிகளோ திணிக்கப்படுவதில்லை. அதாவது, பயனீட்டாளர்களின் பிரைவஸிக்குள் தலையிடுவதில்லை.

தவிர, வாட்ஸ்அப் யூஸர் ஃப்ரெண்ட்லி என்கிற வகையில் கையாள்வதற்கு வசதியாக ஆப்ஷன்களைக் கொண்டுள்ளது. பயனாளர் ஒரு செய்தியை அனுப்பவேண்டும் என்றால், இணையதளம் சென்று பயனாளர் பெயர், அவருடைய பாஸ்வேர்டு கொடுத்துதான் செல்லவேண்டும் என்கிற அவசியமில்லை. பயனாளரின் போன் நம்பர் மட்டும் போதும். இதன்மூலம் பயனாளரது நேரம் மிச்சமாகும். தவிர, பயனாளரின் தனிப்பட்ட விவரங்களை ஒரு அப்ளிகேஷனுக்காகக் கொடுக்கவேண்டிய தேவையில்லை. வாட்ஸ்அப் கிட்டத்தட்ட ஒரு வாக்கிடாக்கி பயன்படுத்துவதுபோலத்தான். நாம் குரல்வழி பேசிக்கொள்ளும் சேதியை போன் மூலம் பரிமாறிக்கொள்ளப் போகிறோம், அவ்வளவுதான் வித்தியாசம்.

ஐமெசேஜ், டென்சென்ட் வீசாட், யாகூ மெசெஞ்சர் போன்ற பெரிய நிறுவனங்கள் இந்தச் சந்தையைப் பகிர்ந்துகொண்டிருந்த நேரம் இதே காலகட்டம்தான். என்ன தேவை, யாருக்குத் தரப்போகிறோம் என்பதைத் தெளிவாகத் தெரிந்துகொண்டு இறங்கினால் சந்தையின் போக்கை நம்மாலும் திசைதிருப்ப முடியும் என்பதற்கு வாட்ஸ்அப் சிறந்த உதாரணமாகும்.

ஒரு நிறுவனம் கிட்டத்தட்ட 450 மில்லியன் பயனீட்டாளர்களை எந்த விளம்பரமும் இன்றிப் போய்ச்சேருவது என்பது வியக்கவைக்கும் ஸ்ட்ராடஜி இல்லாமல் வேறென்ன?