''எந்தவிதத் தேவையும் இல்லாமல், நிறைவேறாத
பேராசைகள் எதுவும் இல்லாமல் அமைதியா, ஆனந்தமா படுத்திருந்தார் அவர். இல்லை, தரையில் கிடத்தப்பட்டிருந்தார், சடலமாக...''
நண்பரின் சோகத்துக்குக் காரணம் புரிந்தது.
''ஏன் சார்... அமைதியும் ஆனந்தமும் கிடைக் கணும்னா, உயிர் உடலை விட்டுப் பிரியறதுதான் ஒரே வழியா?'' என்று கேட்டார் அவர்.
நண்பர் மட்டுமல்ல, நம்மில் பலரும் அப்படித் தான் நினைத்துக்கொண்டிருக்கிறோம். நம் வீட்டுப் பிள்ளையைவிட பக்கத்து வீட்டுப் பையன் பள்ளியில் அதிக மதிப்பெண் வாங்கிவிட்டால், நம் முகம் வாடிவிடுகிறது. அண்டை வீட்டில் புத்தம்புது டி.வி. அட்டைப் பெட்டியில் வந்து இறங்கினால், அக்கம்பக்கத்தாருக்கு மாரடைப்பு ஏற்படுகிறது. அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர் புதிதாக ஹோண்டா சிட்டி கார் வாங்கினால், ஆட்டோ டிரைவருடன் தினமும் மல்லுக்கு நிற்கும் சகாவுக்கு ஆனந்தம் தொலைந்துவிடுகிறது. அவ்வளவு ஏன்... உறவுகளுக்குள்ளேயே அந்தஸ்தில் உயர்வு தாழ்வு இருந்தால்கூட, புகைச்சலும் பொறாமையும் ஏற்படுகிறதுதானே!
ஒரு பணக்கார பெரியப்பா வீட்டில், அவர் மகளுக்குக் கல்யாணம். தடபுடல் ஏற்பாடுகள்! ஏழு நட்சத்திர ஓட்டலில் சங்கீத் வைபவம், ஐந்து நட்சத்திரத்தில் மெஹந்தி, நகரிலேயே பெரிய சத்திரத்தில் மூன்று வேளை விருந்து என மெகா கல்யாணம் நடந்து முடிந்ததை நேரில் பார்த்த சித்தப்பா, இரண்டு
நாள் மருத்துவமனையில் தங்கி, மூன்று பாட்டில் டிரிப்ஸ் ஏற்றிக்கொண்டு வீடு திரும்பினார்!
நான் சொன்னதையெல்லாம் அமைதியாகக் கேட்டுவிட்டு, நண்பர் வாய் திறந்தார்... ''சரி, இப்ப என்னதான் செய்யணும்கறீங்க?''
எதையும் எதிர்கொள்ள வேண்டும். காலையில் எழுந்ததிலிருந்து இரவு படுக்கச் செல்லும் வரை கவலையும் பதற்றமும் நம்முடன் ஒட்டிக்கொள்கிறது. பணப் பற்றாக்குறைதான் பிரச்னையா? அடுத்த வேளை சாப்பாட்டுக்கு பிரச்னை இல்லாமலிருந்தால் போதுமே! விளம்பரம் செய்யப்படும் பொருள்களையெல்லாம் வாங்கிக் குவிக்கவேண்டும் என்ற ஆசை எதற்கு? 'என்னை யாருமே நேசிப்பதில்லை' என்று விசனப்படுவதற்குப் பதிலாக, மற்றவர்கள் மீது நாம் அன்பு செலுத்தப் பழகலாமே!
''மொத்தத்தில், போதும் என்ற மனம் பொன் செய்யும்னு சொல்றீங்களா?''
அப்பாடா..! நண்பருக்குப் புரிய ஆரம்பித்துவிட்டது. இனி அவருக்கு, அமைதியும் ஆனந்தமுமான வாழ்வுக்கு வள்ளுவம் காட்டும் வழி எளிதில் புலப்படும்.
'ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையே
பேரா இயற்கை தரும்' - என்கிறது திருக்குறள்.
என்றும் நிறைவடையாத இயல்புடைய பேராசையை ஒழித்தால், அது ஒழிந்த நிலையே என்றென்றும் மாறாத இன்ப வாழ்வைத் தரும்!