பழக்கமான பாதையில் சென்றால், அது சுற்றுப்பயணம். புதிய பாதையில் சென்றால், அது சாகசப்பயணம். அப்போது நாம் பலருக்கு ஒரு புதிய வழியை ஏற்படுத்தித் தருகிறோம்.
நம்மிடம் வழக்கமாகக் கேட்கப்படும் ஒரு புதிர்க் கேள்வி... 'ஒரு துணி உலர இரண்டு மணி நேரமாகும் என்றால், நூறு துணிகள் காய எவ்வளவு நேரமாகும்?'
சிலர் இரண்டை நூறால் பெருக்கி விடை சொல்லுவார்கள். ஏனென்றால், கணிதத்துக்கு அவர்கள் பழக்கப்பட்டிருக் கிறார்கள். சிலர் இரண்டு மணி நேரம் என்பார்கள். அதுவும்கூட அத்தனை துல்லியமான விடை இல்லை. நூறு துணிகளைக் காயப் போடும்போது, நூறாவது துணியை எப்போது காயப் போடுகிறோமோ அதிலிருந்து இரண்டு மணி நேரம் கணக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் (இதில், காயப்போடுவது என்ன வகையான துணி என்பதெல்லாம் தனி!)
அதைப்போலவே, ஒரு கோட்டை வரைந்துவிட்டு, இதை அழிக்காமல் எப்படிச் சிறிதாக்குவது என்று கேட்பதும் நமக்குப் பழக்கமான கேள்வி. உடனே, அந்தக் கோட்டின் பக்கத்தில் அதனினும் பெரிய கோட்டைப் போட்டுவிட்டு, இந்தக் கோடு சின்ன கோடு என்று சொல்லிவிடுவார்கள்.
ஒரு புதிய கேள்வி. ஒரு கோடு வரையப்பட்டுள்ளது. அதை நீளப்படுத்தாமலோ, அதன் அருகில் வேறெந்த கோடும் வரையாமலோ, அதை எப்படிப் பெரிதாக்குவது?
விடை எளிது. வரைபடங்களைப் பார்த்திருக்கலாம். உலக வரைபடத்தை அல்லது இந்திய வரைபடத்தைப் பார்த்தால், அதில் ஒரு மில்லி மீட்டர் எத்தனை கிலோ மீட்டருக்குச் சமம் எனக் கீழே கொடுக்கப்பட்டிருக்கும். அதேபோல, வரையப்பட்டிருக்கும் கோட்டுக்குக் கீழே, ஒரு சென்டி மீட்டர் ஒரு கிலோ மீட்டருக்குச் சமம் என்று குறிப்பு எழுதினால் போதும்; கோடு மிகப் பெரிய கோடாகிவிடும்.
குதிரைகளை நேசிக்கும் மன்னர் ஒருவர், ஓர் ஊருக்குச் சென்றிருந்தார். அங்கே மிகச் சிறந்த மரபைச் சார்ந்த இரண்டு குதிரைகளைப் பார்த்தார். அவற்றில் எது சிறந்த குதிரையோ, அதைத் தன்னுடையதாக்கிக்கொள்ள வேண்டும் என்று அவருக்கு விருப்பம்.. எனவே, அந்த இரண்டு குதிரைகளையும் ஓடவைத்து, எது வேகமாக ஓடி, இலக்கை முதலில் எட்டி, பந்தயத்தில் ஜெயிக்கிறதோ, அதையே வாங்க வேண்டும் என்று தன் மந்திரியிடம் சொன்னார்.
பந்தயம் தொடங்கியது. என்ன ஆச்சரியம்..! இரண்டு குதிரைகளும் மெள்ள அன்ன நடை நடந்தனவே தவிர, எதுவும் வேகமாக ஓடவில்லை; ஒன்றை ஒன்று முந்தவில்லை. எனவே, பந்தயம் சலிப்பைத் தருவதாக இருந்தது. விசாரித்துப் பார்த்ததில், அந்தக் குதிரைகளுக்குச் சொந்தக்காரர்கள் இருவருமே தங்கள் குதிரையை மிகவும் நேசிப்பதாகவும், பந்தயத்தில் ஜெயித்துவிட்டால் வேறு வழியின்றி மன்னருக்குத் தங்கள் குதிரையை தாரைவார்த்துத் தரவேண்டுமே என்பதால், அவர்கள் தங்கள் குதிரையை மெதுவாகச் செலுத்துகிறார்கள் என்றும் மந்திரிக்குத் தெரிந்தது.
உடனே அவர், ''பந்தயத்தில் ஒரு சின்ன மாற்றம் செய்கிறேன். இவரின் குதிரையை அவர் செலுத்தட்டும்; அவரது குதிரையை இவர் செலுத்தட்டும்!'' என்று உத்தரவிட்டார்.
தனது சொந்த குதிரையை இழந்துவிடக்கூடாது என்கிற அக்கறையோடும் பதைபதைப்போடும் அவர்கள் இருவரும் தாங்கள் சவாரி செய்யும் குதிரையை வேகமாகச் செலுத்துவார்கள் அல்லவா? அப்போது எது நல்ல குதிரை என்பது எளிதில் புலனாகிவிடும் என்பது மந்திரியின் கணக்கு.
இதுபோல, நடைமுறையில் வித்தியாசமாகச் சிந்திப்பது, வெற்றி பெறுவதற்கு அவசியம்!
சில நேரங்களில் நம் செயல்கள், எதிர்பார்த்த பலனைத் தராமல் போவதுண்டு. காரணம், நாம் நினைக்கிற மாதிரியேதான் மற்றவர்களும் சிந்திப்பார்கள் என்று சொல்ல முடியாது.
குழந்தைகள் காப்பகம் ஒன்றில், எல்லாக் குழந்தை களையும் சரியாக மாலை 4 மணிக்கு வந்து வீட்டுக்கு அழைத்துக்கொண்டு சென்றுவிடவேண்டும் என்பது விதி. ஆனால், பெற்றோர்களில் சிலர் எப்போதும் தாமதமாகவே வந்தார்கள்.
சரியான நேரத்துக்குள் வந்து அழைத்துச் செல்லாத பெற்றோர்களின் குழந்தைகள் பதற்றம் அடைந்தார்கள். அவர்களைப் பாதுகாப்பாக பெற் றோர்களுடன் அனுப்பும்வரை ஒரு ஆசிரியராவது காத்திருக்கவேண்டிய நிலை. இதனால், அவர் தன் வீட்டுக்குச் செல்வதில் தாமதம்.
காப்பக மையத்தைச் சேர்ந்தவர்கள் இதுகுறித்து யோசித்தார்கள். தாமதமாக வரும் பெற்றோர்களுக்கு அபராதம் விதிப்பது என்று முடிவெடுத்தார்கள். அதன்படி, பத்து நிமிடங்களுக்கு மேல் தாமதமாக வருபவர் களுக்கு 30 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என அறிவித்தார்கள்.
ஆனால், அதன்பின் தாமதமாக வருபவர் களின் எண்ணிக்கை குறைவதற்குப் பதிலாக,
இன்னும் அதிகமாயிற்று. காரணம், '30 ரூபாய்தானே... போனால் போகட்டும்' என்று அரை மணி, முக்கால் மணி நேரம்கூட தாமதமாகத் வரத் தொடங்கினார்கள். எனவே, குழந்தைகள் காப்பக மையம் என்ன எதிர்பார்த்ததோ, அது நிகழவில்லை.
சில நேரங்களில், ஊக்கத்தொகை எதிர் விளைவுகளை ஏற்படுத்திவிடும். அதிக சம்பளம் கொடுத்தால் அதிக ஊக்கத்துடன் செயல்படுவார்கள் என்று நினைத்தால், அது தவறு. விடுமுறை நாளில் உழைத்தால், ஒரு நாள் உழைப்புக்கு இரண்டு நாளுக்கான ஊதியம் கிடைக்கும் என்றால், சற்றும் தயங்காமல் விடுமுறை நாட்களிலும் உற்சாகத்துடன் வந்து உழைப்பார்கள் என்று பொதுவாக நாம் நினைக்கிறோம். ஆனால், அவர்களோ ஓய்வையே பெரிதாகக் கருதுவார்கள். வாரத்தில் ஐந்து நாட்கள் உழைப்பதற்குப் பதிலாக மூன்று நாள் உழைத்தால் போதும் என்கிற மனப்பான்மைக்கு வந்துவிடுவார்கள். எனவே, சராசரியான கணிதத்தைப் போட்டுப் பார்த்து, எந்தவொரு முடிவுக்கும் நாம் வர முடியாது. வாழ்க்கை, வித்தியாசமான பாடங்களை நமக்குச் சொல்லித் தருகிறது.
வெற்றிகரமான மளிகைக்கடைக்காரர் ஒருவர் இருந்தார். அவர் கடையில் தரமான பொருட்களையே விற்பனை செய்ததால், தினமும் அமோக விற்பனை! திடீரென ஒருநாள், அவர் கடைக்கு முன்னால் ஒரு பெரிய கட்டடம் உருவாகத் தொடங்கியது. அங்கே, சூப்பர் மார்க்கெட் வரப்போவதாகத் தெரிந்தது. அது வந்தால், தன்னுடைய வியாபாரம் முற்றிலுமாகப் படுத்துவிடும் என அவர் மிகவும் மனச் சோர்வு அடைந்தார். சூப்பர் மார்க்கெட் வருவதை வெறுத்தார். அது வராது தொலையவேண்டுமே எனப் பிரார்த்தித்தார். இதுகுறித்து, தன்னுடைய குருவைச் சந்தித்து ஆறுதல் பெற எண்ணினார்.
குரு அவரிடம், 'அந்தப் பல்பொருள் அங்காடியை நீ வெறுத்தால், அது உன் வீழ்ச்சியில்தான் முடியும்!' என்றார்.
''அப்படியெனில், நான் என்னதான் செய்ய வேண்டும்?'
'தினமும் காலையில் உன் கடைக்குள் நுழையும்போது, உன் வியாபாரம் செம்மையாக நடக்கவேண்டும் என்று வேண்டிக்கொள். கூடவே, எதிரே இருக்கும் பல்பொருள் அங்காடியும் சிறப்பாக நடக்க வேண்டும் என்று வாழ்த்து!''
'என்னது... என்னுடைய போட்டியாளரை நான் வாழ்த்த வேண்டுமா?' என்று மளிகைக்கடைக்காரர் அதிர்ச்சியுடன் கேட்டார்.
''ஆமாம். எந்த வாழ்த்தும் மீண்டும் உன்னையே வந்தடையும். அதேபோல், வெறுப்பும் திரும்பி வந்து உன்னை அழித்துவிடும்' என்றார் குரு.
ஓராண்டு கழிந்தது. மளிகைக்கடைக்காரர் குருவைத் தேடி வந்து, தன் கடையை மூடிவிட்டதாக அறிவித்தார்.
காரணம் என்ன?
பயப்படும்படியாக எதுவுமில்லை. மகிழ்ச்சியான விஷயம்தான்! மளிகைக்கடைக்காரரே அந்த சூப்பர் மார்க்கெட்டை விலைக்கு வாங்கிவிட்டார்.
வெறுப்பு எப்போதும் அழிவையே அளிக்கவல்லது, வாழ்த்து எப்போதும் நம்மை வாழ வைப்பது என்பதற்கு இந்தக் கதை ஒரு நல்ல உதாரணம். இலக்கியங்களும், ஆன்மிக நூல்களும் நம்மை வெறுப்பிலிருந்து அன்புக்கு அழைத்துச் செல்கின்றன. அழிவிலிருந்து முன்னேற்றத்துக்கு கைப்பிடித்துக் கூட்டிச் செல்கின்றன.
அறிவியலிலும் மாற்றி யோசித்தவர்களே சாதனை புரிந்துள்ளார்கள். மாற்றி யோசிப்பது என்பது, கணிதத்தைப்போல ஒரே விடையைத் தரக்கூடியது அல்ல! வாழ்க்கை யாருக்கும் பிடிபடாத கணிதம். அங்கு எது விடையாகக் கிடைக்கும் என்பதை யாராலும் கணிக்கமுடியாது. முதலில் வெற்றி பெறுபவர்கள் போல் தோற்றமளிப்பவர்கள், பின்னர் காணாமல் போய்விடுவார்கள். கடையிலே சென்று வாங்குகிறபோது அதிகம் பளபளக்கிற துணிதான் முதலில் பல்லை இளிக்கிறது.
காளான்கள் எப்போதும் ஆல மரத்தைவிட சீக்கிரம் வளர்கின்றன!