கதிரையில் உட்கார்ந்ததும் இடது கையில் தூக்கி வைத்திருந்த குழந்தையின் கன்னத்தை வலது கையால் தடவியபடியே,
"குஞ்சு சரியாச் சாப்பிடுதில்லை. மெலிஞ்சு போகுது" என்றார்.
சாப்பிட மறுக்கும் குழந்தைக்கு இவரது கையிலுள்ள சளியின் மிச்சங்களில் உள்ள கிருமி தொற்றிக் காய்ச்சலும் வந்தால் இன்னும் பல நாட்களுக்குச் பசியின்மை தொடரப் போகிறது என்பதை நினைவில் கொண்டேன்..
எமது கைகளைச் சுத்தமாக வைத்திருப்பது உடல் நலத்தைப் பொறுத்த வரையில் மிக முக்கியமானதாகும்.
- தனக்கு நோய் வராது தடுப்பதற்காக மாத்திரமின்றி,
- தனது நோய் மற்றவர்களுக்குப் பரவாது தடுப்பதற்கும் இதைக் கடைப்பிடிப்பது அவசியம்.
பக்றீரியா, பங்கசு, வைரஸ், புரடசோவா என எத்தனையோ வகையான கிருமிகள் எமது சூழல் எங்கும் பரந்து கிடக்கின்றன. எமக்கு கிட்டாத சுதந்திரத்துடன் கை கால் மேல் என கேட்டுக் கேள்வியின்றி நீக்கமற உலவித் திரிகின்றன.
ஆயினும் கிருமித் தொற்றுள்ள போது அவற்றின் செறிவானது
எமது உடற்திரவங்களான
- எச்சில்,
- சளி,
- மூக்கிலிருந்து சிந்தும் நீர்,
- சிறுநீர்,
- மலம்
கிருமியால் மாசடைந்த எமது கைகள் வாய், மூக்கு, கண், சருமம் போன்ற உறுப்புகளில் படும்போது அவற்றில் கிருமி பரவிவிடும்.
சாதகமான சூழல் அங்கிருந்தால் அவை பல்கிப் பெருகி நோய்களை ஏற்படுத்தும். இவ்வாறு பரவுவதைத் தடுக்கவே கை கழுவுவது அவசியமாகும்
எவ்வாறு கழுவுதல் வேண்டும்?
குழாய் நீர் போன்ற ஓடும் நீரில் கழுவுதல் நல்லது. இளம் சூட்டு நீரில் கழுவுவது மேலும் சிறந்தது.
முதலில் கைகளை நீரில் நனையுங்கள். பின் சோப் போடுங்கள். கைகளை ஒன்றோடு ஒன்று தேய்த்து நுரை வரச் செய்வதுடன் விரல் இடுக்குகள், நகங்கள் உட்பட கைமுழுவதையும் சுத்தம் செய்யுங்கள். குறைந்தது 20 செகண்டுகளுக்காவது அவ்வாறு தேய்த்துச் சுத்தப்படுத்துவது நல்லது.
ஓடும் தண்ணீரில் சோப் இட்ட கைகளை நன்கு கழுவுங்கள்.
கழுவிச் சுத்தப்படுத்திய கைகளை புதிய பேப்பர் டவலினால் துடைத்து உலர வைப்பது நல்லது. முடிந்தால் அந்த டவலினாலேயே குழாயை மூடுவது சிறந்தது.
ஏனெனில் ஏற்கனவே குழாயைத் திறந்தபோது உங்கள் கையிலிருந்த அழுக்கு அதில் பட்டிருக்கும். கழுவிச் சுத்தம் செய்த கைகளால் மீண்டும் அதை மூடும்போது மீண்டும் கிருமி கையில் தொற்றிவிடும். அல்லது குழாய் மூடியை நீரினால் கழுவிய பின் கைகளால் மூடலாம்.
அழுக்கான டவல், கைலேஞ்சி போன்றவற்றில் துடைக்க வேண்டாம்.
காற்றினால் உலர வைக்கும் உபகரணங்கள் (Air Dryer) இப்பொழுது இங்கும் கிடைக்கின்றன. அவையும் நல்லது.
எப்பொழுது கைகளைக் கழுவ வேண்டும் ?
எப்பொழுதும் கைகளைச் சுத்தமாக வைத்திருப்பது விரும்பத்தக்கது. இருந்தபோதும் கீழ் வரும் செயற்பாடுகளின்போது கழுவுவது மிக அவசியமாகும்.
- உணவு தயாரிக்க முன்னரும் உணவு உட்கொள்ள முன்னரும் மிக மிக அவசியமாகும்.
- மலசல கூடத்திற்குச் சென்று வரும்போது
- நோயுள்ளவர்களைப் பராமரித்த பின்னர்.
- மலசலம் கழித்த குழந்தைகளைச் சுத்தம் செய்த பின், அவர்களின் னiயிநசள யை மாற்றிய பின்
- தும்மல் இருமல் மூக்குச் சீறல் போன்ற செயல்களுக்குப் பின்னர்.
- வீட்டுக் கழிவுப் பொருட்களைத் தொட்டழைதல், அகற்றல் போன்ற செயல்களின் பின்னர்.
- வெட்டுக் காயங்கள் புண் போன்றவற்றை தொட்டு, மருந்து கட்டல் போன்ற செயற்பாடுகளின் பின்னர்.
- வளர்ப்புப் பிராணிகளை தொட்ட பின்னர்.
- கைகளில் கிருமி தொற்றக் கூடிய எந்தச் செயற்பாட்டின் பின்னரும்.