வாழ்க்கையில் நமக்கு ஏற்படும் பிரச்னைகளை மூன்று வகையாகப் பிரிக்கலாம். முதலாவது, நமக்கு நாமே ஏற்படுத்திக்கொள்ளும் பிரச்னைகள். நம் பேராசையால், கோபத்தால், அவசர புத்தியால், தவறான முடிவுகளால் நாமே உருவாக்கிக்கொள்ளும் பிரச்னைகள் இவை. அடுத்து.. நம் நண்பர்களால், விரோதிகளால், நம்மைச் சுற்றியுள்ள நம்பத்தகாத மனிதர்களின் சேர்க்கையால் நமக்கு ஏற்படும் பிரச்னைகள். மூன்றாவதாக, எதிர்பாராத காரணங்களால், நம்மால் கட்டுப்படுத்தமுடியாத சந்தர்ப்ப சூழ்நிலைகளால் உருவாகும் பிரச்னைகள். இதை விதி அல்லது கர்ம வினை என்று குறிப்பிடலாம்.
இவற்றில் முதல் இரண்டு வகை பிரச்னைகளிலிருந்து வெளிவர நமது விடாமுயற்சியும், தன்னம்பிக்கையும் பெரிதும் உதவும். தவறுகளை நினைத்து வருந்தி, திருத்திக் கொள்ள நினைக்கும் மனப்பாங்கு இருந்தால், இத்தகைய பிரச்னைகளை எதிர்கொள்ளும் மகத்தான சக்தி நம்முள் உண்டாகும். நண்பர், சுற்றம் என்ற பந்தத்தைத் துறந்து, தவறுக்குக் காரணமானவர்களை அடையாளம் காட்டும் துணிச்சல் இருந்தால், இரண்டாவது வகை பிரச்னைகளுக்கும் ஓரளவு தீர்வு காணலாம்.
மூன்றாவது வகை வித்தியாசமானது. திடீரென சுனாமி வந்து, ஊருக்குள் வெள்ளம் புகுந்து, உறவுகளுக்கும் உடைமைகளுக்கும் உண்டாக்கும் ஆபத்துக்கு யாரைக் குறை கூறுவது? விதி அல்லது வினைப் பயன் என்று ஏற்றுக்கொண்டு, போராடி ஜெயித்து புது வாழ்வை அமைத்துக்கொள்ள, அளவு கடந்த தன்னம்பிக்கையும், வைராக்கியமும், மன உறுதியும், சகிப்புத்தன்மையும் தேவைப்படும். நமக்குள்ளே மறைந்திருக்கும் மகத்தான மானிட சக்தியை வெளிக்கொணர்ந்துதான் இத்தகைய பிரச்னைகளைச் சமாளித்து, ஜெயிக்க வேண்டும்.
அத்தகைய நேரத்தில், 'சூரியனின் ஒளி என் மேல் படுகிறது' என்று எண்ணாமல், 'சூரிய ஒளி என்னுள்ளே ஒளிர்ந்து கொண்டிருக்கிறது' என்ற நம்பிக்கை உருவானால், பிரச்னை இருளிலிருந்து வெளியே வரலாம்.
''நமக்குள் இருக்கும் மனோபலத்தால் ஆற்றும் சாதனைகள், நமக்கு வெளியே உள்ள சூழ்நிலையையே மாற்றியமைக்கும்!'' என்கிறார் ப்ளூடார்ச் எனும் அறிஞர். 'இடுக்கண் வருங்கால் நகுக' என்றார் திருவள்ளுவர். 'அச்சம் தவிர்' என்று புதிய ஆத்திசூடியில் சொன்னான் மகாகவி பாரதி. 'துன்பம் கண்டு துவளாமல் எதிர்த்து நில். அப்போது, துன்பம் உன் காலடியில் விழுந்துவிடும்' என முன்னோர்கள் கூறியுள்ளனர். ஆனால், பிரச்னைகளில் சிக்கித் தவிக்கும்போது இந்தப் பொன் மொழிகள் உதவிக்கு வருமா? அதற்கும், 'சொல்வது எளிது; செய்தல் அரிது' என்று சொல்லிவைத்துள்ளார்களே ஆன்றோர்!
பிரச்னைகளை எப்படிச் சமாளிப்பது என்று பக்கம் பக்கமாக ஆராய்ச்சிக் கட்டுரை எழுதி, அதைச் செய், இதைச் செய் என்று சொல்வது எளிது. என்ன செய்வது, எப்படிச் செய்வது என்பதைத் தெரிந்துகொள்வதும், அறிந்து நடப்பதும்தான் கடினம். நம்முள்ளே அடங்கியிருக்கும் உன்னதமான மானிட சக்தியைப் பற்றி நம்மில் பலருக்குத் தெரியும். ஆனால், பிரச்னைகளைச் சந்தித்து, கவலையாலும் பயத்தாலும் வாடித் துவண்டிருக்கும் நிலையில், இந்தச் சக்தியை எப்படி உணர்வது, எப்படி வெளிக்கொணர்வது என்பதுதான் நம்மில் பலருக்குத் தெரிவதில்லை.
'வழி தெரிகிறது; ஆனால், நடக்கக் கால்கள் இல்லை' என்பது போன்ற நிலை இது. ஒரு சின்ன விதை அளவே நம்மைக் கருதுகிறோம். நமக்குள்ளே அடங்கியிருக்கும் விருட்சம் நமக்குத் தெரிவதில்லை.
காலம் காலமாக மனித வாழ்க்கையின் பிரச்னைகள் உணவு, உடை, இருப்பிடம் ஆகிய மூன்று தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காகவே ஏற்பட்டன. பன்னெடுங்காலத்துக்கு முன்பு, சாதாரண மனிதனின் தேவைகள் மிகக் குறைவு. 'உண்பது நாழி, உடுப்பது நான்கு முழம்' என்ற ஒளவையார் மொழிக்கேற்ப, அவர்களின் தேவை சிக்கனமாக இருந்தது. போதுமென்ற மனமும் அவர்களிடம் இருந்தது. எனவே, பெரிதாகப் பிரச்னைகள் ஏதுமில்லாதிருந்தது. ஆனால், இன்றைய மனிதனுக்கு அடிப்படைத் தேவைகள், வசதிகள், ஆடம்பரம் ஆகிய மூன்றையும் பூர்த்தி செய்துகொள்ளும் நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது. எது தேவை, எது வசதி, எது ஆடம்பரம் என்பது அவரவர் பொருளாதாரத் தரம் பற்றியதாக உள்ளது.
பரம ஏழை, ஏழை, நடுத்தர மக்களில் கீழ்த்தரம், மேல்தரம் என்ற பிரிவு, உயர்தர வகையில் சிறிய பணக்காரன் பெரிய பணக்காரன் என்றெல்லாம் பிரிக்கப்பட்ட நிலைகளில் வசதி, ஆடம்பரம் ஆகியவை வித்தியாசமான பரிமாணத்தில் உள்ளன. எனவே, இவற்றை அடைய முயலும்போது ஏற்படும் பிரச்னைகளும் வித்தியாசமான பரிமாணத்தில் உள்ளன.
'ஏழை கூழுக்கு அழுகிறான்; பணக்காரன் பாலுக்கு அழுகிறான்' என்று பழமொழி ஒன்று உண்டு. இரண்டு பேரும் அழுகிறார்கள் என்பது உண்மை. இருவருக்கும் பிரச்னைகள் உள்ளன என்பதும் உண்மை.
இன்றைய உலகில் உணவு, உடை, இருப்பிடம் மட்டுமே மனித தேவைகளாக இல்லை. மாசு படிந்த உலகில், நல்ல காற்றுக்குக்கூட விலை கொடுக்க வேண்டியுள்ளது. மினரல் வாட்டர் எனப்படும் சுத்தமான தண்ணீரை விலைக்கு வாங்கவேண்டியிருக்கிறது.
உணவு என்று எடுத்துக்கொண்டால், எதைச் சாப்பிடுவது, எதைச் சாப்பிடக் கூடாது என்று தெரியாமல், வித்தியாசமான உணவுகளைச் சாப்பிடுகிற வழக்கம் வந்துவிட்டது. அதன் பின்விளைவு தெரிந்த பின்பு உடம்பு இளைக்க டயட் இருப்பது, உடற்பயிற்சிக் கூடங்களை நாடுவது, உடற்பயிற்சிக் கருவிகளை வாங்குவதெல்லாம் அவசியத் தேவையாகி விடுகின்றன. இதற்கான நேரம், செலவு, அதனால் ஏற்படும் பிரச்னைகள் ஆகியவை தவிர்க்கமுடியாததாகி விடுகின்றன.
இன்றைக்கு லேட்டஸ்ட் ஃபேஷன் என்று எடுத்து உடுத்துகின்ற ஆடைகள் அடுத்த மாதமே பழைய நாகரிகம் என்று கழிக்கப்படு கின்றன. சவரன் 23,000 ரூபாய்க்கு வந்தாலும், நகை வாங்கும் நாட்டம் குறையவில்லை. இதற்கெல்லாம் பணம் எங்கிருந்து வரும்? அதுதான் பிரச்னை.
அடுத்தது, வீடு. எப்படியாவது சொந்த வீடு வாங்க வேண்டும்; அப்போதுதான் சமுதாய அந்தஸ்து கிடைக்கும் என்ற ஒரு எண்ணம் எல்லோருக்குமே உண்டு.
கவர்ச்சியாக வரும் வீட்டு விளம்பரங்களால் ஈர்க்கப்பட்டு, தவணை முறையில் வீடு வாங்கும் அயராத முயற்சியும், விலை குறைவாகக் கிடைக்கும் என ஆசைப்பட்டு அலுவலகத்துக்கு 60 கி.மீ. தூரத்தில்கூட சொந்த வீடு வாங்கும் ஆசையும் பலரிடம் தலைதூக்கி நிற்கிறது.
கணவனும் மனைவியும், ஏன்... மகனும் மகளும்கூட வேலை செய்து வீட்டுக் கடனுக் கான தவணைப் பணம் கட்டவேண்டிய நிர்பந்தமாகிவிட்ட காலக் கொடுமை இன்றைக்கு!
இன்று, தினமும் அலுவலகம் செல்ல பஸ், ரயில் கட்டணம், மற்றும் பிரயாணத்துக்காகிற காலம் ஆகியவை மாறிவிட்டன. அதற்காக வாங்கும் கார், மோட்டார் சைக்கிள் வாகனத் துக்கான செலவுகள் வேறு!
தூக்கமின்மை, உடல் நலக்குறைவு, அதற்காகும் மருத்துவச் செலவுகள்... இப்படி அடுக்கடுக்காகப் பிரச்னைகள்!
வாழ்க்கை என்பது வியாபாரம். அதில் எதை இழந்து, எதைப் பெறுகிறோம் என்பதை அறிந்துகொண்டால், தெளிவு ஏற்படும்; பல பிரச்னைகள் தீர்ந்துவிடும்.