தன் சமயோசித புத்தியால், கணவன் சத்தியவானின் விதியையே மாற்றி அமைத்தவள் சாவித்திரி. எமதர்மனிடமிருந்து, அவள், தன் கணவனின் உயிரை மீட்ட தினமே, காரடையான் நோன்பாக கொண்டாடப்படுகிறது.
பிரம்மாவுக்கு சாவித்திரி என்ற பத்தினி உண்டு. இவர்களுக்கு, நான்கு வேதங்களும் ஆண் மக்கள் வடிவில் தோன்றின. அதைக் கொண்டே, பிரம்மா படைப்புத் தொழிலைச் செய்கிறார். இவ்வாறு, உலகமே இயங்கக் காரணமான சாவித்திரியின் மீது, பக்தி கொண்டவர் அஸ்வபதி மகாராஜா. இவரது மனைவி மாளவி. இவர்களுக்கு குழந்தை இல்லாததால், தங்கள் இஷ்ட தெய்வமான சாவித்திரியை வேண்டி, 18 ஆண்டுகள் மிகக் கடுமையான விரதமிருந்தனர். பகல் நேரத்தை எட்டாக பிரித்து, அதில் ஆறாவது வேளையில் மட்டும், குறைவாக சாப்பிட்டு விரதமிருந்தனர்.
அவர்களது கடும் விரதத்தை ஏற்ற சாவித்திரி, பெண் குழந்தை பிறக்குமென வரம் அருளினாள். சாவித்திரி விரதம் இருந்து பிறந்த மகள் என்பதால், சாவித்திரி என்று பெயரிட்டனர்.
திருமண பருவத்தில், பேரழகியான அவளுக்கு, தாங்கள் தகுந்த கணவன் இல்லை என்று பல நாட்டு மன்னர்களும் விலகிச் சென்று விட்டனர். அப்போது, அஸ்வபதி அவளிடம், 'மகளே... சாஸ்திரம் சொல்வதைக் கேள். ஒரு பெண்ணுக்கு தகுந்த வயதில், திருமணம் செய்து வைக்காத தந்தையும், தந்தையின் இறப்புக்குப் பின் தாயைக் காப்பாற்றாத மகனும் இந்த உலகிலேயே மிகவும் கேவலமானவர்கள். உனக்கு திருமணம் முடித்து வைத்து, அந்த இழி சொல்லிலிருந்து என்னை மீட்டுக் கொள்ள வேண்டும். எனவே, நீயே உனக்கு நல்ல கணவனை தேர்ந்தெடுத்துக் கொள்...' என்றார்.
அதன்படி, அவள் சாலுவ தேச மன்னர் தியுமத்சேனனின் மகன் சத்தியவானை தேர்ந்தெடுத்தாள். தன் தந்தையிடம் அதுபற்றி தெரிவித்தாள். அந்நேரத்தில் அங்கு வந்த நாரதரிடம், சத்தியவானைப் பற்றி விசாரித்தார் அஸ்வபதி.
இப்போதெல்லாம், பெண்ணுக்கு மாப்பிள்ளை பார்க்கும் பெற்றவர்கள், மாப்பிள்ளையின் வேலை, சம்பளத்தைப் பற்றியே அதிகமாக விசாரிக்கின்றனர். ஆனால், அஸ்வபதி நாரதரிடம் கேட்ட முதல் கேள்வியே, 'அந்த பையன், தாய், தந்தைக்கு உரிய மரியாதை கொடுப்பவனா...' என்பது தான். அதன் பின் தான், அவனது அழகு, அறிவு பற்றியெல்லாம் விசாரித்தார்.
தாய், தந்தைக்கு மதிப்பளிக்கும் பிள்ளை தான், மனைவிக்கும் மதிப்பளிப்பான் என்பது, அக்காலத்தில் பெரும் நம்பிக்கையாக இருந்தது.
அதற்கு நாரதர், 'அரசே... சத்தியவானின் நிஜப்பெயர் சித்திராசுவன். அவன், சித்திரங்கள் வரைவதில் ஆர்வமுள்ளவன் என்பதால், இப்பெயர் வந்தது. அவனது தாயும், தந்தையும் உண்மை பேசுபவர்கள் என்பதால், சத்தியவான் என்ற காரணப் பெயர் அவனுக்கு உண்டு.
'ஆனால், சத்தியவான் அற்ப ஆயுளில் இறந்து விடுவான்; எனவே, உன் மகளை அவனுக்கு கொடுக்க வேண்டாம்...' என்று, அறிவுரையும் வழங்கினார்.
ஆனாலும், சாவித்திரி பிடிவாதமாக அவனையே மணந்தாள். எமதர்ம ராஜாவிடமிருந்து தன் கணவன் உயிரை மீட்டாள்.
'காரான்' என்றால், எருமை என்று பொருள். எருமையை வாகனமாகக் உடைய எமனை, காரடையான் என்பர். எனவே, இந்த விரதத்துக்கு 'காரடையான் நோன்பு' என்று பெயர் வந்ததாக சொல்வர். கார் எனப்படும் முதல் பருவத்தில் விளைந்த நெல்லில் தயாரித்த பச்சரிசி, வெல்லம், காராமணி கலந்த அடை தயாரித்து, சாவித்திரிக்கு படைத்ததாலும், காரடையான் நோன்பு என, அழைத்திருக்கலாம்.
சாவித்திரியின் வரலாறை அறிந்து கொண்ட பெற்றோர்கள், தங்கள் பெண்களுக்கு மாப்பிள்ளை தேடும் போது, மணமகனின் குணநலன்களை முதலில் விசாரியுங்கள். பொருளாதாரம், அவசியமே என்றாலும், அது, இரண்டாம் பட்சமாக இருக்கட்டும்.