Saturday, March 29, 2014

“அப்படியா?” "இருக்கலாம்"

"அப்படியா?"

ஜப்பானியக் கிராமம் ஒன்றில் ஹாகுயின் என்னும் ஜென் துறவி ஒருவர் வாழ்ந்துவந்தார். தூய வாழ்வை அவர் மேற்கொள்வதாக கிராமத்தினர் அவரைப் புகழ்ந்தனர்.

அவரது வீட்டின் அருகே அழகிய பெண் ஒருவர் வசித்துவந்தார். அந்தப் பெண்ணின் பெற்றோர் உணவுப் பொருள்களை விற்கும் கடையை நடத்திவந்தனர். திடீரென ஒரு நாள் அந்தப் பெண் கருத்தரித்தாள். அவளுடைய பெற்றோர்கள் அதிர்ந்துவிட்டனர்.

அவள் கருத்தரிக்க யார் காரணம் என்று கேட்டனர். தான் கருத்தரிக்க யார் காரணம் என்பதை அந்தப் பெண் சொல்லவே இல்லை. அவளுடைய பெற்றோரும் விடாமல் அவளைத் தொந்தரவு செய்னர். இறுதியில் ஹாகுயின்தான் தனது கர்ப்பத்திற்குக் காரணம் என அந்தப் பெண் கூறினாள்.

கடுங்கோபத்துடன் பெற்றோர் துறவியைச் சந்தித்து நியாயம் கேட்டனர். எல்லாவற்றையும் அமைதியாகக் கேட்ட ஹாகுயின் "அப்படியா?" என்று மட்டும் கேட்டாராம்.

அந்தப் பெண்ணுக்குக் குழந்தை பிறந்த பின்னர் அவளுடைய பெற்றோர் குழந்தையை ஹாகுயினிடம் கொண்டுவந்து விட்டனர். மொத்தக் கிராமமும் துறவியைத் தூற்றியது. குழந்தையை அவர் தான் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றது. "அப்படியா?" என்று அமைதியாகக் கேட்டதுடன் குழந்தையை ஏற்றுக்கொண்டார்.

ஓர் ஆண்டு சென்றது. மீன் சந்தையில் வேலைபார்க்கும் இளைஞன் தான் குழந்தையின் தந்தை என்ற உண்மையை அந்தப் பெண் சொன்னாள்.

இப்போது பெற்றோர் துறவியைச் சென்று சந்தித்தனர். தங்களை மன்னிக்கும்படி வேண்டிக்கொண்டனர். குழந்தையைத் தந்துவிடும்படி கோரினர்.

துறவி குழந்தையை ஒப்படைத்தார். குழந்தையைத் தந்த போது அவர் சொன்னதெல்லாம் அப்படியா? என்பது மட்டுமே.


"இருக்கலாம்" 

ஜப்பானில் ஒரு விவசாயி இருந்தார். எந்நேரமும் வயலில் வேலையே கதியாக அவர் இருப்பார். ஒரு நாள் அவரது பண்ணையில் வேலை பார்க்க வைத்திருந்த ஒரு குதிரை ஓடிப்போய்விட்டது. இந்த விஷயத்தைக் கேள்விப்பட்டவுடன், அவரது அண்டை வீட்டினர் "என்ன ஒரு துரதிருஷ்டம்" என்று அவரிடம் வருத்தத்துடன் கூறினர்.
அதற்கு அந்த விவசாயி, "இருக்கலாம்" என்றார்.
அடுத்த நாள் காலை எதிர்பாராத வகையில் அந்தக் குதிரை அவரிடமே திரும்ப வந்துவிட்டது. அது மட்டுமல்லாமல் அந்தக் குதிரையுடன் மூன்று காட்டுக் குதிரைகளும் வந்திருந்தன. "என்ன ஒரு ஆச்சரியம்" என்று அண்டை வீட்டினர் கூறினர்.


அதற்கும் அவர் "இருக்கலாம்" என்றே கூறினார்.
அதற்கு அடுத்த நாள், பழக்கப்படாத அந்தக் குதிரைகளில் ஒன்றின் மீது ஏறிய விவசாயியின் மகன், குதிரையைச் செலுத்த முயன்றான். அந்தக் குதிரை அவனைத் தூக்கியெறிய, அவனது கால் ஓடிந்து போனது. அப்போது விவசாயியின் அண்டை வீட்டினர், அந்த அசம்பாவிதம் தொடர்பாக அனுதாபமாகப் பேசினர்.
 "இருக்கலாம்" என்று மீண்டும் கூறினார் விவசாயி.
அதற்கு அடுத்த நாள், ராணுவத்துக்கு இளைஞர்களைச் சேர்ப்பதற்காக ராணுவ அதிகாரிகள் அந்த ஊருக்கு வந்தனர். விவசாயி மகனின் கால் உடைந்திருந்ததால், அவர்கள் அவனைத் தேர்ந்தெடுக்கவில்லை. கடைசியில் விஷயங்கள் எப்படி விவசாயிக்குச் சாதகமாக மாறிவிட்டன என்று கூறி, அண்டை வீட்டினர் அவருக்கு வாழ்த்துத் தெரிவித்தனர்.
அப்போதும் அவர் சொன்னார், "இருக்கலாம்".