களைப்புடன் வீடு திரும்பி,
அம்மா மடிசாய நினைக்கிறோம்.
ஆனால், கிடைக்காது அந்த சுகம்!
படிப்புச் சொல்லித் தருவாளா?
படிப்பதைப் பார்த்துக் கொள்வாளா?
அடிக்கடி அடித்தாலும் பரவாயில்லை...
அருகில் இருந்தால் கிடைக்கும் சுகமே எல்லை!
ஆனால் அவளோ... தொலைக்காட்சிப் பெட்டிக்குள் நுழைந்து, எங்கள் எதிர்காலத்தைத் தொலைத்துவிடுகிறாள். ஆறு மணிக்கு முந்தானை முடிச்சுக்குள் மூழ்கிப் போகிறவள், ஆறு முப்பதுக்கு மாதவி என்ன ஆனாள்? என்று வருந்துகிறாள்... மாதவம் செய்து பெற்ற எங்களை மறக்கிறாள். ஏழு மணிக்கு எங்களுக்கு உணவு கொடுக்கும் நேரம். ஆம், தொலைக்காட்சியில் செய்தி ஏழரைக்கு. அதனால், மீண்டும் ஏழரை தொடங்கிவிடும். நாதஸ்வர ஒலியில் எங்கள் குரல் ஒலி எடுபடாது. எட்டு மணிக்கு தன் குடும்பத்தை மறந்து, திருமதி செல்வம்
குடும்பத்தோடு ஒன்றிவிடுகிறாள். பிள்ளை மாறிப்போன கதையை நோட்டம் இட்டபடி, தன் பிள்ளை பாதை மாறுவதை கோட்டை விடுகிறாள். எட்டு முப்பதுக்கு வருது தங்கம்... அப்போதும் எங்களுக்கு பங்கம். ஒன்பது மணிக்கு தென்றல் வீசும் துளசியின் நிலையைப் பேசிக்கொண்டே எங்கள் நிலையை மறந்துபோகிறாள். ஒன்பது முப்பதுக்கு செல்லமான தம் பிள்ளைகளை நினைக்காது, செல்லமே நாடகத்தில் செல்லம்மாவோடு உறைந்து போவார்கள். எங்கள் மீது தங்கள் இதயத்தை வைக்கமாட்டார்களா... என்று எண்ணும்போது, சரியாய் மணி பத்தாகும். நாங்கள் தூக்கத்தில் ஆழ்ந்திருக்கும் நேரமாவது அவர்கள் இதயம் திரும்புமா என்றால், அல்ல. பத்துமணி நாடகமாம் இதயத்தின் மீது. மீண்டும் கதிரவன் உதயம்... நாங்கள் பள்ளிக்குப் பயணம். எங்கள் மீது பாசமும், எங்கள் படிப்பில் அக்கறையும் கூடிய விரைவில் வரும் என்ற நம்பிக்கையில், அன்பு அம்மாவுக்கு ஆசையோடு இந்தப் பிள்ளை எழுதிய கடிதம். இந்தக் கடிதம் உங்கள் மனதைக் காயப்படுத்தி இருந்தால், தயவுசெய்து என்னை மன்னித்துக் கொள்ளுங்கள்!